வரட்டுத்தனமான சமூகத்தின் மீது படிந்துள்ள துருவை அகற்ற உதவும் மாபெரும் சக்தியாகக் கலையை நான் கருதுகிறேன். பிரச்சார ரீதியாக மிகையுணர்ச்சியைத் தூண்டி ஒரு சவர்க்கார நுரை வெடிப்பது போல அர்த்தமற்ற வெற்று அதிர்ச்சிகளை உருவாக்கும் இன்றைய சூழலில் கலை, மன எழுச்சிக்கான சாத்தியங்களை உருவாக்கி சமூகம் நம்பியுள்ள மாயையை அசைத்து உடைத்து மீள் கட்டுமானம் செய்தபடியே உள்ளது. அவ்வகையில் சினிமா எனும் ஒரு கலை வெளிப்பாட்டின் நல்ல தொடக்கங்களை மலேசியாவில் ஏற்படுத்த எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. நான் திரைப்படங்கள் பார்த்தது குறைவு. அதுவும் தமிழல்லாத பிற படங்கள் 30க்கும் குறைவாகவே பார்த்திருப்பேன். சுடத்தெரியாதவனுக்கும் துப்பாக்கியின் சக்தி தெரிவது போல எனக்கு சினிமாவின் சக்தி தெரியும்.
பல ஆண்டுகளாக மலேசிய வாழ்வு சூழல்களைத் திரைப்படமாக்க எண்ணம் கொண்டிருந்த நண்பர் சிவா பெரியண்ணன் தமிழகத்துக்குச் சென்று சில இயக்குநர்களிடம் இணைந்து பணியாற்றுவதன் மூலம் சில அடிப்படை பயிற்சிகளைப் பெற எண்ணம் கொண்டிருந்தார். அங்கு அனுபவத்தில் பெரும் பயிற்சிகள் மூலம் மலேசியாவில் தரமான படங்களைத் தரவேண்டும் என்பது அவர் எண்ணம். எனவே குறுகிய கால ஒரு பயணத்தில் சில இயக்குநர்களைச் சந்தித்து எவ்வகையான வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் எனத் திட்டமிட்டோம். அதன் படி 31.3.2011 – 4.4.2011 தமிழகத்திற்குக் குறுகிய காலப் பயணத்தை நானும் சிவாவும் மேற்கொண்டோம்.
லீனா மணிமேகலை
இயக்குநர் என்பதைக் கடந்து எனக்கு எப்போதும் நல்லத் தோழராக இருப்பவர் லீனா மணிமேகலை. எங்கள் வருகையை ஒட்டி அவர் தனது தினங்களை எங்களுக்காக ஒதுக்கியிருந்தார். லீனா மணிமேகலையை நான் ‘காதல்’ இதழ் நடத்திக்கொண்டிருந்த போது மலேசியாவில் சந்தித்ததுண்டு. அவர் எடுத்த ஆவணப்படங்களை பார்க்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது. மாத்தம்மா, பலிபீடம் போன்றவை அவர் ஆளுமையை அறிந்து கொள்ள உதவியது. நிகழ்வுக்குப் பின்னர் ‘மெட்ராஸ் கேஃபே’யில் அமர்ந்து உண்டோம். லீனா பேசிக்கொண்டிருந்தார். அந்த மங்கிய ஒளியில் மிக அழகாக இருந்தார். அவர் ஆளுமை, அறிவு வியப்பை ஏற்படுத்தியப்படி இருந்தது.
அதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கடந்து லீனாவைச் சந்தித்தேன். ததும்பும் உற்சாகத்துடன் இருந்தார். எங்களை அழைத்துச்செல்ல விமான நிலையம் வந்திருந்தார். உடன் அவர் தோழர் இருந்தார். மருத்துவர். வண்டியில் ஏறிய சில நிமிடங்களிலேயே சென்னை பழக்கமாகிவிட்டது போன்ற ஒரு எண்ணம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் வந்து ஒரு மாதம் சுற்றிய அனுபவம் கப்பென இடைவெளிகளை அகற்றியிருந்தது.
சிவா சாலையை ஊடுறுவி பார்த்தபடி இருந்தார். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின்னர் லீனாவின் வீட்டை வந்தடைந்தோம். அழகிய சிறிய வீடு. வாசல் தொடங்கியதிலிருந்து குளியலறை வரை புத்தகங்கள். அச்சூழல் எனக்கு உற்சாகத்தைத் தருவதாக இருந்தது. பயணக்களைப்பு முழுதுமாக நீங்கியிருந்தது. லீனா தோசை சுட்டு கொடுத்தார். உள்ளூர் அழைப்புக்கான சிம் கார்ட் கொடுத்தார். கைப்பேசியில் பொருத்திக்கொண்டேன்.
ஏற்கனவே இயக்குநர் ராமுடன் (கற்றது தமிழ்) தொடர்பு இருந்ததால் அழைத்தேன். அன்று முழுவது ஓய்வு என்றார். உடனே குளித்துவிட்டு நானும் சிவாவும் கிழம்பினோம்.
… தொடரும்