இரண்டாம் உலகப் போரின்போது 415 கிலோ மீட்டருக்குக் கட்டப்பட்ட தாய்லாந்து – பர்மா இரயில் பாதை குறித்து தமிழில் சில புனைவு முயற்சிகள் நடந்துள்ளன. ஆர்.சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்‘, அ. ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’, ‘புதியதோர் உலகம்’, சா. அ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’, கோ.புண்ணியவானின் ‘கையறு’ ஆகிய நாவல்களும் சை.பீர்முகம்மதுவின் ‘வாள்’ என்ற சிறுகதையும் உடனடியாக நினைவுக்கு வரக்கூடியவை. இது தவிர 2009இல் சீ. அருண் எழுதிய சயாம் – பர்மா மரண இரயில்பாதை என்ற கட்டுரை நூல், 2014இல் சிங்கையின் நாடோடிகள் கலைக்குழு தயாரித்த ஆவணப்படம் (Siam Burma Death Railway) ஆகியவையும் இந்தக் கொடும் வரலாறு குறித்து மலேசிய – சிங்கை பிரதேசத்தில் தொடர் உரையாடல்களாக இருப்பதற்கு சான்றுகளாகின்றன.
மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு இரயில் பாதை முயற்சியாகக் கருதப்படும் இந்தக் கறுப்பு வரலாற்றை ஒட்டி, உலக அளவிலும் கவனம் உண்டு. ‘The Bridge on the River Kwai’ (1957), Return from the River Kwai (1986) போன்ற திரைப்படங்களும் அதில் முக்கியமானவை. மலேசியாவில் நண்பர் சாமிநாதன் முனுசாமி போன்றவர்கள் இதை ஒட்டிய தரவுச் சேகரிப்புக்கு கடுமையாக உழைத்துள்ளனர். போதிய உணவு இல்லாமை, சுகாதாரமற்ற சூழல், கொடிய மிருகங்களின் தாக்குதல்கள், நோய்மை, ஜப்பானியரின் மிகக் கொடூரமான தண்டனைகள் என 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 16,000 போர்க் கைதிகளும் இறந்துபோன அந்த நிலம் குறித்து புனைவுகளில் சொல்லப்பட்டவை கொஞ்சம்தான். போர்க்கைதிகளாகச் சிக்கி மீண்ட ஆங்கிலேயர்கள் எழுதிய நூல்களும் டையரிக் குறிப்புகளும் எண்ணற்ற புனைவுக்கான தரவுகளைச் சுமந்தே உள்ளன.
எவ்வளவு எழுதித் தீர்த்தாலும் கனவுகளைச் சுமந்துகொண்டு இந்நாட்டுக்கு பிழைப்புத் தேடி வந்த நம் மூதாதையர்களின் அலறல் சத்தம் ஓய்ந்தபாடில்லை. அரை உயிரோடு புதைக்கப்பட்டதும், முழுப பிரக்ஞையில் இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்ததும், வெடிவைத்த கற்களுக்கிடையில் நசுங்கி மடிந்ததும், புண் உடலில் புழுவைத்த ரணத்தோடு அழுது அழுது அழுகிச்செத்ததும் என திரண்டு வரும் தகவல்கள் அனைத்திலும் ரத்த வாடை.
இத்தனை துன்பம் தோய்ந்த ஒரு வரலாற்றுத் தருணம் ஒன்று சமகாலத்தில் புனைவாக மாறும்போது அது குறித்த எதிர்பார்ப்புகள் வருவது இயல்பு. காரணம், அதற்கு முன் அந்த நிகழ்வு குறித்து அடுக்கடுக்காக இருக்கும் தரவுகளும் புனைவுகளும் ஒருவகையில் புதிய முயற்சிகளை அளவிடுவதற்கான எல்லைகளாகின்றன. அடர்வனத்தில் நுழையும் ஒருவனின் புதிய வழித்தடம் எங்கிருந்து தொடங்கி எவ்வாறு முடிகிறது என்ற எதிர்பார்ப்பாக அதைச் சொல்லலாம். அப்பயணத்தில் அதுவரை அறியப்படாத ரகசியம் ஒன்று அவன் வழியாக வரக்கூடும் என்ற ஏக்கமாகக்கூட இருக்கலாம். எண்ணற்ற புனைவுச் சாத்தியங்களைக்கொண்ட ஒரு துன்ப வரலாற்றின் எந்தப் பகுதியை எழுத்தாளன் தன் தனித்துவமான ஆற்றலின்வழி வாசகனுக்கு அனுபவமாக்கப் போகிறான் என்ற கேள்வியில் இருந்தே வரலாற்று புனைவுகளின் வாசிப்பு தொடங்குகிறது.
2021ஆம் ஆண்டு எழுத்தாளர் இந்திரஜித் எழுதிய ‘ரயில்’ நாவல் வெளிவந்தபோது அத்தகைய ஆர்வத்துடன்தான் வாசிக்கத் தொடங்கினேன்.
இந்திரஜித் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் 1989இல் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் சிங்கப்பூர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்த அவர், சிங்கப்பூர் -மலேசியாவில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். 70களில் மலேசியாவில் தொடங்கிய புதுக்கவிதை இயக்கத்தில் பங்களித்துள்ளார். மலேசிய, சிங்கை இதழ்களுடன் தமிழக இதழ்களிலும் அவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இதழில் தொடர் பத்தி எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, பத்தி என பலவகையான படைப்பாக்கத்திலும் ஈடுபட்டு வரும் இந்திரஜித், திசை, திசைகள் என்ற மாத இதழையும் சில காலம் நடத்தியுள்ளார். கிண்டலும் கேலியும் நிறைந்த எளிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். சுனைவிடும் மூச்சு – கவிதை (1998), வீட்டுக்கு வந்தார் – சிறுகதைத் தொகுப்பு (2006), புதிதாக இரண்டு முகங்கள் – சிறுகதைத் தொகுப்பு (2008) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இதில் ‘வீட்டுக்கு வந்தார்’ எனும் சிறுகதை குறித்து பேசிவிட்டு நாவலுக்குச் செல்வது நல்லது.
ஜப்பானியர்களின் ஆட்சி முடிந்த காலம் அது. ஆனால் ஜப்பானிய ஆட்சிக் காலத்தில் தோட்டத்துக் கிராணியான நம்பியார் என்பவர் ஜப்பானியர்களின் கட்டளைப்படி சயாமுக்கு தண்டவாளம் அமைக்க கூலிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து அனுப்புகிறார். நம்பியாரால் பிடித்துக்கொடுக்கப்பட்டவர்கள், அப்படிப் பிடித்துச் செல்லப்பட்டதால் உறவுகளை இழந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் என பலரது சாபங்களை வாங்கிக்கொண்டு புதிய ஊருக்கு வருகிறார். அங்கு நம்பியாரைச் சந்திக்க வரும் துரைசாமி என்பவரும் அவ்வாறு பிடித்துக்கொடுக்கப்பட்டவர்தான். ஆனால் அவர் கோபமாக வரவில்லை. அவர் தன்னுள் இருக்கும் இருளை அகற்ற நினைக்கிறார். அதற்கு நிபந்தனையில்லாமல் எல்லாரையும் மன்னிக்க வேண்டி இருக்கிறது. அந்த மன்னிப்பை வழங்க வருகிறார்.
இந்திரஜித்தின் ‘வீட்டுக்கு வந்தார்’ (2006), ‘புதிதாக இரண்டு முகங்கள்’ (2008) ஆகிய இரு சிறுகதை தொகுதிகளையும் வாசித்திருக்கிறேன். அவரது புனைவுக்தியில் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் சில சிறுகதைகளில் அவர் சென்று தொடும் தருணங்கள் அசாதாரணமானவை. ஒரு அசல் கலைஞன் மட்டுமே சென்று சேரக்கூடிய இடங்கள் அவை. ‘வீட்டுக்கு வந்தார்’ சிறுகதையில் மன்னிப்பை வழங்க வரும் துரைசாமி போன்ற ஒரு கதாபாத்திரத்தை இக்களம் வைத்து எழுதப்பட்ட எந்த ஒரு புனைவிலும் நான் வாசித்ததில்லை. துரைசாமி கிராணியின் சுயநலத்தால் மொத்தக் குடும்பத்தையும் இழந்தவர். அவர் இல்லாத நிலையில் மனைவி வேறொருவனை மணக்கிறாள். மகன் ஊரைவிட்டுச் சென்று விடுகிறான். எதுவும் அற்ற நிலையில் துரைசாமியால் என்ன செய்துவிட முடியும். அவரால் மன்னிப்பு வழங்கமுடியும். காலம் ஆற்றாமல் விட்டு வைத்துள்ள தழும்புகளில் தடவிக்கொடுக்க முடியும். உனக்கு வாழ்வில் துன்பம் ஏதேனும் நடந்தால் அதற்கு என் கோபம் காரணமல்ல எனச் சொல்லிச் செல்ல முடியும். ஆவணங்களைவிட புனைவுகள் ஏன் மகத்தான இடத்தை அடைகின்றன என்பதற்கு இதுபோன்ற ஆக்கங்கள்தான் சான்று. வரலாறு பிரமாண்ட மலையென்றால், புனைவு அதிலிருந்து கிளம்பி மேலே செல்லும் அதிகாலை பனிக்கூட்டம்.
இந்திரஜித் சிறுகதைகளை வாசிக்கும்போது அதன் புனைவு உக்தியின் மீது எனக்கு எழும் முதல் விமர்சனம் அதில் உள்ள அலட்சியத்தன்மை எனலாம். வைரங்களைக்கொண்டு பல்லாங்குழி ஆடுவதுபோல விளையாட்டுத்தனமாக அவை நிகழ்த்தப்பட்டிருக்கும். சின்னத் திடுக்கிடலுக்காக எழுதப்பட்ட குட்டிக்கதைகளாக, சுவாரசியத்துக்காக மட்டுமே எழுதப்பட்ட அனுபவத்துணுக்குகளாக மட்டுமே அவை நினைவில் உள்ளன. அதற்குத் தோதாக அவரது அங்கத மொழி துணை நிற்கிறது. சற்றும் குறைவில்லாமல் ‘ரயில்’ நாவலும் இந்தப் பண்புகளோடு மட்டுமே புனையப்பட்டுள்ளது.
***
நாவலின் கதை மிக எளிமையானது. மையக் கதாபாத்திரங்கள் துரை மற்றும் சம்பா. துரை ரப்பேச்சா என்ற பெண்ணை மணமுடித்தவன். அவளை அகலாத மனதோடு காதலிப்பவன். இருவருக்கும் மணி என்ற மகன் உண்டு. சயாம் – பர்மா தண்டவாளம் அமைக்கும் பணியில் சிக்கி மீண்டு செல்பவன், ரப்பேச்சா அப்பாவின் சூழ்ச்சியால் கணேசன் என்பவனை மறுமணம் செய்திருப்பதை அறிகிறான். துரை இறந்துவிட்டதாக அவள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறாள். எவ்வித சலனத்தையும் காட்டாமல் அவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். தன்னுடன் சயாமில் ஒன்றாக இருந்த நண்பன் சம்பாவின் நினைவு அவனைத் துன்புறுத்துகிறது.
இருபத்து மூன்று பாகங்களும் நூற்று ஐம்பத்து இரண்டு பக்கங்களும் கொண்ட நாவலில் இவ்வளதுதான் கதையா என்றால். ஆம்! இது மட்டுமே கதை. ஏற்கனவே அவர் எழுதிய ‘வீட்டுக்கு வந்தார்’ என்ற சிறுகதையில் வரும் துரைசாமியின் சொல்லப்படாத கதையை இதில் சற்று விரித்துள்ளார் எனச் சொல்லலாம்.
நாவலில் அடிப்படையான சிக்கல் ஆசிரியரின் நையாண்டி மொழி. இந்திரஜித்தைத் தொடர்ந்து வாசிப்பவனாக அவர் இந்த நையாண்டி மொழியைத் தீவிரமாக வந்தடைந்தது பத்திகள் எழுதத் தொடங்கியபோதுதான் எனப் புரிந்துகொள்கிறேன். ஒரு துன்பமான புனைவில் நகைச்சுவை இருக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் ஒரு கலைஞனுக்கு அங்கதத்துக்கும் நையாண்டிக்குமான வித்தியாசம் புரிந்திருக்க வேண்டும். மொத்த துன்பியல் நிகழ்வையும் அங்கதத்துக்குள்ளாக்குவது என்பது தேர்ந்த கலைஞர்கள் கையில் எடுக்கும் சவால். (எ.கா: கண்டிவீரன் – ஷோபாசக்தி) அதன் வழி அவர்கள் மொத்த வரலாற்றையும் திட்டமிட்டே அபத்தமாக்குவார்கள். அல்லது பா. சிங்காரம்போல அங்கதத் தருணங்களை உருவாக்கி அதன் கொடுமையை மேலும் உக்கிரமாக மாற்றுவார்கள். இந்திரஜித் செய்வது இவை இரண்டையும் அல்ல. பத்திகளில் பழகிவிட்ட நையாண்டி மொழியை நாவலில் ஆசிரியர் குரலாக ஆங்காங்கு தெளித்து விடுகிறார். ஒரு புனைவில் ஆசிரியர் புகுந்து கருத்துச் சொல்வது இலக்கியத்தில் எத்தனை பலவீனமானதோ அதேபோன்றது ஆசிரியர் கூற்றாக வரும் இந்த நையாண்டிகள். இந்த நையாண்டி நடையே அவர் நாவலில் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறார் என்பதற்குச் சான்றாக உள்ளது.
நாவலுடன் விலகி இருப்பதென்றால் என்ன?
புனைவின் முதல் பணி வாசகனுக்கு ஏற்படுத்தும் கற்பனையின் வழி அவனுக்குத் தற்காலிகமாக ஒரு வாழ்வின் அனுபவத்தைக் கொடுப்பது. வாசகனிடம் இந்தக் கற்பனையை உருவாக்க ஆசிரியரால் ஒரு வாழ்வை கற்பனையாக வாழமுடிய வேண்டும். ஓர் இசைக் கலைஞர் தான் உருகிப்போகாத தனதிசையை, ஓர் நடனக்கலைஞர் தான் கலந்துபோகாத தனதசைவை, ஓர் ஓவியர் தான் நுழைந்து தொலையாத தனது வண்ணச்சிதறலை இன்னொருவருக்குக் கடத்த முடியுமா? ஒரு கலையின் முதல் வெற்றி என்பது கலைஞன் தன் கலையினுள் கலப்பதில் உள்ளது. இந்திரஜித் ‘ரயில்’ நாவலில் தனது கற்பனைக்கு எவ்விடத்திலும் இடம் கொடுக்கவில்லை. தனக்கு மிக எளிதாக எழுத்தில் உருவாகக்கூடிய மழை நேரம், சிலந்தி கூடு கட்டும் காட்சி, கடல் அலைகளின் வருகை, கடலாமைகளின் வாழ்வு என சில இடங்களில் நுட்பமான சித்தரிப்புகளை உருவாக்குகிறார். அதன்வழி தன் புனைவின் போதாமையைச் சமன் செய்ய முனைகிறார். அந்த கொடும் நிலச்சூழலின் ஒரு தருணத்தைக்கூட அவரால் கற்பனையால் காணமுடியவில்லை. அவர் மனதில் ஓரிடத்தில்கூட அந்த கோர நிலம் விரியவில்லை. அதற்கான எந்த மனத்தயாரிப்பும் அவரிடம் இல்லை.
இதனால் கற்பனையாகக் காணமுடியாத ஒரு வாழ்வு குறித்து எழுதும்போது நிகழும் பிழைகள் மிகச் சாதாரணமாக இந்த நாவலில் காணக்கிடைக்கின்றன. எந்தப் பாத்திரத்தின் உளவியலுக்கான நியாயமும் நாவலில் இடம்பெறவில்லை. பக்கத்தில் நிற்பவன் முகத்தை மறைக்கக்கூடிய கடும் மழையில் சம்பாவும் துரையும் எவ்வித சிக்கலும் இல்லாமல் நிகழ்த்தும் நீண்ட உரையாடலை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அதேபோல மதியம் தன்னால் தவறுதலாக வெட்டப்பட்டு குடல் சரிந்தவனைப் பற்றிக் கவலையில்லாமல் அன்று இரவே சம்பா பேசும் வீர வசனத்தைச் சொல்லலாம். தவறுதலாக ஒருவனின் துன்பத்துக்குத் தான் காரணமாகிவிட்டோம் என்ற அழுத்தம் ஒன்றும் இல்லாமல் விடிய விடிய பேசி மறுநாள் விடிந்தபிறகு தங்க நிற பூவை பறிக்கவும் செல்கிறான். தன்னைப் பல நூறாக உடைத்து அந்தக் கதாபாத்திரமாக மாறும் நாவலாசிரியர் ஒருவர் இந்த எளிய தவறுகளை அனுமதித்திருக்கமாட்டார்.
ஒரு கொடும் வரலாற்றை பின்புலமாகக்கொண்டு, தன்னிடம் இருக்கும் எளிய காதல் கதையை மட்டும் நம்பி நாவல் புனையத் தொடங்கியதால் வலிந்து காட்சிகளை உருவாக்கும் நிலை ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ளது. மேலே சொன்னதுபோல, தன் காதலி நினைவில் இருக்கும் சம்பாவை அடிக்கும் சிப்பாயின் வயிற்றை சம்பாவின் கோடாரி தீண்டி சிப்பாயின் குடல் சரிகிறது. அந்த சிப்பாய் ஒரு கவிஞனாக இருக்கிறான். அவன் நல்லவனும்கூட. மற்ற ஜப்பானியர்கள் கூலிகளை அடிக்காமல் இருக்க அவனே முன்வந்து போலியாக அடிக்கிறான். குடல் சரிந்து அறுவை சிகிச்சையில் அவன் காதலியை நினைத்துக்கொள்கிறான்; மரணிக்கிறான். இவையெல்லாம் அவசரமாக நாவலின் இரண்டு பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த சிப்பாயின் வருகையால் நாவலில் எந்த மாற்றமும் நிகழவில்லை. மாற்றம் நிகழ்வதற்கான ஆழத்தில் இந்நாவலில் எந்தப் பாத்திரமும் எடுத்துச்செல்லப்படவில்லை. அனைவரும் புகைமூட்டம்போலவே வந்து வந்து கலைகிறார்கள்.
இந்திரஜித் நீண்டகாலமாக எழுத்துறையில் இயங்குபவர். ஆனால் ஆரம்பக்கட்ட எழுத்தாளன் செய்யும் பிழைகள் மலிந்த நாவலாகவே ‘ரயில்’ புனையப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் கதாசிரியரின் மொழியில் சொல்லப்படுகிறது. நாவலில் பல இடங்களில் அவரே உள்ளே புகுந்து கருத்துச் சொல்வது ஒரு பக்கம் இருக்க அவரும் ஒரு கதாபாத்திரமாக மாறி உணர்ச்சிவசப்படுகிறார். சில இடங்களில் மற்றவர்கள் மனதில் என்ன உள்ளது எனச் சொல்லும் ஆசிரியரின் குரலே இன்னொரு இடத்தில் ‘என்ன பேசுகிறார் எனப்புரியவில்லை’ என்கிறது. வசனங்கள் எங்குமே கூலிகளின் குரலாக ஒலிக்கவில்லை. போதாக்குறைக்கு சயாம் காட்டில் இருப்பவர்களும் தோட்டத்தில் வாழும் காதலியும் என அனைவருமே அறிவுஜீவிகளாகவே நாவலில் வளம் வருகின்றனர். கவித்துவமாகவே பேசுகின்றனர். தத்துவங்களாக உதிக்கின்றனர். நம்பகமற்ற காட்சிகள்; நம்பகமற்ற வசனங்கள்; நம்பகமற்ற தருணங்கள். நாவலை நகர்த்தமுடியாமல் ஒரே அத்தியாயத்தில் இரு வேறு சூழல்களைத் திணித்து அதை ஒரு உத்திபோல காட்ட முயல்கிறார் ஆசிரியர்.
சயாம் – பர்மா ரயில் அமைக்கும் பின்னணியில் நிகழும் நாவலென்றால் கட்டாயம் அதன் தரவுகளைச் சொல்ல வேண்டுமா? அவசியம் இல்லை. முழுக்க அதில் உள்ள ஒரே ஒரு மனிதனின் உளவியலையும் மன ஓட்டத்தையும் சொல்ல புனைவாசிரியனுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அந்த உளவியல் நெருக்கடிகள் உண்டாகும் புறச்சூழலின் உக்கிரம் எழுந்துவராமல் அகத்தில் நிகழும் மாற்றத்துக்குக் காரணமாக உள்ள புற அழுத்தங்களைச் சொல்லாமல் அது முழுமை அடைவதும் இல்லை. ‘ரயில்’ நாவலைப் பொறுத்தவரை அகம் – புறம் என்ற இருவேறு தருணங்கள் குறித்து ஆசிரியரிடம் எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் நோக்கம் துரையின் காதல் ஏமாற்றத்தைச் சொல்வது. அந்த மெல்லுணர்ச்சி வெளிப்பாடே இந்த நாவலின் நோக்கம்.
இந்திரஜித் ஒரு கவிஞர். எனவே மனதின் நுண்மையான அசைவுகளையும் எண்ணங்களின் முரண் இயக்கங்களையும் நுணுக்கமாகவே சித்தரிக்க முடிகின்றது. ஓயாத வேலைகளால் பகல் நேரங்களின் இயக்கம் கனவுகளைப் போல மாறுவதாக ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். மற்றுமொரு இடத்தில் நரகம் போன்ற சயாம் காட்டுக்குப் பழகிவிட்டபிறகு ஊருக்குத் திரும்புவதில் உள்ள சங்கடத்தைச் சொல்கிறார். இப்படி நாவலில் ஆங்காங்கு மிளிரும் வரிகளே இந்திரஜித்தின் வருங்கால புனைவுகள் குறித்த நம்பிக்கையை விதைக்கின்றன. பாத்திகளில் அமைந்த மரவள்ளி தோட்டத்தில் நுழைவதை கானகத்தில் நுழைவதாக இனியும் நம்பமாட்டார் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன.