இன்றும் நம்மிடையே பேசப்படாத அல்லது தவிர்க்கப்படும் திருநங்கைகளைக் கதைமாந்தராகக் கொண்டிருக்கும் சிகண்டி, இருளுக்குள் அடைபட்டு வாழும் அவர்களின் அவலங்களையும் அவஸ்தைகளயும் பேசுகிறது. இவ்வளவு விரிவாக இந்த வாழ்க்கை வேறெந்த மலேசிய தமிழ் நாவலிலும் பதிவாகயிருக்கின்றதாவென்று தெரியவில்லை.
மார்டின் தோட்ட மதுரை வீரன் கோவில் சுவரில் வடிவங்கொள்ளும் பகுச்சரா மாதா சௌளவாட்டில் நிலைபெறுவதும் திருநங்கைகளின் பேரன்னையாக ஈபு உருவெடுப்பதும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கின்றது. ‘பொட்டச்சியா வாழுறதுன்னா சாதாரணமுன்னு நெனைச்சியா? அதெல்லாம் ஒரு தவம்’ எனும் வரிகள் அவர்களின் வாதையையும் வைராக்கியத்தையும் காட்டுகின்றது. இதனூடே மியோ ஷானின் கண்ணீரும் குவான் யின்னின் கருணையும் அன்பொளியைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றன.
தன்னைப் பெண்ணாக ஏற்பதை மட்டுமே விழையும் சரா உடைந்தவற்றை ஒட்டிச் சேர்ப்பவள்தான். இவள் உடையும் தருணமெல்லாம் நம்மையும் உடையச் செய்துவிடுபவளாகவே இருக்கிறாள். சரா தனித்துவத்துடன் மிளிரும் பாத்திரப்படைப்பு. இசையும் நடனமுமாக காற்றிலாடும் சரா எனும் அப்ஸரா நம் நினைவிலாடிக் கொண்டேயிருப்பாள்.
ஏக்கங்களும் கோபதாபங்களும் பதின்மவயது தீபனை பெருநகரை நோக்கி நகர்த்துகிறது. அவன் சென்ற சௌளவாட்டின் பாதை, இருட்டுச் சந்தை, குண்டர் கும்பல், போதையுலகம், விபச்சாரமென எல்லா சட்டவிரோத நடவடிக்கைகளுடனும் அவன் வாழ்க்கையை முடிச்சுப்போடுகின்றது. தீபன் கண்ட பலரை நாம் நம் வாழ்வில் ஒரு போதும் காணவிரும்புவதில்லை. அவர்களும் வாழத்தானே இத்தனை போராட்டங்களையும் எதிர்கொள்கிறார்கள்.
அவன் வயதுக்கு மீறிய பலவற்றைக் கடந்து சென்று கொண்டேயிருக்கிறான். தீபனின் பார்வையில் விரியும் அவ்வுலகம் மிகுந்த உக்கிரத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. தீபனின் காதில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ‘க்காவா’ எனும் சொல்லும் குமட்டும் மல நாற்றமும் அடிவயிற்றில் கண்ணில்லாத பல்லியும் அவனைத் துரத்திக்கொண்டும் துன்புறுத்திக்கொண்டுமேயிருக்கிறது.
இவற்றிலிருந்தெல்லாம்விடுபட்டு லூனாஸ் ஆற்றில் விழுந்து கரைந்து தன் தாயின் மடியில் புதைந்து போக விரும்பும் தீபன் நம்மையும் கலங்கச் செய்பவன். அம்மா, சரா, ஈபு, பகுச்சரா மாதா, குவான் யின் அனைவருமே அவனை மன்னிக்கக்கூடும். மன்னிப்பதற்காக படைக்கப்பட்டவள்தானே அம்மா. இழை இழையாகப் பின்னி பிசிறில்லாத அழகிய நாவல் இருக்கிறது சிகண்டி.