சு.வேணுகோபால், சாரு நிவேதிதா, ஷோபா சக்தி சில தெளிவுகள்

சேனன் எழுதிய ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவல் வெளியீட்டின் ZOOM பதிவை பார்த்தேன். அந்த நூல் குறித்து சாரு நிவேதிதாவின் உரை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதில் முக்கியமானது ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் சேனனின் ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற நாவலின் தழுவல் என்று சுற்றித்திரியும் அவதூறு குறித்த சாருவின் உரைப்பகுதி. எழுத்தாளனைச் சுற்றி உருவாக்கப்படும் இதுபோன்ற அவதூறுகளை பிற எழுத்தாளர்கள் எப்போதும் அனுமதிக்கக் கூடாது என விரும்புபவன் நான்.

ஷோபா சக்தி தன் தரப்பை பல இடங்களில் விளக்கியும் இன்னமும் அந்த அவதூறு ஆங்காங்க உலாவி, பின்னர் சில வருடங்களில் எங்காவது மறுபடியும் ஒரு வாய்மொழி வரலாறாக சுற்றித்திரியும். அந்த அவதூறு இனி தொடர முடியாதபடிக்கு இருந்தது சாருவின் உரை. மிகத்தெளிவாக தீர்க்கமாக சேனன் நாவலில் உள்ள கலைக்குறைப்பாட்டையும் ஷோபா சக்தியின் நாவலின் முழுமைத்தன்மையையும் விளக்கினார். அதோடு, ‘இச்சா’ ஒரு காலமும் தழுவலாக இருக்க முடியாதென தன் வாசிப்பின் அடிப்படையில் கூறினார். ஒரு நூல் அறிமுகக் கூட்டத்தில் இப்படி நடப்பது அரிது. அதிலும் சாரு, ஷோபா சக்தியுடன் தனக்கிருக்கும் மனவிலகலையும் உரையிலேயே பதிவு செய்கிறார். உண்மையில் சாரு, ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் குறித்து மட்டுமே பேசியிருக்கலாம். ஆனால் அவர் கூடுதலாக ‘இச்சா’ நாவலையும் வாசித்து ஓர் ஒப்பீடு செய்தது அவர் மீதிருந்த மரியாதையைக் கூட்டியது. எந்த நல்ல எழுத்தாளனும் அதைதான் செய்வான். காரணம் அவனுக்கு எழுதிய நபர்களைவிட எழுத்தே பிரதானமானது. ஒரு நல்ல கலைஞனுக்கு நிகழும் எந்த அவமானமும் தனக்கு நிகழ்ந்ததாகவே கருதுவான்.

நான் அந்த உரையைக் கேட்டவுடன் சாருவிடம் பேச விரும்புவதைத் தெரிவித்து பிப்ரவரி 28இல் ஒரு கடிதம் எழுதினேன். என்னிடம் அவர் எண்கள் இல்லை. அதை எவ்விதத்திலும் பெற்று அழைக்கலாம். ஆனால் மனவிலகல் கொண்ட ஒருவரை அப்படி அணுகுவது அவரை மேலும் தண்டிப்பது போல. எனவே அவரிடமே தொடர்பு எண்ணைக் கேட்டு ஒரு கடிதம் போட்டேன். உரையாடல் இருவரின் விருப்பத்தின் அடிப்படையில் நிகழ வேண்டும் என விரும்பினேன். சாரு அவர்களும் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்து என் மேல் இருக்கும் தன் மனக்கசப்பௌ குறித்து கூறினார். முதலில் அதன் பின்னணியை முழுமையாக விளக்கிவிடுதல் நல்லது.

2014இல் ஜெயமோகன் ‘பெண் எழுத்து‘ குறித்த எழுதிய கட்டுரையை ஒட்டி சர்ச்சை ஒன்று எழுந்தது. அவர் சொன்ன கருத்தில் என் ஏற்பை முன்வைத்து கட்டுரை ஒன்று எழுதினேன். அதாவது தமிழ் இலக்கியத்தில் சாதனை செய்துள்ள பல புனைவு எழுத்தாளர்களை தமிழ் வாசகர்கள் அறியவில்லை. உலக இலக்கியங்களை வாசித்துள்ள சாருவும் சு.வேணுகோபாலை அறிந்திருக்கவில்லை என்றேன். அப்படிச் சொன்னது தவறா என இப்போது கேட்டால் தவறு என்றே சொல்வேன். காரணம் அது எனக்கும் சாருவும் நடந்த தனிப்பட்ட உரையாடலில் நான் புரிந்துகொண்டது. அதை பொதுவில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தெளிவு அப்போது இல்லை. சாரு நான் அவரை போகிற போக்கில் அவமதித்து செல்வதாகக் கருதியதால் என்னுடனான உரையாடலை நிறுத்திக்கொண்டார். ஒருமுறை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோதும் பேசவில்லை.

மார்ச் 1இல் சாரு எழுதிய கடிதத்துக்கு நான் விளக்கமாக பதில் எழுதினேன். அதில் என் செயலுக்கான மன்னிப்பை பதிவு செய்ததுடன் அதை கூறிய பின்னணியையும் விளக்கினேன். அதாவது, சாரு தமிழில் பாலியல் சிக்கல்கள் குறித்த சமகால எழுத்துகள் உருவாகவில்லை என்று நேர்ப்பேச்சில் கூறினார். தமிழகத்தில் அவரைச் சந்தித்தபோதும் மலேசியாவுக்கு அவர் வந்தபோதும் இந்தக் கருத்தே அவரிடம் இருந்தது. நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை மறுக்கும் தரப்பில் இருந்தேன். சு.வேணுகோபாலை வாசித்துள்ளீர்களா? அவரை வாசிக்காமல் அந்த முடிவுக்கு வர முடியாதே என்றேன். சாரு வாசித்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த உரையாடல் அத்துடன் முற்றுப்பெற்றது. சாருவிடம் ஒரு வாசகனாக நான் பெற்றவை பல உள்ளன. எனவே அவரை நான் நோகடிக்கும் நோக்கில் 2014இல் எழுதவில்லை என்பதால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதே முறை என உணர்ந்து அதை செய்தேன். சாருவும் இனி நடக்க வேண்டியவை குறித்தும் அவரது மலேசிய வருகை திட்டமிடலையும் கூறினார்.

இதுவரை இரு எழுத்தாளர்கள் அல்லது இரு வாசகர்கள் எனும் அளவில் மட்டுமே உரையாடல் நடந்து நிறைவாகவே முடிந்தது. ஆனால் இதில் அராத்து என்பவர் காலையில் தன் முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அது தாமதமாகவே என் பார்வைக்கு வந்தது. அதில் ஒருவரை இதை வாசித்தாயா? அதை வாசித்தாயா? எனக்கேட்பது வன்முறை என்பதாகவும் சாரு என்னுடைய விளக்கத்திற்கு எழுதிய கடிதம் அவசியமற்றது எனும் ரீதியிலும் பதிவிட்டிருந்தார். அது என் பார்வைக்கு வந்தும் நான் பொருட்படுத்தவில்லை. எல்லா இடத்திலும் புகுந்து நம் நியாயங்களைச் சொல்ல வேண்டியதில்லை. மேலும் அராத்துவை எவ்வகையிலும் பொருட்படுத்தத் தகுந்த எழுத்தாளராக நான் கருதவில்லை. (இக்கருத்தை அவர் புனைவை வாசித்தப்பின்பே பதிவிடுகிறேன்) ஆனால் அப்பதிவை ஒட்டி சாரு இன்றெழுதிய குறிப்புதான் என்னை இவ்விளக்கத்தை எழுத வைத்தது.

சாரு அவர்களிடம் மறுபடியும் இங்கு தெளிவு படுத்திக்கொள்வது நல்லது என்பதால் இதைச் சொல்கிறேன். காரணம் ஷோபாவின் நாவலை ஒட்டி செய்யப்படும் அவதூறுகள் எப்படி அருவருப்பானதோ அப்படி நான் சொல்லாத வார்த்தைகளை திரித்து பரப்புவதும். சாரு நிவேதிதா அவர்கள் தமிழில் பாலியல் சிக்கல் குறித்த புனைவெழுத்துகள் உருவாகவில்லை என்று சொன்னதாலும் ‘புயலிலே ஒரு தோணி’க்குப் பிறகு அவரைக் கவரும் நாவல்கள் இல்லையென்றதாலும் நான் என் பரிந்துரைகளை முன்வைத்தேன். அப்படித்தான் சு.வேணுகோபாலையும் ஆழி சூழ் உலகையும் வாசித்துப் பார்க்கச் சொன்னேன். அவர் பார்வைக்கு அவை படாமல் போயிருக்கலாம். இங்கு சாருவை வாசிக்கச் சொன்னது அவர் கருத்தின் எதிர்வினையாகவே தவிர இலக்கிய உரையாடலுக்காக இல்லை. அவரை சந்தித்த காலங்களை அப்படி எதையும் சொல்லி துன்புறுத்தவும் இல்லை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம். இதற்கு சாருவே சாட்சியாக இருப்பார் என நம்புகிறேன்.

சாரு மார்ச் 3இல் எழுதிய பதில் கடிதம் அவரை இன்னும் நெருக்கமாக்கியது. எந்த பாசாங்கும் இல்லாமல் தோளில் கைபோடும் கடிதம் அது. சாருவிடம் இருந்த மனவிலகல் நீங்கியதை நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன். அதில், ஜெயமோகன் போன்றவர்கள் பரிந்துரைத்தாலேயன்றி சிலரை வாசிப்பதில்லை என எழுதியிருந்தார். 2015இல் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரையில் சு.வேணுகோபாலின் புனைவுகள் குறித்து இவ்வாறு சொல்கிறார். ‘அடுத்த கட்ட நகர்வு என்று நான் சு.வேணுகோபாலைத்தான் சுட்டிக்காட்டுவேன். ஒருவகையில் தமிழிலக்கியத்தில் பாலுறவின் நுண்ணிய சிடுக்குகளுக்குள் தயக்கமே இன்றி நுழைந்த முதல் கலைஞர் என்றே அவரைச் சொல்ல முடியும்.’ மேலும் சு.வேணுகோபால் புனைவுகள் குறித்து விரிவான பல கட்டுரைகள் ஜெயமோகன் எழுதியுள்ளார். நான் அவற்றை சாருவுக்கு அனுப்பவில்லை. என் நோக்கம் சாருவின் வாசிப்பை மாற்றி அமைப்பதல்ல. அதை செய்ய நான் யார்? அவருக்கென்று தேர்வு உள்ளது அப்படியே அவர் இருப்பதுதானே நியாயம்.

சாரு இனியும் சு.வேணுகோபாலை வாசிக்காமல் இருக்கலாம். அது அவர் உரிமை. சாருவுடன் நட்பு கொள்ளவோ இணைந்து ஊர் சுற்றவோ உலக இலக்கியங்கள், சினிமா குறித்து பேசவோ அவையெல்லாம் ஒரு தடையே இல்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் பாலியல் சிக்கல் குறித்த தரமான புனைவுகள் இல்லை எனச் சொன்னால் அதை மறுக்கும் தரப்பில் எப்போதும் நான் இருப்பேன். மறுபடியும் சு.வே படைப்புகள் குறித்து விரிவாக உரையாடுவேன். ஆனால் 2014இல் செய்ததைப் போல அதை ஓர் எழுத்தாளனின் பலவீனமாக முன்வைக்க மாட்டேன். இன்று எனக்கு அந்த முதிர்ச்சி வளர்ந்துள்ளதாகவே கருதுகிறேன்.

மற்றபடி, அராத்துவின் ‘இந்த வேணுகோபால் கதையையே எடுத்துக்கொண்டால், மரண ஃபேக். இவர்தான் தமிழர்களின் பாலியலை எழுதுகிறார் என்று கொடி பிடித்தால் இதை விட மடையன் வேறு எவனும் இருக்க மாட்டான்.’ என்ற வரிகளுக்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது. அது அவருக்குத் தேவையும் படாது என்றே நம்புகிறேன்.

(Visited 495 times, 1 visits today)