சிகண்டி: ஈரத்தீயில் நனையும் மனிதர்கள் – மணிமாறன்

ம.நவீனின் ‘பேய்ச்சி’ மற்றும் ‘சிகண்டி’ நாவல்களை வாங்கி படித்துள்ளேன். வல்லினம் இணையப்பக்கத்தையும் அதன் இலக்கியச் சேவைகளையும் ஓரளவு அறிவேன். ‘திறந்தே கிடக்கும் டைரி’ படித்த காலத்திலேயே ஆசிரியர் எழுத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அன்றைய எனது வாழ்வியல் சூழல்களால் வல்லினத்தோடும் ம.நவீனோடும் தொடர்ந்து இணைந்திருக்க முடியவில்லை. அது வல்லினத்தின் ஆரம்பகாலம் என்றே நினைக்கின்றேன். எப்போதாவது எது மூலமாகவோ, யார் மூலமாகவோ வல்லினச் செய்திகள் கண்ணில் காதில் படும். அவ்வகையில் எனக்கு வல்லினத்தை அறிமுகம் செய்த தோழி கலைமணிக்கு நன்றிகள்.

திருநங்கையரின் வாழ்வியலுக்குள் இருக்கும் போரட்டங்களையும் சவால்களையும் சிகண்டி நாவலில் அழுத்தமாக செதுக்கியுள்ளார் ஆசிரியர். முற்றிலும் புதிய பார்வை புதிய பரிமாணத்தில் நாவல் நம்மை நகர்த்துகிறது.

சிகண்டி நாவல் புதம்மா, வீரன், மாரிமுத்து பாத்திரங்களுடன் மார்டின் தோட்டத்திலிருந்து ஆரம்பமாகி அறுபதுகளின் தோட்டப்புற வாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது. டிவிஷன் என்கிற சொல் துரைகளுக்கு தோட்ட மக்களை அடையாளப்படுத்தும் எல்லையென்றாலும் தோட்ட மக்கள் அதையே தங்களின் எல்லையாக எண்ணி பிரிந்திருந்ததும் தன்னிச்சையாக பின்னாளில் நடந்தது. சப்பானியடமிருந்து மீண்டு வந்த பிறகு கம்யூனிஸ்டுகளை வீரன் காவு கொள்வதும் அதன் பின் வீரனை கண்டு ஊர் மிரள்வதும் துரைக்கு விசுவாசமாவதும் அவனுக்கு அவனே வாங்கிய புரமோசன்கள். இந்த கர்வத்தால் வக்கிரமெடுத்து புதம்மாவை வீரன் பாலியல் வன்கொடுமை செய்து விடுவதால் வீரனுக்கும் மாரிமுத்துவுக்கும் சண்டை நடந்து அதில் வீரனே வெற்றியும் பெறுகிறான்.

திருநங்கையரை நேரில் பார்த்ததுண்டு ஆனால் பேசியதில்லை என்றாலும் ஆண்கள் அவர்களை கிண்டல் செய்வதும் வசைப்பதும் கண்டிருக்கிறேன். ஒரு முறை வடக்கு தெற்கு நெடுஞ்சாலை ஆர் என் ஆரில் ஓர் மலாய் திருநங்கை என்னிடம் சில்லரை கேட்டது ஞாபகத்தில் உள்ளது. உண்மையில் திருநங்கையர் அழகிகள்தாம்.
சிறுவயதில் தோட்டங்களில் நடக்கும் திருவிழாக்களில் நடனமாட அழைத்து வரப்படும் இவர்கள் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள் ? என எண்ணியதுண்டு. இரவு தேர் ஊர்வலத்தில் பாவாடை தாவணி அணிந்தாடிய ஆணுடன் சேர்ந்து ஆடியதால் அண்ணனிடம் திட்டு வாங்கிய ஞாபகம்.

மாரிமுத்துக்கு புதம்மா அக்காள் மகள். இருவருக்கும் பரிசம் முடிந்த தருவாயில் அந்தக் கொடுமை நடந்துவிடுகிறது. அதனால் வீரனுக்கு தக்க பதிலடி கொடுக்க ஓவியரான மாரிமுத்து சண்டைக்குத் தயாராகி தோற்று புதம்மாவையும் இழந்து விடுகிறான். நாவிதர் குலமானாலும் தெய்வ உருவங்களை வரைவதில் கைதேர்ந்தவன் மாரிமுத்து இருந்தும் சண்டையின்போது எந்த சாமியும் அவனுக்கு கை கொடுக்காதது வேண்டுதல் வைத்து கைக்கூடாமல்போன வேண்டுதல்களை நினைத்தால் சாமி மீது ஒரு கடுப்பு வருமே அப்படியானது.

நாவலுக்குள் தொடர்ந்தால் பெருநகர் கோலாலம்பூரின் மையமான செளவாட்டுக்குள் நுழைகிறது. தீபன், நாவலின் கதாநாயகன் ஆனால் அவனோ சிறுவனாகவும் இளைஞனாகவும் தன்னுள் மாறி மாறி உருக்கொள்கிறான். தீபனுக்குள் மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் மாற்றங்களும் உணர்வுகளும் அவனை சிதிலமடையச் செய்கின்றன. தன்னிலை சமநிலை இரண்டும் இழக்கிறான். காசி கொடுக்கும் போதை வஸ்து அர்ப்ப சுகம் தந்து மூளைக்குள்ளிருந்துகொண்டு அவனை உயிரோடு பீய்த்து தின்கிறது. பார்வை தரும் கிளர்ச்சிகளை செளவாட் தெருக்களில் வாங்கித் தீர்த்துக் கொள்கிறான்.காமம் தரும் கிளர்ச்சியை சரிகட்ட எண்ணி விலை மாதை புணர்கையில் அது அவனுக்கு அருவருப்பாகி முடிகிறது. பால்ய வயதில் தீபனுக்கு ஏற்படும் பாலுணர்வும் அதை வடிக்க அவன் எடுத்த களம் அவனையே விழுங்கி அவனுக்குள் தங்கியும் விடுகிறது.

பால் உணர்வென்பது இயற்கையின் விதி. அதை கடக்காமல் உடலும் மனமும் மேன்மையடையாது. இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். பருவம் வந்த பின் எல்லா உயிர்களும் தானாகவே தன் துணையைத்தேடி அணுக்கடத்தலை செய்கின்றன. இயற்கைக்கு மாறாக மண்ணின் உயிர்கள் இயங்காது. இயற்கையின் நுண் கட்டளைகளை அவைகள் நன்கறியும். மனித இனம் இயற்கைக்குள் அடங்க மறுத்து திமிருவதால் பல்வேறு கோளாறுகள்.அவற்றில் ஒன்று பாலுணர்ச்சி. அறிவும் மனமும் பிரிந்து இயங்குவது உடலில் காம நேர்ச்சியின் போதுதான். தீபன் அதற்கு விதிவிலக்கல்ல.

உயிர்களுக்கான பொதுக்குணம் உயிரியல் ஞானத்தை அடுத்த உயிர்பிரதிக்கு கடத்திச்செல்வது. தீபன் தன் தாத்தா வீரனின் எச்சமாகவும் மீச்சமாகவும் தன்னை மீட்டுகிறான். ஆண்மை குறைப்பாட்டை இளவயதில் தீபன் எதிர்கொள்வதும் அதை நிவர்த்திக்க எடுக்கும் செயல்கள் எதிர்மறை விளைவை கொடுப்பதும் அவனை மேலும் சிக்கலான முடிவுகளை எடுக்கச்செய்கிறது. அவற்றுள் சூட்சுமமான பல்லி பச்சை வரைவையும் நீலவேணு நாகபித்தையும் சொல்லலாம்.

ஏற்கனவே தள்ளாடும் மாமா அத்தைக்கு தீபன் பாரம். வட்டி கட்டாமல் கண்ணனை கடத்த விட்ட மாமா தீபனுக்கு பாரம். பொருளாதார சிக்கலை வடி கட்ட வட்டி முதலைகளை நாடும் கடை நிலை பெரு நகர குடிகளை இவர்கள் அடையாளப்படுத்துகின்றனர். மாமாவின் வட்டிச்சுழலில் ஏற்கனவே அக புற சிக்கலிலிருக்கும் தீபன் இழுக்கப்படுகிறான். சில வேளைகளில் பணம் பெரும் பூதமாகி காசுக்காக ஏங்கும் மக்களை அள்ளி எடுத்து அப்படியே விழுங்கிவிடுவதை கண்ணனின் கடத்தல் வழி ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறார். வருமானத்திற்காக செளவாட்டில் இரவுச்சந்தையில் வேலை பின்பு ஷாவின் விபச்சார விடுதி கண்காணிப்பாளன் என தீபனின் நிழலுகம் தொடர்கையில் காசியின் அறிமுகம் தீபனுக்கு நம்பிக்கை ஊற்றுகிறது.

செளவாட்டுக்கு புதியவனாக இருப்பதால் காசியை தீபன் ஹீரோவாகவே பார்க்கிறேன். நிழலுகத்தின் அடி ஆழம் அறிய ஆவல் இருந்தும் தீபனால் மேலோட்டமாகவே தெரிந்துக்கொள்ள முடிகிறது. மனவுணர்வுகளாலும் உடற்தேவைகளாலும் அலைமோதும்போது போதைக்குள் மறைந்து மாய முடிவுகளை நாடுகிறான். மறுநாள் மீண்டும் அதே கலவரம் அவனுக்குள் நிகழ்கிறது. சருகு கொட்டிக்கிடக்கும் காட்டில் தீப்பிடித்தால் பட்பட் என எழும்பும் வெடியோசைபோல் தீபனுக்குள் காட்டுத்தீயொன்று எரிகிறது. அவன் நனைந்தால் அதுவே ஈரத்தீயாகின்றது.

திருநங்கை என அறியாமலே சராவை தீபன் விரும்பவதும் பின் ஆண்மைக்குறைவை களையவும் பாம்பு பித்தம் வாங்கவும் தேவைப்படும் பணத்திற்காக சராவையே கொல்லத்துணிவதும் தீபன் ஆண்மை காட்டத்துணியும் வெற்று முயற்சி. என்னத்தவறு செய்திருந்தாலும் அன்னை மடியும் லூனாஸ் ஆறும் அவனை தூய்மை படுத்திவிடும் என நம்புவது அவனுக்குள் ஒளிந்திருக்கும் சிறுவனை வெளிக்காட்டுகிறது. தன் பிள்ளை குண்டரானாலும் டாக்டரானாலும் ஒரு தாய் பாசத்தின் கண்ணூடே தன் பிள்ளைகளை காண்கிறாள். அந்த பார்வைக்குள் பேதங்கள் இருக்காது. ஈபு என்கிற தாய் தன்னை நாடி வரும் திருநங்கைகளை பல்கரங்களோடு இழத்து அணைத்து தாயின் மேன்மையை காட்டுகிறாள். போதை கட்டிகள் விற்றாலும் அதை திருநங்கைகளின் பால் சிகிச்சைக்கு கொடுத்து பாவத்திற்குள் புண்ணியம் தேடிக் கொள்வது தன்னை சார்ந்தவர்களுக்காக எந்த எல்லைக்கும் போகும் தாய்மையின் மறுவடிவம். ஈபுவே சிகண்டி. தன்னுருப்பில் ஒன்றை தியாகம் செய்யும் மனநிலை யாருக்கும் தன்னிச்சையாக ஏற்படுவதில்லை. உடலுறுப்பு தானத்தை சொல்லலாம். அது ஒரு உயர்தர ஞானநிலை. தன் சுயத்தை உணர்ந்து அதை மீட்டெடுக்க உடலின் ஒரு பாகத்தை அறுத்தெறிந்து தன்னை பெண்ணாக காட்டிய சிகண்டி தன்னை நாடிவரும் திருநங்கைகளுக்காக ஈபுவாக மாறுகிறாள். எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு சிகண்டி மறைந்திருக்கிறாள். அந்த அன்னை கொற்றவை போல் தன் ஆங்கார ரூபத்தை தன் பிள்ளைகளை காக்க காட்டத்தயங்குவதில்லை.

பகுச்சரா அன்னை குஜராத்தில் அறியப்பட்டாலும் மலேசியாவில் திருநங்கைகளின் மாதாவாக சிகண்டி மூலம் அறியப்படுவது நாவாலாசிரியரின் புதியச்செய்தி. IBU(ஈபு) என்றால் கருச்சுமப்பவள் என்றும் தலைமையகம் என்றும் பொருள் படும்.ஈபு ஒதுக்கப்பட்ட திருநங்கைகளின் தாயாகவும் தலைமையகமாகவும் இருந்து செளவாட்டில் செயல்படுகிறாள். மாரிமுத்து தன் குழந்தைக்காக புலம்பும்போது வெளிப்படும் நாலுவரிக்கவிதைகள் மனம் சிலிர்க்க வைக்கிறது. மதுரைவிரன் அப்போதும் மாரிமுத்து பக்கம் இல்லை.

சரா அபசரஸாக தன்னை உணரும் நிலையில் பகுச்சரா அன்னையிடம் தன்னை முழமையாக ஒப்படைக்கிறாள். மறுசுழற்சியில் நாட்டமுடைய சரா உடைந்த ஹேல்மட்டிலும் பூத்துக்குலுங்குவது அவளின் மேன்மை நிலையின் வெளிப்பாடு. பழையதை குப்பையெனக்கருதாமல் புதுமை புகுத்தி விடும் விரல்களே பூமியின் தற்காலிக தேவையாக உள்ளது. அதனால் பூமியின் வளத்தை மிச்சப்படுத்தலாம். பழைய தங்க நகைகள் வாங்கி புதிய நகைகள் செய்வதில்லையா? அது போல. ஆணும் பெண்ணும் நிறைந்த உலகில் மூன்றாம் பாலினர் எப்படித்தோன்றினர்? ஆணும் பெண்ணும் இயற்கையின் படைப்பென்றால் ஆணல்லாத ஆணும் பெண்ணல்லாத பெண்ணும் இயற்கையின் படைப்புத்தான். இந்த மூன்றாம் பாலினத்தவர் தோற்றமும் ஒரு முழு ஆண் பெண்ணிடமிருந்தே வருகிறது என்கிற உண்மை மாயமாகிவிடுகிறது. எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்படைவது கருவளத்திற்கான தன்மை. இந்த மையத்திற்குள்தான் உயிர்களின் தொடக்கம் அமைந்துள்ளது. ஆனால் தன்னை விட மாறுபட்ட மென்மையான ஆணை இன்னொரு ஆண் ஏற்பதில்லை. அது ஆணுக்கு இழக்காரமான நிலை. மென்மையான ஆண் நிலையின் பரிணாம வளர்ச்சிதான் இன்று நாம் காணும் திருநங்கையர்கள். அவர்கள் தனிச்சமூகம். கேலிக்கும் களிப்புக்கும் உடையவர்களல்லர். அவர்களுக்கும் மனம், உறவு, நட்பு, சொந்தம் எல்லாம் உண்டு என்பதை நாவல் பேசுகிறது.

செளவாட்டில் தீபனின் மாமா குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பக்களை நாவல் படம் பிடித்து காட்டியிருக்கிறது. ஃபளாட்ஸ் என அழைக்கப்படும் குடியிருப்புக்கள் தோட்டங்களிலிருந்து பட்டாளி மக்கள் மீள்குடியிருப்பக்காக நாடெங்கிலும் கட்டப்பட்டது. தோட்டம் துண்டாடப்படும் போது வரும் போராட்டத்தை விட அடுக்குமாடிகளில் குடியமர்த்தப்படும் மக்களின் போராட்டம் கொடுமையானது. குறுகிய இடத்தில் சுமார் 900 சதுர அடிக்குள் ஒரு குடும்பம் அடைபடுகிறது என்பது அவர்கள் முன் வைக்கப்படும் மிகப்பெரிய சவால். அங்குள்ள சூழல் மனதளவிலும் உடலளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அடிக்கடி பழுதடையும் ஆள் தூக்கிகளால் மக்கள் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல. நோயுற்ற அல்லது வயதான ஒருவர் ஏழாவது மாடிக்கு ஏறுவதோ இறங்குவதோ எத்தகைய மன உளைச்சலை கொடுக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள். இதில் வாகன நிறுத்தம், பாதுகாப்பு, தனிமையிருத்தல் என பல சவால்கள் கண்முன்னிருந்து மறைக்கப்படுகின்றன அல்லது மக்கள் அச்சூழலுக்குள் வலுக்கட்டாயமாக உள்ளிழுக்கப்படுகின்றனர்.

ஆசிரியர் சிகண்டியில் பல நுண்பதிப்புக்களை காட்டியுள்ளார். அவற்றில் சில முதல் வாசிப்பில் பற்றிக்கொள்ள முடியாதவைகளாக இருந்து பின் வாசிப்பில் வெளிப்படுகிறது. சிகண்டியில் பல் சமூக விடயங்களும் பதிவாகியிருக்கின்றது. சீனர்களின் பேய் திருவிழா அவற்றுள் ஒன்று. தீபன் போன்ற ஒரு சிறுவனின் உளவியலை மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் உள்ள மக்களையும் அவர்களின் நிலைமையையும் விவரித்து காட்டுகிறது. தன்னை மீறிய சக்தியொன்று உள்ளதென்றும் அதுவே மனிதர்களை இயக்கி தனக்கான தேவைகளை நிலைநாட்டிக்கொள்கிறது எனும் நுண்ணுர்வை சிகண்டி படிக்கும் வாசகர்களுக்கு தருகிறது.

(Visited 96 times, 1 visits today)