நாங்கள் பேசி முடித்தவுடன் கிளம்பி விடலாம் என முடிவெடுத்திருந்தோம். எங்களுக்குப் பின்னர் சை.பீர்முகம்மது பேசுவதாக கேள்விப்பட்டதால் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். அந்த நேரம் எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் குமரன் மேடையில் ஏறி பேசினார். அவர் பேச்சின் இறுதியில் ‘நவீன் கோரிக்கையை நான் அமுல்படுத்த இந்த மேடையில் உறுதி அளிக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டில் தமிழை மூல மொழியாகக் கொண்ட மாணவர்களை இணைக்கும் வண்ணம் சிறுகதை பட்டறை மற்றும் போட்டிக்கான ஏற்பாட்டினை மலாயா பல்கலைக்கழகத்திலேயே ஏற்பாடு செய்கிறேன்..வல்லினம் கேட்டுக்கொண்ட களம் அவர்களுக்கு அங்குக் கிடைக்கும்.’ என்றார்.
நாங்கள் உற்சாகமாகக் கைத்தட்டினோம். நிச்சயம் அது அரசியல்வாதிகளின் மேடை பேச்சு இல்லை என நம்பினோம். முனைவர் குமரன் தாம் தலைமை பொறுப்பில் இருக்கும் போதே இந்த அரும்பணியை சிறப்பாகச் செய்வார் என்று நம்புகிறோம்.
அதன் பின்னர் நாங்கள் ஆவலாய் காத்திருந்த சை.பீர்முகமது உரை. அவர் பேசத் தொடங்கும் முன்னரே நான் நண்பர்களிடம் நிச்சயம் அவர் தன்னைத் தானே ‘துலுக்கன்’ என்று அழைத்துக்கொள்வார் என்று சொல்லிவிட்டேன். இதற்கு முன் நான் அவர் பேசும்போதெல்லாம் அந்த வார்த்தையைக் கேட்டதுண்டு. ஏதாவது ஒரு பகுதியில் பக்தி இலக்கியத்தின் ஒரு துணுக்கைக் கூறி சட்டென அதிர்ச்சி அடைந்தவராக “நான் துலுக்கன் … இதை சொல்வதால் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே !” என்பார் . கூட்டத்தினர் கைத்தட்டுவார்கள். இங்கும் அதையே செய்தார். போதா குறைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் மேடையிலேயே “நீங்க செட்டியார்தானே” என்று வேறு கேட்டுவைத்தார். நிச்சயமாக அவருக்கு ‘மலேசியாவின் நவீன இலக்கிய தந்தை’ விருது கொடுக்கலாம். பேச்சில் அவ்வப்போது பலகாலமாக திட்ட நினைத்தவர்களையெல்லாம் சாடை மாடையாகத் திட்டித்தீர்த்தார். யாரின் பெயரையும் சொல்லவில்லை.( பதிலுக்குத் திட்டிவிட்டால்.)
சை.பீர் உரை முடிந்ததும் மன நிறைவுடன் கிழம்பினோம். மகிழுந்தில் முனைவர் குமரன் மேடையில் பலத்தக் கைத்தட்டல்களுக்கிடையில் கொடுத்த வாக்குறுதி பற்றியே பேச்சாக இருந்தது. மலாயா பல்கலைக்கழகம் இவ்வாண்டில் செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையாகவே அதை நம்புகிறோம். கூடவே ஒரு அச்சம். வருட இறுதியில் வரவு செலவு கணக்கு காட்ட சில சங்கங்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் மூக்கை நுழைத்து கொண்டு , பத்திரிகையில் மாலையுடன் போஸ் கொடுக்கும் கண்றாவி இதில் நடந்துவிடுமோ எனத் தோன்றியது. செ…செ… முனைவர் குமரன் சுரண்டல் வாதிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இடம் தர மாட்டார் என நிம்மதி பெரு மூச்சு விட்டோம்.
சிவாதான் மலாக்கா வரை வாகனத்தைச் செலுத்தினார். எல்லோருக்கும் களைப்பு இருந்தது. மாறி மாறி தூங்கினோம். மலாக்கவை அடைந்த பின்னர் நான் மீண்டும் ஓட்டத் தொடங்கினேன். சிவாவை முதலில் அவர் குடியிருப்புப் பகுதியில் இறக்கிவிட்டு பாலமுருகனை ‘டூத்தா’ நிலையத்தில் இறக்கிவிடும்போது இரவு மணி 9.30. மனம் தனிமைக்குத் தயாரானது. இனி பயணம் உள் நோக்கி நடக்கும்.
வாகனத்தை வீடு நோக்கி செலுத்தும் போது நிதானம் கூடியிருந்தது. எவ்வித அவசரமும் இல்லை. மகிழுந்து ஒரு மேகம் போல மிதப்பதாய் உணர்ந்தேன். இலக்கியப் பயணம் இறுதியில் தனிமையில் முடிந்திருந்தது. இலக்கியம் என்பதே தனிமையில் முடிவதுதானே.
முடிந்தது
தனிமைக்குப் பிறகு மீண்டும் இணைவோம். அருமையான தொடர். முடிந்ததும் மனம் பயணம் குறித்து அசைப்போடுகிறது நவீன்.