சிகண்டி: இரு வேறு துருவங்களையும் இணைத்துச் செல்லும் வாழ்க்கை – அருணா காத்தவராயன்

வாசிப்பின்போது எனக்குள் எந்த தேடலும் இல்லை, கேள்விகளும் இல்லை. விடைத் தெரியாத பல புதிர்களுக்குள் நடுவே நம் மனித வாழ்க்கை அதன் போக்கில் நகர்வது போல, நான் அறிந்திராத ஒரு புதுமையான வாழ்க்கைக்குள் அடி எடுத்துவைத்த உணர்வோடு சிகண்டி முழுதும் பயணித்தேன். இது சரி அது தவறு என அசலிப்பார்க்கும் அவசியம் எனக்குள் ஏற்படவில்லை. ஒவ்வொரு பக்கமும் வெவ்வெறு விடியலோடு பிரகாசிக்க,மனமோ கயிறறுந்த காற்றாடியாக பறந்தது.

கோலாலம்பூர், மலேசியாவின் தலைநகரம். நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம் எனதான் கேள்விபட்டதுண்டு. ஆனால் அதன் மறுபக்கத்தை யாரும் திரும்பிப்பார்ப்பது இல்லை. கோலாலம்பூர்போல ஒவ்வொரு நகரமயமாதலின் வரலாற்றுப் பக்கங்களிலும் மறைக்கப்பட்ட வலி மிகுந்த வாழ்க்கை இருக்கத்தான் செய்கின்றது. இந்த வலியினூடாகவே நாவலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

பல திசைகளிலிருந்து இலகற்ற நிலையில் அலைகழியும் பல்வேறு மனிதக் கூட்டங்கள் கதைமாந்தர்களாக வளம் வருகின்றனர். அவர்கள் விடியலைத் தேடி சரணடையும் சரணாலயமாக ‘சௌவாட்’ கதையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. எல்லா திசைகளிலும், முற்றிலும் இருண்மையும் நிச்சயமிண்மையும் சூழ்ந்திருக்கக்கூடிய அவ்விடத்தின் மனித வாழ்க்கை அவ்வளவு சுகமானதில்லை என்பதை பதிவுசெய்ய ஆசிரியர் தமக்கே உரிய பல குறியீட்டு உத்திகளைக் சாமர்த்தியமாக பயன்படுத்தியுள்ளார்.

இங்கு இரண்டு தரப்பினர்களின் வாழ்க்கையை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் மக்கள் பலவீனங்களைப் பலமெனகொண்டு பணமாக்கும் வியாபார வர்க்கம்; இன்னொரு பக்கம் வசதிவாய்ப்பகளற்று வாழ வழியற்ற நிலையில் தன்னையே சந்தைப் பொருளாக்கிக்கொண்ட அடித்தட்டு வர்க்கம். வணிக முதலைகளின் ஆக்கிரமைப்பில் சிக்கிய எளிய மனிதர்களின் ஒவ்வொரு அசைவுகளும் தனக்கேற்றவாறு மனித பொம்மைகளாக ஆட்டிவைக்கப்படுகின்ற அவலங்கள் அத்துனையும் மறைமுகமாய் கதைமுழுதும் இழையோடியிருக்கிறது.

வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகரத்த எது ஏதுவாக அமைகிறதோ அதுவே பெரும்பான்மையினரின் வாழ்வாதாரமகிறது. காட்டில் சிங்கம் மானைக் கொள்வது எப்படி பாவக் கணக்கில் சேராதது என்பதுபோல, ஒருவன் பசிக்கு இன்னொருவன் இரையாவதும் சமகால நிகழ்வாக மிகச் சகஜமாக நிகழ்த்திக் காட்டியிருப்பது மிகச் சிறப்பு. பணம் எனும் அச்சானியைக் கொண்டு மனித வாழ்க்கைச் சக்கரம் சழன்றுக் கொண்டிருக்க, சமகால சூழலில் எவ்வாறுமனித விழுமியங்கள் ஒடுக்கப்படுகிறதோ அத்துனை நிகழ்வுகளையும் தன்னத்தே நிரப்பிக் கொண்டு இக்கதை நகர்கின்றது.

இதற்கு நடுவில் முதன்மை கதாபாத்திரமாக தீபனின் அறிமுகம் வாசிப்புக்கு இனிமை சேர்த்தது. தீபனே கதைச்சொல்லியாக அவன் பார்வையில் கதை நீள்கின்றது. அவனது தற்கால பெருநகர் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குத் தக்கவாறு கடந்தகாலக் கம்பத்து வாழ்வியலையும் சற்று முன்பின் கால அடுக்குகளாக கலைத்துப்போட்டு ஒவ்வொரு புதிருக்குள் புதைந்துகிடக்கும் புதையல் சித்திரமாக உருபெற்றிருக்கிறது இந்நாவல். இதன் அமைப்புதான் என்னை சற்றும் சுவாரிசம் குறையாமல் 520 பக்கங்கள் அடங்கிய நாவலை நூல் பிடித்தவாறு கொண்டுச்சென்றது.

தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கை, இளமையில் வறுமை,விடலைப் பருவம், நண்பர்களின் சேர்க்கை, அலைப்பாயும் எண்ணலைகள் என இன்னொருதளத்தில் கதைப் பயணிக்க,என் பள்ளி வாழ்க்கையையின் சில தருணங்களை மீண்டும் நிகழ்த்திக்காட்டியது எனலாம். எல்லாருக்கும் வரும் நியாயமான ஆசை அதனை நிறைவேற்ற துடிக்கும் தாயின் மனம், அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கும் அப்பாவின் போதை. ஏமாற்றத்தால் பொங்கி எழும் தீபனின் வாழ்க்கையைச் சற்று புரட்டிப்போடுகிறது அம்மாவின் சுடுச்சொல். வீட்டை விட்டு வெளியேறும் தீபனின் வாழ்க்கையில் அவன் யாரென அறிய விதி விளையாடுகிறது; சதியும் அவன் கூடவந்து ஒட்டிக்கொண்டது. மேலும், முற்பிறப்பை குறித்து மக்களிடயே பல முரண்பட்ட கருத்துக்கள் இருக்கையில், முற்பிறப்பின் பலனாக தீபன் எதிர்க்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் குறித்து மிக ஆழமாக அலசிப்பார்க்கும் களத்தை இக்கதை வாசகர்களுக்கு வழங்குவதால் வாசிப்பு அனுபவம் வெகுவாக மேலோங்குகிறது.

தொடந்து,திபனின் பெருநகர் வாழ்க்கையின் பிரவேசம் சிகண்டியின் கதைக்கு பிள்ளையார் சுலியாக உள்ளது. வாழ்க்கையின் பயணம் ஏதோ ஒரு தேடலில் தொடங்கிறது, ஆனால் தேடிய பொருள் கிடைப்பதற்குள் அவனது தேடல் வெறொன்றாக மாறுவதை மிக எதார்த்தமாகவும் விருவிருப்பாகவும் காட்சிப்படுத்திருக்கிறது ஆசிரியரின் எழுத்தாற்றல். கதையின் வேகம் சற்றும் குறையாமல் பல சமகால இரட்டை அர்த்தம் கொண்ட வேடிக்கைகளும் வார்த்தைகளும் வாழ்க்கையின் எதார்த்தை மிக இலகுவாக காண்பிக்க உதவுகிறது. வாசிப்பின் சில கணங்களில் தன்னையும் அறியாமல் வாய்விட்டு சிரித்துவிட்டு காரணம் சொல்லமுடியாமல் தடுமாறியது நல்ல வாசிப்பு அனுபவத்தையும் ஏற்படுத்தியது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக இலக்கியப் படைப்புகளில் காணப்படும் கணக்கற்ற கருத்துதிணிப்பும் தத்துவ சிதறல்களும் நிகழாமல் இருப்பதை ஆசிரியர் உறுதிசெய்திருப்பது,எந்தவொரு சலிப்பும் ஏற்படாமல் வாசகர்களைத் தன்னகத்தே கட்டிப்போட்டது எனலாம்.

இதற்கிடையில், தீபன் சந்தித்தப் பலதரப்பட்ட மக்களின் பழக்க வழக்கங்கள், தாய்மாமா உறவின் உதரல்கள், ஆபத்தில் கைக்கோர்த்த நட்பு,தேடாமலே கிட்டிய வேலை, சுவைத்த பல வகை உணவுகள், தொழில் இரகசியங்கள், கணிந்த காதல், உறுத்திய கனவு, இனம்புரியாத மோகம், தொலைந்த ஆற்றல், பொங்கியழுந்த கோபம், பதுங்கிக்கிடந்த பயம், விடுபடதூண்டிய தயக்கம், அம்மாவின்பால் ஏக்கம், தீட்டிய திட்டம், திசைமாறிய முடிவு,இறுதியாக அவன் பெற்ற வரம்…. என அனைத்தும் ஒன்றோடு ஒன்று பல முடிச்சிகளுக்கு நடுவில் கோர்க்கப்பட்ட ஆழ்க்கடல் முத்துகளாகப் பார்க்கிறேன்.

ஆசிரியர் உருவாக்கிய கதாபாத்திரங்களில் நான் அதிகமாக இரசித்தது ‘சாரா’. பெண்ணாய் வாழ அவள் செய்த தவம் மிகப் பெரியது என உணர்த்திய பாங்கு பெரிதும் பாராட்டக்கூடியது. ஆணுறுவில் பிறந்தாலும் பெண்ணின் உணர்வுகளைக்கொண்டதால் நண்பர்களால் சீண்டப்பட்டு, பெற்றவர்களால் நிந்திக்கப்பட்ட நிலையில்“ஈபு மற்றும் நிஷம்மா” எனும் இரு தாய்களிடம் தஞ்சம் புகுகிறாள்சாரா. கைவிடப்பட்ட  அரவாணிகளை அரவணைப்பதற்கென, தன் வாழ்நாள்முழுவதையும் தியாகம் செய்து வாழும் ஈபு எனும் கதாபாத்திரத்தின்வழி தாய்மை என்பது பெண்களுக்கு மட்டும் உரியது அல்ல; பொதுவானது,  பேரன்பின் வெளிபாடு என்பதை உணரத்துகிறது இந்நாவல். திருநங்கைகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக கருதப்படாமல் இழிவாகக் கருதி அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய கல்வி, வேலை, பாதுகாப்பு அனைத்தும் தவிர்க்கப்படுவதால் அவர்களின் வாழ்க்கை எப்படி தடுமாறி தடம் மாறிச் செல்கிறது என்பதை கதையோட்டத்தின்வழி படம்பிடித்துக்காட்டுகிறார் ஆசிரியர். சமுகத்தால் ஒதுக்கப்பட்டாலும் ஒரு சமூகமாகவே வாழும் திருநங்கைளின் அலரல்கள் கதை முழுவது ஓங்கி ஒலித்தது எனலாம். திருநங்கைகளின் மாசற்ற அன்புணர்ச்சி,மொழி, கலை, அழகு, மன வலியும் வேதனைகளையும் மட்டுமல்ல அவர்களின் எதிர்ப்பார்ப்புகளும் அதன் எதிர்ப்புகளும் அதனால் ஏற்படும் கோபத்தின் கொடூர வெளிப்பாடுகளும்வெவ்வேறு கோணங்களில் எதிர்கொள்வதில் அடைந்த வாசிப்பு அனுபவங்கள் மிக அற்புதமானவை.

என் பார்வையில், சிகண்டியின் மையம் ‘பாலின போரட்டம்’ என்பேன். எது அவசியம் என தோன்றுகிறதோ அதுவே அனாவசியமாக தோன்றும் இருவேறு துருவங்களை இணைத்துப் பார்க்கும் விந்தை இந்த கதை. மனிதம், இனம், மொழி, இடம், காலம் என பல கடந்தாலும் பாலின உணர்வுகளின் வெளிப்பாடுகளை முற்றிலும் புறக்கணித்து அதில் ஏற்படக்கூடிய எதிர்ப்பார்ப்புகளை ஒரு பொருட்டாகவும் ஏமாற்றங்களை ஒரு போரட்டமாகவும் கருதக்கூடிய விதிகளுக்கு அப்பார்ப்பட்டு நிற்கும் நிலையில் நிறைவடைகிறது மனித வாழ்க்கை. இயற்கையின் நியதியினால் நிச்சயக்கப்பட்டது பாலினம். அதற்கு எதிர்ப்பான செயல்பாடுகளை இழிவானதாக மக்கள் கருதப்படுவதால் பல உன்னதங்கள் இருட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளன. வெளிச்சத்தைத் தேடி பறந்துச் சென்று மீண்டும் இருட்டுக்குள்ளே சங்கமித்து, அதனையே வாழ்வாதாராமாக அமைத்துக் கொண்ட ஓர் பேரினத்தின் கதையை மிக இயல்பாக எதார்தத்துடன் அமைந்திருக்கிறது சிகண்டி.

கதை தற்காலத்தைக் கோடிகாட்டியிருந்தாலும் சிகண்டி எனும் மகாபாரத கதைப்பாத்திரத்தை நினைவுகூறுவதால், இது காலங்காலாமாக நிகழ்ந்து வரும் போராட்டமே என புரியவைக்கிறது. என்னதான் இலக்கியங்களில் வழிவழியாக மாற்றுப்பாலினத்தைப் பற்றி புகழ்ந்து போற்றி பேசப்பட்டாலும், இன்னமும் இலக்கண பிழையாகவே கருதப்படுகிறது. பல சங்கங்களைக் கடந்தும் காலத்திற்கு ஏற்றார்போல் தன்னைப் புதுபித்துக்கொள்ளும் கண்ணித்தமிழிலும் பால் ஐந்தாகத்தான் இருந்துவருகிறது. அதனால்தான் என்னவோ, இன்றுவரை, படித்தவனும் படிக்காதவனும் பாகுபாடின்றி அரவாணிகளை முறையாக நடத்துவதில்லை. எது எப்படி இருந்தால் என்ன, இச்சைக்காக,கொச்சை வார்த்தைகள் கொண்டு வர்ணிக்கப்படும் அரவாணிகளின் வண்ணமயமான வாழ்க்கைமுறையை கதைமுழுதும் வாழ்ந்துப்பார்த்த திருப்தியில் சிகண்டியின் தீவிர வாசகியாக நான்.

(Visited 160 times, 1 visits today)