கடந்த தீபாவளி தொடங்கி பொங்கல் இன்னும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை நெருங்கும் போதெல்லாம் வானொலி அறிவிப்பாளர்களிடமிருந்து ஒரே வகையான தொலைப்பேசி அழைப்புகளே வந்தன.
பண்டிகையை ஒட்டி கவிதை எழுதி வாசிக்க வேண்டுமாம்.நான் மிகப்பணிவாக மறுத்திருப்பேன். என்னைப்போலவே சக நண்பர்களான சிவம், தோழி போன்றோரும் மறுத்திருப்பர். நிகழ்ச்சி தயாரிப்பாளர் கடுப்பாகி விடுவார். “உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அதைப் பயன்படுத்தத் தெரிவதில்லை” என்று அழைப்பைத் துண்டிப்பார்.
வானொலி மட்டுமல்ல இலக்கிய நிகழ்வுகள் மற்றும் புத்தக வெளியீடுகளில் கூட கவிதை வாசிப்பது ஓர் அங்கமாகிவிட்டது.வெகுசன கலாச்சாரத்தின் முக்கியமான பொழுதுபோக்காக மாறிவிட்ட கவியரங்கில் ஒரு நவீன கவிஞன் செய்ய வேண்டிய சமரசங்கள் ஏராளம்.
முதலில் வேறொருவரின் தேவைக்கு ஏற்ற வரிகளை உற்பத்தி செய்யும்போதே அவை ஒரு பாடலுக்கான அல்லது மேடை பிரச்சாரத்திற்கானத் தகுதியைப் பெற்றுவிடுகிறது. அந்த மேடையை அல்லது பொது அரங்கைப்பொறுத்து அந்த வரிகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அந்த வரிகள் ஒரே வாசிப்பில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் பிரத்தியேகச் சத்தத்தைக் கொடுக்கும் படியும் அமைக்க வேண்டியிருக்கிறது. மறவாமல் எல்லோரையும் ‘குஷி’ படுத்த முரண்களையும் அங்கதங்களையும் வாரி இறைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, குரலை மிகச்சாதுரியமாகச் சமய சந்தர்ப்பம் பார்த்து கூர்மை படுத்தத் தெரிய வேண்டும். தேவைப்பட்டால் சிரிக்க வேண்டும் அல்லது கண்கள் சிவக்க கோபப்பட வேண்டும். (இந்த சமரசங்களையெல்லாம் செய்து நான் மேடைகளில் கை தட்டல் வாங்கியுள்ளதும் செய்யாமல் ஒரு வன்முறையாளனுக்குக் கிடைக்க வேண்டிய சாபங்களைப் பெற்றுக்கொண்டதும் இப்போது நினைவிற்கு வருகிறது).
கவிதை வாசிப்பு என்பது கவிதையில் புனைந்துள்ள மொழி அதன் வரிகள் கொடுக்கும் நுட்பமான அர்த்தங்களை வெளிப்படுத்துவதை விடுத்து வாசிப்பவரின் ஓசையொழுங்கும் சந்தமும் என ஒரு பொதுப்படையான மொழியில் வாசகனை சென்றடைவதாகிவிட்டது.இந்நிலையில் நவீன கவிதைக்கான பொருத்தமான ஊடகம் எழுத்துப்பிரதிகளே என எண்ணத்தோன்றுகிறது.
பாடம்
வானத்தில்
பறந்துகொண்டிருந்த
பட்டங்களுக்குள்
ஒரு போட்டி
விழுவது யாரென்று
கீழிறங்குவது பற்றி அறியாத
பட்டங்கள் விழ முடியாமல்
தவித்தன.
தற்செயலாய்
ஒரு பட்டம் வாலறுந்து
விழுந்தபோது
பறப்பது பற்றித்
தெரிந்துகொண்டன
லதாவினுடைய இந்தக்கவிதை மேடையில் வாசிக்கப்பட்டால் அதன் இறுதியில் தோன்றக்கூடிய நிசப்தத்தையும் குழப்பத்தையும் சடங்கான கைத்தட்டல்களையும் இப்போது மனதின்முன் நிறுத்திப்பார்க்கிறேன். இந்தக்கவிதை கொடுக்கக்கூடிய அனுபவத்தை அறிந்துகொள்ள குறைந்தபட்ச கவிதை இரசனையாவாது தேவைப்படுகிறது. அவ்வனுபவத்தை சில நிமிடங்களாவது மனதில் நகரவிட்டு இன்னொரு சிந்தனை தளத்திற்கு இட்டுச்செல்ல வாசகனுக்கும் கவிதைக்குமான உறவு மேடைகளில் சாத்தியப்படும் என நான் நம்பவில்லை.
கவிதைகள் மேடையில் வாசிக்கப்படுவது உலகம் முழுதும் நடக்கும் நிகழ்வுதான்.பல உலகப் புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள் மேடைகளில் அரங்கேறியதாகக் கேள்விப்பட்டதுண்டு.அச்சு தொழில்நுட்பம் இல்லாத சங்க இலக்கிய காலத்திலும் வாசிப்பின் மூலமே கவிதைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.பொதுவில் மக்கள்முன் கவிதைகள் வாசிக்கப்படுவது நிச்சயம் தவறாகாது ஆனால் வேறொருவரின் தேவைக்காக வேறொருவரின் பரிந்துரையின் பேரில் ஒருவன் ஏற்கனெவே தலைப்பிட்ட ஒன்றுக்கு வரிகளை தயார்ப்படுத்துவது எந்நிலையிலும் கவிதையாகாது. ஏற்கனவே புனைந்த கவிதையை மேடையேற்றுவதிலும்; மேடையேற்றுவதற்காக வரிகளைப் புனைவதிலும் உள்ள நுட்பமான கவித்துவ வெளிபாட்டு அனுபவத்தின் வித்தியாசம் மிக நீண்டது.
மேடைக்கவிஞன் கண்முன் இருக்கும் ரசிகனுக்காக வரிகளை உற்பத்தி செய்கிறான். அவன் ஒரு இசையமைப்பாளனின் தோரணையின் சப்தங்களை ஒன்று சேர்க்கிறான். முடிந்தால் புழக்கத்தில் அதிகம் இல்லாத எளிய சொற்களை தேர்ந்தெடுத்து புகுத்தி கிளர்ச்சியை ஏற்படுத்துகிறான். அனைவரும் பயன்படுத்திய சொற்களை உடைத்துக்காட்டி வெவ்வேறு அர்த்தங்கள் அவை கொடுப்பதை ஒரு சாகசமாக செய்யத்தொடங்குகிறான்.இதை கேட்டுக்கொண்டிருக்கும் வாசகன் அடையக்கூடியது இதற்கு முன் தமிழ் சூழலில் சொல்லி அலுத்துப்போன ‘அறநெறிகளையும்’ சந்தங்களின் இன்பங்களையும்தான்.
இப்படி பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் கோமாளிகளாக மாற்றம்கண்டு பவனிவரும் வேளையில் எழுத்தாளர்களை நோக்கி இன்னொரு வகையான வன்முறையையும் அண்மைய காலமாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையம் செய்து வருகிறது. வசனம் எழுதக் கோரியும் எழுத்தை வடிவமைக்கக் கோரியும் எழுத்தாளர்களிடமும் ஓவியர்களிடமும் அடிக்கடி அந்தத் தனியார் தொலைக்காட்சியிலிருந்து அழைப்புகள் வருவதுண்டு.இவர்களின் ஒரே நோக்கம் இலவசமாக உழைப்பைச் சுரண்டுவதே. வெறும் மேம்போக்கான அரசியல், சினிமா,கலை,மற்றும் வாழ்வியல் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்வதில் எளிதாகப் பணம் பண்ணும் இவர்கள் சில எழுத்தாளர்களிடம் அணுகிய விதம்…
சம்பவம் 1:
தொ.நிலையம்: நிகழ்ச்சிக்கு வசனம் எழுதணும்.
கவிஞர் : இல்லைங்க எனக்கு அதில விருப்பம் இல்ல.
தொ.நிலையம் : ஆமா…உங்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுத்தா பெருசா பந்தா பண்ணுவீங்க. எங்களுக்கு வேற ஆள் இல்லன்னு நெனச்சீங்களா?
சம்பவம் 2:
தொ.நிலையம் : ஒரு நிகழ்ச்சிக்கான தலைப்பை அழகான எழுத்தில எழுதணும்.
ஓவியர் : எவ்வளவு தருவீங்க.
தொ.நிலையம்: என்னா சார் இது. உங்க எழுத்து மலேசியா முழுக்க போக போகுது, பணம் கேட்கிறீங்க.
ஓவியர் : அப்ப வேலைக்கு ஆகாது.
தொ.நிலையம் : நீங்க கேட்ட தொகையில் பாதி மட்டும்தான் முடியும்.
ஓவியர் : அப்ப பாதி மட்டும் எழுதி தரேன்.
சம்பவம் 3:
தொ.நிலையம் : நீங்க நல்லா டமிழ் பேசுறீங்க. எங்க தொலைக்காட்சியில பெண்கள் விழிப்புணர்வு நிகழ்வுல அறிவிப்பாளரா இருக்கலாமே.
கவிஞர்: செய்யலாம்
தொ.நிலையம்: அதுக்கு நீங்க கொஞ்சம் மோடனா உடுத்தணும்.
கவிஞர்: ஓ…
தொ.நிலையம் : அப்பப்ப கைய கால ஆட்டி நீட்டி பேசணும்.
கவிஞர் : ஆள விடுங்கடா சாமி.
சம்பவம் 4:
தொ.நிலையம்: அவசரமா ஒரு கவிதை வேணும்.
கவிஞர் : எதப்பத்தி?
தொ.நிலையம் : காதல பத்தி ஆனா காமடியா…
கவிஞர் : அப்படினா…?
தொ.நிலையம் : உதாரணமா…
‘அன்பே உன்னை பார்த்ததும் என்னை மறந்தேன்
உன் தங்கையை பார்த்ததும்
உன்னையே மறந்தேன்…’ இப்படி.
கவிஞர்: ஸாரிங்க…எனக்கு வராது.
தொ.நிலையம் : என்னாங்க பெரிய கவிஞர்ன்னு சொல்றீங்க…இது எழுத முடியல…
ஆக மொத்தத்தில் இந்நாட்டு ஊடகங்களுக்கு எழுத்தாளர்களிடமிருந்தும் சிந்தனையாளர்களிடமிருந்தும் எவ்விதமான அறிவுப்பகிர்வும் தேவைப்படுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச தொழில்நுட்ப அறிவும் அறவே இல்லாத நுண் அரசியல் பார்வையும் பிழைப்பை நடத்திக்கொள்ள போதுமானதாக இருக்கிறது. இவர்களுக்குக் கவிஞர்களூம் எழுத்தாளர்களும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே பயன்படுவார்கள்.
என்னால் இதற்கு ஊடகங்களை மட்டும் குறை சொல்ல முடியவில்லை. ஊடகங்களின் கவர்ச்சியின் முன் அடிபணிந்து போகும் எழுத்தாளன் அதில் குறைந்த பட்சம் தன் பெயரையாவது கண்டுவிட எல்லா சமரசங்களுக்கும் தயாராகிவிடுகிறான். அவர்கள் தரும் மந்தமான வெளிச்சத்திற்கு எல்லா கும்மி கொட்டவும் சம்மதிக்கிறான். ஒரு படைப்பாளிக்கு ஊடகம் அவசியமென்றாலும் அதில் அவன் குரல் படைப்பாளிக்கான தனித்ததொரு தொணியில் ஒலிக்காமல் ஒரு மசாலாத்தூள் விளம்பரத்திற்கான சப்தங்களை எழுப்புவதால் என்ன பயன்?
இதுபோன்ற கோபமெல்லாம் “தீபாவளிக்கு என் கவிதையை ரேடியோவுல கேட்டீங்களா” என சக கவிஞர்கள் அப்பாவியாய் என்னைக் கேட்கும் போதுதான் ஓடியே போய்விடுகிறது. வேறென்ன செய்வது?!
eppadi malaiyaalan and telungu paraiyan santavange..?