சிகண்டி நாவலை வாசிக்கத் தொடங்கியபோது ம. நவீன் எழுதிய பல சிறுகதைகள் என் கண்முன் வந்தன. தொடர்ந்து அந்நாவலை வாசித்தபோது அறிந்த அக்கதைகள் வழி அறியாத வேறொரு அத்தியாயத்திற்குச் செல்வது போல் ஓர் உள்உணர்வு.
நாவலில் வரும் தீபன் பள்ளிப் பருவத்தில் ஏற்படும் அவமானங்களைத் தன் கண்ணீரால் பல தருணங்களில் கழுவுகிறான். இருப்பினும், ஆழ் மனதில் புதைந்த அச்சம்பவங்கள் மீண்டும் மீண்டும் எட்டிப் பார்த்து, அவனைத் துரத்திக் கொண்டே வருகிறது. தமிழில் சிறப்பு தேர்ச்சி பெறும் ஒரு மாணவனின் மறுபக்கத்தில் ஏழ்மையே கல்விக்குப் பெரும் தடைகளாக இருக்கிறது. பள்ளியில் சக நண்பர்களின் கேலி நகையாடல் இம்சை செய்கிறது. அதிலிருந்து அவன் தப்பிக்க வழியின்றி தவிக்கிறான். தனபாலனின் நட்பு அவனது அவமானங்களை உளவியல் ரீதியாகத் துடைக்கிறது. அது தற்காலிக வடிகால். தன்னைப் பெரியவனாக்கி தனக்கு நேரும் சிறுமைகளில் இருந்து தப்ப இருக்கும் ஒரே வடிகால். அதன் சாத்தியங்களை தந்தையின் கன்னங்களின் தீர்த்துக் கொள்கிறான். அங்கிருந்து தன் மாமாவின் வீட்டில் தஞ்சம் புகும் தீபனின் வாழ்க்கையை பல கோணங்களில் விரித்துக் காட்டுகிறார் எழுத்தாளர்.
பெருநகரில் நுழையும் அவனுள் இருக்கும் சிறுவனும் வெளிவரத்துடிக்கும் இளைஞனும் முயங்கியும் முரண்பட்டும் வெடிக்கும் இடங்கள்தான் சிகண்டி நாவல்.
தன்னை இளைஞனாக உருமாற்ற முட்கள் நிறைந்த பாதையில் பயணிக்கிறான் தீபன். வளர்ந்த ஆணாக மாற முதலில் அவனுக்குப் பொருள்கள் முக்கியமாக உள்ளன. பின்னர் பொருள்களைக் காட்டிலும் செயல்களே தன்னை ஆணாக்கும் என நம்புகிறான். இரண்டுக்கும் தேவையானவள் சரா. அவள் திருநங்கை என்று அறியாத தீபனுக்கு அவள் மீதிருந்த காதல் கசப்பை உருவாக்குகிறது.
நாவலில் சராவின் வருகை அனைத்தும் ஒளி மிக்கது. தனது பெண் தன்மையை பல தருணங்களில் நிரூபிக்கிறாள். அதன் உச்சமாக அவளது பேரன்பை நாவலின் இறுதியில் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
ஈபுவின் வரவு நாவலை அதிர வைக்கிறது. சிகண்டியாக ஆக்ரோஷத்துடன் ‘வைட் கொப்ரா’ மற்றும் சக ஊழியர்களை அழிக்கும் காட்சியை ‘பேய்ச்சி’ நாவலில் ஓலம்மாவின் வருகையை நினைவுப்படுத்துகிறார் எழுத்தாளர். ஈபு தாய்மை குணம் நிறைந்தவளாக இருந்தாலும் அநியாயத்தை எதிர்ப்பவள். ஆனால் அநீதியாக பணம் சம்பாதித்தே தன்னை நாடி வரும் திருநங்கைகளுக்குக் கைக்கொடுக்கிறாள். சிகண்டி, சரா, நிஷாம்மா என சில திருநங்கைகள் வழி திருநங்கைகளின் துயரங்களையும் சமுதாயத்தில் அவர்களின் ஒதுக்கப்பட்டு வாழ்க்கையில் நேரிடும் அவலங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
நாவலில் ‘க்காவா’ இச்சொல் ஒவ்வொரு முறையும் என்னை பின் தொடர்ந்து வருகிறது. அது அவன் அஞ்சி நடுங்கும் சொல். தனபாலனின் தங்கையின் உலரலாக வெளிபடும் சொல். அவன் தன்னுள் அச்சத்தைக் காணும் இடமெல்லாம் அச்சொல் ஒலிக்கிறது. பூனை தன் இறப்பின் கடைசி ஒலியாக, காசியுடன் குரங்கு மண்டை உடைக்கும் ஒலியாக அது தொடர்கிறது. அவன் தன் அச்சத்தைக் காணும் இடமெல்லாம் மேலும் மூர்க்கமாகிறான். வால் அறுபட்ட பல்லியிருந்து வெளிபடும் ஒலியாக அவ்வொலி தன்னை முடித்துக்கொள்கிறது. இனி அவனுக்கு அச்சமில்லை.
எழுத்தாளர் கதையின் வாயிலாக இரு நில தளங்களையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். தோட்டம் மற்றும் நகர காட்சிகளைக் கதா மாந்தர்களுக்கு ஏற்ற உரையாடல்களையும், வசிப்பிடத்தையும் வாழும் வாழ்க்கையையும் இடத்திற்கு ஏற்ப நாவலில் விவரித்துள்ளார். நாவலில் தோட்டத்தில் மற்றும் நகரத்தில் வாழும் மக்களுக்கு உகந்த மொழியைக் கையாண்டிருக்கிறார். நகரம் மற்றும் தோட்ட மக்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாடலை சம்பவங்களின் மூலம் அறிய முடிகிறது. எழுத்தாளர் அவ்விடத்தில் பயன்படுத்தும் சொற்கள் காலத்திற்கு ஏற்ப கையாண்டிருக்கிறார். இருமொழியையும் கலந்து தீபனும் காசியும் உரையாடும் முறை, கோவத்தில் தெரிக்கும் வசைகள், வசனங்கள் கதா மாந்தர்களை உணர்வோடு இணைகிறார் எழுத்தாளர்.
இவ்வாராக நாவலை நகர்த்தி செல்லும் எழுத்தாளர் தீபனின் கதை களம் நகர்த்தி செல்லும் போது பல அத்தியாயங்களுக்குப் பிறகு திடீரென சிகண்டியின் கதையைச் சேர்க்கிறார். இந்தத் திடீர் வரவு நாவலை வாசிப்போருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். காட்டிகளை உள்வாங்க கால அவகாசத்தைக் கோரலாம்.
தீபன் ஒவ்வொரு முறையும் இருளிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தன் அன்னையின் அன்பை வேண்டுகிறான். வாழ்ந்த இடத்தில் உள்ள ஆற்றில் மூழ்கி எழுந்தல் மட்டுமே தன் அழுக்கை போக்க சாத்தியம் என கருதுகிறான். தன் தாயின் மடியில் விழுந்து செய்த தீங்குகளைத் தூய்மைபடுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் ஈபுவின் ஆட்களிடம் மட்டிக்கொள்ளும்போது கண்ணாடி துகல்களாக நொருங்கி விடுகிறது. இறுதியில் தன் மாமாவின் குடும்பத்திற்கு நன்மை செய்த மனத் திருப்தி அடைகிறான். அதற்கெல்லாம் வேறொரு காலக்கணக்கு நாவலின் கனவு காட்சியில் சொல்லப்படுகிறது. அந்தக் கணக்கு தீர்ந்ததும் தன் அன்னையின் ஏக்கத்திலிருந்து விடுபட்டு அன்னை பகுச்சராவின் பேரன்பில் திழைக்க தயாராகிறான்.