அன்புள்ள நவீனுக்கு,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
சாமானிய வருகையாளர்களுக்கு, தாங்கள் அறிந்த தொல்கதைகளை மேலோட்டமாக உறுதிப்படுத்துகிறது இந்த அங்கோர்வார்ட் கோயில். ஆனால் அப்சராக்களின் உலகத்தை நம்பும் நடன மங்கை சந்தவி(அருமையான பெயர்), வழிகாட்டி மரியா, பத்திரிக்கையாளர் ஷாமா மற்றும் நாவலாசியர் அபிராமிக்கோ அது ஆழ்ந்த உலகம்.
கதையின் மாயத்தன்மையை விலக்கி கறாராக அணுகினால் ‘ஒலிப்பேழை’ கதையின் வாடிக்கையாளரை ஷாமாவுடன் தொடர்புபடுத்தலாம். சாதுர்யமாக கதைசொல்லும் திறன் கொண்ட வழிகாட்டி ஷாமா, குழந்தைமை உள்ளம் கொண்ட அபிராமியை மயக்குவதுதான் கதை என ஒரு கோணத்தில் வாசிக்கலாம். எதேச்சையான வருகையாளராக முதலில் அங்கு வந்து, அப்சராக்களின் கதைகளில் ஆர்வம் கொண்டு மற்றவர்களுக்கு அந்த ஆர்வத்தைப் பற்ற வைக்கும் வழிகாட்டியாக மாறும் ஷாமா என வேறொரு கோணத்தில் வாசிக்கலாம்.
என்னைக் கவர்ந்த கதையின் வரிகள்,
அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றைச் சென்று அடைவதுதான் கலை
என்றாவது பெரும் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்து மறுபடியும் அடுக்கப்படும்போது இன்னொரு உடல் வேறொரு தலையுடன் சேர்க்கப்படலாம்.
எல்லா கலைகளையும்போல இசையும் இரவுக்காகத்தான் காத்திருக்கிறது. இரவு அழுத்தமாகப் படர்கையில் இசை இன்னும் தீவிரமாகும்
மாய உலகத்தில் சஞ்சரிக்கும் அப்சராக்கள், அந்த உலகிற்கு வெளியே இணைமனம் கொண்ட தோழியர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்த தோழியர்களை அவரவர்களின் திறன்கொண்டு அந்த உலகிற்குள் நுழைத்து இணைய வைத்து, அந்த மாய உலகின் தொடர்ச்சியைப் பேணுகிறார்கள் என வாசிக்கலாம். அந்த மாய உலகம், இலக்கியம் , படைப்புலகம் என பொருத்திப் பார்த்தால், கதை வேறொரு தளத்தில் ஆழம் கொள்கிறது.
அன்புடன்
சிவமணியன்
வணக்கம் அண்ணா.
உங்கள் அப்சரா சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். ஒரு சிறுகதை உண்மைக்கும் வாசகனின் கற்பனையுடன் எள்ளி நகையாடும். அந்த கற்பனை பயணிக்கும் அதே பாதையில் கதையின் முடிவும் வந்து ஒருங்கு சேருமாயின் வாசகனால் அந்த கதை முழுத்திருப்தியுடன் உள்வாங்கி லயிப்பதுடன் ஆசிரியர் மீது தீராப்பற்றை உருவாக்கிவிடலாம். பொதுவாக கதைகள் நிலைகொள்ளாமை, இரண்டு எல்லைகளுக்கும் (இங்கு நிஜமும் கனவும்)நடுவே நின்றிருக்கும் அலைக்கழிப்பு ஆகியவற்றையே சொல்லமுயலும். உறுதிப்பாட்டில் கேள்விகள் இல்லை, ஆகவே கதைக்கு வேலை இல்லை. அவன் எடுக்கும் முடிவென்பது அக்கணம் அளிக்கும் தாவல் மட்டுமே.எனக்கு அங்கோர்வாட் பற்றிய நிஜ அறிவு ஒப்பீட்டளவில் குறைவு. ஆகவே எனக்கு கதாசிரியர் அங்கோர்வாட் பற்றி சொல்லும் துணுக்குகளில் இருந்துதான் என் கற்பனையை நான் வளர்த்துக்கொண்டேன். கதையின் முடிவு என்னை ஏமாற்றியிருப்பினும் கதையின் போக்கு எனக்கு பிடித்திருக்கிறது.
ஷாதிர், இலங்கை