
என் அறியாப் பருவத்தில் நானும் திருநங்கைகளைக் கேலிப் பொருளாகவே எதிர்கொண்டேன். அவர்கள் பார்வையாளர்களைக் கவர பெண்வேடம் போட்டுக்கொள்கிறார்கள் என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணுவதற்கு ஒரு காரணம் இருந்தது. சின்னக் குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் சுயமாக அம்மாவுடைய பாவாடையை அணிந்துகொள்வதும் செருப்பைப் போட்டுக்கொள்வதும் முகப்பூச்சிகளை பூசிக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். உளவியல் ரீதியாக, அவர்கள் தன் தாயை தனக்குள்ளே தகவமைத்துக்கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். அதையே சில விடலைப்பையன்களும் செய்துகொள்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பு அந்த எண்ணம் குறுகலானது என்று சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது.
ஒரு முறை ஒரு திருநங்கை நான் பயணம் செய்துக்கொண்டிருந்த பேருந்தில் ஏறினாள். அவள் முகம் வாடியிருந்தது. அவளின் உள் மனதை அறிய, மெல்ல பேச்சுக்கொடுத்தேன். என் கனிவை உள்வாங்கிக்கொண்டவள், அவள் அடக்கிவைத்த துயரங்களை என்னோடு பகிர்ந்துகொண்டாள். அவள் பெற்றோராலும் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளாலும் வீட்டை விட்டே விரட்டப்பட்டதைக் கண்ணீரோடு பகிர்ந்துகொண்டாள். “நான் மாறியிருப்பது என் தப்பா?” என்றாள். ஓர் அந்நிய மனிதனிடம் தன் இன்னல்களை இப்படி கொட்டித் தீர்ப்பது அவள் எதிர்கொண்ட துயர் எத்துணை ஆழமாகப் புறையோடிப்போயிருக்கிறது என்பதைப் புரியவைத்தது.
வெகுமக்கள், திருநங்கைகள் மீது எதிர்மறையான அபிப்பிராயம் வைத்திருப்பதை பரவலாகப் பார்க்கலாம். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம், கைதட்டிச் சிரித்துக் கேலிப்பொருளாக்குவதை அறிந்திருக்கலாம்.
‘சிகண்டி’ நாவலிலும் கதைசொல்லியான தீபனும் அதே அபிப்பிராயத்தைக் கொண்டவன்தான். ஆனால் அதை வெளிப்படுத்தாமல் லாபம் தேட முயல்பவன். தன்னை மறந்து வெளிப்படுத்தும்போது அகங்காரத்தைக் கக்குவான். ‘தப்பிக்க முடியாத கணமொன்றில் அவளைக் குறுக வைக்க வேண்டுமென்றே ஒரு குரூர ஆசை எழுந்துகொண்டே இருந்தது’ என்று ஆசிரியர் அவன் மன உணர்வை சொல்லும்போதே அவன் குரூரம் பிரதிபலிக்கிறது. ஓர் அரவாணி எக்காலத்திலும் தனக்குச் சரிசமமானவள் அல்ல. தன் முன் குறுகி நிற்க வேண்டியவள் என்றே அவன் உள்ளுணர்வு சொல்கிறது. தன் அன்பை பெற திருநங்கை அடிப்பணிய வேண்டியவள் என அகங்காரம் கொள்கிறது. திருநங்கைக்கு அன்பை கொடுப்பது ஒரு தியாகம் போலவும் சேவை போலவும் பாவனை கொள்கிறது. தான் எத்தனை இழி நிலையை அடைந்தாலும் ஒரு திருநங்கை தன் காலுக்குக் கீழ் இருப்பவள் என நம்பவே அவன் மனம் துடிக்கிறது.
இத்தனை குரூரம் அவனுக்கு எங்கிருந்து துளிர்க்கிறது?
உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட் சொல்வார், மனிதனின் எல்லா உணர்ச்சிகளுக்கும் அடிப்படை காரணியாக இருப்பது அவன் அடிஆழ் மனதில் பதிந்து கிடக்கும் பாலியல் உணர்ச்சிகளே என்று. சிகண்டி நாவலின் அடிநாதமாக இருந்து, அதனை நகர்த்திச்செல்லும் தீபன் தன் ஆண்மைக்குறையை நிவர்த்தி செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறான். கட்டுப்படுத்தப்பட்ட அவனது பாலியல் இச்சையே அவனது குரூரங்கள் வெளிவர காரணமாக உள்ளது. இந்த குரூரத்தின் அக உலகம் வழியாகவே சௌவாட் எனும் புற உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிகண்டி முன் வைக்கும் உலகம்
சிகண்டி நாவலே ஒரு புதிய கதைக்களத்தைதான் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. திருநங்கைகளின் முழுமையான வாழ்க்கையை முன்வைக்கிறது. அதிலும் நாவலை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நாவல் புனைவு சார்ந்த பல சம்பவங்களை, செய்திகளை வாசகனுக்குத் தந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெருநாவலின் வாசிப்பு சலிப்புத் தட்டாமல் இருக்க இந்த புதிய தகவல்களைத் தரும் உத்தியைக் கையாள்கிறார். அல்லது புனைவு தன்னிச்சையாக அவரை அதன் போக்கில் இழுத்துச் செல்கிறது என்றும் சொல்லலாம்.
ஈபுவை அறுபது வயது கிழவியாகக் காட்டும் அதே வேளையில் சரா ஓர் இளைய வயது நங்கையாக காட்டப்படுகிறாள். இவ்விரு பாத்திரங்களுமே அந்த வாழ்க்கையின் முழுமையான சித்திரத்தை வரைந்து காட்டுகிறது.
ஆணாகப் பிறந்த சிகண்டி திருநங்கையாக மாறி, பருவப் பெண்ணாக தோட்டத்தில் அலைந்து, மெல்ல ஈபுவாகப் பரிணாமம் எடுத்து சௌவாட்டையே தன் ஆளுகைக்குக் கொண்டு வரும் ‘தாதா’வாக மிளிரும் கரடு முரடான பாதை இந்நாவலில் விரிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பதத்தில் சரா தீபனை விரும்புவதாகவும் அவனையே திருமணம் முடிக்க எண்ணம் கொண்டவளாகவும் மென்மையான நங்கையாக வருகிறாள். ஈபுவின் வசீகரமான இளமை காலத்தின் இன்னொரு பரிணாமம் சரா. சொல்லப்போனால் அந்த இனிய வாழ்வை பாதியிலேயே தொலைத்துவிட்ட ஈபுவின் நிகழ்கால தொடர்ச்சி.
ஈபு மற்றும் சரா ஆகிய இரு திருநங்கைகள் வழி தீபன் எதிர்க்கொள்ளும் சிக்கல்கள் வழி திருநங்கைகளின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதி நாவலில் காட்டப்படுகிறது.
ஒரு நாவலின் ஜீவனை தொட்டு இழுத்துச்செல்லும் மையப்புள்ளி கட்டாயமாக முதல் அத்தியாயத்தில்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. அது தொடக்க அத்தியாயங்களில் எங்காவது இருக்கலாம். சிகண்டியில் அந்தப்புள்ளி நான்காவது, ஐந்தாவது அத்தியாயங்களில் இருப்பதாக நான் கருதுகிறேன். அங்கிருந்தே நாவல் சாட்டைகொண்டு தாக்கிய குதிரையைப் போல வேகம் கொள்கிறது.
சிகண்டி அரவாணிகளின் வாழ்க்கையைக் காட்டுகிறதென்றால் அதன் இணை வாழ்க்கையாக, பாலியல் தொழிலையும், கூடவே குண்டர் கும்பல் வாழ்க்கையையும் இருள் பிரதேசத்தையும் காட்டிச் செல்கிறது. இது முக்கியம். ஏனெனில் ஒரு நகரத்தின் இருளான நிலப்பகுதியில்தான் இவ்வாறான நிழல் வாழ்க்கை நடத்த ஏதுவானது. இந்த நாவலின் அந்த இடம் சௌகாட் என்ற கோலாலம்பூரின் துணை மாவட்டமாகும். அதில் உள்ள காராட் பஜார், சௌவாட் சந்தை, சாகார் சாலை என நாவல் விஸ்தாரமான களத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
நாவலின் கலை வேலைபாடு
தோட்டப்புற ரப்பர் செம்பனைக் காடுகளில் சப்பாத்திச் செடி முளைக்கும். இது செண்டோய் செடி போன்றிருக்கும். தாமரை போன்ற நீண்டு அகன்ற இலைகளாலான செடி. அதன் வேரை ஒட்டிய பகுதியில் பழங்கள் பூத்திருக்கும். கொப்புளம் வடிவத்திலும் நிறத்திலும் இருக்கும் பழங்கள் அவை. அதில் என்ன விஷேசம் என்றால், அதன் இனிப்புச் சுவை நீண்ட நேரம் நாவின் நுனியில் நிலைத்திருக்கும். மற்ற இனிப்புப் பண்டம் சாப்பிட்ட பின்னரும் கூட, அதன் இனிப்பை துறந்துவிட்டு, இதன் இனிப்பை நாவில் நிலைபெறச் செய்துவிடும். அதைப்போல் சிகண்டி நாவலின் கலை நேர்த்தி வாசித்தப் பின்னும் சுவைத்துக்கொண்டே இருக்கிறது. நாவல் முழுக்க பின்னிப்பிணைந்து வரும் அம்சங்களில் ஒன்று கலையமைதி. தத்துவ வெளிப்பாடும் அதற்கு ஈடாகவே ஊடாடி வருகிறது. ஒரு புனைவின் கலையமைதி வாசகனின் சுவை உணர்வுக்கான தீனி என்றே கொள்ளலாம். ஒரு புனைவாளனின் ஆளுமையை நிரூபிக்க இவ்விரு அம்சங்களும் மிக அவசியம். காரணம் ஒரு புனைவை நிறைவான வாசிப்பாக ஆக்குவது அதன் (ஆர்ட் கிரஃப்ட்). கலை வேலைப்பாடுதான்.
நாவலில் வரும் அத்தியாயங்கள் சிக்கலில்லாமல் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான அத்தியாயங்கள் நிகழ்கால சம்பவத்தைச் சொல்லிக்கொண்டே போகிறார். பின்னர் நனவோடை உத்திகொண்டு கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று சொல்லி அதனை மீண்டும் நிகழ்காலத்தோடு இணைத்து முடித்து வைக்கிறார். இந்தப் பின்னல் முறை பிரம்மாதமாக வந்திருக்கிறது.
எடுத்துக் காட்டுக்கு ஒன்றைச் சொல்லலாம். திருநங்கை சராவுக்கும் தனக்குமான காதல் எவ்வாறு நிகழ்ந்தது என்று தொடக்கத்தில் சொல்லவில்லை. ஆனால் சரா ஒரு திருநங்கை என்ற தெரிந்த பின்னரே அவள் காதலித்த அந்த துர்ச்சம்பவத்தை நினைத்து வெதும்பும் தருணத்தில் வாசகனை பின்னோக்கி இழுத்து அது நடந்தது எப்படி என்று சொல்கிறார். இந்தப் புதிர் உத்தி நாவலைத் தொடர்ந்து வாசிக்க உந்திக்கொண்டே இருக்கிறது.
கதாபாத்திர வார்ப்பு
சில காட்சிகள், வரிகள், உவமைகள் மூலம் கதாபாத்திரங்களை அழுத்தமாக உள்வாங்க முடிகிறது.
நாவலில் வந்து போகும் குட்டப்பன் என்ற சிறிய கதாபாத்திரத்துக்கும், வீரனுக்கும், (இவன் அந்த ஊரில் பிரசித்து பெற்ற சண்டியர், யாருக்கும் அடங்காதவன்) வாய்ச்சண்டை முற்றி சண்டையிடுக்கொள்கிறார்கள். அப்போது நாவலாசிரியர் ‘குட்டப்பன் பூமியில் நடப்பட்டவன் போல அசையாமல் நின்றுகொண்டிருந்தான்’ என்று எழுதுகிறார். என்ன அசாதாரணமான சொல். இந்த ஒரு வரியே அவனின் பாத்திரப் படைப்பின் திரட்சியைச் சொல்லிவிடுகிறது. குட்டப்பன் வீரத்தில் மேலானவனாக காட்டிவிடுகிறது.
அதுபோல பதினோராவது அத்தியாயத்தில் ஷாவை சந்திக்க ஈபு காராட் பஜாருக்கு வருகிறார். யாரோ ஒரு அரவாணியின் தங்க வளையல் திருடு போயிருக்கிறது. திருடியவன் அங்குள்ள கடையில் விற்றுதான் பணமாக்கியிருக்கவேண்டும் என்று சந்தேகித்து அங்கே வந்து, யாரும் திருட்டுக் காப்பு விற்றார்களா என்று கேட்கிறார். அது ஒரு திருநங்கையைச் சேர்ந்தது. திருநங்களின் தாயாக மதிக்கப்படுபவள் ஈபு. அவளை அக்கணம், ஷாவின் ஆட்கள் எப்படி மரியாதையோடு வரவேற்றார்கள் என்பதைத் காட்டுகிறார் ஆசிரியர். தங்கக் காப்பை மீண்டும் கைப்பற்றிக்கொண்டு வெளியேறியபோது ஈபு வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டுப் போகிறாள். அதனை நாவலாசிரியர் சொல்லும் சொற்களின் தினவுதான் கலையாக மிளிர்கிறது. ‘வெற்றிலை எச்சிலை புளிச்செனத் துப்பி, தான் வந்த அடையாளத்தைவைத்துவிட்டுச்,சென்றார்’ என்று எழுதுகிறார். ஈபு சராவின் வருகைக்குப் பெண் சாந்தம் கொண்டு இருப்பவள். அனேகமாக கொலைகளைக் கைவிட்டவள். தன் தாய்மையின் குணத்தை மீட்டுக்கொண்டவள். ஆனால் அவளால் கொலைகள் செய்த சிகண்டியாக மறுபடியும் மாற முடியும். ஒரு நிமிடத்தில் அத்தனையையும் அழிக்க முடியும். அதை நினைவு படுத்தும் காட்சி அது. இப்படி எண்ணற்ற இடங்களில் நெய்யப்படும் கலைவேலைப்பாடு நாவலின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. வாசிப்புப் பரவசத்தை ஊட்டி மிகுந்த நிறைவைத் தருகிறது.
இந்த ஈபு சராவின் மீது வைத்துள்ள அன்பையும் அவள் எப்படி சிகண்டியிலிருந்து தாய்மை குணத்துடன் திகழ்கிறாள் எனவும் உணர்த்தும் வரிகளும் உள்ளன. சராவுக்குக் காயம் பட்டதும் ‘ஈபு உடலிலுள்ள ஒவ்வொரு கண் வழியாகவும் அழுகிறாள்’ என்று ஓரிடத்தில் அழகாக எழுதியுள்ளார். நாவலை எழுதிச் செல்லும் வேகத்தில் இதுபோன்ற சொல்லாடல்கள் தன்னிச்சையாக வந்து விழுவது இயல்புதான் என்றாலும், இதுபோன்ற மிக அருமையான சொற்கள் படைப்பாளனுக்காக எதிர்கொண்டு காத்திருப்பது ஒரு சிலருக்கே வாய்க்கும். கலை, உவமைகளாலும் சூழலை வர்ணிக்கும் அழகியலாலும் பாத்திரங்களை உள்வாங்கி அவதானிக்கும் முறையாலும் மொழி நடையாளும் புனைவாளன் எழுதிய வாழ்வை வாசகன் துல்லிதமாக உள்வாங்கிக்கொள்வாரென்றால் அது படைப்பின் அளப்பரிய சாதனையே.
தத்துவ வெளிப்பாடு
ஒரு புனைவாளன் வாழ்க்கையை, மாந்தர்களை எப்படி அவதானிக்கிறார் என்பது அவர் வாழ்க்கையை உள்வாங்கிச் சொல்லும் கருத்துகளில் மிளிரும். நாவலாசிரியர் அவதானித்த அல்லது உருவாக்கிய பாத்திரங்களின் வாழ்க்கையின் வழியாக அவர்கள் கண்டடையும் புதிய உண்மைகளை தத்துவ வெளிப்பாடு என்றும் சொல்லலாம். சிகண்டி நாவல் அரவாணிகளையும் அவர்களோடு தொடர்புகொண்டுள்ள மக்களின் வாழ்க்கையையும் வாசகன் முன் ஒரு அகன்ற படுதா போன்று விரித்துக் காட்டுகிறது. ஒரு சிக்கலான, நாம் சற்றும் எதிர்பாராத ஒரு தனித்துவமான வாழ்க்கை அது. அதனைத்தொட்டு எழுதும்போது அந்தக் குறிப்பிட்ட வாழ்க்கை சார்ந்த கருத்தியல் இயல்பாகவே வெளிப்படுகிறது.
உதாரணமாக, பாலியல் தொழிலாளிகளின் மனநிலையைச் சொல்லுமிடத்தில் ‘ஆசை என்பது கோரப்பற்களைக் கொண்ட அழகிய தேவதை’ என்று அவர்கள் அறிந்திருப்பார்கள் என்கிறார். ஆசை மனிதனை இழுத்துக்கொண்டுபோய் எப்படியெல்லாம் காவு கொள்கிறது. அவனை எவ்வாறெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதைச் சொல்லவரும்போது அதற்குப் பொருத்தமான உவமையாக அமைகிறது. அவர்கள் சிரிப்புக்குப் பின்னால் உள்ள அழுகை தெரிவதுபோலவே வாடிக்கையாளர்களின் அலைபாயும் இச்சையை அவர்கள் எவ்வாறு கணித்துள்ளார்கள் என்பதையும் உணர முடிகிறது.
மனிதன் இயல்பாகவே கோழை குணம் கொண்டவன். அவனுக்கு தைரியத்தை மீட்டெடுக்க ஒரு சொல்லோ பொருளோ உற்சாக மூட்டினால் அவனின் கோழைத் தனம் போய், தற்காலிகத் துணிவு வந்துவிடும். இதில் கதை சொல்லி போதைப்பொருள் பழக்கமுள்ளவன். அவன் வாய்மொழியாகவே அச்சம் பற்றி விவரிக்கிறான். ‘அச்சம்தான் என் கடவுள். கடவுளை விரட்டும் சாத்தான்தான் இந்தக் கஞ்சா’ என்ற சொல்கிறான். அச்சப்படுவதை ஏதோ இழிகுணம் என சொல்லப்படும் சூழலில் அதுதான் கடவுள் என்கிறான் காசி. உண்மையில் அச்சம் பல சமயம் மனிதனைப் பாதுகாக்கிறது. இச்சைகளைத் தவிர்க்க அதுவும் காரணமாகிறது. போதை என்பது சைத்தான். அது கடவுளை மறக்கடிக்கிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் கடுமையான போதையில் சராவை சரமாறியாக திட்டித் தீர்க்கிறான் தீபன். அவளின் உடல் சார்ந்த வசைகள், கேலிகள் அவனிடமிருந்து வெளிப்படுகின்றன. அவள் மிகுந்த சிறுமைக்கு ஆளாக்கப்பட்ட இடம் அது. ஒரு திருநங்கைக்கு அவ்வாறு நடப்பது தன்மானம் பறிபோனது போல. அதன் பின்னர் சரா தன் கணுக்கையை வெட்டிக்கொள்கிறாள். சரா தன்னை இம்சித்துக்கொண்ட சம்பவம் மட்டுமே ஈபுவுக்குத் தெரிய வருகிறது. சராவுக்கும் தீபனுக்கு இடையே நடந்த போர் அவள் அறியாள். ஆனால் சரா ஒன்றுமே நடக்காததுபோல பாவனை செய்கிறாள். தீபனை விசாரிக்கும் போது, சரா அவள் மீது தீபன் நிகழ்த்திய அராஜகத்தை அனைத்தையும் அறிந்தும் வாலாவிருக்கிறாள். அவள் மௌனம் அறிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் தீபன் பேசாமல் இருக்க வேறு காரணம் உள்ளது. ‘உண்மையை அறிந்த ஒருவர் அருகில் இருக்கும்போது பொய்மையினுள் ஒன்றித்து இயங்குவது பெரும் இம்சையாக இருந்தது’ என்று நாவலாசிரியர் சொல்வதை நாமும் ஏற்று உடன்படுகிறோம். மனித மனதை வாசித்துத் துல்லிதமாகச் சொல்லப்பட்ட வாசகம் இது.
கதாபாத்திர முறுகல்கள்
கதாபாத்திரங்களோ கருத்துக்களோ மோதிக்கொள்ளும்போதுதான் ஒரு புனைவு அதன் உயிர்ப்பைப் பெறுகிறது. இந்நாவலில் தொடக்கத்திலிருந்தே பல்வேறு வகையானமோதல்களின் அதிர்வை உணரலாம்.
தீபன் அப்பாவை அறையும் கட்டமே அந்த முறுக்கலின் துவக்கமாக இடம்பெறுகிறது. அப்போது தீபனுக்கு 15 வயது இருக்கும். தனக்கு சைக்கிள் வாங்கித்தர தன் தாய் சேமித்த பணத்தை அவர் செலவழித்துவிடுகிறார். அந்தப்பணம் எங்கே என்று தந்தையைக் கேட்குப் போதுதான் சண்டை பெரிதாகி அப்பாவை அறைந்துவிடுகிறான். அதுபோல அவனுக்கும், உடனிருக்கும் நண்பனுக்கும் நடக்கும் மோதல்கள், சராவுக்கும் தீபனுக்கும் நடக்கும் மன இடையூறுகள், தீபனுக்கும் இபூவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர், தன் ஆண்மைக் குறைவைப் போக்க வந்த அமிர்கானிடம் நடக்கும் வாக்குவாதம், மாமாவுக்கும் தீபனுக்குமான மோதல்கள் என கருத்து முரண்கள் நாவலை உயிர்ப்போடு இயங்க வைக்கிறது.
எவ்வளவு மோதல்கள், எவ்வளவு பகடிகள், எவ்வளவு பயமுறுத்தல்கள், எல்லாவற்றுக்கும் அடித்தளமிடுவது சராவை விட்டு விலகிச் செல்லும் தீவிரத்தின் உக்கிரம். தீபனுக்குச் சரா மீது காதல் இல்லை. அவளோடு பழகுவதோடு சரி. அவளிடமிருந்து சலுகைகளை பெற்று இன்புறுவதோடு சரி. ஆனால்,, கலையுணர்வின் உச்சத்தில் இருக்கும் சரா, நடனத்தில் பாவனை பிடிக்கும் சரா, தீபனின் பாவனையை அறியாதிருப்பாளா? அதுவும் பெரிய சாமர்த்தியம் இல்லாத தீபனை அவளால் அறிய முடியாதா? முடியும். அவளுக்கு எல்லாம் தெரியும். பின்னர் ஏன் அவள் அனைத்திற்கும் இணங்கிப் போகிறாள். திருநங்கைகளை அறியாத அவர்களின் உளவியலை உணராத ஒருவரால் சராவை அறியவே முடியாது. நாவலில் அதற்கான ஓர் இடத்தை ஆசிரியர் வைக்கிறார்.
ஈபுவிடம் தீபன் பணிந்து அடங்கும் அதே வேளை அவர் முன் தான் குருகி நின்ற அவமானத்தை சராவிடம் சமன் செய்கிறான். ஒரு தருணம் அளவுக்கு மீறிய போதையோடு சராவை எதிர்கொள்ளும் காட்சியில் தீபனின் அக இருள் வெளிபடுகிறது. அத்தருணமே அவள் தீபன் தன்னை காதலிக்கவில்லை என உணர்ந்துகொண்டிருப்பாள். அவனின் உண்மையான அகத்தை அவள் அத்தருவாயில்தான் அறிந்துகொண்டிருப்பாள். அதற்கு பிறகு இருவரும் பங்கெடுப்பது ஓர் ஆபத்தான நாடகத்தில். அது அறிந்தும் அறியாததுபோல நடிக்கும் நாடகம். பிடிவாதம் கொண்ட அன்பு உருவாக்கும் அபூர்வ நாடகம். நாவல் முடிவடையும் தருவாயில் தீபனை தான் காதலிக்கவில்லை, அதனால் அவனை மணமுடிக்கும் நோக்கமில்லை என்று சரா சொல்லும் முடிவு எப்போதோ எடுக்கப்பட்டது. சரா தன்னை ஒரு திருநங்கையாள உள்ளூர உறுத்தலுடன் நினைவு கூறும் வரை மட்டுமே தன்னை ஒரு பெண்ணாக உருவகிக்க தீபன் காதலனாகத் தேவைப்படுகிறான். எனவே அவன் அருகாமை அவசியமாக உள்ளது. தன்னை ஒரு தாயாக உணர்ந்த அந்த கணம் அவனை மகனாக அறிகிறாள். அப்போது அவன் பாதுகாப்பே அவசியமாக உள்ளது. இந்த திறப்பை உணராமல் போகும்போது நாவல் காட்டும் தரிசனத்தையும் ஒரு வாசகன் கைவிட வாய்ப்புண்டு.

நுண் தகவல்கள்
நாவல் உண்மை தன்மைகளை அடிப்படையாக்கொண்டுதான் புனைவுகளாகின்றன. அவை கல்லெரிப்பட்ட குளத்து நீர் அலைகளாக விரிவடைவதுபோல மலர்ந்து பெரிதாகின்றன. அறிவார்ந்து செயல்படும் எவருக்கும் இயல்பாகவே தேடல் குணம் உண்டு. தான் வாசிக்கின்ற புதினத்தில் புதுச் செய்திகள் காணக்கிடைத்தால் சலிக்காமல் வாசித்து இன்புறுவான். அந்த வகை நுட்பம் நிறைந்த எழுத்து பெரும் கிளர்ச்சியை உண்டுபண்ணவேண்டும் என்று ஏங்கும். இந்நவாலில் பல இடங்களில் நாம் காணாத புதிய கதாப்பாத்திரங்களையும் கதை நிகழும் நிலத்தையும் கதைச் சூழலுக்கேற்ப துல்லிதமான விவரணைகளையும் கதாசிரியர் நமக்குக் காட்டிச் செல்கிறார்.
அமீரோடு நடத்தப்பட்ட உரையாடலைச் சொல்லலாம். தீபன் தன் ஆண்மை குறையை நீக்க எங்கெல்லாமோ அலைந்தும் பலனளிக்காமல் பாம்பு வித்தைக்காரன் அமீர்கானிடம் வந்தடைகிறான். ராசநாகத்தின் பித்தை சாப்பிட்டாலேயொழிய அவனின் ஆண்மை குறைவு நீங்காது என்று அறுதியாகச் சொல்லிவிடுகிறார் ஒருவர். அதற்காக அமீர்கானை அணுகி பித்துக்காக பித்தம் கொண்டலைகிறான். அமீர்கானை அடித்து நொறுக்கி நாகத்தைக் கொன்று பித்தை எடுத்துக்கொள்ளக்கூட அவன் தயங்கவில்லை. அவ்வாறான இடங்களின் உரையாடலின் போது வாசகனுக்கு எண்ணற்ற புதிய தகவல் வந்தடைகின்றன.
எடுத்துக்காட்டாக அமீர்கான் சொல்கிறார், “நாகங்களில் நிறைய வகை இருக்கு, ஆனா இத மட்டும் ஏன் தெரியுமா ராசநாகமுன்னு சொல்றோம்? இதுங்க தர்மத்துக்குக் கட்டுப்பட்டது. ரெண்டு ராச நாகம் சண்டபோட்டா மூனு அடிக்கு மேல தலையத் தூக்காது.தலைய மாத்தி மாத்தி தரையில் அமுக்குமே தவிர வெசத்த தீண்டாது.பொம்பல நாகம் இன்னொருத்தனோட கருவ வயித்துல சுமக்கும்போது, எந்த ஆம்புல நாகம் வந்தாலும் கடிபட்டு சாகுமே தவிர, அவனோட கூடாது. அப்படி ராசநாகத்துக்கெல்லாம் ராசன் இது. மகாராசாவோட தர்மம் என்ன? உசிரக் கொடுத்தாச்சும் ஒடமையக் காப்பாத்துவான். காப்பாத்த முடியாம தோத்தாலும் கம்பீரம் கொறையாது கேட்டுக்க. மண்ண வாரி தூத்தமாட்டான். ராசனோட தோல்வியும் மகத்தானதுதான். ரத்தின கல்ல எடுத்த அடுத்த நிமிசம் நீலவேணு முழுசாச சரண்டைஞ்சிடும். ஒன்னைய தீண்டாது, சபிக்காது. சுருண்டே கெடக்கும். தலைய தூக்காம சாவ ஏத்துக்கும்.” இதில் நீலவேணு குறித்த தகவல்கள் புனைவாக இருந்தாலும் ராஜநாகம் கொண்டுள்ள நீதி உணர்ச்சி ஆச்சரியப்படுத்தக் கூடியது. அது ஆய்வு ரீதியாக உண்மை என்றும் அறிய முடிகிறது.
இதுபோல இன்னொரு இடம் 15 அத்தியாயத்தில் வருகிறது. மாரிமுத்து இயற்கை பொருட்களைகொண்டு வர்ணங்களை உருவாக்குகிறார். அபாரமான துல்லிதம் வெளிப்பட்டிருக்கும் காட்சி இது. வரலாற்று ரீதியாக இயற்கை வண்ணங்கள் அவ்வாறுதான் எடுக்கப்பட்டன என்பது கூடுதல் தேடல் வழி தெரிகிறது. மேலும் சௌவாட் சாலையில் விவரணைகள், விற்கும் பொருட்களின் எண்ணற்ற வகைமைகள், அங்கே நீக்கற நிறைந்த மாநுட தரிசனங்களை நமக்குக் குறைவில்லாமல் கொடுத்துக்கொண்டே போகிறது சிகண்டி. இவ்வாறான நுண்தகவல்களை தேடி அடைய நவீன் நிறைய உழைத்திருக்கவேண்டும். ஆய்வு செய்யாமல் தக்காரிடமிருந்து தகவல்களைச் சேகரம் செய்யாமல் இந்தச் செறிவும் ஆழமும் சாத்தியமே இல்லை.
மலேசியாவில் பல்லினங்களோடு சேர்ந்து பிற இன மக்களின் வாழ்க்கை நம் புனைவுகளில் பதிவாவது குறைவு. சிகண்டியில் சீனர்களின் வாழ்க்கை நன்கு வெளிபட்டுள்ளது. உதாரணமாக, சோப் ஸ்டிக்கில் சாப்பிடுவது சீனர்களின் பழக்கம். நாவலின் ஒரு காட்சியில் ‘மீயை சோப் ஸ்டிக்கால் வாய்க்குள் தள்ளும்போது அதனைப் பற்களால் கடித்து துண்டிக்கக் கூடாது என்பது மரபான நம்பிக்கை. அதன் கடைசி இழை தாமாக முடியும் வரை அதனைத் துண்டிக்கக் கூடாது. அப்படித் துண்டிப்பது உறவு முறையத் துண்டிப்பதற்கு ஈடாகும் என்று கருதுகிறது மரபின் மீது நம்பிக்கைகொண்ட சீனச் சமூகம்’ என்கிறார் ஓரிடத்தில். சீனச் சமூகத்தோடு பல காலம் வாழும் எனக்கு இச்செய்தி புதியது. அது போன்ற துல்லிதங்களை நாவலில் மலிந்து கிடக்கின்றன. நான் சொல்வது போல புதிய நுண்தகவல்கள் புனைவை நிஜத்தன்மைக்கு மிக அண்மையில் கொண்டுவந்து நிறுத்துகிறது. அவை வாசிப்பாளனை ஈர்த்து அணைத்துக்கொள்கிறது.
சீனர்களின் சமூக நம்பிக்கைகளைப் போலவே திருநங்கைகளின் மரபு சார்ந்து வரும் நம்பிக்கை முறைகளும் வாசகக் கவனத்தைக் கோரும்படி எழுதப்பட்டுள்ளன. அவை நாவலில் திரண்டு நிலைகொள்கின்றன. திருநங்கைகள் சிகிச்சைக்கு முன்பாக தங்கள் குறிகள் கேன்சர் கட்டியென வெறுப்பதுவும், அதனை அறுவை சிகிட்சையின் மூலம் நீக்கி முழு பெண்ணாக மாறலாம் என்று துணிந்து செயல்படவுமான அவர்களின் ஆயுள் நோக்கமும் நாவலின் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. எவ்வளவு அவமானம் அடைந்தாலும் சரா தன்னை முழுமையாக தீபனிடம் ஒப்படைப்பது இதன் பொருட்டுதான். நமக்குக் குழந்தை பேறு கிடைக்காதே என்ற குறையை தீபன் சொல்ல, ஒரு குழந்தையை எடுத்து வளர்த்துக்கொள்ளலாம் என்று அதற்கொரு தீர்வை முன்வைக்கிறாள். சிகண்டி தொட்டு எல்லாத் திருநங்கைகளும் பகுச்சரா மாதாவிடம் தங்களை ஒப்படைப்பதுகூட அவர்கள் வாழ்வின் அர்த்தமுள்ள தருணங்களை தகவமைத்துக்கொள்ள உதவுகிறது. பகுசாரா மாதாவை திருநங்கைகளின் கடவுளாக முன்னிருத்தி எழுதப்பட்ட கட்டங்கள் அவர்கள் வாழ்க்கை பின்புலத்தை வலிமையாக நிறுவுகிறது. மூன்றாம் பாலினம் எதிர்கொள்ளும் துன்பங்கள், கேலிகள், இடையூறுகள் சிகண்டி நாவலில் அடர்த்தியை நிரூபிக்கிறது.
புனைவும் புனைவாசிரியரும்
இந்நாவல் தன்னிலை நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ‘நான்’ என்ற தன்னிலையில் கதையைச் சொல்லிச் சென்றாலும் அதற்குள் அவர் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. காரணம், ‘நான்’ என்று சொல்லிச் செல்லும்போது ‘நான்’ என்ற பாத்திரம் நாவலாசிரியரைத்தான் சொல்கிறது என்று பொதுவாகவே வாசகர்கள் எடுத்துக்கொள்வார்கள். எனவே பெரும்பாலான எழுத்தாளர்கள் இந்த ‘நான்’ என்ற பாத்திரத்தை கவனமாகவே கையாள்வதுண்டு. தன் சுயத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்றே முடிவெடுத்து சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவார்கள். ஆனால் சிகண்டியில் வரும் ‘நான்’ எந்த தணிக்கையும் செய்துக்கொள்ளவில்லை. நாவலாசியரை ஓரளவுக்கேனும் தெரிந்தவர்கள் அந்த ‘நான்’ நாவலாசிரியர் அல்ல என்றே உறுதியாகச் சொல்வார்கள். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் சிறுபான்மையினர். நாலாசிரியரைத் தெரியாத பெரும்பான்மையினர் அது நாவலாசிரியரேதான் என்று உறுதிப்பட நம்புவார்கள். அவ்வாறு நம்புபவர்களுக்கு நாவலாசிரியரின் ஆளுமை ஒரு பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும். அதைப்பற்றி சிகண்டி நாவலாசிரியருக்கு எந்தக் கவலையுமில்லை. அதில் யதார்த்தம் இருக்க வேண்டும் என்றே அவர் எண்ணுகிறார். எக்காரணம் கொண்டும் சுயத்தணிக்கை செய்துக்கொள்ள அவர் தயார் இல்லை. ‘நான்’ என்பது ஒரு புனைவு பாத்திரம் மட்டுமே என்றே எனக்குத் தெரியும். வேறு யாரோ ஒரு பாத்திரத்தை புனைவாக்க இந்த ‘நான்’ என்ற தன்னிலையை பயன்படுத்தியுள்ளார். அதிகமான உள்ள ஓட்டத்தைச் சொல்ல ‘நான்’ அதற்குப் பொருந்தி வரும் எனக் கருதியிருக்கலாம். அந்த நான் ஒரு குரூர குணம் கொண்ட பாத்திரமாக வார்க்கப்பட்டிருக்கிறது. அவர் வாசகருக்காக இறங்கி வரவில்லை என்பதிலிருந்தே நாவலின் நிஜத் தன்மை மேலோங்கி நிற்கிறது.
சில தவறுகள்
பொதுவாகவே பெரு நாவல்களில் குறைகள் வர வாய்ப்பு உண்டு. என் இந்த முதல் வாசிப்பில் குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. வாசிப்பினூடே எனக்குத் தோன்றிய சிலவற்றைச் சொல்கிறேன்.
இந்நாவலுக்குச் சிகண்டி என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது பொருந்தி வருகிறதா என்ற வினா எழுகிறது. புனைவின் பெரும்பகுதி தீபனை மையமிட்டே திரிகிறது. எனவே தலைப்பும் அந்த மையக் கதாபாத்திரத்திற்கேற்ப வைத்திருக்கலாம். அவனின் ஆண்மைப் பின்னடைவை, அதனால் அவனடையும் ஏமாற்றம், அவனை பின்தொடர்ந்தபடி நெருடிக்கொண்டிருக்கும் எரிச்சல், அதனை எப்பாடுபட்டாவது நிவர்த்திசெய்ய அவனின் தீராத அலைச்சல், மன விரக்தி, தோல்விகள் நாவலின் முக்கால்வாசிப்பகுதியை எடுத்துக்கொள்கிறது. அவனே மையச் சரடாக நீண்டு நிலைக்கிறான். ‘சிகண்டி’ என்ற தொன்மப் பெயரிலிருந்து எழுந்து வரும் படிமக் கிளர்ச்சிக்காக இதற்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகம் எழ வாய்ப்பாக அமைகிறது. தான் எழுதும் நாவலுக்குத் தலைப்பிட படைப்பாளனுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதே வேளையில் வாசகனுக்கு இப்படியானதொரு வினா எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
(rally) ‘ரேலி’ சைக்கிள் என்றுதான் உச்சரிக்கப்படவேண்டும். ரலி என்ற சொல் உச்சரிப்பு வேறேதோ ப்ரன்டு (brand) மாதிரி இருக்கிறது. ரேலி இன்றைக்கும் சந்தையில் கிடைக்கும் சைக்கிள்.
வாக்கி டாக்கி, (walkie talkie) ஹாக்கி டாக்கியாக என்று இரண்டு இடங்களில் எழுதப்பட்டுள்ளது. அது (ஹாக்கிடாக்கி) வேறு ஏதோ ஒரு பொருள்போல எண்ணத் தோன்றுகிறது. பாதகமில்லை. அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ளலாம் .
எனக்கு ஈபு என்ற பாத்திரம் வெறும் கற்பனைப் வடிவமாக வார்த்திருப்பது போல உணர வைக்கிறது. பெண் என்ற தாய்மை பிம்பத்துக்கு முரணாக அவளின் குரூர நடவடிக்கைகள் அதற்கு கட்டியம் கூறுகின்றன. (நான் அதுபோன்ற வாழ்க்கையை நேரடியாகப் பார்த்ததில்லை) இதில் என்ன சிறப்பு என்றால், அடர்த்தியான புனைவு மொழியின் வழி ஈபு நிஜப் பாத்திரமாக உருவெடுத்து நிற்பதே பாத்திரத்தை ஸ்திரப்படுத்துகிறது.
இறுதியாக
இந்தக் கதை தமிழுக்கு முற்றிலும் புதியது. இந்த வகைமையில் சில சிறுகதைகளை நான் வாசித்திருக்கிறேன். அது திருநங்கைகளின் முழு வாழ்க்கையை சொல்வற்குச் சிறுகதை வடிவம் போதாது. அவ்வாழ்க்கை ஆழ அகலங்கள் நிறைந்தது. புதிய கதைகளம் போலவே இதில் வரும் பாத்திரங்களும் பொதுப்புத்திக்குப் பழக்கப்படாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் தோற்றம், உணர்ச்சி, மொழி எல்லாமே புதியவையாகவே இருக்கின்றன. புதியவை இயல்பாகவே ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை. எனவே இந்நாவல் ஓடும் நீரில் அடித்துச் செல்லப்படும் மிதவையைப்போல வாசகனையும் இழுத்துச் செல்கிறது. கதைகளம் புதியது மட்டுமல்ல இதன் கதையாடல் அதிர்ச்சியை தரக்கூடியதும் கூட. யாருக்கு என்றால் வெகுசனக் கதைகளில் மெய்மறந்திருந்தவர்களுக்கு! இவ்வகைமையிலான நவீன உலகைக் காட்டும்போது அது அதிர்ச்சியைத்தான் தரும். நவீன இலக்கிய வாசகர்கள இதனை எளிதில் செரித்துக்கொள்வார்கள். ஆனால் பழக்கப்படாத வெகுசன இலக்கிய வாசகர்களுக்கு இதன் கதை சம்பவங்கள், உரையாடல்கள் பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடும். அந்தத் தரப்பினருக்கு ஒவ்வமையையும் இலவச இணைப்பாகக் கொடுக்கக்கூடும்.
‘சிகண்டி’ மலேசியாவில் மட்டுமல்ல தமிழ்ப் புனைவுலகில் நீண்ட காலத்துக்குப் பேசப்படும் நாவலாக அமையும் என்றே கருதுகிறேன்.
சிகண்டி வாசிப்பு – ஆசிர் லாவண்யா
சிகண்டி வாசிப்பு – ஜி. எஸ். எஸ். வி நவீன்