சிகண்டியை வாசித்து முடித்தேன். போகவே முடியாத இடங்களுக்குச் சென்றும், பார்க்கவே முடியாத மனிதர்களைப் பார்த்தும், வாழவே முடியாத வாழ்க்கையை வாழ்ந்தும் பார்த்தேன். வாசிப்பனுபவம் எப்போதுமே மிகவும் அந்தரங்கமானது. கதைவழி நாம் நம் வாழ்க்கையில் உணர்ந்தவையெல்லாம் அல்லது கதையையே நம் வாழ்க்கையாக உணருவதெல்லாம் நிறைய இடங்களில் சொல்லாக வெளிக்கொணர முடிவதில்லை. சிகண்டி அவ்வனுபவத்தைச் சொற்களால் கடத்தியுள்ளது.
இறந்தகாலங்கள்தான் வாழ்க்கையில் நினைவுகளாக நம்முள் உறைந்து கிடக்கின்றன. அது அப்படியே தொலைந்த நிலையில் இருந்தும் விடுகிறது. சிகண்டி வாசிக்கும்போது கதைக்கும் களத்திற்கும் நெருக்கமான பல நினைவுகள் என்னுள் இருப்பதே அப்போதுதான் தெரிய வந்தது. முதன்முறையாய் அறிமுகமாகி, நான் மறந்துபோன பொருளோ காட்சியோ சத்தமோ மறுபடியும் என்னுள்ளிருந்து மீண்டெழுந்ததுபோன்ற நொடிகளை அப்படியே உணர பல தருணங்களில் முடிந்தது. குறிப்பாக மிகச் சிறிய வயதில் யாருமே இல்லாத நிசப்தத்தில் ஆற்றுநீரின் சலம்பல், மூங்கில் இலைகள் ஒன்றோடொன்று உரசிக் கூசுகின்ற ஒலி, ஆற்றுநீரின் அழுத்தத்தை இரு கைகளாலும் தள்ளி உணரும் நிலை, யாரும் அறிந்திடாமல் செய்திடும் கள்ளத்தனங்கள், சிறுவயதில் சுற்றியிருந்த மனிதர்களின் பேச்சு, அவர்கள் உடல்மொழியால் கோபங்களையும் வெறுப்புகளையும் காட்டும் தோரணை என உள்ளிருந்து மீட்டுக் கொண்டு வந்தது சிகண்டி.
ஈபுவை திருநங்கை என்றே பார்க்க முடியவில்லை. பெருந்தாயாக மட்டுமே பார்க்கவும், உணரவும் முடிகிறது. நாவலில் ஈபுவுடைய வருகையே சுவாரசியம் மிகுந்ததாகவும் அவர் என்னவெல்லாம் செய்வார் என்ற ஆர்வம் மனதைக் குடைகிறது. தீபன் கமாலியாகின்ற தருணத்தை ஈபு அவனிடமே ஒப்படைப்பது ஈபுவை இன்னும் அண்ணாந்து பார்க்கச் செய்கிறது. பகுச்சரா, குவான் யின், ஈபு, சரா எல்லாருமே கருணையாலும் அன்பாலும் கனிந்தே தாய்மையாய் பூரணமடைகின்றனர்.
தீபனை மையமிட்டே நாவல் நகர்கிறது. தனக்கு ஆண்மை குறையுள்ளதாகக் கருதும் அவன், தேடி அலையும் மருந்துகளால் வந்த ஒவ்வொரு வதையும் நம்முள் கடத்திச் சென்று இம்சை செய்கிறது. சில இடங்களில் நாமே அந்த பக்கவிளைவுகள் எப்படியிருக்குமென ஒரு கணம் செய்து பார்க்க மறுகணம் வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு அதன் அழுத்தம் உக்கிரமானது. தீபனோடு சேர்ந்து படிக்கின்ற நமக்கும் அவன் பித்துநிலை ஏற்படுகிறது. தான் யாரென உணராத சிக்கலான மனநிலையில் வெறுப்பும் கருணையுமென எதிரெதிர் சுவரில் அடிக்கப்பட்ட பந்தாக தன்னையே அலைக்கழித்து வெறுமையடைகிறான்.
நீலவேணு என்ற அறிய நாகம் இருக்கிறதா இல்லையா என்பதை அப்படியே விட்டது நல்லதாகப்படுகிறது. மன்னன் போன்ற பெரும்பிம்பத்தைக் கொடுத்து, பின்பு அது அமிர்கானின் வெறும் காசுக்கான கற்பனைதானா என்பதைவிட வாசகர்களை அதன் போக்கிலே விட்டது அந்த அறியப்படாத ரகசியத்தை பிரமாண்டமாக்குகிறது.
நாவலில் வந்த பல வரிகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.
‘கேட்டது கெடைக்கலையா மெரட்டி புடுங்கு, தகிரியந்தான் சாமி. என்பது மனதுக்கு நெருக்கமான வரி. அதற்குப் பிறகான ஈபுவின் முழுவாழ்க்கையைக் காட்டுவதாக இந்த ஒற்றை வரி இருக்கிறது.
‘வெறுப்பின் துளி இல்லையென்றால் மனித குலம் அன்பின் பெருக்கெடுப்பால் தற்கொலை செய்து அழிந்துவிடுமா’ என்ற வரி நம் அன்பையெல்லாம் நாமே கேள்விக்குறியாக்க வைக்கின்றது.
‘மனிதனை ஏந்தி ஏந்தி தாய்மை உணர்வை அடைந்து விடுகிறது மெத்தை’, ‘சிறிய சிக்கல்கள் மொத்த பிரபஞ்சத்தின் முன் அர்த்தமற்றவை. ஆனால் திருத்தமற்ற இடைவெளிகளை நிரப்ப இப்பிரபஞ்சம் சிறிய சிக்கல்களையே கருவிகளாகத் தேர்ந்தெடுக்கின்றன.’ போன்றவை தத்துவார்த்தமாக நமது புரிதல்களை விசாலமாக்குகிறது.
மலேசியாவில் இடங்களை வடக்கு கிழக்கு என திசைகள் காட்டி வந்த இலக்கிய வடிவங்கள் குறைவு என நினைக்கிறேன். பல இடங்களில் அது திரும்ப திரும்ப காட்டப்பட்டு செளவாட்டை நமக்கு பழக்கமான இடமாக்க எழுத்தாளர் முயற்சி செய்திருக்கிறார். இதன் போக்கு முக்கியமாக புதிய வாசகர்கள் நாவலை வாசித்துக் காட்சிப்படுத்த துணையாக இருக்கும். அதன் பூகோல அமைப்பு மனதில் பதியும்.
மலேசியாவில் புதிய வாசகர்கள் சிகண்டிவழி இலக்கியத்திற்கு வருவார்கள் என நம்புகிறேன். சிகண்டியில் சொல்லப்பட்டதை, காட்டப்பட்டதை, எழுதப்பட்ட நடையை வரும் காலத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்டுக் கொண்டாடப்படும். நிச்சயமாக எல்லாராலும் வாசிக்கப்பட்டு வாழ்த்து கூறுவதோடு அல்லாமல் பரந்த சிந்தனையோடு மனிதர்களை அணுக சிகண்டி சொல்லிக்கொடுக்கும் எனவும் நம்புகிறேன். குவான் யின்-யும், பகுச்சரா மாதாவையும் இவ்வளவு நெருக்கமாக்கியதற்கு எழுத்தாளருக்கு நன்றியுடன் அன்பும் வாழ்த்தும்.