எழுத்தாளர் சங்க முன்னெடுப்புகள் மலேசியப் புதுக்கவிதைக்கு மறுமலர்ச்சியை உண்டாக்கியதா?

‘மலேசியப் புதுக்கவிதைகள்: தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற ஆய்வு நூல் மலேசியப் புதுக்கவிதை குறித்த ஆய்வுகளில் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படுவதுண்டு. இராஜம் இராஜேந்திரன் அவர்கள், தன் முதுகலைப்பட்டப் படிப்புக்காகத்  தயாரித்த ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். நவம்பர் 2007இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலுக்கு சிறந்த கட்டுரை நூலுக்கான எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்கவாசகம் விருது அந்த ஆண்டே கிடைத்தது. அவர் விருது பெற்ற ஆண்டு இராஜம் அவர்களின் கணவரான இராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். உலக பொதுவிதி படி இந்த விருது ஒரு முறைக்கேடானது என எதிர்வினைகள் வந்தன. இந்தக் கட்டுரை அந்த நூலின் உள்ளடக்கத் தரம் குறித்தும் முன்னெடுக்கும் அரசியல் குறித்தும் ஆராய முற்படுகிறது.

இந்நூல் பிரதானமாக ஆறு உபதலைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் கல்விசார் ஆய்வேடுகளுக்கே உரிய பிரபல பகுப்புகளான பாடுபொருள், உத்திகள், மொழிநடை, மலேசியத் தன்மைகள் என இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல் தலைப்பான ‘மலேசியாவில் தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற பகுதியே இராஜம் அவர்களின் புதுக்கவிதை குறித்த புரிதலையும் புதுக்கவிதை வரலாற்றையும் எடுத்தியம்புகிறது.

ஏறக்குறைய எண்பது பக்கங்களை உள்ளடக்கிய இந்த முதல் பகுதியில் பெரும்பாலும் பிற ஆய்வுகளின் கூற்றுகளே எடுத்தாளப்பட்டுள்ளன. இது வழக்கமான ஆய்வேடுகளின் பாணிதான். ஆனால், இராஜம் அவர்கள் மூலத் தரவுகளைக் கொண்டு பொழிப்புரை செய்யும் பகுதிகள் வழியாகவே அவரது புதுக்கவிதை குறித்த புரிதலை அளவிட முடிகிறது.

தமிழில் புதுக்கவிதை வளர்ச்சி காலப்படிநிலையை மணிக்கொடி காலம், எழுத்து காலம், வானம்பாடி காலம் என மூன்றாகப் பிரிக்கிறார் இராஜம். இந்த மூன்று காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் குறித்த கருத்துகளையும் அவர் பிற கல்வியாளர்களிடமிருந்தே பெருகிறார். அவ்வகையில் மணிக்கொடி, எழுத்து காலக்கட்டத்தைவிட வானம்பாடி காலக்கட்டமே உண்மையும் உணர்ச்சியும் மிகுந்த கவிதைகளைக் கொண்டிருந்தன என்பது அவரது முடிவு. ஆனால் அந்த முடிவுக்கு அவர் வரக் காரணமாக இருப்பது அவர் மேற்கோள்காட்டும் கல்வியாளர்களின் ஆய்வுகள்தான்.  மணிக்கொடி மற்றும் எழுத்து காலக்கட்ட கவிஞர்களையும் கவிதைகளையும் நிராகரித்த, விமர்சித்த கல்வியாளர்களின் கூற்றுகளை அவர் பின்பற்றியிருக்கிறார்.

தமிழ் இலக்கிய வரலாற்றை ஓரளவு அறிந்தவர்கள் கூட 2000வரை அதன் பாய்ச்சல் சிற்றிதழ்களால் நிகழ்ந்தது என்பதையும் கல்வியாளர்களுக்கான முக்கியத்துவம் இலக்கிய வரலாற்றில் இல்லை என்பதையும் அறிந்திருப்பர். இராஜம் அவர்களுக்கு நேரடியாக மணிக்கொடி, எழுத்து காலக்கட்ட கவிதைகளை வாசித்து உள்வாங்குவதிலும் அதன் தரத்தை அறிவதிலும் சிரமம் இருந்திருக்கலாம். மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி ஆகிய மூன்று காலக்கட்ட கவிதைகளில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவரிடம் எவ்விதமான தனித்த அபிப்பிராயங்களோ இரசனையோ இருப்பதற்கான சான்றுகள் இந்நூலில் இல்லை. கவிதைகளில் ஏதாவது ஒருவரியை எடுத்து, அதனைக் கருத்துப் பிரதியாக மாற்றி, அக்கவிஞரின் கவிதை உலகை அளவிட அவரால் முடிந்துள்ளது. உதாரணமாக, சிக்கலான குறியீடுகளைக் கொண்ட கவிஞர் அபியின் இரண்டு கவிதைகளைக் குறிப்பிட்டு, அவர் கவிதைகள் நம்பிக்கைப் போக்குடையவை எனப் பொதுவாகச் சொல்லிவிட்டு கடக்க முடிகிறது. 1972 ‘வைகறை மேகங்கள்’ எனும் மரபுக்கவிதை நூலை வெளியிட்ட வைரமுத்துவை 1971இல் வெளிவந்த வானம்பாடி இதழ் காலத்தின் கவிஞர் என இணைத்து பாராட்ட முடிகிறது. பாரதியார் தன் கவிதைகளைப் புதுக்கவிதை எனக் குறிப்பிட்டார் என எவ்வித சான்றுகளும் இல்லாமல் கூற முடிகின்றது. ‘வசன கவிதை’ என்பது பாரதியார் அறிமுகப்படுத்திய பெயர் என  தரவுகளற்று எழுத முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக புதுக்கவிதையை வளர்க்க பாட்டரங்குகளை ஏற்பாடு செய்யவும் புதுக்கவிதைக்கான இலக்கணப் பயிற்சிகளை நடத்தவும் பரிந்துரைக்கவும் அவரால் முடிந்துள்ளது.

ஆய்வு என்பது சார்பு நிலையற்றது. முன்முடிவுகளோடு ஆய்வுகளைத் திட்டமிடுவதும் தான் வைத்துள்ள கருதுகோளுக்கு ஏற்ற வகையில் தரவுகளைத் தேடித் தொகுத்தளிப்பதும் ஆய்வு நெறி அல்ல. மாறாக, பெரும் தேடலின் விளைவில் கிடைக்கக் கூடிய இறுதி உண்மையே ஆய்வாகும். அந்த உண்மை நமது நம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும் அந்தக் கண்டடைவே அப்பணிக்கு மகுடம் சேர்ப்பது. இராஜம் அவர்கள் இவ்வாய்வில் தனித்து பயணித்து சுயமான முடிவுகளுக்கு வந்து சேரவில்லை. வானம்பாடிகள் புதுக்கவிதையின் ஒப்பற்ற குழு என்னும் கல்வியாளர் கூட்டத்தின் முடிவை நிருவும் நோக்கம் மட்டுமே அவரிடம் காணப்படுகின்றது. 

புதுக்கவிதை வரலாறு ஓர் எளிய பார்வையில்

ராஜம் அவர்களின் ஆய்வை தொடர்ந்து பார்க்கும் முன் புதுக்கவிதை தமிழுக்குள் நுழைந்த வரலாற்றை ஓரளவுக்கேனும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

பாரதியார்

ஐரோப்பிய தேசங்களில் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் கவிதையியலின் புதிய பரிணாமம் பேசப்பட்டது. கவிதை என்பது இலக்கணத்தில் இருக்கிறதா? அது உணர்த்தும் அனுபவத்தில் இருக்கிறதா? என்ற விவாதங்கள் நடந்தன. இந்த விவாதம் வங்கத்துக்கு வந்தது. பின்னாளில் பாரதி வாரணாசிக்குக் கல்வி கற்கச் சென்றது  அவர் மறுமலர்ச்சிக் கவிஞராக உருமாற ஒரு காரணமாக அமைந்தது. மறுமலர்ச்சி கவிஞர் என்பது உள்ளடக்கத்தில் மாற்றம் கண்ட கவிதைகளே அன்றி அது யாப்பையே அடிப்படையாகக் கொண்டிருந்தது.  உள்ளடக்கத்தில் மாற்றம் கண்ட கவிதைகளையே பாரதி நவகவிதைகள் என்றார். மேலை கவிதையியலில் ஏற்பட்டுவந்த மாற்றத்தை பாரதி அறிந்திருந்தார். அதே சமயம் நவீனத்துவ காலகட்ட மாற்றங்களையும் பாரதி உள்வாங்கியிருந்தார். நதிக்காகத்தான் கரையே தவிர கரைக்காக நதியில்லை என அக்காலத்தில் உணர்ந்த ஒரே தமிழ் கவிஞன் பாரதி.

வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் வழி பெற்ற கவிதையின் உள்ளடக்கம்,  மேலைக் கவிஞர்களின் கவிப்போக்கை நேர்முகமாகக் கண்ட அனுபவம், இவை இரண்டும்  பாரதியாரை கவித்துவம் நோக்கி நகர வைத்தது. கவிதைக்குதான் இலக்கணம்; இலக்கணத்துக்குக் கவிதையல்ல என உணரத்தொடங்கினார். வால்ட் விட்மன் பாரதியின் முன்னோடி. அவர் பாதிப்பால் யாப்பற்ற ‘காட்சி’ கவிதையை எழுதினார். பாரதியார் அவற்றை வசன கவிதை என்றோ புதுக்கவிதை என்றோ எங்கும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

1930இல் பதிப்பிக்கப்பட்ட பாரதியார் கவிதைகளின் இரண்டாம் பதிப்பில்தான் ‘காட்சி’ கவிதைகள் இடம்பெற்றன. அதற்கு வசனகவிதை என்ற பெயரை வழங்கியது பதிப்பாசிரியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாரதியார் விட்மன் பற்றி எழுதிய கட்டுரையில் ‘வசனமாகவே எழுதப்பட்ட கவிதை’ என்பதில் இருந்து அதை பெற்றிருக்கலாம். ஆனால் இதற்கு தகுந்த தரவுகள் இல்லை. இவ்வகையில் தமிழில் யாப்பில் இருந்து விடுபட்ட நவீன பாணி கவிதை பாரதியிடமிருந்து தொடங்குகிறது.

அதற்கு அடுத்தக்கட்ட வளர்ச்சியை ஏற்படுத்தியது ‘மணிக்கொடி’ இதழ். 1933இல் உருவான இவ்விதழில் தீவிரமாக இயங்கியவர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் ஆகிய மூவரும்.

ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராவும் பாரதி, தாகூர், விட்மன் ஆகியோர் இட்டுச்சென்ற பாதையால் வசன கவிதைகள் எழுதத் தொடங்கினர். இந்தக் கவிதை போக்குக்குப் பண்டிதர்களின் எதிர்ப்பு வலுவாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ந.பிச்சமூர்த்தியே தமிழ் நவீன கவிதையின் தந்தை.

தொடர்ந்து எழுத்து இதழ் 1959இல் சி.சு.செல்லப்பா அவர்களால் தொடங்கப்பட்டது. வசன கவிதை போக்கு தொடர இவ்விதழ் வழிவகுத்தது. 1958இல் வசன கவிதை என்ற சொல்லுக்கு பதிலாக புதுக்கவிதை என்ற சொல்லை க.நா.சுப்ரமணியம் உருவாக்குகிறார். க.நா.சு வால்ட் விட்மனை முன் உதாரணமாகக் கொள்ளாமல் டி.எஸ்.எலியட் மற்றும் எஸ்ரா பவுண்டை முன்னுதாரணமாகக் கொண்டார்.

எஸ்ரா பவுண்ட்(Ezra Weston Loomis Pound) புதுக்கவிதை குறித்து கொண்டிருந்த அபிப்பிராயங்கள் முக்கியமானவை. கூடுமானவரை மக்களின் மொழியைப் பயன்படுத்துதல், அணிகளைத் தவர்த்தல், இசை பாடலின் வடிவில் அதன் சொற்றொடர் அடுக்கு ஒழுங்கு இருக்கலாம், ஒலியால் தொடர்பு கொள்ளுதல் அவசியமில்லை, படிமம் அவசியம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை.  எழுத்து காலக்கட்டத்தில் உருவான கவிஞர்களாக பசுவய்யா, சி.மணி, பிரமிள், இரா. மீனாட்சி, நகுலன், சண்முக சுப்பையா ஆகியோரை முதன்மையாகக் குறிப்பிடலாம். 119 எழுத்து இதழ்கள் வெளிவந்தன. வெளிவந்த ஆறு ஆண்டுகளில் சிறந்த புதுக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘புதுக்குரல்கள்’ எனும் தனி கவிதை நூலாகவே வெளிவந்தது. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்கள் பலரும் பின்னர் தனித்தனியாக புதுக்கவிதை தொகுப்புகளை வெளியிட்டனர். ஆக, எழுத்து பிறந்து புதுக்கவிதையை நிறுவி பின்னரே மாண்டு போனது.

இதற்குப் பிறகுதான் 1971இல் வானம்பாடி சிற்றிதழ் உருவானது. இந்தக் கவிதை இதழ் பின்னர் அது சார்ந்த கருத்துகளைக் முன்னிருந்தி கவிதைக்கான இயக்கமாக விரிவு கண்டது.   இவ்வியக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள், மார்க்ஸிய சிந்தனையாளர்கள், திராவிட பற்றாளர்கள் என பல முற்போக்கு கோட்பாடு சார்ந்தவர்கள் இருந்தனர். வானம்பாடியினர் பலரும் மரபு கவிதை எழுதியவர்கள். இவர்களின் முன்னோடி நா.காமராசன் மற்றும் மீரா. இவர்கள் எழுத்து கவிதைகளை தமிழ் மரபில் இருந்து உருவானதல்ல; அது மேலை நாட்டு புதுக்கவிதை மரபை ஏற்று எழுந்தது என விமர்சித்தனர்.

எஸ்ரா பவுண்ட்

இந்தக் காலத்தில் எழுத்து இதழ் நின்றுவிட்டிருந்தது. ஆனால் அதன் குணாம்சத்தோடு வந்த நடை, கசடதபற போன்ற இதழ்களோடு வானம்பாடி முரண்பட்டது. வானம்பாடி மூன்று ஆண்டுகள் தீவிரமாக வெளிவந்தது. கவிஞர்கள் மீரா, புவியரசு, சிற்பி, ஆதி, தமிழன்பன், அப்துல் ரகுமான், இன்குலாப், மு.மேத்தா ஆகியோரை வானம்பாடி இதழின் வழி பிரபலமானவர்கள் என்று  குறிப்பிடலாம்.

புதுக்கவிதை என்ற சொல் வானம்பாடிகளால் மலினமாக்கப்பட்டதைத் தொடர்ந்து நவீன கவிதை என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. 1980களின் இறுதியில் இச்சொல் தனக்கான தன்மையைத் தேடி அடைந்தது. இன்றுவரை இச்சொல்லை உருவாக்கியது யார் எனத் திட்டவட்டமான தகவல் இல்லை. ஆனால், சுகுமாறன் காலக்கட்டத்தில் இச்சொல் பிரபலமடைந்ததாகக் கருதப்படுகிறது.

நவீனத்துவம் என்பது அச்சு ஊடகத்துடன் சம்பந்தப்பட்டது. அச்சு ஊடகம் அந்தரங்க வாசிப்பை உள்வாங்கியது. எனவே கவிதை,  வாசிப்புக்கானது; மேடைக்கானதல்ல என்ற கருத்து பரவலாக இருந்தது. இன்றுவரை நவீன கவிதை என்ற சொல்லே வழக்கத்தில் உள்ளது. எனவே நா.பிச்சைமூர்த்தி தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை நவீன கவிஞர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் வானம்பாடிகளை நவீன கவிஞர்கள் பட்டியலில் இணைப்பதில்லை.

வானம்பாடி கவிதைகள் மலினமானதா?

ஓர் இலக்கிய வரலாற்றில் அப்படி எதையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. இலக்கியத்தில் நிகழும் பெரும் அலை திட்டமிட்டு உருவாவதல்ல. அதற்கு அன்றைய அரசியல் நிலை, அச்சூழலின் நெருக்கடிகள், பிற கலைகளின் தாக்கம் என புற காரணங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.

சிற்பி

எழுபதுகளில் வெளிவந்த வானம்பாடி கவிதைகள் அடிப்படையாக இரண்டு தன்மைகள் கொண்டவை. முதலாவது அதன் வடிவம் கவியரங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டவை.  இரண்டு அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் முற்போக்கு கருத்துகளை ஏற்றவை. அரசியல் சூழலால் தமிழகத்தில் எழுந்த அதிதீவிர இடதுசாரிகளின் அலையால் இக்கவிதைகள் செல்வாக்குப் பெற்றன. நேரடியான பார்வையாளரின் எதிர்வினைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு கவியரங்கங்களில்  கைத்தட்டல் பெற்றன. கேட்பவனை கிளர்ச்சியுற வைக்கும் வரிகள், வீழ்த்தவல்ல கோஷங்கள், சாதுர்யமான துணுக்குகள், முற்போக்கான கூற்றுகள் என அதிக பட்சம் இரண்டாவது முறையே புரிந்துவிடும்படி சொல் செட்டுகள் அடுக்கப்பட்டன.

இவ்வம்சங்கள் தமிழ் மரபில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தவை. நாட்டுப்புற பாடல்கள், தெருக்கூத்துகள், நிகழ்த்துகலைகள் போன்றவை கூட்டாக அமர்ந்து ரசிக்கும் வண்ணம்  புகழ்ப்பெற்றவை. மிகையான நாடக அம்சமும், அரங்கை கைவசப்படுத்தும் சொற்களின் ஓசை நயமும் பார்வையாளர்களின் பொதுக்கற்பனைக்கு வகை செய்பவை.  வானம்பாடி கவிஞர்கள் அந்த மரபு தொடர்ச்சியில் இணைந்தனர். இவ்வம்சம் ஏற்கனவே நடைமுறையில் இருந்ததால் அது அன்றைய வாசகர்களுக்கு எளிதில் ஏற்கும்படியும் கொண்டாடும்படியும் அமைந்தது. வசீகரமான சொல்லடுக்கல்களாலும், கைத்தட்டல்களுக்கேற்ற மீள்கூறல்களால்களாலும் உணர்ச்சிமிக்க கோஷங்களாலும் பார்வையாளர்கள் கட்டுண்டு கிடந்தனர்.

வானம்பாடி கவிதைகள் தமிழ் மரபுகளோடு நேரடி தொடர்பு உள்ள, ஆனால் யாப்பு இலக்கணத்தை மட்டும் துறந்துவிட்ட கவிதைகள் என்றே சொல்ல முடியும். வானம்பாடிகள், தமிழ் மரபு கவிதைகளின் பற்றாளர்களை புதிய காலத்துக்கு நகர்த்திக் கொண்டு வந்துள்ளனர். பழைய சங்கதிகளை யாப்பு இல்லாமல் நேரடியாகவே எழுதுவதுதான் அவர்களின் முக்கிய பணியாக இருந்துள்ளது. அதனால்தான் வானம்பாடியை பின்பற்றும் புது கவிதையாளர்கள், தமிழ் விழுமியங்களான தாய்மை, காதல், வீரம், அன்பு, என்ற அடிப்படைகளில் நின்றே அதிகம் கவிதைகள் எழுதினர்.

அதே சமயம் வானம்பாடி கவிஞர்கள் புதுக்கவிதைக்கு முக்கியப் பங்களிப்பும் செய்தனர். அக்காலத்தில் பெரும் செல்வாக்கு செலுத்திய மரபுக் கவிதைகளில் இருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டு, மரபைத் துறந்த இளைஞர்கள் பெரும் திரளாகப் புதுக்கவிதை எழுத வந்தனர். இந்தத் தாக்கம் மலேசியா வரை வளர்ந்தது.

மலேசியாவில் புதுக்கவிதை

சிறுகதையாகட்டும் புதுக்கவிதையாகட்டும் மலேசியாவுக்கு எப்போதும் நல்லத் தொடக்கமாகவே அமைந்துள்ளது. இங்கு எப்படி ஐம்பதுகளில் கு. அழகிரிசாமியின் வருகை நிகழ்ந்து அதன் வழி சிறுகதை எழுதும் நுணுக்கங்கள் அன்றைய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கப்பெற்றதோ அதேபோல மலேசியாவில் ஆரம்பகால புதுக்கவிதைகள், எழுத்து இதழின் தாக்கத்தாலும், ‘அங்காதான் 45’ போன்ற இந்தோனேசிய (மலாய்) இயக்கத்தின் முன்னெடுப்பாலும் வளரத்தொடங்கியது.

தமிழகம் போலவே மலேசியாவிலும் புதுக்கவிதையின் தோற்றத்துக்கு கடும் எதிர்ப்புகள் இருந்த சூழலில் அதனை ஓர் இயக்கமாக முன்னெடுத்தது ‘வானம்பாடி’ வார இதழ்தான்.

1977இல் ஆதி. குமணன், அக்கினி சுகுமார், இராஜகுமாரன் இணைவில் வெளிவந்த வானம்பாடியில் தமிழகத்தின் வானம்பாடி கவிதைகளை ஒத்தத் தன்மையுடனேயே கவிதைகள் பிரசுரம் கண்டன. எளிதில் வாசகனுக்குப் பிடிபடும் நயங்கள், திடுக்கிட வைக்கும் முரண்கள், கூக்குரல்கள், சீண்டல்கள் என அன்றைய மலேசிய இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்தது வானம்பாடி. அன்றைய சூழலில் மரபுக் கவிதை அறிந்தால் மட்டுமே இலக்கியவாதி என்றிருந்த சூழலில் வானம்பாடி ஏற்படுத்திய அலையால் மலேசியக் கவிதை உலகில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.

ஆதி. குமணன்

இந்த மாற்றம் அவசியமானது. ஒருவேளை இப்படி ஓர் இயக்கம் வராதிருந்தால் பெரும் திரள் கொண்ட இளம் கவிஞர்கள் அக்காலக்கட்டத்தில் தோன்றாமலேயே இருந்திருப்பர். பழமையில் இருந்த கவிதை நுகர்ச்சியை புது வெளிக்கு நகர்த்த இக்காலகட்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே. ஆனால் அதன் அடுத்த கட்ட நகர்ச்சி இல்லாமல் மலேசிய தமிழ்க்கவிதைகள் தேங்கின. தமிழகச் சூழலில் எழுத்து இதழுக்குப் பிறகு ‘கசடதபற’, ‘நடை’ போன்ற இதழ்களின் வருகை நிகழ்ந்ததைப்போல மலேசியாவில் நடக்காமல் போனதுதான் துரதிஷ்டம். மேலும் எழுபதுகளில் தேவதேவன், சுகுமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகள் நவீன கவிதைகளின் போக்குகளை மாற்றியமைத்தனர். மலேசியாவில் அப்படியான ஆளுமைகளும் இல்லாத சூழலின் விளைவாக வானம்பாடி ரக கவிதைகளே இங்கு கவிதைக்கான அடையாளமாகின.             

வணிக எழுத்தை எதிர்க்கத் துணியாத கவிஞர்கள் / எழுத்தாளர்களின் போக்கு, சிற்றிதழ் முயற்சிகள் இல்லாமை, விமர்சனம் அற்ற இலக்கியச்சூழல், கல்வியாளர்களின்  பொத்தம்பொதுவான இலக்கியப் புரிதல், வானம்பாடி குழுவினரின் அரசியல் பலம் போன்றவை இலக்கியச்சூழலில் நிலவியதால்தான் வானம்பாடிக்குப் பிறகு தனித்துவமான கவிதை முயற்சிகள் மிக நீண்ட காலத்துக்கு மலேசியாவில் உருவாகவில்லை 

நவீன இலக்கியமும் வானம்பாடி கவிதைகளும்.

நவீன இலக்கியத்துக்கும் அச்சு ஊடகத்துக்கும் அணுக்கமான தொடர்புண்டு. அச்சு இயந்திரங்களின் வருகையால் தமிழகத்தில் நூலகங்கள் உருவாக்கம் கண்டன. அறிவு ஆர்வமுள்ள யாரும் அணுகிப் பயன்படுத்தத்தக்க சூழலை நூலகங்கள் உருவாக்கின. இதனால் வாசிக்கும் பழக்கமுள்ள நடுத்தர வர்க்கம் உருவானது. வாய்மொழி மரபாக இருந்த கதை கூறும் மரபு மறைந்து மெளனவாசிப்பு பழக்கம் தோன்றியது.

வாய்மொழி மரபில் இருந்து அந்தரங்கமான வாசிப்பைக் கோருவது நவீன இலக்கியம். எனவே நவீன இலக்கியத்தின் அலகுகளில் முதன்மையானதான மௌனவாசிப்பிற்கு பதில் ஓங்கியொலிக்கும் தன்மை கொண்ட வானம்பாடி கவிதைகள் முரண் செயல்பாடாகவே கருதப்பட்டது.

புதுக்கவிதை என்பதை மரபுக்கவிதையின் வடிவ ரீதியான மாற்று எனப் புரிந்துகொண்ட வானம்பாடி கவிஞர்கள் குறிப்பிட்ட மொழிச்செட்டுக்குள் சிக்கிக் கிடந்தனர்.

மாறாக, நவீன கவிதைகளின் அளவுகோள்கள் உலக இலக்கியச் சூழலில் இருந்து தன்னை கட்டமைத்துக்கொண்ட முற்றிலும் புதிய இலக்கிய வகை என அறிந்துகொண்ட கவிஞர்களால் மட்டுமே அது மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. பாரதியும், ந.பிச்சமூர்த்தியும் அமெரிக்கக் கவி வால்ட் விட்மனையே வசனக் கவிதைக்கான முன்மாதிரியாக கொண்டிருந்தார்கள் என்பதையும் தமிழ்ப்  புதுக்கவிதை இயக்கமே டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட் முதலியோரை மாதிரியாக உருவகித்தே தன் பாதையை கண்டடைந்தது என்பதையும் அறிந்துகொண்டாலே இந்தப் புரிதல் கிடைத்துவிடும்.

நவீன கவிதையை எவ்வாறு வரையறுப்பது?

இவ்வாறு தனித்துவமான போக்கினைக் கொண்ட நவீன கவிதையை எவ்வாறு வரையறுப்பது? அப்படி ஒற்றைப்படையாக எந்த இலக்கிய வடிவத்தையும் வரையறுக்க முடியாது. நல்ல கவிதைகளே, கவிதை எனும் வடிவத்திற்குரிய வரையறைகளை தீர்மானிக்கின்றன. அதாவது, வாசிப்பின் வழியே நல்ல கவிதைகளிடையே உள்ள ஒற்றுமைகளை நாம் அறிந்துகொள்கிறோம். அவற்றில் உள்ள வித்தியாசங்களையும் குறித்துக்கொள்கிறோம். இப்படி பல்வேறு வகை கவிதைகள் நம் வாசிப்புக்கு வந்து சேர்கிறது. பல்வேறு பாணிகள் உள்ளே வந்து சேர்கின்றன. இப்படி அனைத்து விதமான மாறுபாடுகளையும் அனுமதிக்கும் போக்கே கவிதைக்கான வரையறையை உருவாக்குகிறது. கவிதை மட்டுமல்லாமல் எல்லா இலக்கிய வடிவத்துக்கும் இந்நிலைதான்.

இவ்வாறு நல்ல கவிதைகளை வாசித்து அவை கொடுக்கும் அனுபவங்கள் வழி நவீன கவிதைகளை புரிந்து கொள்ள முயலும் போது மூன்று முக்கிய அம்சங்களைப் பட்டியலிட முடிகிறது. முதலாவது,  கவிதை சொல்ல முடியாமையை மொழியில் எட்ட முயல்கிறது. இரண்டாவது, வாசிக்கும் ஒவ்வொருவரின் வழியாகவும் புதிய பொருளை ஏற்படுத்த முயல்கிறது. மூன்றாவது அது எதையும் சொல்ல உருவானதல்ல; குறிப்புணர்த்தி வாசகனின் நுண்ணுணர்வின் வழி ஒளிரக்கூடியது.

வானம்பாடி கவிதைகளை ஒப்பிடும் போது இந்த மூன்று அம்சங்களும் அற்ற தன்மையுடன்தான் அக்கவிதைகள் உற்பத்தி செய்யப்பட்டன.

எழுத்தாளர் சங்க பட்டறைகளும் புதுக்கவிதைகளும்

நான் எழுத்தாளர் சங்கம் நடத்திய ஒரு சில பட்டறைகளில் கலந்துகொண்டிருந்தாலும் என் நேரடி அனுபவப் பகிர்வாக இல்லாமல் இந்தப் பட்டறைகள் குறித்த முழு பதிவுகளை உள்ளடக்கிய எழுத்தாளர் சங்கத்தின் ஐந்து நூல்களின் துணையுடன் அவற்றின் தரத்தை வரையறை செய்ய முயல்கிறேன்.

பெ. ராஜேந்திரன்

முதலாவது புதுக்கவிதை திறனாய்வு  கருத்தரங்கு 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவோடு தொடக்க விழா கண்டது. இந்தக் கருத்தரங்குக்கு அப்துல் ரகுமான், சிற்பி, தமிழன்பன் ஆகியோர் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து மார்ச் 2000இல் மோரிப்பில் நடந்த கருத்தரங்கு, ஜூன் 2000 இல் நடந்த லுமுட் கருத்தரங்கு, அக்டோபர் 2000இல் நடந்த தைப்பிங் கருத்தரங்கு, மார்ச் 2001இல் நடந்த மலாக்கா கருத்தரங்கு, மார்ச் 2002இல் நடந்த பெட்டாலிங் ஜெயா கருத்தரங்கு ஆகியவற்றை ஒட்டியத் தனித்தனி நூல்கள் முழு பதிவுகளோடு வெளிவந்துள்ளன. பொதுவாக எல்லா பட்டறைகளிலும் ஒரே விதமான உக்தி முறைகள் கடைபிடிக்கப்படுவதால் அதனை கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

அ. இந்த இருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒரு தலைப்பில் கவிதை எழுதுகிறார்கள். அந்தக் கவிதை பொதுவில் வைத்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆ. நாள், வார, மாத ஏடுகளில் மூன்று மாதங்கள் வந்த கவிதைகள் திறனாய்வாளர் ஒருவரால் வாசிக்கப்பட்டு சிறந்த கவிதைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இ. சில படங்கள் வழங்கப்பட்டு திடீர் கவிதைகள் எழுத பணிக்கப்பட்டுள்ளது.

ஈ. உவமை, உருவகம், படிமம், குறியீடு, முரண் போன்ற உத்திகளைக் கவிதையில் பயன்படுத்துவது குறித்து முனைவர் சபாபதி அவர்களால்  பாடம் நடத்தப்பட்டு, அந்த உத்திகள் அடிப்படையில் கவிதை எழுதப் பணிக்கப்பட்டுள்ளது.

உ. மலேசியக் கவிதையின் பாடுபொருளை ஒட்டிய பட்டிமன்றம் நடத்தப்பட்டுள்ளது.

எ. அறிவுமதி, பழனிபாரதி, சினேகன் போன்றவர்களால் கவிதை குறித்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

 மேற்கண்ட குறிப்புகள் அடிப்படையில், கவிதைகள் குறித்த புரிதல் உள்ள எவரும் உலக இலக்கியத்திலோ தமிழிலோ கவிதையின் போக்கில் நிகழ்ந்த மாறுதல் என எது குறித்தும் அறியாமல்தான் எழுத்தாளர் சங்கத்தின் பட்டறைகள் நடந்தன என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடலாம். இந்தப் பட்டறைகளின் வழி எழுத்தாளர் சங்கம் புதுக்கவிதைக்குச் செய்த பணியை பின்வருமாறு வகுக்கலாம்.

அ. கவிதையை கேளிக்கை பொருளாக்குதல்

ஆ.வானம்பாடிகள் பயன்படுத்திய உத்திமுறைகளை இறுக்கப்பற்றிக்கொள்ள இலக்கணங்களைப் பயிற்றுவித்தல்.

இ.தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களை பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துதல்.

சுமார் எட்டு முறை நடந்த எழுத்தாளர் சங்கத்தின் இந்த கேளிக்கை முயற்சிகள்தான் மலேசியப் புதுக்கவிதைக்கான மறுமலர்ச்சி காலமாகக் ஆய்வாளர் ராஜம் ராஜேந்திரன் அவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், செய்தியைச் சொல்லவும் கருத்தைத் தெரிவிக்கவும் செய்தி துணுக்குக்கு மாற்றான இன்னொரு வடிவமே கவிதை என்ற புரிதல் கொண்ட குழுவினால் ஒரு தலைமுறையின் கவிதைத்துறை வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதையே இந்த நூல்கள் சொல்கின்றன.

ஏன் இந்தப் பட்டறைகள் கவிதைக்கு முரணானது என்கிறேன். முதலில் கவிதை என்பது  ஒரு கவிஞரின் தனித்தன்மையின் வெளிப்பாடு. அவருடைய ஆழ்மனத்தின் மொழிவடிவம் எனலாம். அது படங்களைக் காட்டி உசுப்பி விட்டவுடன் எழுந்து வருவதில்லை. மனதின் அந்தரங்கத் தன்மையில் இருந்து ஊர்ந்து வருவதால் அது தனித்த மொழி மற்றும் படிமத்தைக் கொண்டிருக்கும். அந்தரங்க நிலை என்பது பொதுமையைத் திரும்பச் சொல்லுதல் அல்ல. ஏற்றுக்கொண்ட கருத்தை அழகுப்படுத்துதல் அல்ல. எனவே கவிதைகள் ஒருபோது தேய்வழக்குகளைக் கொண்டிருக்காது. ஆக, கவிதையைப் பயிற்றுவிக்க ஒரே வழி நல்ல கவிதைகளை வாசிப்பதும் அது குறித்து உரையாடுவதும்தான்.  அது எழுத்தாளர் சங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை என்பதற்கு நான் ஆய்வு செய்த ஐந்து நூல்களே சான்று.

பெ. ராஜேந்திரன் உழைப்பின் வெளிவந்துள்ள இந்த நூல்களைப் பலரும் பாராட்டுவதை நான் வாசித்துள்ளேன். உண்மையில் பாரட்டத்தான் வேண்டும். ஒரு காலக்கட்ட அபத்த முயற்சிக்கான சான்றுகளாக இந்நூல்கள் விளங்குகின்றன. உதாரணமாக, எம். ஏ. இளஞ்செல்வன் கௌரவ டாக்டர்களை சீண்டி ஒரு கவிதை எழுத பெ. ராஜேந்திரன் நாட்டுக்கு உழைத்த பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதை அவமதிப்பதாகச் சொன்னது முக்கிய எதிர்வினையாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான நகைச்சுவைகளைக் கொண்ட தொகுப்பு இது.

 மலேசியப் புதுக்கவிதைக்கு மறுமலர்ச்சி காலம்

மனுஷ்ய புத்திரன்

மலேசியப் புதுக்கவிதையின் போக்கில் மாற்றம் 2006இல் நிகழ்ந்தது. அகிலன் லெட்சுமணன் எழுதிய ‘மீட்பு’ கவிதை தொகுப்பும் அதை ஒட்டிய கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசிய வருகையுமே சமகால தமிழ்க் கவிதை போக்கை விரிவாக அறிமுகம் செய்தது. நாடு முழுவதும் செய்த பயணத்தில் மனுஷ்ய புத்திரன் ஆற்றிய உரைகள் கவிதையின் நுட்பத்தையும் அது கோரும் அந்தரங்கமான வாசிப்பையும் அதன் வழி ஏற்படும் பல்வேறு புரிதல்களையும் உணர்த்தியது. இந்த முன்னெடுப்பு ‘காதல்’ இதழ் வழி நகர்த்தப்பட்டது. வல்லினம் அதை தீவிரப்படுத்தியது. அநங்கம், மௌனம் போன்ற இதழ்கள் அதை தொடர்ந்து செயல்படுத்தின.

றுதியாக

வானம்பாடி ரக கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த பலரும் புதுக்கவிதை என்பது வேறு; நவீன கவிதை என்பது வேறு என அர்த்தம் புரிந்துகொண்டனர். தமிழ் இலக்கியத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என அறியாதவர்கள் “புதுசா நவீன கவிதைன்னு ஒன்னு வந்திருக்கு” என வியக்க ஆரம்பித்தனர். இந்த வியப்பைதான் புதுக்கவிதை ஆய்வு நூலுக்காக மாணிக்கவாசகம் விருது பெற்ற இராஜம் இராஜேந்திரனும் அடைந்தார் என்பது ஆச்சரியம். ஆகஸ்டு 2021இல் நடந்த புதுக்கவிதை நதிக்கரை எனும் நிகழ்ச்சியில் புதுக்கவிதையும் நவீன கவிதையும் வெவ்வேறு என அவர் வகுத்துச் சொன்னது நகைமுரண்.

பொதுவாக, மலேசியக் புதுக்கவிதைகளின் வளர்ச்சிக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் சீரிய பணிகள் ஆற்றியதாக கூறிக்கொள்கிறது. அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது கவிதை பட்டறைகளைத்தான். அந்த பட்டறைகளை மேற்கோளாக காட்டியே ஆய்வாளர் ராஜம் ராஜேந்திரனும் தனது நூலில் மலேசிய புதுக்கவிதைகளின் வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் அளப்பரிய பணிகளை ஆற்றியிருப்பதாக கூறுகின்றார். ஆனால் அந்த கவிதை பட்டறைகளின் உள்ளீட்டை ஆராயும் போது மிகப்பெரிய கவலை நம்மை சூழ்ந்து கொள்கிறது.  அவர்கள் உண்மையில் இந்நாட்டில் கவிதை வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய தடைக்கல்லாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுகின்றது. இராஜம் அவர்களின் முதுகலைப்பட்ட ஆய்வுக்கு எழுத்தாளர் சங்கத்தில் புதுக்கவிதை இலக்கணம் பயிற்றுவிக்கும் முனைவர் சபாபதி அவர்களே மேற்பார்வையாளர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. எனவே எழுத்தாளர் சங்கத்தின் பலவீனமான ஒரு முன்னெடுப்பை, கல்விச்சூழலில் ஆய்வு முடிவாக நிறுவும் பொருட்டு அமையப்பெற்றதாக இந்நூலை எடைபோட முடிகிறது.

கவிதை என்னும் நுண்ணுணர்வு கலைக்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகளால் அக்கலையின் வளர்சியை ஊணப்படுத்தியதை தங்கள் சாதனையாக மனம் கூசாமல் இவர்களால் சொல்லிக் கொள்ள முடிகிறது. கால்பந்து படத்தை வரையவும் அதற்கு வர்ணம் தீட்டவும் சொல்லிக் கொடுப்பதை காற்பந்து துறை வளர்ச்சிக்குச்  செய்யப்பட்ட அளப்பரிய முயற்சி என்று சொல்வதை விட அபத்தமானது இது.  

துணை நின்ற நூல்கள்:

கவிதை திறனாய்வு வரலாறு – சு. வேணுகோபால்

மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும் – இராஜம் இராஜேந்திரன்

கடலோரம் கருத்தரங்கு கவிதைகள் – மலேசிய எழுத்தாளர் சங்கம்

லுமுட் கடலோரக் கவிதைகள் – மலேசிய எழுத்தாளர் சங்கம்

தைப்பிங் மலையோரக் கவிதைகள் – மலேசிய எழுத்தாளர் சங்கம்

மலாக்கா கடலோர கவிதைகள் – மலேசிய எழுத்தாளர் சங்கம்

பெட்டாலிங் ஜெயா கருத்தரங்கு கவிதைகள் – மலேசிய எழுத்தாளர் சங்கம்

சிராங்கூன் டைம்ஸ் 75 சிறப்பிதழில் வந்த கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்

(Visited 203 times, 1 visits today)