சினிமாவைத் தேடி சென்னை பயணம்…2

இயக்குநர் ராம் வீடு விருகம்பாக்கத்தில் இருந்தது. அவரிடம் தொலைப்பேசியின் மூலம் வழி கேட்டபடியே இடத்தை வந்தடைந்தோம். பயணம் நெடுகிலும் ‘கற்றது தமிழ்’ படத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தபடியே இருந்தன. நான் தமிழில் அதிகமுறை பார்த்த படம் அது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் தொடங்கும் கதை ஒட்டுமொத்தமாக சமூக , அரசியல் விமர்சனமாக மாறி அதன் தொனி உலகம் மொத்தத்துக்கும் ஒன்றென ஒலிக்கிறது. உலகமயமாக்கல் அதில் தொடங்கும் மனித ஏற்றத்தாழ்வு அதன் விளைவாய் வாழ்வியல் சவால்கள் என மிக ஆழமான விமர்சனங்களை முன்வைக்கும் படம். ஊடே காதல். ‘தமிழ் கற்றவனின் நிலை’ என்ற ஒற்றை பரிணாமத்தில் தமிழ் ரசிகர்களால் படம் புரிந்துகொள்ளப்பட்டது துரதிஷ்டம்.

இயக்குநர் ராமுடன் நான்
இயக்குநர் ராமுடன் நான்

‘பறவையே எங்கு இருக்கிறாய்?’ என்ற மெல்லிய ஒலி அதன் ராகத்தோடு மாயையான ஒரு உருவத்தில் என்னைச் சுற்றிக்கொண்டிருந்தது. ஆட்டோ நின்றபோது ராம் எங்களை வரவேற்க காத்திருந்தார்.

வீடும் அலுவலகமும் ஒன்றாகவே இருந்தது. ராம் எங்களை அமரச் சொன்னார். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பின்னர் நேராக விசயத்திற்கு வந்தோம். சிவா தனது இயக்குநராகும் லட்சியம் குறித்து கூறினார். ராம் சற்று நேரம் அமைதி காத்தார். தான் செய்யவேண்டியது என்ன என்பது அதற்கு பொருளாக இருந்திருக்கலாம். சிவா “நான் உங்களிடம் துணை இயக்குநராகச் சேர வேண்டும் என்றார்.” சற்று நேர அமைதிக்குப்பின் ராம் “நான் தொடர்ந்து படம் செய்பவனில்லை. கற்றது தமிழுக்குப் பின் இப்போதுதான் மற்றொரு படம் செய்கிறேன். தொடர்ந்து படம் இயக்கும் இயக்குநர்களை அணுகினால் என்ன?” என்றார். சிவா அவரை தனது ரசனைக்கு மிக நெருக்கமானவராகக் கருதுவதால் அவரை முதலில் அணுகியதாகக் கூறினார். சற்று நேரம் யோசித்த ராம் தனது அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார். அறை முழுவதும் புத்தகங்கள். பெரும்பாலும் இலக்கியம் மற்றும் தத்துவம்.

சிவாவின் வாசிப்பு குறித்து வினவினார். சிவா தனது உலக இலக்கியம் மற்றும் திரைப்பட அறிமுகங்களைக் கூறினார். இயக்குநருக்கு திருப்தி இருந்திருக்க வேண்டும். “சினிமா என்பது ஒரு கலை வடிவம். நீங்கள் கற்க நினைப்பது டெக்னிக். டெக்னிக் என்பது அறிவியல். அறிவியலை என்னிடம் மட்டுமல்ல யாரிடம் வேண்டுமானாலும் கற்கலாம். உங்கள் திறனைப் பொருத்து 3 நாட்களிலோ 3 மாதங்களிலோ அதை நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். கலையை கற்பிக்க முடியாது. அது உங்களுக்குள்ளிருந்து உருவாவது. அதற்கான பயிற்சிகளை நீங்கள் மலேசியாவிலேயே கூட செய்யலாம். அதிகம் வாசிக்க வேண்டும். டெக்னிக் கற்க வேண்டுமானால் நான் இயக்குநர் பாலுமகேந்திராவின் சினிமாப் பட்டறையில் உங்களை சேர்க்க முடியும்” என்றவர் பாலுமகேந்திராவை தொலைபேசியில் அழைத்தார். எங்கள் வருகை குறித்து சொன்னார். அன்று மாலை அவரைச் சந்திப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார்.

 

இயக்குநர் ராமுடன் சிவா

அதன் பின் ராமின் பேச்சு பெரும்பாலும் இலக்கியம் ஒட்டி இருந்தது. மலேசிய இலக்கியம் குறித்து வினவினார். முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு’ வாசித்ததுண்டா என்றார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அந்த எழுத்தாளரின் பெயரை உண்மையில் அப்போதுதான் கேள்விப்பட்டோம். “இல்லை” என்றோம். “மிக முக்கியமான பிரதி. shore to shore என்ற தலைப்பில் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தன் வரலாறு அது.” என்றார். வாய்ப்பிருந்தால் வாசிக்கக் கூறினார். சயாம் மரண இரயில்வே குறித்து வினவினார். தெரிந்ததைச் சொன்னேன். அது குறித்த எழுதப்பட்ட இலக்கியப் பிரதி குறித்து கூறினேன்.  இடையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் மகள். அவர் மகளை ராம் எழுதிய கவிதைகள் வழி நன்கு அறிந்து வைத்திருந்தேன். http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_9631.html

மகளிடம் பேசும்போது ராமும் ஒரு குழந்தையாக மாறியிருந்தார்.

“அம்மா ஜெயிப்பாங்களா கலைஞர் ஜெயிப்பாரா?”

“ஏன் அம்மா ஜெயிப்பாங்க?”

“அம்மா லேப்டாப் தராங்களா? கலைஞர் டிவி தராரே”

“குழந்தைகளுக்கு லேப்டாப் கொடுப்பவர்தான் ஜெயிப்பாங்களா…”

“சரி, அப்பா பிறகு பேசுறேன்”

ராம் தொலைபேசியை வைத்ததும் , அவர் முன்பு எழுதிய பத்தியை நினைவுக்குக் கொண்டுவந்து கூறினேன்.

http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_755.html

ராம் சிரித்தார். சிவாவிடம் திருமணம் குறித்து விசாரித்தார்.  திருமணம் ஆகவில்லை என்றதும் திருமணம் செய்யச் சொன்னார். “சினிமாவுக்காக வாழ்வில் எதையும் இழக்க வேண்டியதில்லை. திருமணம், குழந்தை போன்ற வாழ்வின் பரிணாமம் உங்கள் வாழ்வை ஒட்டிய பார்வையை இன்னும் கூர்மையாக்கும். திருமணத்தால் சில நெருக்கடிகள் வரலாம். அது உங்கள் கலை மனதை மேம்படுத்துமே தவிர நிச்சயம் அழிக்காது” என்றார். சற்று நேரத்தில்  சைவ உணவை ஆர்டர் செய்து எங்களுடன் சாப்பிட்டார். சுவையாக இருந்தது.

மாலை 5 மணிக்கு இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்திப்பதால் இடைப்பட்ட நேரத்தில் ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்குச் சென்று வரச் சொன்னார். அது நல்ல திட்டமாக இருந்தது. ஏ.வி.ஸ்டூடியோ, பாலுமகேந்திராவின் பயிற்சி பட்டறை மற்றும் ராமின் அலுவலகமெல்லாம் ஒரே பகுதியில்தான் இருந்தன. எனவே  அதையும் பார்த்துவிடலாம் என புறப்பட்டோம். அங்கு நாங்கள் சந்திக்க வேண்டிய அவர் நண்பரின் அழைப்பு எண்ணைக் கொடுத்தார். பெற்றுக்கொண்டோம். ஆட்டோ ஏ.வி.எம் நோக்கி புறப்பட்டது.

… தொடரும்

 

(Visited 119 times, 1 visits today)

2 thoughts on “சினிமாவைத் தேடி சென்னை பயணம்…2

  1. நாடு விட்டு நாடு
    – முத்தம்மாள் பழனிசாமி (email: mathanal@hotmail.com)

    [Translated by the author herself from her autobiography written in English: FROM SHORE TO SHORE (2003, Malaysia).]

    Published in Tamil, Dec 2007, United Writers, 63 Peter’s Road, Royapettai, Chennai-14, ISBN-983 40725 03, email: unitedwriters@yahoo.co.in Tel: +91- 9884196552, Rupees 180

    முத்தம்மாள் பழனிசாமி தன் எழுபது வயதில் ஆங்கிலத்தில் எழுதிய குடும்ப வரலாற்று நூலை, மீண்டும் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறார். சென்ற நூற்றாண்டும் தொடக்கத்தில் தமிழகத்தின் கொங்கு நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்கா, பீஜி, மலேசியா போன்ற நாடுகளுக்கு சஞ்சிக் கூலிகளாய் பலர் கொண்டு செல்லப்பட்டனர். அப்படி கொங்கு நாட்டின் வெள்ளக் கோவிலுக்கருகே இலுப்பைக்கிணறு என்னும் சிறு கிராமத்திலிருந்து தோட்டக் கூலியாக மலாயாவுக்குக் குடியேறிய ஒரு கொங்கு வேளாளக் (கவுண்டர்) குடும்பத்தின் கதையே ‘நாடு விட்டு நாடு’. மலாயாவில், தோட்டப்புறத்தில், குடிகாரத் தந்தை, மற்றும் சாதிவிட்டு திருமணம் செய்துகொண்ட குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை என்று நீள்கிறது நூல். நூலாசிரியை, சார்லஸ் கிரான்ட் என்னும் தமிழ் பேசும் வெள்ளைக்காரரை திருமணம் செய்து கொள்கிறார். தெலுக் இந்தான், ஜென்றாட்டா மூன்றாவது பிரிவு தோட்டம், தைப்பிங், என்று பல இடங்களைத் தொட்டுச் செல்லும் சுவாரஸ்யமான நூல். ஒரு பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட முக்கியமான நூல். கட்டாயம் படிக்கவும்.

    இளங்கோவன்

  2. ஆம். தமிழினியில் வாங்கினேன். வாசிக்கத்தொடங்கியுள்ளேன். அநேகமாக வல்லினத்தின் அடுத்த தொடரில் இந்தப் புத்தகத்தை விரிவாக அறிமுகம் செய்வேன். அவரையும் சந்திக்க திட்டம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *