மா. ஜானகிராமன் : பழைய காகிதங்களைப் பொறுக்கும் துறவி

மா. ஜானகிராமன் குறித்து நான் முதன்முறையாக கவிஞர் தேவராஜுலு வழிதான் அறிந்தேன். அது 2006. அப்போது ‘காதல்’ இலக்கிய இதழைத் தொடங்கியிருந்தோம். அது காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, திண்ணை அகப்பக்கம் என வாசிப்பு சுருங்கியிருந்த காலம். இவ்விதழ்கள் முன்னெடுத்த அன்றைய எழுத்தாளுமைகளை மட்டுமே அதிகம் வாசித்திருந்தேன். அப்போது எழுந்து வந்த பெண் கவிஞர்கள் ஏற்படுத்திய அலையால் நவீன கவிதைகளை வாசிப்பதும் உரையாடுவதுமே முன்னெடுப்பாக இருந்தது.

தேவராஜுலு கிறிஸ்துவ சமய போதகர். மென்மையாகப் பேசக்கூடியவர். ‘காதல்’ இதழ்களை கணிசமான எண்ணிக்கையில் பினாங்குக்குத் தருவித்து விற்பனை செய்துகொடுத்து உதவினார். எனவே மாதம் ஒருமுறையாவது அழைத்துப் பேசுவார். “ஜானகிராமனை நீங்க காதல் இதழில் விரிவா நேர்காணல் செய்யணும்,” என்பது அவர் வேண்டுகோளாக இருந்தது. அப்போது காதல் இதழில் வரும் நேர்காணல்கள் பிரபலம். இதழின் அட்டையிலேயே மலேசிய இலக்கிய ஆளுமைகளின் படங்களைப் போடுவோம்.

“அவர் எழுத்தாளரா?” எனக்கேட்டேன்.

தேவராஜுலுவின் விளக்கத்தின் வழி ஜானகிராமன் எழுத்தாளர்தான் எனப் புரிந்தாலும் அவர் புனைவுகள் எதுவும் எழுதவில்லை எனத் தெரிந்துகொண்டேன். புனைவுகள் எழுதாத ஒருவர் எப்படி எழுத்தாளராக இருக்கமுடியும் எனக் குழம்பினேன். அந்த வயதில் என்னால் அவ்வளவுதான் யோசிக்க முடிந்தது. ஆனாலும் தேவராஜுலு வழங்கிய எண்களுக்கு அழைத்தேன். ஏறக்குறைய முப்பது நிமிட உரையாடல் அது. ஜானகிராமன் ‘மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை’ என்ற நூலுக்கான இறுதிக்கட்ட வேலையில் இருந்தார் என நினைவு. ஆனால் அந்நூல் தொகுப்புக்கு அவர் செய்த பணிகளை வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். உணர்ச்சிகரமாகப் பேசினார் ஜானகிராமன்.

ஏன் ஒரு மனிதர் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஊர் ஊராகத் திரிகிறார்? எதன் பொருட்டு கிடைக்கும் இடத்தில் தங்கிக்கொண்டு மக்கள் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு தகவல்களைத் திரட்டுகிறார்? இதனால் அவருக்கு என்ன லாபம்? ஏன் அவர் சமூகத்துக்காகத் தன்னை வருத்திக்கொள்ள வேண்டும்?

எனக்கு இவையெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் ஜானகிராமன் மிக முக்கியமான பணி ஒன்றினைச் செய்கிறார் என்பது மட்டும் புரிந்தது.

முதல் சந்திப்பும் இரண்டாம் பதிப்பும்

அதன் பின்னர் 2007இல் ‘செம்பருத்தி’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜானகிராமனைக் கண்டேன். அது ஒரு சீன மண்டபம். அங்கு அவர் மேசை ஒன்றைப் போட்டு ‘மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை’ நூலை விற்றுக்கொண்டிருந்தார். எனக்கு அவரிடம் என்னை அறிமுகம் செய்துகொள்வதில் தயக்கம் இருந்தது. அவர் முகத்தில் படர்ந்திருந்த ஒருவித கடுமை பேசுவதற்குத் தடையாக இருந்தது. அவர் விழிகள் கூர்மையானவை. நெரித்த புருவங்கள் அதற்கு தீவிரம் சேர்த்தன. நான்  அந்த மேசையைச் சுற்றிச் சுற்றி வந்தேன். அப்போது கொஞ்சம் பொடியனாகத் தெரிவேன் என்பதால் “விலை குறைச்சு தறேன்… வாங்கிக்கிங்க ஐயா” என்றார். “இல்லை இல்லை” என அசடு வழியச் சிரித்து, ஒன்றும் பேசாமல் ஒரு நூலை வாங்கிக்கொண்டேன்.

அது இரண்டாம் பதிப்பு. எனக்கு அந்த நூல் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.  ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு காலம் மலேசிய இந்தியர்களின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி விரிவாகப் பேசியிருந்தது அந்நூல். ஏராளமான அட்டவணைகள், கணக்கெடுப்புகள், பெட்டிச்செய்திகள், நாளிதழ் தகவல்கள், பிற ஆய்வுகளின் சேர்க்கைகள் எனத் தரவுகளைக் கொண்டு வலுவான ஆய்வு நூலாக தயாரிக்கப்பட்டிருந்தது. அந்நூல் உருவான காரணம் அப்போது எனக்குப் புரிந்தது. மேம்பாட்டுத் திட்டங்களாலும் துண்டாடல்களாலும் தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டு, தோட்ட மக்கள் நகர்புறங்களுக்கு விரட்டப்பட்டு முற்றிலும் புதிய வாழ்வியல் சூழலுக்குள் மலேசிய இந்தியர்கள் தள்ளப்பட்டனர். ஆகவே, 200 ஆண்டுகாலத் தோட்டப்புற வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் உருவாக்கிய நூல்தான் அது. அதன் வழி அரசியல், பொருளாதாரம், உளவியல் எனத் தேக்கம் கண்டுள்ள ஒரு சமூகத்தின் குரலை அனைவருக்கும் எடுத்துச் சொல்வது அதன் முன்னெடுப்பு.

ஜானகிராமன் செய்துள்ளது மிகப்பெரிய பணி என எனக்கு உடனடியாகவே புரிந்தது. அவர் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர், பாதுகாக்கப்பட வேண்டியவர் என அக்கணமே உணர்ந்துகொண்டேன்.

அறமும் மீறலும்

இந்தக் காலகட்டத்தில்தான் (2007) மாணிக்கவாசகம் விருது அறிவிக்கப்பட்டது. பரிசாக வழங்கப்படும் 7,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு  அன்றைக்கு மலேசியாவில் மிகப்பெரிய தொகை. விருது கிடைக்கும் நூல்கள் கவனத்திற்கு உரியதாகவும் மாறின. அவ்வருடம் கட்டுரை நூல்களுக்கான விருது என அறிவிக்கப்பட்டதால் அது மா. ஜானகிராமனுக்குக் கிடைக்கும் என பொதுவான ஒரு கருத்து இருந்தது. வித்யாசகர் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் தங்கள் சார்ந்த இதழ்களில் அது குறித்து எழுதவும் செய்தனர். ஆனால் யாரும் எதிர்ப்பாரா வண்ணம் இராஜம் இராஜேந்திரன் அவர்கள் எழுதிய ‘புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலுக்கு பரிசு கிடைத்தது.

அது இராஜம் இராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்புக்காக செய்த ஆய்வேட்டின் தொகுப்பு. இரண்டு காரணங்களுக்காக நான் அந்தத் தேர்வை கடுமையாக எதிர்த்தேன்.

முதலாவது, அந்நூலை எழுதியவர் அன்றைய எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த இராஜேந்திரனின் மனைவி. உலகப் பொதுவிதியின்படி குடும்ப உறுப்பினர் ஒருவர் இயக்கத்தின் முதன்மை பொறுப்பில் இருக்கும்போது அவர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அறிவுசார் போட்டிகளில் பரிசுகள், விருதுகள் வழங்கப்படுவதில்லை. அப்படி குடும்ப உறுப்பினர் பங்கெடுக்கும்போது தற்காலிகமாகவேணும் இயக்க உறுப்பினர் தன் பொறுப்பைத் துறந்துவிட வேண்டும். ஆனால் இராஜேந்திரன் தலைவராக இருந்து அவர் மனைவிக்கு நூலுக்கான பரிசைக் கொடுப்பது அறிவுச்சூழலில் நிகழ்ந்த பெரும் அநீதியாக இருந்தது.

இரண்டாவது, அடிப்படையில் அது ஒரு பலவீனமான நூல். சினிமா பாடலாசிரியர்களையும் வானம்பாடிக் கவிஞர்களையும் முன்னுதாரணமாகக் கொண்டு கவிதைப் பட்டறைகளை நடத்திய மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகளை ‘மறுமலர்ச்சிக் காலம்’ என வரையறுக்க உருவாக்கப்பட்ட நூல். தமிழ் புதுக்கவிதையில் நிகழ்ந்த எவ்வித சாதனைகளையும் அறியாமல் பாடுபொருள், உத்திகள், மொழிநடை என பிரேத பரிசோதனை செய்துள்ள நூல். அந்நூலுக்கு முதுகலைப்பட்டம் வழங்குவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தாலும் இலக்கியச் சூழலில் அதற்கான மதிப்பு மிகைப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தேன்.

அக்காலகட்டத்தில் இந்த இலக்கிய அறமீறலுக்கு எதிராக ‘உங்கள் குரல்’ இதழில் சீனி நைனா முகம்மது, ‘ஜனசக்தி’ பத்திரிகையில் பெரு. அ. தமிழ்மணி, ‘வல்லினம்’ வழி நான் ஆகியோர் மட்டுமே பேசியதாக நினைவு. எழுத்தாளர் சங்கத்தின் தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக இருப்பதுதான் அதன் விருதுகளைப் பெறும் முதல் தகுதி என உணர்ந்துகொண்ட அந்தக் காலகட்டத்தில் முழுவதுமாகவே இராஜேந்திரனின் உறவைத் துண்டித்துக்கொண்டேன். அவர் தலைவராக இருக்கும் வரையில் சங்கத்தின் எந்த விருதுக்கும் போட்டிக்கும் நூல்களை அனுப்புவது அவமானகரமானது என முடிவெடுத்தேன். அது ஒருவகையில் அறிவுச்சூழலின் அழிவுக்கு நானும் துணைபோவதுதான்.

ஜானகிராமன் அவர்கள் இதனால் எல்லாம் சோர்ந்து போகிறவர் அல்ல. எழுத்தாளர் சங்க ஆண்டுக்கூட்டங்களில் அவர் குரல் ஒலிப்பது பொதுவாக எழுத்தாளர்களின் நலன் குறித்தே இருந்தது. அந்தக் குரல் அவர் போராட்ட வாழ்விலிருந்து எழுந்தது. அடிப்படையில் ஜானகிராமன் ஒரு களப்போராளி.

ஜானகிராமன் எனும் களப்போராளி

1980களில் இந்தப் போராட்ட எண்ணம் ஜானகிராமனிடம் உருவானது. பத்துமலை கோயிலை ஒட்டிய சுண்ணாம்பு மலையை தொழில் நிமித்தமாக உடைத்த குத்தகையாளரை எதிர்த்தபோது, அவரிடம்  இந்தப் போராட்ட குணம் முதலில் எழுந்தது. மலையை உடைப்பதால் மெல்ல மெல்ல அங்கு அமைந்துள்ள கோயிலுக்கு ஆபத்து வரும் என நடத்தப்பட்ட போராட்டத்தில் தன் குரலையும் இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளம் கொடுப்பதால் மழைக்காலங்களில் அவர்கள் வருமானம் பாதிக்கப்படுகிறதென 1990களில் தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதச் சம்பள போராட்டத்தில் இணைந்தார். அப்போராட்டம் அவர் திட்டமிடாதது. அப்போது அவர் தொலைத்தொடர்பு இலாக்காவின் பணியாளர். அது அரசு பணி. பணி நிமித்தமாக அந்தப் பக்கம் சென்றவர் மக்களின் துன்பம் கண்டு வேலை உடையுடன் போராட்டத்தில் இறங்கினார். அப்போராட்டத்தின் படங்கள் நாளிதழ்களில் வர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதுபோன்ற விசாரணைகளில் ஜானகிராமன் சோர்வடைந்ததில்லை. அதற்குப் பின்னரும் பத்தாங் பெர்ஜூந்தாயின் அமைந்துள்ள ஒரு தோட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கியபோது அதற்கு எதிராகச் செயல்பட்ட அன்றைய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் லிம் கெங் யாக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, காவல்துரை அவரைக் கைது செய்து விசாரித்தது. அப்போதும் அவர் அரசு ஊழியராகவே இருந்தார்.

இயக்க செயல்பாட்டில்

ஒருமுறை அவரிடம் “அரசு வேலையில் உள்ள பலரும் தங்கள் வேலையைத் தக்க வைத்துக்கொள்ள அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டும்  மௌனமாக இருப்பதைப் பார்க்கிறேன். உங்களுக்கு எப்படி துணிந்து போராடும் எண்ணம் வந்தது?” எனக் கேட்டேன்.

“தெரியவில்லை. என் கண்முன்னால் ஒரு தனி மனிதனோ ஒரு சமூகமோ தங்கள் வலியைச் சொல்லி அழும்போது என்னால் மௌனமாகக் கடந்து செல்ல முடிவதில்லை. நான் அவர்களில் ஒருவன். அந்தத் துன்பத்தில் நான் பங்கெடுத்தே தீரவேண்டும்.” என்றார். அப்போது அவர் குரல் தழுதழுத்தது.

ஜானகிராமனும் இயக்கங்களும் 

ஜானகிராமன் உணர்ச்சிகரமானவர். விரைவில் நெகிழ்ந்துவிடக்கூடியவர். 2011இல் நடந்த வல்லினம் கலை இலக்கிய விழாவில் அவரைச் சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தோம். அவர் வரலாற்றை தொகுக்கும் பணியைச் செய்வதற்கு மூலமாக இருப்பது, சமூகத்துக்கு நிகழும் இன்னல்கள் கொடுக்கும் வலி மிகுந்த மனம்தான் என்பதை அவர் உரையில் அறியமுடிந்தது. பல சமயம் கண்கலங்கினார். வரலாற்றை ஆராயும் ஆய்வாளர்களின் சமநிலையை அவரிடம் காண முடியவில்லை. ஜானகிராமனை எவ்வாறு வரையறை செய்வது என்ற குழப்பம் அப்போது எழுந்தது.

கள ஆய்வில்

அதன் பின்னர் ஜானகிராமனை பலசமயம் சந்தித்துள்ளேன். பெரும்பாலான வல்லினம் நிகழ்ச்சிகளுக்கு வந்துள்ளார். சில சமயம் கிள்ளானில் ஏதாவது ஓர் உணவகத்தில் சந்தித்ததுண்டு. தனிமை, வறுமை, நோய்மை என அலைக்கழிக்கப்படுபவராகவே அவரைப் புரிந்துகொள்வேன். ஆனால் என்னிலையிலும் தன் கம்பீரத்தை அவர் விடாதிருந்தார். அந்த நிமிர்வு அவர் தன் வாழ்நாளில் சந்தித்த பல்வேறு சவால்கள் வழி திரட்டியது. பிரதிபலன் பார்க்காது சமுதாயத்துக்காக உழைத்தவர்கள் மட்டுமே தன்னியல்பாக பெறும் துறவு மனநிலை அது. ஒரு அரசியல்வாதியின் கம்பீரத்தைவிட ஒரு செல்வந்தரின் கம்பீரத்தைவிட துறவியின் கம்பீரமே அச்சுறுத்தக் கூடியது. அது உலகியலின் மினுமினுப்புகளுக்கு மயங்குவதில்லை. அந்த புறக்கணிப்பே அதிகாரவர்க்கத்தை நடுங்க வைக்கிறது. எனவே, தன் காலுக்குக் கீழ் அந்த நிமிர்வை மடக்கி வைக்க முயல்கிறது. அவன் கர்ஜனையைத் தனக்கு சங்கீதமாக மாற்ற எத்தனிக்கிறது. இந்தச் சூதாட்டத்தில் இருந்து விடுதலையாகும் எழுத்தாளனின் குரலே சமுதாயத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது. அவன் எதன் முன்பும் வணங்கி நிற்பதில்லை. எதன் பொருட்டும் சமரசம் செய்துகொள்வதில்லை. பணத்தின் பின்னாலோ விருதுகளின் பின்னாலோ ஒருபோதும் ஓடுவதில்லை.

ஜானகிராமன் தன் வாழ்நாளை அப்படியாக வடிவமைத்துக் கொண்டவர்தான்.

1969இல் பத்தாங் பெர்ஜுந்தாய் நகருக்கு வந்த கத்தோலிக பாதிரியார் மறைதிரு காரோப் அவர்களின் வழிகாட்டலில் சமுதாய பணியில் ஈடுபடத் தொடங்கினார் ஜானகிராமன். அவரின் தலைமையில் உருவான ‘இளைஞர் மேம்பாட்டு சமூக சேவை பயிற்சி மையத்தில்’ இணைந்து தோட்டப்புற மக்களின் மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தார். 1970 முதல் 1986வரை மக்கள் கூட்டுறவு நாணயச்சங்கத்தின் தலைவராகவும், 1980 முதல் 1986வரை மக்கள் சேவை இயக்கத்தின் செயலாளராகவும், 1988 முதல் 1991வரை சிலாங்கூர் சமூக முன்னேற்ற இயக்கத்தின் தலைவராகவும், 1988 முதல் 1994 வரை கொம்டாரி சமூக மேம்பாடு ஆய்வுக் கழகத்தின் இயக்குனராகவும் இடைவிடாது சமுதாயப் பணியாற்றிவந்தார். 1993இல் மனித மேம்பாடு ஆய்வு மையம் என்ற அமைப்பைத் தொடங்கி இன்றுவரை செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்புகள் மூலம் தோட்ட இளைஞர்களுக்கு இலவசத் தொழிற்பயிற்சி, தோட்ட மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை, ஏழ்மை நிலையிலிருக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி பெற நிதியுதவி என அடிப்படைச் சேவைகளை வழங்கினார். அதே சமயம் தோட்ட மக்களுக்கு நிகழும் அநீதிகளை எதிர்த்து  நடத்தப்படும் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், மறியல்கள் ஆகியவற்றிலும் பங்கெடுத்தார். தோட்ட மக்களின் நலனுக்காக நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களையும் தொழிற்சங்கங்களையும் அமைக்க வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தான் தலைவராக இருந்த இயக்கத்துக்கான கட்டடம், நிலம் எனச் சொத்துகளை வாங்கியது அவரது துடிப்பான செயல்பாடுகளுக்குச் சான்று.

இயற்கையில் வழிதடம்

அவருக்கு வல்லினம் விருது வழங்க முடிவெடுத்தபோது நண்பர் அ.பாண்டியனிடம் முதலில் தெரிவித்தேன். ஜானகிராமனின் பணிகளை அவர் அறிந்தவர். நவீன இலக்கியக் களம் வழியாக கூலிம் தியான ஆசிரமத்தில் அவர் நூல் வெளியீடு நடக்க முக்கிய பங்காற்றியவர். வடக்கு மாநிலத்தில் உள்ள நூல் விற்பனை நிலையங்களில் ஜானகிராமனைச் சேர்த்தவர்.  விருது குறித்து ஜானகிராமனை நேரில் சென்று சந்தித்து தெரிவிப்பதுதான் மரியாதை என்பதால் கிள்ளானில் அவருடன் சந்திப்பை ஏற்பாடு செய்தேன். விருதை அவர் மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். அவருடன் முனைவர் குணசீலனும் வந்திருந்தார்.

முனைவர் குணசீலன்

தன் துணைவியாரின் மறைவுக்குப் பின்னர் ஒன்றரை ஆண்டுகள் அகச்சோர்வில் இருந்த ஜானகிராமனை மீட்டவர் என முனைவர் குணசீலன் அவர்களைச் சொல்லலாம். தற்செயலாக ஜானகிராமன் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின் அருகில் தற்காலிகமாகக் குடிபெயர்ந்தவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் மீண்டும் ஆய்வுப் பணிகள் இயங்க ஆர்வமூட்டினார். பொருத்தமான அச்சகத்தை அறிமுகம் செய்துகொடுத்தார். நூல்களை முன்பதிவு செய்ய தனது நண்பர் வட்டாரங்களின்வழி ஏற்பாடு செய்தார். மிக முக்கியமாக அவர் தனியர் இல்லை என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தார். நான் ஜானகிராமனைச் சந்தித்தபோது தெளிந்த முகத்துடன் உற்சாகமாகக் காணப்பட்டார். அந்த மாறுதலுக்கு முனைவர் குணசீலனே காரணம்.

மனைவியுடன்…

அக்கணம் இயற்கை எத்தனை மகத்தானது என நினைத்துக்கொண்டேன். அது சில பணிகளைச் செய்ய சில மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறது. அப்பணியில் இருந்து அவன் நழுவும் நிலை வரும்போது தக்க மனிதர்களை அனுப்பி அவனை தனது தடத்தில் மறுபடி ஓட வைக்கிறது. தன் வாழ்நாளின் கடனை அவர்கள் முடிக்கும்வரை அது துணை இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இந்தத் துணை கிட்ட, ஒரே வழி உண்மையாக இருப்பது. நேர்மையை, அறத்தை கைவிடும் ஒருவரிடம் இயற்கை ஒருகாலமும் கைகோப்பதில்லை.

ஜானகிராமனும் எழுத்துப்பணியும்

விருது வழங்குவது முடிவானதும் அவரை ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினோம். அந்தப் பணியின் போதுதான் ஜானகிராமனை மேலும் அணுக்கமாக அறிந்துகொள்ள முடிந்தது.

சிறுவனாக

மா. ஜானகிராமனிடம் எழுத்தார்வத்தைத் தூண்டியவர் அவரது ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பெ. மு. இளம்வழுதி. அவர் அன்று மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்ந்தார். 1960களில் நூலகத்தில் தான் வாசித்த விளையாட்டுச் செய்திகள், சிறு தகவல்கள் ஆகியவற்றை மறுபடியும் துணுக்குகளாக நாளிதழுக்கு எழுதி அனுப்பினார் ஜானகிராமன். அந்த ஆர்வம் மெல்ல வளர்ந்து 1970களின் இறுதியில் உருவான ‘புதிய சமுதாயம்’ இதழில் ‘தோட்டப்புற வாழ்க்கை’ எனும் தலைப்பில் முதல் கட்டுரையை எழுதினார். பின்னர்  சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து பிற நாளிதழ்களில் கட்டுரைகளாக எழுதத்தொடங்கினார். அக்காலகட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்களாலும் துண்டாடல்களாலும் தோட்டங்கள் கையகப்படுத்தப்பட்டு, தோட்ட மக்கள் நகர்ப்புறங்களுக்கு விரட்டப்பட்டு, முற்றிலும் புதிய வாழ்வியல் சூழலுக்குள் இந்தியர்கள் தள்ளப்பட்டனர். ஆகவே, 200 ஆண்டுகாலத் தோட்டப்புற வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் பதினேழு ஆண்டுகள் மலேசியா முழுவதும் பல தோட்டங்களுக்குச் சென்று உருவாக்கிய நூல்தான் ‘மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை'(2006). இதை பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக்கினார். இந்த வரலாறு இளம் தலைமுறையைச் சென்றடைய மேலும் ஐந்து ஆண்டுகள் உழைப்பில் அறிய புகைப்படங்களின் தொகுப்புடன் ‘The Malaysian Indian Forgotten History of the colonoal era’ எனும் ஆங்கில நூலை 2016 வெளியிட்டார். இந்த நூலின் தமிழ்ப் பதிப்பையே விருது விழாவில் வெளியிடுவதென முடிவு செய்தோம்.

நேர்காணலில் பல இடங்களில் ஜானகிராமனை வரையறுத்துக்கொள்ளும்படி கேள்விகளை அமைத்தோம். அவர் தன்னை ஆய்வாளராகவோ ஆவணத் தொகுப்பாளராகவோ எந்த இடத்திலும் குறிப்பிட மறுத்தார். போதுமான கல்விப் பின்புலம் இல்லை என்பது பல இடங்களில் சோர்வான குரலாகத் தொணித்தது. “பழைய காகிதங்கள பொறுக்குறதுதான் என் ஆய்வுக்கான முதல் பணி. உணவகங்களில் நாள்பட்ட வாடை எடுத்த நாளிதழ்களைக் கூட சேகரித்து வருவேன். அவற்றை வெட்டித் தொகுப்பேன். படிக்காதவன் ஆய்வு பழைய பேப்பர பொறுக்குறதுதான்,” எனச் சிரித்தார். கற்றவர்கள் செய்யும் ஆய்வுக்கும் தன்னுடைய தேடலுக்குமான வித்தியாசம் அவருக்கு துல்லியமாகப் புரிந்திருக்கிறது.

“மலேசிய இந்தியர்களின் வாழ்வை ஆய்வு செய்பவர்கள், அதை ஏதாவது ஒரு நூலில் இருந்து தொடங்கியதாக இருக்கலாம். அல்லது பல ஆய்வுகளின் அந்த எண்ணத்தை வளர்த்திருக்கலாம். ஆனால் நான் என்னிடமிருந்தே இந்தத் தேடலைத் தொடங்குகிறேன். நான் தோட்டப்புற வறுமையில் வாடினேன். தோட்டத் துண்டாடலைக் கண்ணால் பார்த்தேன். பசியும் பரிதவிப்பும் எங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்தது. அது இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவற்றின் பிசுபிசுப்பில் உருவான வரலாறு. எனவே அந்த ஈரத்திலிருந்து வந்த நான் அதன் உண்மைகளைச் சொல்ல விளைகிறேன். இந்த அனுபவம் வேறு ஆய்வாளர்களுக்கு இருக்குமா எனத் தெரியவில்லை” என்றார்.

நீண்ட தொடர் உரையாடல்களுக்குப் பிறகு ஜானகிராமன் ஆவணத் தொகுப்பாளர் என மட்டும் என்னால் வரையறை செய்ய முடியவில்லை. அவர் சமூக ஆய்வாளர். தனது ஆவணத் தொகுப்புகள் வழியாக கடந்த வரலாற்றில் நடந்துள்ள நுட்பமான விடயங்களை அலசி வகுக்கிறார், அதன் வழியாக வருங்காலத்தைக் கணிக்கிறார். கிடைப்பதை இலக்கற்று சேகரிக்கும் பணியல்ல அவரது. அதன் வழி தன் கருதுகோள்களுக்கான சான்றுகளையும் தரவுகளையும் திரட்டி உண்மைகளை நிறுவ முயல்கிறார். இவை ஆய்வாளரின் பணி. போற்றுதலுக்குறிய பணி.

ஆவணப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அவர் இல்லம் சென்றோம். வீட்டையே தனது பணிகளைச் செய்யும் அலுவலகமாகவும் பாவிக்கிறார் ஜானகிராமன். அவர் சொன்ன நாளிதழ் நறுக்குகள் மிக நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அவர் செய்யும் பணியை எவ்வளவு திட்டமிட்டு வடிவமைத்துள்ளார் எனப் புரிந்துகொள்ள அவர் வீடு ஒரு சான்றாக அமைந்தது.

விருதும் ஊடகங்களும்

விருது வழங்குதல் என்பது ஓர் ஆளுமைக்குப் பணத்தைக் கொடுப்பதோ, கேடயம் வழங்குவதோ அல்ல. அவரை சமுதாயத்தின் முன் விரிவாக அறிமுகப்படுத்துவது. அவர் செய்துள்ள பணிகளை உரையாடலாக மாற்றுவது. அதுவே அறிவுச் சூழலில் அவசியமானது. அப்பணிக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் தேவையாக இருந்தது.

வல்லினம் விருது அறிவிக்கப்பட்ட பிறகு உடனடியாக அதை தன் தளத்தில் ஜெயமோகன் பகிர்ந்தார். தமிழில் இன்று அதிகமாக வாசிக்கப்படும் தளம் அது. ஒரு நாளைக்கு முப்பதாயிரம் பேருக்கு மேல் பார்வையிடுகின்றனர். உலகம் முழுவதும் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் அதனை வாசிக்கின்றனர். அத்தளத்தில் வந்தது நல்ல தொடக்கமாக இருந்தது. ‘தென்றல்’ வித்யாசாகர் ஒரு காலத்தில் அவரது சக பயணி என்பதால் ‘தென்றல்’ மற்றும் ‘வானம்பாடி’யில் அச்செய்திகளை சிறப்பாகப் பிரசுரித்தார். செல்லியல் இணையத்தளமும் மலேசியா இன்றும் வழக்கம்போலவே செய்தியைச் சிறப்பாகப் பிரசுரித்து மகிழ்ந்தது. மலேசிய நண்பன் நாளிதழ், மின்னல் பண்பலை போன்ற செய்தித் தளங்கள் இவ்விருது விழா குறித்து அறிவித்தன. சிங்கப்பூரில் முக்கிய இலக்கிய சஞ்சிகையான ‘சிராங்கூன் டைம்ஸ்’ இதழ், இரண்டு பக்கங்களுக்கு விருது குறித்து செய்தியை வெளியிட்டது. ஊடகங்கள் மட்டும் இன்றி பி.எம்.மூர்த்தி, எழுத்தாளர் கோ.புண்ணியவான், டத்தோ ஶ்ரீ தெய்வீகன், இயக்குனர் சஞ்சை குமார், முனைவர் குணசீலன், வித்யாசகர், வழக்கறிஞர் பசுபதி, எழுத்தாளர் மா. சண்முகசிவா, சுவாமி பிரம்மனந்த சரஸ்வதி, முனைவர் கிருஷ்ணன் மணியம் என பல ஆளுமைகளும் ஜானகிராமனுக்கான தங்கள் வாழ்த்துகளை சமூக ஊடகங்கள் வழி தெரிவித்தனர். இறுதியாக பெர்னமா செய்திப் பிரிவின் தலைவர் மூன்று நாட்களுக்கு ஜானகிராமன் குறித்த சிறப்புப் பகுதியை ஒளிபரப்பியது நாடு முழுவதும் ஜானகிராமனின் ஆளுமை குறித்து அறிய பெரும் காரணமாக அமைந்தது.

வல்லினம் விருது வழங்க வழக்கறிஞர் பசுபதி அவர்கள் சம்மதித்தவுடன் நிகழ்ச்சிக்கு முழுமை கிடைத்ததாக உணர்ந்தேன். ஜானகிராமனுக்கு விருது வழங்க அவரே தகுந்த ஆளுமை. அதுபோல வாழ்த்துரைக்க வரும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, மா. சண்முகசிவா போன்றவர்களின் வருகையும் சொற்களும் நிகழ்ச்சிக்கு உன்னதம் சேர்ப்பவை. ஜானகிராமனின் பணிகளை நன்கு அறிந்த அ. பாண்டியன் அவரது நூலை முன்வைத்து முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த கி. இளம்பூரணன் ஆகியோர் உரை ஜானகிராமனை மேலும் உரையாடலுக்கான ஆளுமையாகக் கட்டமைக்கும் என நம்புகிறேன்.

27.2.2022, ஞாயிற்றுக்கிழமை தைப்பிங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மலேசியாவில் அதிகமாக மழை பொழியும் நகரம் அது.  அன்றும் கட்டாயம் மழை பெய்யக்கூடும். நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை அல்லவா?

பெர்னமா செய்தி தொகுப்பு பாகம் 1

பெர்னமா செய்தி தொகுப்பு பாகம் 2

பெர்னமா செய்தி தொகுப்பு பாகம் 3

செல்லினம் செய்தி

மலேசியா இன்று செய்தி

(Visited 256 times, 1 visits today)