உயிர்வளி ஏற்றுபவைகள், செறிவூட்டப்பட்ட அரிக்கும் அமிலங்கள், வினையூக்கிகள், காற்றேறி எரிபவைகள், பூச்சுக்குள் மறைந்திருக்கும் நச்சுகள், காரகாடி பொருட்கள், நீர்மக் கரைப்பான் போன்ற நேரெதிர் வேதியல் இயல்புள்ள பல்வேறு பாத்திரங்களாலும், அவைகள் அருகருகே உரசியதால் வெடிக்கும் கதைத்தருணங்களால் நிரம்பியவைகள் பெரிய நாவல்கள். பாத்திரங்களால் சம்பவங்களால் படிமங்களால் விரிந்த பெரிய நாவல்களை தொடர்ச்சியாக வாசிக்க அதிக சிரத்தை தேவைப்படுகிறது. குவிந்தும் விரிந்தும் சிதறியும் செல்லும் வடிவில் இருக்கும் நாவலை உள்வாங்குவது வாசிப்பை விட அதிக மன உழைப்பினை கோருபவை.
முன்னெப்போதோ வாசித்த ஓர் அத்தியாயத்துடன் பிந்தைய மற்றொரு அத்தியாயம் தொடர்பு கொண்டு மேலதிகமாக விளக்கும் பெரும் படைப்புகளை வாசிப்பது ஒரு வெல்விளிதான். இத்தகைய நாவல்களுக்கான வாசிப்பு உழைப்பினை கொடுத்தால், ஒரு வாசகனுக்கு முன்னறியாத உணர்வுகளால் நிரம்பித் ததும்பும்படியான வாசிப்பனுபவ நிறைவினையும், அனி்ச்சையான மனவிரிவும் கிடைக்கும்.
தீபன் என்கிற முதன்மைப் பாத்திரத்தின் மனவோட்டத்தில் ‘சிகண்டி’ நாவல் விரிகிறது. இன்றைய காலகட்டத்தில் இயல்பு என கருதப்படும் இணையான உறவு அமைவதற்கான சூழல் தீபனுக்கு ஏதுவாக இல்லை. வேறு வேறு நோக்கங்களும், வழிமுறைகளும் கொண்ட மனித மனங்களின் கயிறால், பல்வேறு திசைகளில் இழுக்கப்படுகிறான் தீபன். அதன் விளைவாக, ஒரு கட்டத்தில் தன் காமத்தை குழப்பிக் கொள்கிறான்.
பதின்ம வயதில் நிழல் உலகத்தில் நுழையும் அவன், படிப்படியாக போதைப் பொருட்களை பழகுகிறான். போதையால் உள்நோக்கி அழுத்தப்பட்ட அந்த பாலுணர்வு நெருப்பு, ஊதிப் பெருகி பல்வேறு குற்றச் செயல்கள் வழியாக வெளியேறுகிறது. அவன் தான் இழந்த காமத்தை மீட்க போராடும் போராட்டம்தான் ‘சிகண்டி’யின் முதன்மை சரடு.
ஆலமரம் போன்ற சிகண்டி என்கிற ஈபுவின் பூர்வீகமும், அவரின் அடிமரத்தில் நிகழும் திருநங்கைகளின் இணக்கமான கூட்டுறவு வாழ்க்கையும், அவர்களின் துயரமும் கொண்டாட்டமும் முதன்மை சரடுக்கு இணையாக சித்திரிக்கப்பட்டிக்கும் செங்கோட்டு சரடு. ஆங்கிலேய மற்றும் கம்யூனிச ஆதிக்கத்தில் தோட்டப்புறத்து தமிழர்களின் வாழ்வின் மாற்றங்களும், கம்பமாக இருந்து கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியாக வளர்ந்ததாக புனையப்பட்டிருக்கும் சௌவாட்டின் ஐம்பதாண்டுகால வளர்ச்சியும், மலாய், சீனா, தமிழ் மற்றும் பிற கிழக்காசிய இனங்களுக்கு இடையேயான உறவும், விலக்கமும் இந்த இரு சரடுகளையும் குறுக்காக பின்னிக் கட்டிய பிற சரடுகள்.
ஒரு புறம் பரத நாட்டியக் கலையில் தேர்ந்த, ஒழுங்குணர்வு கொண்ட மலர்போன்ற வெள்ளை தேவதை சரா. மறுபுறம் இருள் உலகில் அறிமுகமாகும் காசி. அமாவாசை இரவு, இருண்ட கண்டைனர் வீடு, கறுப்பு கார் கண்ணாடி பின்னணியில் புனையப்பட்டிருக்கும் காசியை சாத்தானாக அடையாளமிடலாம். தீபனை பிணைத்துள்ள முதலிரண்டு வலிமையான கயிறுகள் இவர்கள் (சரா, காசி) இருவரின் கைகளில் இருக்கிறது.
தீபன், சரா மூலம் பெறப்போகும் இருபதாயிரம் வெள்ளிக்காக அவளிடம் போலியாக நடித்துச் சுரண்டுகிறான். அது தெரிந்தே, ஆனால் தன் ஆன்ம பலத்தின் மீதுள்ள நம்பிக்கையால் தீபனை திருத்துவதற்காக பழகுகிறாள் சரா. அவளது இந்த மனநிலை நாவலின் அடியாளத்தில் ஊர்ந்த படியே உள்ளது. முன்பகைக்காக ஈபுவின் கருவறுக்க, ஷாவின் ரகசியக் கட்டளைப்படி இயங்குகிறான் காசி. அவனுக்கு தீபன் கத்தி போல ஒரு கருவி. ரோக்கு, வண்ணத்துப் பூச்சி மாத்திரை போன்ற போதைப் பொருட்களால் மெல்ல மெல்ல அவன் தீபனின் புத்தியை மழுங்கடிக்கிறான். 38 கூட்டத்துடனான அடிதடி, மோட்டர் போட்டி , குரங்கினை கொன்று தின்றல் போன்ற சாகச குற்றச் செயல்களால் தீபனின் ஆழ்மனதை கூர்தீட்டுகிறான் காசி.
‘கடல்’ திரைப்படத்தில் தேவாலயத்தில் தேவமைந்தன் போலிருக்கும் சாம், உனக்கு என்ன வேண்டும் என தாமஸிடம் கேட்கிறார். மேல்தள மனதில் நிரப்பியிருக்கும் வெறுப்பையும், வன்மத்தையும் கெட்ட வார்த்தைகளாக மாற்றி தாமஸ் கொட்டித் தீர்க்கிறான். அனைத்து கசடுகளையும் வெளியேற்றியபின் கடைசியாக எஞ்சுவது அவனின் ஒரே உறவான அன்னை மீதான அன்புதான். ‘சிகண்டி’ தீபனுக்கும் லூனாஸ் நதியில் குளிப்பதும், அன்னை மடிக்கு திரும்புதலும், அத்தனை குற்றச் செயல்களுக்கு அடியில் ஓயாமல் அவனை உந்தித் தள்ளும் மீட்புப்பாதை.
கல்லூரி விடுதி அறைகளிலும், விடுதிக் கூடங்களிலும் புணர்ச்சி நடிப்பு படங்களை கூட்டத்துடனும், தனியாகவும் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இனிமையான சாக்ஸபோன் இசைப் பிண்ணணியில் கட்டழகிகளும் கட்டழகர்களும் லயத்துடன் முயங்கும் கதையுடன் சேர்ந்த படங்கள். ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தும் வன்முறை கொண்டகொண்ட புணர்ச்சி நடிப்புப் படங்களை கூடுமான வரை அந்நாட்களில் தவிர்த்து விடுவேன். ஒருமுறை என் நண்பனின் அக்காவின் திருமணத்திற்காக கல்லூரி நண்பர்கள் கூட்டத்துடன் தேனி அருகே ஒரு சிறிய ஊருக்குச் சென்றிருந்தேன். அப்போது திருமண வேலைகள் செய்து முடித்து களைத்திருந்த ஒரு இளைஞர் கூட்டம் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்த படி இருளுக்குள் குவிந்திருந்தார்கள்.
அவர்கள் பார்வை ஒரு பெரிய தொலைக்காட்சியில் இரண்டு செந்திறத் தோல்கள் கொண்ட உடல்கள் அதீத கூச்சலிட்டு அதீத வன்முறையுடன் புணர்ந்த காட்சியின் மீதிருந்தது. அந்த கூட்டத்தில் ஒன்றானேன். கதவைத் திறந்தால் அடுத்த வளாகத்தில், அடுத்த நாள் ஒரு இனிமையான திருமண உறவுக்கான உடன்படிக்கை நிகழப்போகிறது. இந்த அறையில் உடல்களை உச்ச வதைக்கு உட்படுத்தும் மிருகங்கள் போல இயங்கும் ஒரு காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்த காட்சிகளும், அந்த சூழல் தொடர்பும் பிணைந்து கொண்டு அன்றிரவு சூடான என் மனம் சிந்தனைகளால் குழம்பி விட்டது. அந்த நினைவின் பாதிப்பிலிருந்து வெளியேற எனக்கு பல மாத நாட்கள் தேவைப்பட்டது. என்னுடைய இந்த அனுபவத்திலும், வாசிப்பிலும் தீபன் நீலப்படத்தை பார்த்தபோது, அவன் எதிர்பாராமல் நேர்கொள்ளும் தனபால் தங்கையின் முகம்தான் , தீபத்தினை காம அடைப்புக்கான முதன்மை காரணம் என எண்ணத் தோன்றுகிறது.
‘என்னை மிரட்சியுடன் பாரத்து ‘க்க்வா’ என்றாள். எப்போதும் படரும் நாணத்தை அவள் முகத்தில் பார்த்தேன்…’ இந்த ஒரு சில வரிகளில் அந்த தீவிரத்தினை சுட்டிக் காட்டுகிறார் நவீன்.
ஒருவேளை தீபன் தன் இளம் மனதிற்குள் தனபாலின் தங்கையின் சித்திரம் நுழைவதற்கு முன்னால், அவன் ஒரு தலைக் காதலி கனகாவோ அல்லது வேறு ஏதேனும் பெண்ணோ நுழைய நேர்ந்திருந்தால், அவன் இத்தனை புயல்களாலும், அலைகளாலும் அல்லலுற்றிருக்க மாட்டான். காமத்துடன் வெறுப்பு, வன்முறை, காதல், ஒவ்வாமை போன்ற வேறு ஒரு உணர்வு ஒன்றோடொன்று கலந்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் இரண்டையும் விடுவிக்க முடியாது. பிலிப்பைன்ஸ் விலைமாதுவிடம் உறவு கொள்ளும் போது அவனுக்கு நேரும் அதீத பாதிப்பு மட்டுமல்ல, சாமந்தி அக்காவின் ‘மத்தி பூச்சோக்’ (ஆண்மை குறைபாடு கொண்டவன்) என்ற கேலி கூட தீபன் தன் காமக்கதவுகளை உட்புறமாக சாத்திக்கொள்ளும் அளவுக்கு அவனை பாதிக்கிறது.
பெண்ணின் பாவனைகளை இயல்பாகக் கொண்ட ஒரு பள்ளி நண்பன் எனக்கு இருந்தான். அவன் பள்ளி ஆண்டு விழாவில் ஷில்பா ஷெட்டியின் வேடமிட்டு ஆடியவன். உஸ், அஜக்கு, ஒம்போது, ஷில்பா, ரம்பா என்று நண்பர்களுடன் சேர்ந்து அவனை கிண்டல் செய்திருக்கிறேன். அந்த கிண்டலில் சிலவற்றை அவன் விரும்பி அங்கீகரித்திருக்கிறான். மலர்கள், இனிமை, நேர்மை உணர்வுகளுடன் புனையப்பட்டிருக்கும் நிஷாம்மா, சரா பாத்திரங்களை வாசித்த போதும், அறுவடை சடங்கிற்கு உட்படும் சிகண்டியின் வலியினை வாசித்தபோதும், முன்னர் கொண்டிருந்த உணர்வின்மைக்காக இன்று குற்றவுணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.
பண்டான் இலையும், சிராயும் சேர்த்த நாசி லெமாக், வாத்துக்கறி, முயல் சாத்தே, குவாவில் ஊறிய சாத்தே போன்ற பதார்த்தங்களும்ம் சந்தையில் தோலுரிந்தபடி வேறொன்றாக மாறியிருக்கும் உயிரினங்கள், வெட்டுப்பட்ட பன்றியின் வயிற்றில் இருக்கும் புழுக்கூட்டம், கடன் வாங்கியவர்கள் காடியில் சிவப்பு மையூற்றுதல், பர்மிய பச்சை குத்தும் கோயில் போன்ற நான் அறியாத பல நுண்தகவல்கள் நாவல் முழுக்க வியாபித்து இருக்கிறது.
‘சௌவாட்டை ஹெலிகாட்டரிலிருந்து பார்த்தால் இரண்டு சுழியங்கள் கொண்ட எட்டு எண் போல இருக்கும்’
‘தனபால் பெண்களை நிர்வாணமாகப் பார்க்கும் கண்ணாடியை சொற்களால் உருவாக்கும் திறன் பெற்றிருந்தான்’
‘ஒரு பெரிய நாய் சாதாரணமாகவும், ஒரு மனிதன் கடினமாகவும் நுழையுமளவு அந்த சந்து இருந்தது.
போன்ற காட்சிகளை எளிதாக உருவகப்படுத்தும் வரிகளும்,
‘நாணும் பெண்கள் மீதுதான் எல்லோருக்கும் ஈர்ப்பு இருந்தது. நாணம் மறைவுகளை உருவாக்கியது. மறைவிடங்களில் ரகசியங்கள் அமர்ந்து கொண்டன. ரகசியங்கள் பெண்களுக்கு ஒளிகொடுத்தது. அவ்வொளியில் காமம் சுடர்ந்தது’
‘பறவைகள் வானத்தில் பறக்கும் மலர்களென்றால், பூமியில் உதிரும் பட்சிகள்தான் மலர்கள்’
‘இரவு ஒளிர்பவற்றின் மகத்துவத்தை அதிகரிக்கிறது’
‘சிரிப்பு அவன் காது மடல்களிலும் உதடுகளிலும் கன்னங்களிலும் பொறிப்பொறியாகப் பறந்தது.’
போன்ற கவித்துவமான வரிகள் மீண்டும் மீண்டும் அந்தந்தப் பகுதிகளை வாசிக்கத் தூண்டியது.
என் பார்வையில், தீபன் ஓயாமல் சுமந்து அலைந்து கொண்டிருந்த அந்த பாலுணர்வுத் திரிதலிருந்து, அன்னைக்கு நிகரான ஒரு பெண்ணை கொல்லுதல் என்ற உச்ச குற்றத்தின் வழியாக விடுதலை பெறுவதுதான் ‘சிகண்டி’ நாவலின் மையம்.