மனிதச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படிநிலை மனிதன் உலகை இருமைகளாக புரிந்துகொள்ளத் தொடங்கியதே என்று நினைக்கிறேன். நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் மிக நிச்சயமாக எந்த மனிதனையும் அச்சுறுத்தக்கூடியதே. அந்த பிரம்மாண்டத்தை ஏதோ ஒரு வகையில் தன் எல்லைகளுக்குள் சுருக்கி மட்டுமே மனிதனால் புரிந்துகொள்ள முடியும். அப்படிச் சுருக்கமுடியாமல் போனால் அந்த பிரம்மாண்டத்தைப் பற்றிய பிரஞையே நம் சிந்தையை அழித்துவிடும். அந்த நிலைக்கு நாம் சூட்டும் பெயர் ஞானமா, மனப்பிறழ்வா என்பது நம் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அது நம் உலகியல் வாழ்வுக்கு ஏற்ற நிலை அல்ல என்பதை மட்டும் நிச்சயமாக கூறமுடியும். இப்படியான பிரம்மாண்டத்தை மனிதனின் எல்லைகளுக்குள் சுருக்கும் மிகச் சிறந்த கருவியாக இருமைகள் இருக்கின்றன. இருளென்றும் ஒளியென்றும் தனியே அறிந்தவற்றை இருமைகளாக தொகுப்பதன் வழியே மனிதர்கள் தங்கள் சிந்தனையின் புதிய சாத்தியங்களை கண்டடைந்தனர். அந்த இருமை விளையாட்டிலிருந்தே இறைவனும் சாத்தானும், நன்மையையும் தீமையும், ஆணும் பெண்ணும், தானும் பிறரும், தோன்றினர். மனிதச் சிந்தனையின் அடிப்படையாக அமைந்த இந்த இருமை தர்க்கத்தின் காரணமாகவே நாம் இருமைகளின் கட்டுக்குள் வராதவற்றை அஞ்சுகிறோம்.
இப்படி உருவாகி வந்த இருமைச் சிந்தனைக்கு எதிராக பிரபஞ்சத்தை அதன் பன்முகத்தன்மையைக்கொண்டு அறிய முற்படும் சிந்தனைகளும் உலகெங்கிலும் உருவாகி வந்திருக்கின்றன. இந்த பிரபஞ்சத்தை நாம் சுருக்க முயற்சித்தாலும், பிரபஞ்சம் நம் எல்லைகளுக்கு அப்பால் தனது இருப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறது என்ற புரிதலே இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட சிந்தனைகளின் அடிப்படையாக அமைந்தது. இந்த மனிதச் சிந்தனையால் கட்டமைக்கப்பட்ட இருமைக்கும் அதற்கு அப்பால் விரியும் பிரபஞ்சத்தின் நுட்பமான பன்முகத்தன்மைக்குமான உரையாடலே சென்ற நூற்றாண்டில் அனைத்து அறிவுத் துறைகளிலும் நிகழ்ந்தது. அந்த உரையாடலின் முடிவாகவே இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கருதுகோளாக பன்முகத்தன்மை உருவெடுத்திருக்கிறது. அத்தகைய பன்முகத்தன்மையை பல்வேறு தளங்களில் கொண்டு மலேசியாவின் நிழல் உலகங்களையும் அங்கு வாழும் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கையையும் சித்தரிக்கும் நாவலாக எழுதப்பட்டிருக்கிறது ம. நவீனின் ‘சிகண்டி’.
நாவலின் கதைசொல்லியான தீபன் தன் பொருளியல் தேவைகளுக்காக தன் கம்பத்தை நீங்கி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு வருகிறான். அப்பெருநகரின் நிழல் உலகமான சௌவாட்டில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களாகவே நாவல் விரிகிறது.
தீபனின் சித்தரிப்புகளில் வெளிப்படும் சௌவாட்டின் பரபரப்பு அவனது பதின் வயதிற்கு உரியதா அல்லது சௌவாட்டிற்கே உரியதா என்று பிரித்தறிய முடியாதபடி நாவல் முழுவதும் சௌவாட் இயங்கிக்கொண்டிருக்கிறது. பின்னிரவில் முதல் முறையாக தீபன் காணும் சௌவாட்டின் நிழல் உலகம் நாவல் முழுவதும் மேலும் இருண்ட தளங்களை நோக்கி சென்றுகொண்டே இருக்கிறது. அதன் பொருளியல் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தீபன் அதன் ஆழங்களுக்குள் தன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறான். பதின் வயதுகளில் ஏற்படும் காமம் சார்ந்த வேட்கையும் உலகியல் வெற்றி சார்ந்த வேட்கையுமே அவனை இயக்குகின்றன. அதனால் உந்தப்பட்டே தீபன் தன் அகத்தின் ஆழங்களையும் சௌவாட்டின் ஆழங்களையும் ஒருசேரக் காண்கிறான். கனவுகளுக்கும் விழிப்பு நிலைக்கும் இடையில் ஊசலாடுகிறான். அந்த வேட்கைகள் அவனது ஆண்மை சார்ந்த கர்வமாகவும் வன்முறையாகவுமே வெளிப்படுகின்றன. அதன் காரணமாகவே அவனது மாமாவும், சராவும் அவனை அருவெறுப்படையச் செய்கிறார்கள். அவர்களை சிறுமை செய்வதன்மூலம் அவன் தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறான். அவனது வேட்கைகள் பயனற்றுப்போகும் ஒரு சிக்கலை சந்திக்கையில் அவற்றை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருளின் அடியாழங்களுக்குள் தீபன் பயணப்படுகிறான். ஒரு கட்டத்தில் அந்த ஆழத்தின் அழுத்தம் தாளாமல் தத்தளித்து மீட்சிக்காக ஏங்குகிறான். தன் வேட்கைகளின் மீதான பெருமிதத்தாலேயே இயக்கப்படும் தீபன் கடைசியில் தன் மீட்சிக்கான வழியாகத் தன் தாயையே காண்கிறான். அவளிடம் சரணடைந்தால் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் மீட்சி கிடைத்துவிடும் என்று நம்புகிறான். தனக்குள் இருக்கும் குழந்தைமையை மறைக்கப் போராடும் பதின் வயது ஆணாகவே தீபன் அங்கு வெளிப்படுகிறான். நாவலில் தன் தாயிடம் சரண்புகத் தத்தளிக்கும் தீபன் அனைத்திலும் தாய்மையென நிறையும் அன்னையைக் கண்டு நிறையும் பகுதி மகத்தானது.
உலகெங்கிலும் உருவாகும் பெருநகரங்கள் அவற்றுக்கு இணையான நிழல் பகுதிகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. பெருநகர உருவாக்கத்தில் இடம்பெயரும் அந்நிலங்களின் மக்களாலும், பெருநகரத்தின் வளர்ச்சியால் வெளித்தள்ளப்படும் விளிம்புநிலை மனிதர்களாலுமே இத்தகைய நிழல் நகரங்கள் நிறைந்திருக்கின்றன. அவர்கள் அந்த பெருநகரத்தின் வன்முறைக்கு எதிராக கையிலெடுக்கும் எதிர்வினையாகவே அவர்களது நிழலுலகம் உருப்பெறுகிறது. நாவலின் மையக் கதாபாத்திரமான ஈபுவின் கதையின் வழியே நாம் காணும் சௌவாட்டின் உருமாற்றமும் அதன் விளைவாக ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களும் ஒரு பெரும் சமூகச் சித்திரத்தை உருவாக்குகின்றன. அவ்வாறு சௌவாட் மலேசியாவின் நிழல் உலகின் கதைக்களமாக மட்டுமின்றி உலகெங்கிலும் வளர்ந்துவரும் பெருநகரக் கலாச்சாரத்தின் மறுமுகமாகவும் வெளிப்படுகிறது. அத்தகைய உலகில் அரசாட்சி புரியும் மூதன்னையாகவே ஈபு சித்தரிக்கப்படுகிறாள். சௌவாட்டின் இரு வேறு காலகட்டங்களின் வழியே பயணிக்கும் நாவலில், அவ்விரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் பாலமாக அமைகிறாள் ஈபு. தீபனின் கனவுகளுக்கும் நிஜத்துக்கும் இடையில் சஞ்சரிப்பவள் அவள். இந்தியாவிலிருந்து புலம்பெயரும் பண்ணைத் தொழிலாளர்களின் குடும்பத்தில் வளரும் சிகண்டியாக சௌவாட்டில் நுழைந்து சௌவாட்டின் மாற்றத்தில் அவள் ஈபுவாக உருமாறுகிறாள். பெருங்கருணையும் பெருங்குரோதமும் ஒன்றென உருவாகி வருகிறாள். நாவலில் எவராலும் புரிந்துகொள்ள முடியாத உயரத்திலேயே இருக்கிறாள். அவளது சொற்களும் செயல்களும் பிறர் உணரா ஆழங்களைக் கொண்டிருக்கின்றன. நாவல் முழுவதும் அவள் வழிபாட்டுணர்வோடும் மர்மத்தோடுமே சித்தரிக்கப்படுகிறாள். ஈபுவின் கதாபாத்திரம் நாவலில் வாசகர்கள் நெருங்கி அறியமுடியாத உயரத்திலேயே வைக்கப்படுகிறது. அவள் வழியே நாம் மூன்றாம் பாலினத்தவர்களின் உளநிலைகளில் வெளிப்படும் எதிர்மறை உச்சநிலைகளை கண்டடைகிறோம். அவர்கள் மீதான வன்முறைகளையும் அதற்கு எதிரான அவர்களது எதிர்வினைகளையும் காண்கிறோம். சௌவாட்டின் எதிர்மறைத் தன்மையின் உச்சபட்ச வெளிப்பாடாகவே ஈபு வெளிப்படுகிறாள். ஆனால் அவளே மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மூதன்னையாக விளங்குகிறாள். அனைவராலும் அஞ்சப்படும் அதே நிலையில் அனைவராலும் வணங்கவும்படுகிறாள். ஈபு மட்டுமின்றி தீபனும், சராவும், நிஷாம்மாவும், சாவும், காசியும், மையப் பெருநகரத்தால் புறந்தள்ளப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
ஈபுவும் தீபனும் சௌவாட்டின் எதிர்மறைத் தன்மையை பிரதிபலிக்கையில் சௌவாட்டின் நேர்மறைத்தன்மையின் பிரதிநிதிகளாக சராவும் நிஷாம்மாவும் முன்வைக்கப்படுகிறார்கள். தன் கலையின் வழியே தன் பெண்மையின் உச்சத்தை அடைய முயலும் சராவும், தன் பெண்மையின் முழுமையை ஏற்றுக்கொள்ளும் ஆணுக்காக ஏங்கும் நிஷாம்மாவும் நாவலில் நேர்மறைத் தன்மையோடு வெளிப்படுகிறார்கள். அவர்களது தத்தளிப்புகளும் செயல்களும் நேர்மறைத் தன்மையையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. சரா தன் கலையின் வழியே தன்னை ஒரு அப்சரசாக பெண்மையின் உச்சத்தில் நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறாள். தன் கலையின் வழியே தனக்கான முழுமையை அடைய முயல்கிறாள். தன் காதலின் வழியே தீபனின் உள்ளிருக்கும் கசப்பை வென்றுவிட முடியும் என்று நம்புகிறாள். காதலிலும் கலையிலும் நிறைவை நாடும் சரா தாய்மையின் பெருங்கருணையில் தனக்கான நிறைவை கண்டடைகிறாள்.
தாய்மையின் சுவையை உணர்ந்தும் தன் பெண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஆணுக்காக ஏங்கும் நிஷாம்மாவோ நாவலின் முடிவில் அந்த ஏக்கத்தின் பொருளின்மையையும் தனக்கான முழுமையை அளிக்கும் தாய்மையையும் கண்டடைகிறாள். தீபன் தன் வாழ்வின் லட்சியமாகக் காணும் ஆண்மையை நிஷாம்மா ஒரு நோயாகக் காணும் சித்திரம் அபாரமானது. நேர்மறைத் தன்மையின் பிரதிநிதிகளாக சித்தரிக்கப்படுகையிலும் நாவலில் இவர்களின் எதிர்மறைத் தன்மையும் வெளிப்படுகிறது. சரா தீபனை முழுமையாக ஆட்கொள்ளவும், தன் பெண்மையை ஆராதிப்பவனாக மாற்றவும் முயல்கிறாள். நிஷாம்மாவோ தன் நேர்மறைப் பண்புகளை மீறியும் ஈபுவின் நிழல் உலகச் செயல்பாடுகளின் உற்ற துணையாகிறாள்.
இந்த நூற்றாண்டில் இருமையின் வரையறைகள் மிகத் தீவிரமாக தகர்க்கப்படுவது பாலினம் சார்ந்த சிந்தனைகளிலேயே. சென்ற நூற்றாண்டு வரை ஆண் பெண் என்ற இரு வரையறைகளால் மட்டுமே வகுக்கப்பட்ட பாலினம் சார்ந்த சிந்தனைகள் இந்த நூற்றாண்டில் பல்வேறு தளங்களை எட்டியிருக்கின்றன. உடல் சார்ந்த வரையறைகளால் மட்டுமே வகுக்கப்பட்ட பாலின எல்லைகள் இந்த நூற்றாண்டில் மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த வரையறைகளையும் கருத்தில்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் சமூகத்தில் அத்தனை எளிதாக பிரதிபலிப்பதில்லை. இன்றும் மூன்றாம் பாலினத்தவரின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும், பாகுபாடுகளும் அவர்களை சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களாகவே வைத்திருக்கின்றன. நாவலின் கதைமாந்தர்களாக வரும் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வு எவ்விதமான பரிதாபமோ விளக்கமோ இன்றி மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வும், கொண்டாட்டங்களும், துயரங்களும், சிக்கல்களும், உணர்வுகளும் மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மூதன்னையாக எழும் ஈபு, தேவகன்னிகையாகும் சரா, தன்னை முழுவதுமாக பெண்ணாக ஏற்றுக்கொள்ளும் ஆணை தேடும் நிஷாம்மா போன்ற கதாபாத்திரங்களின் வழியே அவர்களது வாழ்வு பல்வேறு தளங்களில் சித்தரிக்கப்படுகிறது. மலேசியாவின் நிழல் உலகில் செயல்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் சார்ந்த சித்தரிப்புகள் அவ்வுலகிற்கான நியாயத்தோடும் கண்ணியத்தோடும் சித்தரிக்கப்படுகின்றன. நிழல் உலகை நோக்கிய அவர்களது வருகையும் அங்கு அவர்களது வாழ்வும் சித்தரிக்கப்படும் அதே வேளையில் அவர்களுக்கான கொண்டாட்டங்களும் உணர்வுகளும் மிக இயல்பாக சித்தரிக்கப்படுகின்றன. இருள் படர்ந்த சௌவாட்டின் வாழ்க்கையை களமாகக் கொண்ட போதிலும் மின்மினிப்பூச்சித் தருணங்கள் நாவலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பஹுச்சாரா அம்மன் திருவிழாவில் தீபன் அன்று வரை சௌவாட்டில் பார்த்த மூன்றாம் பாலினத்தவர்களை அவர்களது வழக்கமான பாவனைகள் எதுவும் இன்றி முழுப் பெண்களாகக் காணும் தருணம் நாவலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிகச் சிறந்த சித்தரிப்பாக வெளிப்படுகிறது.
நாவலின் பன்முகத்தன்மை மிகத் தெளிவாக வெளிப்படும் தளமாக பல்வேறு பண்பாடுகள் சார்ந்த சித்தரிப்புகள் அமைந்திருக்கின்றன. மலேசிய நிழலுலகச் சூழலை நுட்பமாகச் சித்தரிக்கும் நாவலில் எந்த இனம் சார்ந்த பெருமிதமோ காழ்ப்போ வெளிப்படுவதில்லை. மலேசியாவின் பன்முகத்தன்மைகொண்ட சமூக அமைப்பும் அதன் பொருளியல் பின்னணிகளும் நாவலில் தன்னியல்பில் வெளிப்படுகின்றன. பெரும்பாலான பொருளியல் அமைப்புகளை கைக்கொண்டிருக்கும் சீனர்களின் சித்தரிப்புகளும், மலாய், தாய்லாந்து மக்கள் சார்ந்த சித்தரிப்புகளும், தமிழ் மக்களின் சித்தரிப்புகளுக்கு நிகராகவே நாவலில் முன்வைக்கப்படுகிறது. நிழல் உலகத்தை களமாகக்கொண்ட நாவலில் இத்தகைய சமமான சித்தரிப்புகள் பிரமிக்கவைக்கின்றன. வெவ்வேறு இனக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களும் முரண்பாடுகளும் எவ்வித இனச்சார்பும் அற்ற சித்தரிப்புகளாகவே முன்வைக்கப்படுகின்றன. தென்னிந்திய நாட்டார் தெய்வங்கள் சார்ந்த வழிபாடுகள், சீன, தாய்லாந்து, தெய்வங்கள், வழிபாடுகள், கொண்டாட்டங்கள் போன்ற அனைத்தும் வெறும் சித்தரிப்புகளாக மட்டுமின்றி மிக நுட்பமான படிமங்களாகவும் முன்வைக்கப்படுகின்றன. பஹுச்சாரா மாதாவுக்கு நிகராகவே சீனத்தின் குவான் யின்னும் முன்வைக்கப்படுகிறாள். நாவலின் யதார்த்த தளங்களையும் கனவுத் தளங்களையும் இணைக்கும் படிமங்களாக இருவரும் இருக்கிறார்கள். ஈபு இவர்கள் இருவருக்குமான சமமான மனித உருவாகவே நாவலில் சித்தரிக்கப்படுகிறாள். நாவலின் யதார்த்தத்துக்கும் கனவுகளுக்கும் இடையிலான சித்தரிப்புகளில் கையாளப்படும் தெய்வங்கள் அல்லாத படிமங்களும் பன்முகத்தன்மையோடே சித்தரிக்கப்படுகின்றன. நீலவேனுவும், பல்லியும், பூனையும் முக்கியமான படிமங்களாகின்றன. ரோஜா செடிகளும், கைப்பேசிகளும், உடைந்த ஹெல்மெட்டுகளும், சைக்கிளும், கதாபாத்திரங்களின் நுட்பமான சித்தரிப்புகளாகின்றன.
இருமைகளின் வழியே உலகை அறிய முற்படுவது மனிதச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சியில் இன்றியமையாத பங்காற்றியிருந்தாலும் அத்தகைய இருமைச் சிந்தனைகள் உலகத்தைப் பற்றிய எளிமையான பிழைப் புரிதல்களை உருவாக்கக்கூடும். ஒளியென்றும் இருளென்றுமான இருமைகளுக்கிடையிலான சலனங்களிலும் ஊடாட்டங்களிலுமே உலகம் காட்சியாகிறது. ஆனால் அந்த இடைப்பட்ட வெளியின் பன்முகத்தன்மையே நிறங்களாகின்றன. இருமைகளை மட்டுமே காண்பது ஒரு விதமான நிறக்குருட்டுத் தன்மையாகவே கருதப்படும். மூன்றாம் பாலினத்தவர்களின், விளிம்புநிலை மனிதர்களின், பிற பண்பாடுகளின் வாழ்க்கையைப் பற்றிய அறியாமையும் ஒரு வகையான சிந்தனை நிறக்குருட்டுத் தன்மையால் நிகழ்வதே. இலக்கியம் மானுடத்துக்கான விழுமியங்களையும் அறச்சிக்கல்களையும் முன்வைக்கும் அதே நேரத்தில் அது சமூகங்களின் அடையாளங்களையும் நுட்பமாக முன்வைக்க வேண்டிய கடமையுடையது என்றே நினைக்கிறேன். அவ்வகையில் தமிழில் மிகக் குறைவாகவே எழுதப்பட்ட மூன்றாம் பாலினத்தின் வாழ்க்கையை இது வரை எழுதப்படாத மலேசிய நிழலுலகக் கதைக்களத்தில் மிக நுட்பமாகவும் பன்முகத்தன்மையோடும் உடலுக்கும் பாலினத்துக்குமான உறவு சார்ந்த தீவிரமான கேள்விகளை முன்வைத்தும் எழுதப்பட்ட ம. நவீனின் ‘சிகண்டி’ தமிழின் முக்கியமான இலக்கியப் படைப்பாக முன்வைக்கப்படக் கூடியது என்றே கருதுகிறேன்.