நேற்றிலிருந்து அமர்ந்து பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த பயிற்சி ஆசிரியர்களின் முகங்கள் சோர்ந்திருந்தனர். அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட புத்தகங்களை அவர்கள் கரங்கள் புரட்டிக்கொண்டிருந்தன. எங்கள் அமர்வின் தொகுப்பாளர் திரு.வாசுதேவன் பேசத்தொடங்கியபோது கூட்டத்தை கவனித்தேன். முதல் பேச்சாளர் நான். நான் பேச வேண்டியது இளம் பயிற்சி ஆசிரியர்களுக்குத்தான் என மனதில் உறுதி செய்துக்கொண்டேன். தங்கள் மூளை நிறைய கருத்துகளைச் சுமந்து கொண்டிருக்கும் அறிஞர்களிடம் நான் சொல்ல ஒன்றும் இருக்கவில்லை. குறிப்பாக அதிகாரத்திடம் சமரசம் செய்துக்கொள்வது பற்றி.
என்னை அழைத்ததும் மேடைக்குச் சென்றேன். கூட்டத்தினரிடம் எந்தவகையான கவனமும் இல்லை. எல்லோருக்கும் அவரவர் அலுவல் இருந்தது. முதல் வார்த்தையைத் தேடிக்கண்டுப்பிடித்தேன்.
“ரௌடிகளாகவும் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களாகவும் புனிதங்களைக் கேள்வி எழுப்புபவர்களாகவும் நம்பப்படும் எங்களுக்கு இந்நிகழ்வில் உரையாற்ற வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள்…” எனத்தொடங்கியப் போது எல்லோர் பார்வையும் மேடைக்கு வந்தது. இனி சொல்ல வேண்டியதை தடையில்லாமல் சொல்லிவிடலாம் என்ற நோக்கில் பேச ஆரம்பித்தேன். மிக முக்கியமாக நான் சொல்ல மூன்று விஷயங்கள் இருந்தன.
1. தமிழ்ப்பத்திரிகைகளிம் மலிவான வியாபார நோக்கம்.
2. இலக்கிய மேடைகளில் அறிவுத்துறைக்கு முக்கியத்துவம் தராமல் அதிகாரத்துக்குத் தரும் முக்கியத்துவம்
3. தமிழை முக்கிய மொழியாகப் பயின்று வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்குத் தீவிர கலை இலக்கிய வெளியை அறிமுகம் செய்வதில் விரிவுரையாளர்களின் கடமை.
நான் பேசிவிட்டு அமர்ந்த பின் பாலமுருகன் பேசினார். நான் தயார் படுத்தி வந்ததற்கும் பேசியதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததால் பாலமுருகன் பேசும்போது நான் பேசியதையே மனம் மீண்டும் மீண்டும் அசைப் போடத்தொடங்கியது. இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம் எனத்தோன்றியது. பாலமுருகன் தான் வலைப்பதிவாளரான காரணங்களை விளக்கினார். அவர் பேசி அமர்ந்தபின் யுவராஜன் ‘மின் எழுத்து’ தொடர்பாகக் கட்டுரை சமர்ப்பித்தார். அதன் பின்னர் சிவா பெரியண்ணன் பேசியது மிகத் தெளிவாக இருந்தது. மின் ஊடகம் பற்றி விளக்கியதுடன் IQ மற்றும் EQ தொடர்பாக விளக்கினார். எழுத்தும் இலக்கியமும் ஒரு மனிதனை என்ன செய்கிறது ? அதன் தேவை என்ன ? என்பதிலிருந்து தொடங்கியது அவர் பேச்சு. இறுதியாக சிங்கையைச் சேர்ந்த மாநாட்டுப் பண் இசையமைப்பாளர் திரு.குணசேகரன் மாநாட்டு இசை உருவான விதத்தை அதன் கருவிகளோடு விளக்கினார். நான் மேடையில் அமர்ந்திருந்ததால் எதையும் பார்க்க முடியவில்ல. இசை மட்டுமே கேட்டது.
மேடையிலிருந்து கீழே இறங்கியவுடன் மதிய உணவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. பலரும் அன்புடன் பேசினர். பாராட்டினர். கட்டியணைத்துக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் இலக்கிய விரும்பிகள். காலா காலமாக இலக்கியம் என்ற பெயரில் நடக்கும் அரசியல் கசடுகளைப் பார்த்து பார்த்து வெருப்படைந்தவர்கள். முகம் சுழித்தவர்கள் இருந்தனர். அவர்கள் அதிகார வர்க்கத்தினர்.
குறை கூறியவர்கள் பெரும்பாலும் மூன்று விடயங்களைத் தொட்டு பேசினர்.
ஒன்றாவது நாங்கள் அணிந்திருந்த உடை குறித்து. கிழிந்த ஜீன்ஸ் டி-சட்டை உடுத்திக்கொண்டு மேடையில் ஏறியதை அவர்களால் ஏற்க முடியவில்லை.
இரண்டாவது நான் ரௌடி என்ற வார்த்தையுடன் மேடையில் தொடங்கியது.
மூன்றாவது விரிவுரையாளர்கள் செய்ய வேண்டிய கடமையை நான் நினைவுறுத்தியது.
000
முதலாவது உடை பற்றியது : ஜீன்ஸ் டி-சட்டையோடு வந்தது அங்கு பலருக்கும் பிடிக்கவில்லை. அது நாகரீகம் அற்றது என கருதினர். ஆதங்கப் பட்டவர்கள் பெரும்பாலும் கோர்ட் சூட் போட்டவர்கள். (வேட்டி சட்டை அணிந்தவர்களிடமும் கலாச்சாரம் பண்பாடு தொடர்பாக விவாதிக்க சில கருத்துகள் இருந்தாலும் இப்போதைக்கு அவர்கள் நம்பிக்கைக்கு ஒரு மரியாதை செலுத்திக்கொள்கிறேன் )அவர்கள் போட்டிருந்ததும் மேற்கத்திய உடை. நான் போட்டிருந்ததும் மேற்கத்திய உடைதான். என்ன…அவர்கள் போட்டிருந்தது முதலாளிகளின் உடை நான் போட்டிருந்தது உழைப்பாளிகளின் உடை. எனது தொழில் சார்ந்த நிமிடங்கள் தவிர அவ்வாறான உடையை நான் போடுவதை தவிர்க்கிறேன் .அதுவும் கட்டாயத்தின் பெயரால். இது போன்ற மாநாடுகளில் பேசுவதற்கு முன் இந்த ரக உடைதான் அணிந்து வர வேண்டும் என முன்னமே எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தால் அதை நிராகரிக்கவும் ஏற்கவும் எங்களுக்கும் வசதியாக இருந்திருக்கும்.
இலக்கியத்துக்கும் உடைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற மொண்ணையான கருத்துக்கெல்லாம் உதாசினத்தைத் தவிர வேறென்ன பதில் தரமுடியும். ஒருவேளை ஒருவனுக்கு நல்ல உடை வாங்குவதற்கு பணம் இல்லை என வைத்துக்கொள்வோமே… அப்போது அவன் மேடையில் ஏற தகுதி இல்லாதவனா? உடையில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் கண்கள்தான் நிறத்திலும், வசதியிலும், அறிவிலும் பின்னர் சாதியிலும் பார்க்கிறது. மேடைக்கு வெளியே பலரும் சூழ்ந்து குறைப்பட்டுக்கொண்டனர். எனக்கு சட்டென இளங்கோவன் ஞாபகம் வந்தது. நவீன இலக்கியம் பேசிக்கொண்டிருக்கும் 2011 ல் இந்தக் கதி என்றால் 1988ல் மாதம் நவீன இலக்கியச் சிந்தனையின் புதுக்கவிதைப் போட்டிக்கு நீதிபதியாகவும் கட்டுரை படிக்கவும் கூலிம் வந்த இளாங்கோவன் கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறு, நீள் முடியுடனும் தாடியுடனும் மொட்டைக்கை டி சட்டை ஜீன்ஸ் சகிதம் இருந்தது இதுபோன்றவர்கள் எவ்வகையான கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். http://www.vallinam.com.my/issue23/interview.html
இரண்டாவது நான் தொடங்கிய விதம் : ‘ரௌடிகளாகவும்…’ என நான் தொடங்கியது பலருக்கும் பிடிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு ரௌடிகளைப் பிடிக்கவில்லை. ஆனால் இலக்கியத்தில் லும்பன் கலாச்சாரம் குறித்து பேசுவார்கள். அவர்கள் வாழ்வினை ஆராய்வார்களாம். திரைப்படங்களில் அவர்கள் பாத்திர வார்ப்பை ‘உச்சு’கொட்டி ரசிப்பார்களாம்.(என்னங்கடா நியாயம் இது) நிஜத்தில் ,ரௌடிகள் என்பது அவர்களுக்குத் தீண்டத்தகாதச் சொல்லாகிவிட்டது. ரௌடியை இந்தச் சமூகத்தின் அமைப்பில் கீழான நிலையில் பார்க்கின்றனர். ஒருசிலரால் ‘ரௌடியாக’ விமர்சிக்கப்பட்ட எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி சொல்லித் தொடங்கினேன். பலரது கடுப்பு அப்போதே முகத்தில் தெரிந்தது. அப்போதே முடிவெடுத்துக் கொண்டேன் சரியாகத்தான் பேசுகிறோம் என்று.
மூன்றாவது கல்லூரி மாணவர்களை இணைப்பது குறித்து கூறியது தவறாகத் திரிக்கப்பட்டிருந்தது. விரிவுரையாளர்களின் பொறுப்பு அதில் உள்ளது எனக் கூறியது அவர்கள் பொறுப்பற்றவர்களாக நான் கூறியதாக வெளியில் பேச்சு அடிப்பட்டது. உரிமையோடு என்னிடம் கேள்வி கேட்ட என் முன்னால் விரிவுரையாளர்களுக்கு மட்டும் விளக்கம் கொடுத்தேன்.
மற்றபடி அந்த மேடையில் அதிகாரத்துக்கு மேடையில் இடம் கொடுத்து அறிவிற்கு தராதது பற்றி நான் பேசியது பற்றி சிலர் கிசு கிசுத்தார்கள். உண்மையை எந்த இடத்தில் சொன்னால் என்ன? மேடைக்கு அழைபவர்களுக்கும், பயந்தாங்கொள்ளிகளுக்கும் , அங்கீகாரம் எதிர்ப்பார்ப்பவர்களுக்கும், ஒழுக்க சீலர்களாக இருக்க விரும்புபவர்களும், எழுத்தில் மட்டுமே தங்கள் அறச்சீற்றத்தைக் காட்டுபவர்களுக்கும் அது ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்.
நான் என்குறித்த எந்த பிம்பத்தையும் உருவாக்க விரும்பவில்லை. அது கணிக்க முடியாததாகவும் சிதைந்ததாகவும் சந்தேகத்துக்குறியதாகவும் இருப்பதே எனக்கு பலம். பிம்பங்கள் நமக்கே தெரியாமல் நாம் நம்மைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் கட்டம் . ஒரு சமயத்தில் அதை மீறிவர நம்மால் முடியாமல் போகலாம். எனக்கு அந்தக் கட்டுப்பாடில் நம்பிக்கை இல்லை.
எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் இலக்கை நோக்கி
நான் ஓடுகிறேன் …
முடிந்தால் என் பின்னால் ஓடிவரட்டும்
முடியவில்லையா
ஒதுங்கிகொள்ளட்டும்
யாருக்காகவும் என்னால் நிர்க்கமுடியாது!
…தொடரும்