மூன்று நாட்களுக்கு முன் ஆஸ்ட்ரோ அறிவிப்பாளர் ரேவதி மாரியப்பன் அவர்கள் தனது சமூக வளைத்தளத்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பதிவொன்று வெளியாகியிருந்தது. அவர் கண்களில் அழுகையின் மிச்சமிருந்தது. பலகாலமாக விழுதுகளில் பார்த்த முகமல்ல அது.
‘PENGIRL ROCK’ எனும் நிகழ்ச்சியில் “ஆண்கள் அனைவரும் ஏன் கற்பழிக்கின்றனர்?” என ரேவதி சிறப்பு விருந்தினரைக் கேள்வி கேட்க, “எல்லா ஆண்களும் இல்லை… சில ஆண்கள்” என சிறப்பு விருந்தினரும் தன் பதிலைத் தொடர்கிறார். இதன் அடிப்படையில் அவர் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வசைகள் எழுந்தன. வீடியோ செய்ய வாய்ப்புக்கிடைத்த கருத்துப்பஞ்சத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல தருணமானது. “உன் அப்பாவிடம் இப்படி கேப்பியா? உன் அண்ணனிடம் இப்படிக் கேப்பியா? அதெப்படி எல்லா ஆம்பளைங்களையும் கேக்கலாம்” என ஆளாலுக்குப் பேசத் தொடங்கியிருந்தனர்.
ரேவதி சொன்ன வாசகம் பிழையா? என்று கேட்டால் பிழைதான். சந்தேகமே இல்லை. முகநூலில் உள்ள நிறைய தமிழ்ப்பண்டிதர்கள் அவர் எப்படி சொல்லியிருக்க வேண்டும் என போதனைகளைச் செய்து முடித்துவிட்டதால் அது குறித்து இனி பேசி ஒன்றும் இல்லை.
நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் மறைக்கப்பட்ட உண்மையை மட்டும் கொஞ்சம் யோசித்துப்பார்க்கலாம் என நினைக்கிறேன்.
முதலாவது, இது ஒரு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. ஒரு நிகழ்ச்சி பதிவு செய்யப்படுவது எதற்காக? ஒருவரை பலமுறை பேசவைத்து ஒத்திகைப் பார்த்தப் பின்னர் அதை செறிவு செய்து பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுச் செல்வதற்குத்தான். ஏறக்குறைய ஒரு திரைப்படத்தின் பணியைப் போன்றதுதான். அப்படியானால் இந்த நிகழ்ச்சியில் யாருக்கு அதிகம் பொறுப்பிருக்கிறது? இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா அல்லவா? வசனகர்த்தா எழுதக்கூடிய உரையாடல்களை அறிவிப்பாளர் பேசுகிறார். இயக்குனர் அதை பதிவாக்குகிறார். பலமுறை பதிவு செய்யப்பட்ட அவற்றில் இருந்து எது பொருத்தம் என எடிட்டரால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சி முழுமையும் செறிவாக்கம் காண்கிறது.
இந்நிகழ்ச்சியின் வசனகர்த்தா, இயக்குனர் என அனைத்துப்பொறுப்பிலும் இருப்பவர் விமலா பெருமாள் அவர்கள் என இணையத்தளங்கள் முழுக்கவே அறிவிப்புகள் உள்ளன. அதுபோல இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் டினேஷ் குமார் அவர்கள். இருவரும் கணவன் மனைவி என்பது கலை உலகம் அறிந்த விசயம்.
ரேவதி மாரியப்பன் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளர். முடிவெடுக்கும் சக்தி என்பது இந்த நிகழ்ச்சியில் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் சிறப்பு விருந்தினராக பதில் சொல்பவர் எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் எனவும் இயக்குனரால் வலியுறுத்தப்படுவதுண்டு. இவை தவறுகள் அல்ல. ஒரு நிகழ்ச்சி இவ்வாறுதான் கட்டமைக்கப்படுகிறது. நிலை இவ்வாறு இருக்க, பல ஆண்டுக்காலமாக நேரடி அறிவிப்புகளில், உரையாடல்களில் எவ்வித தடுமாற்றமும் சிக்கலும் இல்லாமல் நிகழ்ச்சியை வழிநடத்தும் ஒருவர் இப்படியான தவறை விரும்பியே செய்திருப்பாரா? அல்லது இயக்குனரால் வலியுறுத்தப்பட்டோ வற்புறுத்தப்பட்டோ இத்தவறு நிகழ்ந்திருக்குமா என யோசிக்க முகநூல் போராளிகளுக்கு அவகாசம் இல்லாமல் போனதுதான் துரதிஷ்டம்.
இவை ஒருபுறம் இருக்க இந்நிகழ்ச்சியின் எடிட்டரும் விமலா பெருமாள் என்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. (பிழையாக இருந்தால் திருத்தலாம்) ஒருவேளை ரேவதி அவர்கள் தவறாகவே உச்சரித்திருந்தாலும் (அறிவிப்புகளில் அப்படித் தவறுகள் வருவது இயல்பு) பலமுறை பதிவு செய்த அந்த உரையாடலில் சரியானதை உட்செலுத்த வேண்டியது எடிட்டரின் பொறுப்புதானே. ஆக, நிகழ்ச்சி இயக்குனர் அந்தத் தவறான உரைநடையை அனுமதிக்க என்ன காரணம் எனச் சிந்தித்தோமா? சர்ச்சையின் வழி நிகழ்ச்சியைப் பரவலாக்குவதுதான் காரணமாக இருக்கலாம். ஒரு வணிக தொலைக்காட்சியில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சியில் வேறெந்த தார்மீக உணர்வும் இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிவேன். ஆனால் அது சர்ச்சையாகும்போது அதன் அத்தனை அழுத்தங்களையும் ஏற்றுக்கொண்டு எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் மொத்தச் சுமையையும் ரேவதி எனும் அறிவிப்பாளரின் மீது சுமத்தியது எவ்வகையில் முறை எனத் தெரியவில்லை; அல்லது சமூக ஊடகங்கள் அவரைக் குறி வைத்த நோக்கம் புரியவில்லை.
இதேபோன்ற அனுபவம் 2014இல் எனக்கும் நடந்துள்ளது. வல்லினத்தில் வந்த தயாஜியின் சிறுகதைக்கான கேள்விகளுக்கு வல்லினம் தரப்பில் இருந்து மட்டுமே பதில் சொல்லப்பட்டது. நான் தொடர்ந்து அதற்கான விளக்கங்களை எழுதிக்கொண்டிருந்தேன். அந்தக் கதையைப் பிரசுரித்ததற்கான எங்கள் தரப்பில் இருக்கும் நியாயங்களை தொடர்ந்து முன்வைத்தேன். கதை எழுதியவராக தயாஜி தன் தரப்பு விளக்கங்களைக் கூறினார். ஒப்பீட்டளவில் ரேவதி அதை கூட செய்ய வேண்டியதில்லை என்பதே உண்மை. காரணம், சிறுகதை என்பது ஓர் எழுத்தாளனின் தனிப்படைப்பு. அப்படைப்புக்கு எழுத்தாளனும் பொறுப்பெடுத்தல் அவசியம். ஆனால் தொலைக்காட்சி அறிவிப்பு ஒரு கூட்டு உழைப்பின் வெளிபாடு. அறிவிப்பாளரின் ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் வசனகர்த்தாவே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. பலர் முயற்சியின் வெளிபாட்டு முகம் மட்டுமே அறிவிப்பாளர்.
பெண்களின் நலனை மையப்படுத்தி தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ள இந்த அநீதி நகைமுரணானது. மாறாக, இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் குழு, ரேவதியை மன்னிப்புக் கேட்க வைத்ததன் வழி சுமூகமான தீர்வைக் கண்டுவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறது. தவறுக்கு மொத்த காரணமாக இருந்தவர்களே வெளியில் இருந்து அவற்றை தீர்த்து வைப்பதாகச் சொல்வதெல்லாம் வேடிக்கை.
ரேவதியை மன்னிப்புக் கேட்க வைத்து அவரை மன்னிப்பதாக பெருமனதுடன் சொல்லும் சமூக ஊடக போராளிகள், இதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டியது யார்? என்ற கேள்வியை முன் வைக்கவே இல்லை.
அதற்குச் சில காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நாம் எப்போதும் நமது எதிர்ப்பை பலவீனமான இடத்தில் இருக்கும் நபரை நோக்கியே செலுத்த முனைகிறோம். அதற்கு முக்கியக் காரணம் அவர் மிக விரைவில் பணிந்துவிடுவார். பின்புலமாக நிறுவனமோ அமைப்போ அற்ற தனிநபரை அழுத்தி அழுத்தி பணிய வைப்பதன் வழி தன்னை சமூகத்தின் முன் ஒரு கதாநாயகனாகக் காட்டிக்கொள்ளலாம். இரண்டாவது, நிகழ்ச்சியைத் தயாரிப்பவர் அல்லது ஒரு திரைப்படம் இயக்கத் தகுதி கொண்டவரை சீண்டாமல் இருப்பதன் வழி நாளை சில சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உண்மையில் இந்தச் சிக்கல் வழக்குமன்றத்துக்குச் சென்றிருந்தால் இதற்கு முழுமையாகப் பொறுப்பெடுத்திருக்க வேண்டியது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்புதான். இப்படி ஒரு சிக்கலுக்கு முழுமையான காரணகர்த்தாவாக இருப்பவர்களை வெற்றியாளர்களாக வெளியில் உலாவ விட்டு, அவர்கள் கட்டளைக்கு அடிபணிந்த ஒருவரை நோக்கி நாம் எழுப்பும் கூச்சல்களும் வசைகளும் இன்னும் எத்தனை கண்ணீருக்குக் காரணமாக இருக்கப் போகிறது?
இந்தச் சிக்கலைக் கையில் எடுத்தவர்கள் இரண்டு தரப்பினர். முதலாவது, திட்டமிட்டே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பக்கம் வசைகள் திரும்பாமல் இருக்க ரேவதி மாரியப்பனைக் குறி வைத்தவர்கள். இரண்டாவது உணர்ச்சிவசப்பட்டவர்கள். நான் பல ஆண்டுகளாக இவர்களைச் சந்தித்தே வந்துள்ளேன். அடிப்படையில் இவர்கள் நல்லவர்கள். தெளிவில்லாத தன்மையால் சத்தமிடுபவர்கள். உண்மையை இவர்களிடம் எடுத்துக்கூறுவதன் வழியே இவர்களைச் சிந்திக்க வைக்க முடியும். என் குரல் இவர்களை நோக்கி மட்டும். குறைந்த பட்சம் இவர்களுக்குள் உள்ள அற உணர்ச்சி மேலெழுந்து வராதா என்றே பேச வேண்டியுள்ளது.
சரி, ரேவதி மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரையும் சமூக வலைத்தளங்களில் வசைப்பாடப்பட்டுவிட்டனர். (அந்த வசைகள் ஒவ்வொன்றுமே பாலியல் வல்லுறவுக்கு நிகரானதுதான்) கடந்த சில நாட்களாக அவரை நிகழ்ச்சிகளிலும் காண முடிவதில்லை. ஆனால் இந்த தவறுக்கு மொத்தக் காரணமாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்த பணிகள் தொடங்கியிருக்கும். நாளை அவர்கள் இயக்கும் படங்களில் ரேவதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சிறிய வேடங்களில் வந்து போவார்கள். பணமும் அதிகாரமும் உள்ளவன் பாதுகாப்பாக இருப்பான். அவன் விட்டுச்செல்லும் பாவங்களைச் சுமக்க அப்பாவிகள் சிலர் பின் தொடர வேண்டும்.
ஒரு சர்ச்சை நிகழும்போது அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் நாம் எழுப்பக்கூடிய அருவருப்பான கூச்சல்கள் இப்படி இன்னும் இன்னும் எளியவர்களின் கண்ணீருக்குக் காரணமாக இருக்கப் போகிறது. ஆனால் நாம் மாறிவிடப்போவதில்லை. நமக்குத் தேவை எளிய சிக்கல்களும் அதற்கான எளிய தீர்வுகளும்தானே.