தேன் துளிகளை கானகம் அறிவதில்லை

வாசிப்பில் நான் தாண்டி வந்த படிநிலைகள் குறித்து சில இடங்களில் பேசியும் எழுதியும் உள்ளேன். நவீன இலக்கியத்தில் இயங்கத் தொடங்கிய காலத்தில், வாசித்த நூல்களின் எண்ணிக்கையே நல்ல வாசகனுக்கான அடையாளம் என்ற நம்பிக்கை இருந்தது. சுந்தர ராமசாமி, ஜானகிராமன், நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன் என அடுத்தடுத்து இடைவிடாது வாசித்துத் தள்ளினேன். வாசித்த நூல்களின் எண்ணிக்கையையும் அதன் ஆசிரியர் பெயர்களையும் ஒரு ‘மெடல்’ போல சுமந்து திரிவதில் சொல்லண்ணா பெருமை. ஆனால் 2006இல் ஜெயமோகனைச் சந்தித்தபிறகு அந்த பெருமையெல்லாம் பொலபொலவென சரிந்து விழுந்தன.

வாசித்த எதையும் தொகுத்துச்சொல்லும் திறனற்று திணறுவதை நான் அறிந்தது அப்போதுதான். நூல்களின் பெயரை மட்டும் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தேன். நாவல்களின் பெருவாழ்வு, ஒற்றை வரி தகவலாகவே எஞ்சி நின்றன. சிறுகதைகளின் கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். அதைச் சொல்ல மட்டுமே, அவர்கள் அத்தனைப் பக்கங்கள் எழுதியிருக்க மாட்டார்கள் என்ற உண்மை வதைத்தது. வாசிப்பு என்பது சொற்களை விரைவாக உச்சரித்து கடப்பதல்ல; சொற்களுக்கு இடையில் உள்ள வெளிகளுக்குள் நம்மை இட்டு நிரப்புவது எனத் தாமதமாகவே புரிந்துகொண்டேன்.

ஒரு படைப்பை வாசிக்க எவ்வளவு கவனம் தேவை, ஒரு நூலின் முன் வாசகன் எவ்வாறு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும், வாசிப்பு நமக்குள் எவ்வகையான மாற்றங்களை உருவாக்கும், வாசிப்புக்கு முன்பான மனத்தயாரிப்புகள் என்ன என்று நான் அறிந்துகொண்டது ஜெயமோகன் வழிதான். அதுவரை போட்ட கோடுகள் அனைத்தையும் அழித்துவிட்டு முதலில் இருந்து வாசிக்கத் தொடங்கினேன்.

அப்போதுதான் ஒன்றைக் கண்டுப்பிடித்தேன்.

ஓர் எழுத்தாளர் தான் உணர்ந்த, அறிந்த வாழ்வை புனைவாக எழுதுகிறார். அதில் சில வாழ்க்கை நமக்கு அறிமுகமானதாக இருக்கும் பட்சத்தில் அதை வாசித்து முடிந்தபிறகு எளிதாக நினைவில் இருந்து துல்லியமாக மீட்கிறோம். அறிமுகமில்லாத புதிய வாழ்கை சில வரிகளாக நினைவில் எஞ்சுகிறது. ஒரு புனைவை வாசித்தபிறகு அது குறித்து பிறரிடம் உரையாடுவதும் விவாதிப்பதும் அந்தப் புனைவில் நம் கண்டடைவை முன்வைப்பதுமே அப்பிரதியை நமக்கே நமக்கான தனி உறவை ஏற்படுத்துகிறது. அதற்குப்பின்னர் ஒரு புனைவு அந்த எழுத்தாளருடையது அல்ல; வாசகனது.  இந்த உணர்வை நான் அடைந்ததுமுதல் முக்கியமான நூல்கள் குறித்த விரிவான கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். எழுதும்போது மனதினுள் நிகழும் தர்க்கம் வழியாக இன்னும் இன்னும் அதன் ஆழம் செல்ல முடிந்தது. ‘வாசிப்பு’ என்பதை நான் அறிந்துகொண்டது அதன் பிறகுதான்.

ரெ.விஜயலெட்சுமி இந்த இடத்தை தன்னியல்பாக வந்து அடைந்துள்ள விதம் ஆச்சரியமானது; இதன் வழி அவர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு அளித்துவரும் பங்களிப்பு கவனப்படுத்தத்தக்கது.

நவீன மனிதன் என்பவன் சமகாலத்தில் உள்ள அத்தனை சாதனங்களை தான் எடுத்துக்கொண்ட பணிக்கு சாதகமான முறையில் உபயோகிப்பவன்தான். வாசிப்பை தனது ஆன்மாவுடன் இணைத்திருக்கும் விஜயலெட்சுமி தான் எடுத்துக்கொண்ட பணியை யூடியூப்பில் தொடங்கி இன்று அச்சு ஊடகம் வரை வளர்த்து எடுத்திருக்கிறார்.

‘வாசிப்பின் வாசல்’ எனும் தலைப்பில் விஜயலெட்சுமி பேசிய பெரும்பாலான காணொலிகளை நான் செவிமடுத்துள்ளேன். (என் வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லும் இடத்திற்கு ஒருமணி பயண இடைவெளியில் கேட்கதான் முடியும்.)

ரெ. விஜயலெட்சுமி

மூன்று அடிப்படைகளில் அவர் மேற்கொள்ளும் இப்பணி முக்கியமானது.

முதலில் வாசித்து வாசித்து அடைந்த ரசனையின் வெளிபாடாக அவர் முன் வைக்கும் நூல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மறுபடி மறுபடி கவனப்படுத்த வேண்டியவை. அவ்வகையில் அவரது நூல் தேர்வில் உள்ள பொறுப்புணர்ச்சி, ஆரோக்கியமான நூல் பட்டியலை முன்வைக்கிறது.

இரண்டாவது, விஜயலெட்சுமி ஒரு நூலின் கதையை முழுமையாகச் சொல்லவில்லை. வாசிப்பின் வழி அவர் நூலில் தான் சென்று தொட்ட ஆன்மாவை பகிர முயல்கிறார். தான் உணர்ந்துகொண்டதை சொற்களில் திரட்டி வெளிபடுத்துகிறார். தான் உள்வாங்கியதை அதன் அதிர்வுடன் சக வாசகனுக்குக் கடத்த முயல்கிறார். ஒரு ஆரம்பக்கட்ட வாசகன் குவிந்து கிடக்கும் ஏராளமான நூல்களில் தனக்கானதை சட்டென கையில் எடுக்க இந்த வகை உணர்ச்சிப்பகிர்தல் முக்கியமானது.

மூன்றாவது, வாசகனை முன் தயாரிப்பு செய்யும் விதத்தில் அவரது உரைகள் முக்கியத்துவம் பெருகின்றன. நூலின் முக்கியமான பகுதியை வாசித்துக் காட்டுதல், நூல் சொல்லும் வரலாற்றுத் தகவலைக் கூடுதலாக ஆய்ந்தறிந்து கூறுதல், ஒரு நூலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய இடத்தை அழுத்திக் கூறுதல் போன்றவற்றால் குத்துமதிப்பான ஒரு வரைபடத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.

உண்மையில் இது கடும் பணி. கதையைச் சொல்வதும் வாசிப்பதும் வேறு. கதையின் வழி எழுந்த உணர்வை பகிர்தல் என்பது சவாலானாது. அதற்கு வாசிப்போடு புனைவுக்கான திறனும் அவசியமாகிறது. ஒரு கதைச்சொல்லிக்கு நிகழ்த்துக்கலைக்கான திறன் அவசியமாவதைப் போன்றது அது. என் புரிதலில் புனைவு உற்சாகம் கொடுக்கும் மனநிலையுடன்தான் விஜயலெட்சுமி இடைவிடாது இப்பணியைச் செய்கிறார் என நினைக்கிறேன். அப்படி அவர் வாசித்த பல நூல்களை வாசித்திருக்காத எனக்கு அவர் வாசிக்கின்ற வேகமும் அவற்றை உள்வாங்கும் திறனும் பல சமயங்களில் பொறாமைபட வைத்துவிடுகிறது.

‘வாசிப்பின் வாசல்’ பின்னர் ‘தேன்கூடு’ என்ற பெயரில் மாற்றம் கண்டது. அது பொருத்தமான பெயர்தான். ஒரு காட்டில் ஆகச்சிறந்தது தேன். தேனிகளால் மட்டுமே தேனை அறிய முடியும். காட்டில் பலமிக்க பிற விலங்குகள் இருக்கலாம். அவற்றால் மரத்தை பிடுங்கி எறிய முடியகூடும். காட்டையே தின்று தீர்க்க முடியக்கூடும். ஆனால் பூவில் பதுங்கியுள்ள தேனை சென்றடைய தேனீகளால்தான் முடிகிறது. அதற்கு நுட்பம் அவசியம்.  தேர்ந்த வாசகன் தேனீயைப் போன்றவன். அவன் நுன்மையவான். அவனே புனைவுகளில் விரிந்துகிடக்கும் வாழ்வின் அசாதரண தருணங்களைச் சேகரிக்கிறான். அந்த தேன்துளிகளைச் சேகரித்து வைத்துள்ள இடத்தை ‘தேன்கூடு’ என அழைப்பது சாலப்பொருந்துகிறது.

விஜயலெட்சுமியின் இந்த முயற்சியின் வெளிவந்த ஒளிப்பதிவுகளைத் திரட்டி நூலாக்கியுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. பலமொழிகளில், பல்வேறு நிலங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட நாவல்கள் குறித்து மட்டுமே இந்த நூலில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் இடம்பெற்ற நாவல்களைத் தாண்டி ஒருவருக்கு வேறொரு பட்டியல் இருக்கலாம். ஆனால் இது விஜயலெட்சுமி என்ற ஒரு தேர்ந்த வாசகரின் ரசனையைச் சொல்லும் நூல். இதன்வழி நூலாசிரியரின் ரசனையையும் அவர் வாழ்வை அறிய முயலும் பாங்கையும் அவர் அரசியலையும் புரிந்துகொள்ள முடியும். எப்படியாயிலும் இந்தத் தொகுப்பில் உள்ள நூல்கள் அனைத்தும் இனி விஜயலட்சுமியுடையவை. ஒவ்வொன்றிடமும் அவருக்கான தனித்த உரையாடல்களும் உறவுகளும் உள்ளன. கட்டுரைகளும் அதைதான் சொல்கின்றன.

விஜயலெட்சுமி இப்பணியை இடையறாது தொடர வேண்டும். இந்தப் பணியின் பலன் காலம் தாழ்த்தியே உணர்ந்துகொள்ளப்படும். அச்சுநூல்கள், மின்நூல்கள், ஒலிநூல்கள் என புனைவுகள் வெவ்வேறு வடிவங்களில் சூழும் இக்காலத்தில் அவரும் தன்னை ஒரு தேனியாகவே உபயோகிக்க வேண்டியுள்ளது. தேனின் மகத்துவம் குறித்து கானகம் அறியாததில் கவலைப்பட ஒன்றும் இல்லை; அதை தேனிகள் அறிவதுதானே முக்கியம்.

வாசிப்பின் வாசல் நூலுக்கு எழுதிய முன்னுரை

(Visited 151 times, 1 visits today)