ஊழ்வினையின் பெருஞ் சீற்றம் – ஆசிர் லாவண்யா

கதாபாத்திரங்களை மிக நூதனமான முறையில் கையாண்ட பல நாவல்களில் சிகண்டிக்குத் தனி இடமுண்டு. வாசிப்பை இரு முறை மேற்கொண்டு, நாவலை அலசி பார்த்ததில் எழுத்தாளர் ம.நவீன், திருநங்கைகள் எனும் இணைப்புப் புள்ளிகளை வைத்து சத்தியத்தின் பெருஞ்சீற்றத்தினை முடுக்கி விட்டிருப்பது நாவலினுள் எழும் பேரிரச்சல் வழி புலப்படுகிறது.

செய்த பாவம் மூட்டையாக முதுகில் இருக்க, மரபணுவில் பிணைக்கப்பட்ட மூன்று தலை முறையினரின் செயல் வடிவங்களுக்குள் நிதானமாக சுழலும் வினையின் எச்சங்கள் நாவலை கட்டற்று சுழல வைக்கிறது.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என சிலப்பதிகாரம் சொல்கிறது. அது என்றென்றைக்குமான தரிசனம். அது காலம் தோறும் எவ்வாறு ஒரு நத்தைபோல தவழ்ந்து வருகிறது என்பதைதான் இந்த புனைவு சொல்கிறது.

19 வயது நிரம்பிய தீபனே கதைச்சொல்லி. அவன் கண்ணோட்டத்திலிருந்தே கதை வெவ்வேறு தளங்களை சென்றடைகிறது. பண நெருக்கடியான குடும்பத்தில் பிறக்கும் தீபனின் புது சைக்கிள் வாங்கும் ஆசை நிறைவேறாமல் போகவே, சக மாணவர்களின் அசட்டை பேச்சை தாங்க முடியாத தீபன் மன உளைச்சலுடன் தன் அம்மா வீசி எறிந்த ஐம்பது வெள்ளி நோட்டோடு லூனாசிலிருந்து கோவாலாலம்பூருக்கு தன் மாமாவின் வீட்டில் அடைக்கலம் போவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு முறை மட்டுமே தன் அம்மாவுடன் மாமா வீட்டுக்கு செல்லும் தீபன் பிறகு எவ்வாறு லுனாஸிலிருந்து தன் மாமா வீட்டுக்கு வருகிறான் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தது. எங்கோ வழி தவறி போனதாகவோ, பயத்தில் இருப்பவன் போலவும் காட்சிகள் விரியவில்லை.

கதை முழுவதும் காராட் பஜார், சகார் சாலையை சுற்றியே சுழல்கிறது. இரப்பர் தோட்டமாக இருந்து, சீனர்களின் ஈய சுரங்கம் அமையப் பெற்று பிறகு கம்பமாக பரிணமித்து சௌவாட்டாக மாறி இறுதியில் செந்தோசா எனும் பெயரில் கட்டமைக்கப்படுகிற நகரம்தான் நாவலின் களம்.

இது ஒரு கற்பனை நகரம்தான். எழுத்தாளர் சொல்லும் எந்த ஊரும் கோலாலம்பூரில் இல்லை. ஆனால் அவர் சொல்லும் அத்தனை இருள் உலகத்தையும் கொண்டதுதான் கோலாலம்பூர் பெருநகரம். உலகில் உள்ள அத்தனை பெருநகரம் போன்ற ஒரு நகரம். இந்த சௌவாட் நகரில் இன்னும் சிறிய பகுதிகளாக உள்ள சன் தங்கும் விடுதி, கீளாட் சாலையில் அமையப் பெற்ற பன்றி கொட்டாய், விபச்சார இடங்களில் நிகழும் சம்பவங்களில் கதை மேலும் விரிவடைகிறது.

கோபத்தில் ஒரு சிற்றூரில் இருந்து புறப்பட்டு பெருநகரம் வரும் தீபனுக்கு காசி என்பவனோடு ஏற்படும் உறவும் அவனின் முதலாளி ஷாவ் (பெரிய அண்ணன்) அறிமுகம் கதையை மேலும் சுவாரசியமாக நகர்த்துகிறது.

இருண்ட வாழ்க்கை பகுதியிலிருந்து புறப்பட்டு வரும் தீக்காற்றின் தனிச்சுவையை எல்லா கால கட்டங்களிலும் தீபன் தன்னுள் சுவாசித்து வாழ்கிறான். தொடர்ந்து காசியின் நட்பால் போதைக்கு பழக்கமாக்கிக் கொள்கிறான். குண்டர் குப்பல், விபச்சாரம், மது, மாது, பாலியல் இச்சை, பாலியல் தொழில், மோட்டார் ரேஸ், போதை மருந்து உள்ளிட்ட அனைத்திலும் அவனுடைய ஆர்வம் பருந்து போல் சுற்றி வருகிறது. அதன் பிறகு பெண்ணென்று எண்ணி சராவை காதலித்து திருநங்கை என்று தெரிய வரும்போது அதன் ஒவ்வாமையில் தன்னை விலக்கி உள்ளிழுத்துக் கொள்ளும் சம்பவங்களை சார்ந்து கதையின் மற்றுமொரு கிளை விரிவடைகிறது.

சராவின் மூலம் தன்னுடைய தேவைகளை தீர்த்து கொள்ள அவ்வப்போது பிடி கொடுத்து பழகி பிறகு ஈபுவிடம் வேலைக்கு சேர்கிறான் தீபன். அவளுடைய இரகசிய தொழில் விவரங்களை மெல்ல அறிந்து கொள்கிறான்.

இவையெல்லாம் நகரத்தின் இருளில் நிகழ்பவை. ஆனால் அவனுக்குள் இன்னொரு இருள் உள்ளது. அது போதையின் போது உருவாகும் இருள். அந்தத் தருணங்களில், அதே மண்ணில், நில பரப்பில் நிகழ்ந்த இன்னொருகால சம்பவங்கள் அவன் நினைவில் வந்து அலைக்களிக்கிறது. கிட்டத்தட்ட கதை முழுதும் காற்றடைத்த பந்தாக பைத்தியக்காரனை போல் சுற்றி வருகிறான். அவன் சம்பவங்களுக்கு தலைமை தாங்கும் கருவியாக உருவாக்கப்பட்டவன். அவன் விருட்சத்தின் நிழல். பெரும் இயந்திரத்தில் ஒரே ஒரு திருகாணி.

***

நாவலில் மூன்று ஓவியர்களின் வழி கோர்க்கப்பட்டுள்ளது. மூன்று காலங்களை உணர அவர்களே குறியீடுகள். புதம்மாவுக்கும் தன் மாமா மாரிமுத்துவுக்கும் கள்ள உறவில் பிறப்பவன்தான் ரய்லி. மாரிமுத்து கோவிலில் சாமி படம் வரைபவனாகவும் அவனுக்கு பிறந்த ரய்லி நுட்பமாக பேனர் வரையக் கூடியவனாகவும், ரய்லிக்கும் கோமதிக்கும் பிறக்கும் கண்ணன் சிறு வயதிலிருந்தே வீட்டு சுவர்களிலும் தீபனின் உடலிலும் படம் வரைபவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். ஆனால் இவர்களை இணைத்து கோடிடத் தொடங்குவது வீரன். முடித்து வைப்பவன் தீபன்.

கதையின் முடிச்சு ஒரு புத்த பிக்குவால் தீபனுக்கு வலியுறுத்தப்படுகிறது. ‘சிறிய சிக்கல்கள் மொத்த பிரபஞ்சத்தின் முன் அர்த்தமற்றவை. ஆனால், திருத்தமற்ற இடைவெளிகளை நிரப்ப இப்பிரபஞ்சம் சிறிய சிக்கல்களையே கருவிகளாகத் தேர்ந்தெடுக்கின்றன.’ என்று சொன்னது தீபனின் தாத்தா வீரன் நிகழ்த்திய ஊழ் வினையே. வீரனின் பாவக் கணக்கை தீபனே தீர்க்கிறான். அப்போது நாவலின் முதல் அத்தியாத்தில் வரும் மாரிமுத்து அக்காவின் சாப ஓலம் இறுதியில் அசரீரியாக ஓங்கி ஒலிக்கிறது. அவனின் குடும்ப மரபணுவின் வினை ஒரு சாபம் போல் அவன் உடலில், இரத்த நாணங்களில் சங்கமித்து சம்பவங்களை தீபனே நிகழ்த்தும்படி செய்து கன கச்சிதமாக காரண காரியங்களுடன் தீபனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

நாவலை ஊடுருவினால் தீபனை துரத்தும் நினைவுகள் எதுவும் லுனாசில் நடைப்பெறவில்லை. சௌவாட். என்ற நிலம். நிலத்தின் உயிர் தன்மையில் அங்கே வாழ்ந்த மக்களின் குரல், இரைச்சல், இரத்தம், வேதனை, தவிப்பு, பிரிவு அனைத்துக்கும் உயிர் இருக்கிறது. அந்த கணம் அச்சுறுத்துவது. அது வினையின் கரு. அதை வெட்டி எறியவோ, அழித்து மூடவோ முடியாது. ஈபு நிலத்தை விட்டுத்தராதவள். அவளுக்குத் தெரியும் அந்த மண்ணின் கண்கள் உள்ளது. எடுத்ததை கொடுக்கும் கணக்கு உள்ளது. அது பிரபஞ்சத்தின் வழக்கமான கணக்கு. அந்தக் கணக்கே கதை முழுதும் தொடர்ந்து பயணித்தப்படியே அமைந்திருக்கும். பின்னர் ஆரம்பித்த பேரிரைச்சல் கதையின் முடிவில் அடங்கி ஓய்கிறது. அறமும் தர்மமும் பிரபஞ்சத்தை பாதுகாக்கும் காவல் தெய்வங்கள்.

தீபன் எனும் கதாபாத்திரம் நாவல் முழுவதும் மிகக் குறைவாகவே இயங்கி வருவதைப்போல் ஒரு எண்ணம் எனக்கு. பெரும்பாலான அதி முக்கிய முடிவெடுப்புகளில் அவன் தன்னிச்சையாக இயக்கப்பட்டு முடிவு தெளிவாக மூளையில் பதிவதற்குள் தொடர் சம்பவங்கள் நிகழ்த்தப் படுகின்றன.

பூனையை நெரித்து கொன்றபோது பிறர் வலியில் துடிப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறான். சண்டையிடும் போது மிருகத்தை போல் பாய்ந்து சென்று தாக்கும் குணாதிசயங்கள் அவன் தாத்தா வீரனை ஒத்தே அமைகிறது. அது ஒரு சர்ப்பம். அந்த சர்ப்பம் சுற்றி வளைத்து தன் உடலினுள் இருந்து நாடி நரம்புகளின் மூலம் அவனை தீண்டும் ஊழ். அப்படி மட்டும் தான் அவன் வாழ கட்டமைக்கப்பட்டிருந்தான்.

தீபன் நிகழ்த்தி பார்த்த பல சம்பவங்களின் தொடர்ச்சியைக் கழித்துப் பார்த்தால் சதா அடைக்கலம் தேடும் குழந்தையின் மனமும் அத்தனை குரூர குணங்களுக்கு பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. சதா அம்மாவின் மடியை தேடிக் கொண்டிருக்கும் தீபனைதான் என்னால் கையில் ஏந்த முடிகிறது.

நாவல் முழுவதும் அவனே பெருந்தவறிழைத்தவனாக சித்தரிக்கப்பட்டாலும், அவன் தொடர்ந்து வாழ ஒரு பொய்யான உலகம் தேவைப்படுகிறது. நீலவேணுவின் பித்து அவனின் பிரச்சனைக்கு தீர்வாகாது என்று தெரிந்தும் அவனின் குருட்டு நம்பிக்கை அதையே சொல்லி சொல்லி நம்ப வைக்கும் மனம் அவனுடையது. அவனுக்கு எப்போதும் ஏதாவது தொடர்ந்து சிந்திக்க வேண்டும். கற்பனைகளில் மிதக்க வேண்டும். பொய்யை தின்று வாழும் ஜீவனவன்.

***

நாவலில் வாசகர்கள் ஊகித்து அறியும் பகுதிகளும் பல உள்ளன. உதாரணமாக, வீரன் குட்டப்பனின் மனைவியை தூக்கிலிட்டு நிர்வாணமாக்கும் போது சட்டென்று உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் வெளியேறிவான். ஏன் வீரன் பதற்றத்துடன் வெளியேறி இருப்பான்? ஒரு வேலை குட்டப்பனின் மனைவி திருநங்கையாக இருந்திருக்கலாம். திரையில்லாத அவ்வுடலில் ஆண்குறியை அவன் பார்த்திருக்கலாம். அது நான் யூகித்ததை போல இருந்தால், சிகண்டியின் அக்காவாக ஒரு போதும் குட்டப்பனின் மனைவி இருந்திருக்க சாத்தியமற்று போகும். திருநங்கைகள் பொதுவாகவே ஒருவரை ஒருவர் குடும்பமாக நினைத்து வாழ்வதும், அதனுடே வரும் உறவு முறைகளை வைத்தே அக்காள் என்ற உறவு முறையையும் அமைத்துக் கொள்வார்கள். அது ஒரு கணிப்பே. அப்படி சிந்திக்க வாசக இடைவெளி நாவலில் உள்ளது.

நாவல் முழுவதுமே குற்றங்களும் ஏற்ற தண்டனைகளும் சரமாரியாக இடி போல ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து கொண்டே இருக்கிறது. புதம்மாவின் இறைஞ்சலுக்கும் சாபத்திற்கும் ஆளாகும் வீரன், சராவிற்கும் ஈபுவிற்கும் நம்பிக்கை துரோகம் செய்யும் தீபன், தீபனுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு தவறும் அவனின் அம்மா, அண்ணன் போன்ற தோற்றத்தை தீபனுக்கு கொடுத்து தன்னுடைய முதலாளி ஷாவுகாக துரோகம் செய்யும் காசி, நிலத்தை ஆக்கிரமித்து மக்களை அடித்து துரத்திய வைட் கோர்பா அனைவருக்கும் இறையனுபூதி பெற்ற சிகண்டி தொடர்ந்து பொறுத்திருந்து சரியான தண்டனை வழங்குகிறாள். பிறரை ஏமாற்றி பொருள் சேர்க்கும் மனிதன் அதை அனுபவிக்க விதியை ஏமாற்றி ஆயுளை அதிகரிக்க முடியாது. கர்மவினையின் கோட்டில் தான் பயணம் அமைந்தாக வேண்டுமில்லையா.

திருநங்கைகளின் அக புற இறையறுள் பொருந்திய அழகை தூக்கி நிறுத்தியிருக்கிறாள் சரா. சத்வ குணம் கொண்ட அவள் அழகில் சிக்கிக் தவிக்கும் மனித மனங்களை கடந்து போகிறாள். தீபன் தன்னை புறக்கணித்தவன் என்று தெரிந்தும் அவனை பாவ செயல் செய்ய விடாமல் அவளே தன்னை மாய்த்துக் கொள்கிறாள். அதன் வழி பேரன்பு காட்டும் குவான் யின்னாகத் தன்னை மாற்றிக்கொள்கிறாள்.

சராவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் தீபனால் ஒரு கொலையை செய்ய முடியாதென. அவனை குழந்தையாகவே அவள் மனதில் உறுவகப்படுத்தி இருப்பாள். சராவின் குணமே எதையும் அழிக்காமல் ஒட்ட வைப்பது. அவள் எதையும் தூக்கி எறிபவள் அல்ல. நத்தை ஓட்டை கொண்டு அவள் அலங்கரித்த பட பிரேம். உடைத்த ஹெல்மட்டையும் பூ ஜாடியாக ஆக்கியிருப்பாள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு ரூபத்தில் தொடர்ந்து தன்னுடன் தக்க வைத்துக் கொள்ளும் சுபாவம் அவளுக்கு. காதல் இல்லை என்றதும் உண்மை நிலையை உணர்ந்து தீபனை அரவணைக்க தன்னைப் போல் அவனுக்கும் இங்கே யாருமில்லை என்று கூறும் தருணம் சரா என் மனதில் அழுந்தி பதிகிறாள். ஆழமான உணர்வுகளை நுணுக்கமாக சித்தரித்திருப்பார் நாவலாசிரியர். ஆம்! அவன் தீபனையும் ஒட்ட வைக்கவே கடைசிவரை முயல்கிறாள்.

துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு, வைராக்கியம், கருணை, அப்சாரா நடனத்தை ஐக்கியமாக்கி ஆடும் விதம் பகுச்சாரா தெய்வத்தின் தாண்டவம் போலவே நாவலில் வருகிறது. அவள் பகுச்சாராவின் அணுகிரகத்தை பெற்றவளா அல்லது அப்சராவின் அவதார வடிவமா!? இரண்டு சராவில் அவள் யார்?

கதை முழுவதும் சராவை விட ஆதிக்கம் செலுத்தி வரும் சிகண்டிதான் பின்னாளில் ஈபுவாக பரிணமிக்கிறாள். சௌவாட் இருண்ட பகுதியின் பாவநிலம். தன் இறப்பால் பூமியின் பாவத்தை கழுவி செல்கிறாள் சரா. சிகண்டி தான் கதையில் வரும் உண்மை தாய் (ஈபு). அவள் தாய்மையின் அம்சம். எல்லோரையும் தாங்குகிறாள். சத்தியத்தின் குரல், அவள் உடலெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. தர்மத்தை நிலை நாட்டுவதில், தண்டனை வழங்குவதில், திருநங்கைகளை காப்பதில், பசியை போக்குவதில் அனைத்திலும் அவள் சிகண்டியாகவே மின்னுகிறாள். ஆணின் பலமும், பெண்ணின் அன்பும் வைராக்கியமும் ஒன்றினையும் திருநங்கைகள் நாவலின் புனைவுலகை நீண்டு படர செய்கிறார்கள்.

‘சாமிய அழிக்கபோற… கல்ல சாமியே பாத்துக்கும்’. அறம் தன்னை பாதுகாக்கும் சக்தியுடையது. ஆனால் அதை சிகண்டி மாரியப்பனிடம் கூறும் போது பகுச்சரா திருவுரு மெல்ல பவணி வருகிறது. சிகண்டி மாரிமுத்துவுக்கு சிறு வயதில் கொடுக்கும் வாக்கும் பல ஆண்டுகள் கடந்தும் காப்பாற்றப்படுகிறது. அது சத்தியத்தின் வலிமை. அதுதானே தீட்டி தீட்டி கூர்மையாக்கும். சரியான தருணத்தில் அதனுடைய பாய்ச்சலின் ஒலி சிதறல்கள் வழுவேற்றி செயல் புரியும். கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற அது எந்த ரூபத்திலாவது வந்து சேரும் என்பது அரூபமாக உணரக்கூடிய இடம் தருணம் பணம் கைமாறும் இடம்.

பிரபஞ்சத்தின் கோட்பாடும் அப்படியே. அது சத்தியத்தின் கவசம், கனமானது. பிரமாண்டத்தில் மிளிரலை சத்தியத்தின் கரு உரியவர்களை வந்தடையும் தருணம். பிரபஞ்சத்தின் சக்திக்கு முன் நாம் ஒன்றுமில்லை. அது அறத்தின் சீற்றம். அப்படிதான் ஓங்கி பிரகாசிக்கும். ஒன்றில் தொடங்கி மற்றதில் முடியும்.

மாரிமுத்து பகுச்சராவை வரைந்து தொடக்கி வைத்த அத்தியாயம் கண்ணன் பல்லிக்குக் கண்கள் வரைந்து முடித்து வைப்பதைப் போல.

(Visited 79 times, 1 visits today)