நம் இந்திய மனங்களுக்கு மகாபாரதம் வழியாக அறிமுகமாகும் சிகண்டி என்ற கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பீஷ்மர் என்ற ஆளுமையால் மட்டுமே நிலைகொள்கிறது. இந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டால் நாம் அருவருப்புடன் முகம் சுளிக்கும் அல்லது அவமானப்படுத்தும் ஒருவனாகத்தான் சிகண்டிஇருந்திருப்பான். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ வாசிக்கும் வரை நானும் தினசரி வாழ்வில் சிகண்டிகளைச் சந்திக்க நேர்ந்தால் ஒருவித அசூயையுடன் ஒதுங்கிச் சென்றவள்தான். ஆனால் வாசித்த பிறகு, தனது அன்னைக்காக ஒற்றை இலக்குடன் வாழ்ந்து வென்றவள் அவளென அறிந்தபோது மகாபாரத சிகண்டி மீதும் தனது பால் அடையாளத்தை சமூகத்தில் நிலை நிறுத்துவதைஒற்றை இலக்காகக் கொண்டு போராடும் மற்ற சிகண்டிகள் மீதும் பெரும் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது.
அதன்பிறகு 2019ஆம் ஆண்டுயோக்யகர்த்தாபயணத்தில் அர்ஜுனனின் காதலியாக சிகண்டியைக்கண்டபோது நான் அடைந்த அகவெழுச்சி அளவில்லாதது. மாமல்லபுரத்திலுள்ள இரதக் கோயில்களில் அர்ஜுனன் இரதத்திற்கு பக்கத்தில் திரௌபதி இரதம் அமைந்திருக்கும். ஆனால் யோக்யகர்த்தா டெய்ங் பீடபூமியிலுள்ள பாண்டவர் ஆலயங்களில் அர்ஜுனன் கோயிலுக்குப் பக்கத்தில் இருப்பதோ சிகண்டி (அங்கு அவளது பெயர் ஸ்ரீகண்டி) கோயில். ஒவ்வொரு பயணத்திலும் அந்த இடத்தில் என்னைக் கவர்ந்த ஏதாவது ஒரு பொருளை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருக்கும் நான் யோக்யகர்த்தாவிலிருந்து வாங்கி வந்த பொம்மைகள்தான் மேலே புகைப்படத்தில் இருப்பவை.
அர்ஜுனனின் காதலியாக சிகண்டி நின்றிருப்பதைப்பார்க்கும்போதெல்லாம் இப்பிரபஞ்சத்தின் மாபெரும் லீலையை எண்ணி எனக்குள் புன்னகைத்துக்கொள்வேன். ஒரு கணத்தில் சிகண்டினி, அர்ஜுனன் மறுகணத்தில் பிருகன்னளை, சிகண்டி என மாறி, மாறி தோற்றமளிக்கும் இருவரும் இப்புடவியின் ஒவ்வோர் உயிர்க்குள்ளும் நிகழும் முடிவிலா மாய ஆடலின் பிரதிநிதிகளாக நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமல்லாது இந்த ஆடலுக்குச் சாட்சியாகமும்மூர்த்திகளும் தங்களுக்குள் ஆண்மையையும் பெண்மையையும் சுமந்துகொண்டு நமக்கு அருள் பாலிக்கிறார்கள்.
ஆண்மைக்கும் பெண்மைக்குமிடையேயான ஆடல், ஆண்மைக்குள் குழந்தமையின் ஆடல்,ஆண்மைக்குள் பெண்மையின் ஆடல், பெண்மைக்குள் தாய்மையின் ஆடல், தாய்மைக்குள் பேய்மையின் ஆடல், தாய்மைக்குள் தெய்வத்தின் ஆடலென பற்பல அசைவுகளாகவும், அலகுகளாகவும் ஆடப்பட்டு இறுதியில் உக்கிரமாக அரங்கேறும் நடனத்திற்குப் பார்வையாளர்களாக வாசகர்களை அமரச்செய்து ஓர் உச்சகட்ட தரிசனத்தை அளிக்கிறது ‘சிகண்டி’நாவல்.
தீபன், ஈபு, சரா மூவரும் ‘சிகண்டி’ நாவலின் மையக் கதாபாத்திரங்கள்.இதில் ஈபு கதாபாத்திரம் சிகண்டியாகச் சுட்டப்பட்டாலும் நாவல் முழுதும் தீபனின் பார்வையில்தான் சொல்லப்பட்டுள்ளது.தீபனின் பிறவிச் சங்கிலியின் மற்றொரு கண்ணியான அவனது தாத்தாவின் கதை ஒரு தனி சரடாகச் சொல்லப்பட்டு,அவனுக்குள் எழுந்து அவனை அலைக்கழிக்கும் ஒரு கனவாக நாவலில் காட்டப்பட்டுள்ளது.
ஒரு வளர்ந்த நகரத்தின் இருள் உலகம் எப்படி இருக்குமோ அதைஅப்படியே படம் பிடித்துக்காட்டி இருக்கிறார் நவீன். தான் வாழ்வதற்காக எதையும் செய்யத்துணியும் மிருகங்கள் வாழும் ஓர் அடர் வனம் போலிருக்கிறது சௌவாட். ஆனால் அந்த மிருகங்களுக்கும் அவற்றுக்கான விதிகள், நியாயங்கள், சரிகள், காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு வாசகனாக சௌவாட்டிற்குள் நுழைகையில் முதலில் தோன்றும் அதிர்ச்சியும் அறச்சீற்றமும் மெல்ல, மெல்ல மங்கிப்போய் நாமும் அந்த இருளுலகத்தின் அங்கத்தினராக மாறிப்போவது நவீனின் படைப்பாக்கத்தின் வெற்றி என்றுதான் கூறவேண்டும்.
‘சிகண்டி’ நாவல் திருநங்கையரைப் பற்றியதா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்ற இரண்டு பதில்களையும் ஒரு வாசகன் சொல்ல இயலும். ‘இல்லை’ என்ற பதிலுக்கான காரணமாக நாவலின் மையம் ஆண்மையை மீட்டெடுக்க முயற்சிக்கும் தீபனின் இழிவான பயணம் மட்டும்தான் என்றும் ‘ஆம்’ என்ற பதிலுக்கான காரணமாகதீபனின் இழிபயணத்தின் தோற்றுவாயாகஈபு என்கிற திருநங்கையும் முற்றுப்புள்ளியாகசரா என்கிற திருநங்கையும் இருப்பதென்றும் சொல்லலாம்.
“ஏன் நாவலாசிரியர்தீபனின் பார்வையில் இந்த நாவலை எழுதினார்?” என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சிங்கப்பூரில் எம்.ஆர்.டி ரயில் பாதையில்சில ரயில் நிலையங்கள் பூமிக்கு அடியில் இருப்பதுண்டு. அப்பாதையில் ரயிலில் பயணிக்கையில் மின்விளக்குகளோடு ரயில் ஒளிர்ந்தாலும் சாளரம் வழியே பார்க்கையில் வெளியே சூழ்ந்திருக்கும் இருள் என்னைத்தொந்தரவுபடுத்தும். அப்போது ஒருவிதஅழுத்தத்திற்கும் எரிச்சலுக்கும் நான் ஆட்படுவதுண்டு. ஆனால்அதே ரயில் சட்டென்று பூமிக்கு மேல் வருகையில் நாலா பக்கத்திலிருந்தும் பாய்ந்தோடி வந்து ரயிலை நிரப்பும் சூரிய ஒளி மனதுக்கு அத்தனை அமைதியையும் நிம்மதியையும் தரவல்லது.அகமும்புறமும் இருள் மட்டுமே சூழ்ந்ததீபனின் பாதையில் நவீன் என்னை அழைத்துச் சென்றிருக்காவிட்டால் சரா என்ற தூய ஒளியின் மகத்துவத்தை, மேன்மையை ஒருபோதும் உணர்ந்திருக்கவே மாட்டேன்.“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9)” என்ற வேத வரிக்கு ஏற்ப சரா மெய்யான தேவ ஒளியாக நாவலில் பிராகாசிக்கிறாள்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ வரிசையில் வரும் ‘பிரயாகை’ நாவலில் அர்ஜுனன் தனது பதினைந்தாவது வயதில் கொள்ளும் முதல் உடலுறவைப் பற்றி எழுதியிருப்பார். முதற்காமத்தில் அவமதிப்பை அடைந்தவன் பிறகெப்போதும் மீளமுடியாதென்றும் இப்புவியிலுள்ள காமுகர்களில் புணர்ந்தபின் வெறுப்பவர்கள்,வெறுத்தபின் புணர்பவர்கள் என இருவகை உண்டு என்றும் குறிப்பிட்டிருப்பார்.‘சிகண்டி’ நாவலின் தீபன் முதற்காமத்தில்அருவருப்பை அடைந்தவனாகவும் புணர்ந்தபின் வெறுப்பவனாகவும் காட்டப்பட்டுள்ளான். அந்த அருவருப்பாலும் வெறுப்பாலும் இழந்த ஆண்மையைத் திரும்ப பெறும் முயற்சியில் தனது அகங்காரத்தைப்போதையாலும் வன்முறையாலும் நிரப்பிக்கொள்கிறான்.அகத்தில் குழந்தமையைச் சுமந்து திரிந்தாலும் புறத்தில் ‘ஆண்மை’ என அவன் நினைக்கும் ஒன்றுக்காகப் போராடுபவன்தனது பல்லி துடிக்கத் தொடங்கி சில மணி நேரங்களில் அதை வெட்டி எறிந்து மீண்டும் ஒரு குழந்தையாகவே பகுச்சரா அன்னையின் மடிக்குள் அடைக்கலமாகிறான். குழந்தையாக வரும் சிகண்டி ‘பெண்மை’ என அவள் நினைக்கும் ஒன்றுக்காகப் பகுச்சரா அன்னை முன் தனது குறியை வெட்டி எறிந்து பல சிகண்டிகளுக்குத் தாயாக ஈபுவாக மாறுகிறாள். தாயானாலும் அநீதிகளுக்கு முன் பெருஞ்சீற்றம் கொள்ளும்பேயாகவும் இருக்கிறாள். தனக்குள்முகிழ்த்த பெண்மை, தன்னை ஆட்கொண்ட கலை, தன் உயிரைவிட மேலான காதல் என அலைக்கழியும் சரா தூக்குகயிற்றில் தனது அப்சரஸ் நடனத்தை ஆடி தெய்வமாகிறாள். உடலால் ஆண், மனதால் பெண், செயலால் தெய்வம் என நிலைகொள்ளும் சரா ‘சிகண்டி’ நாவலின் ஆக உன்னதமான கதாபாத்திரம்.
தீபன்,ஈபு, சரா மூவரும் முறையே பாவம், பழி, மீட்பு என முக்கோணத்தின் மூன்று புள்ளிகளாக நிற்கிறார்கள்.ஊழும் பலியும் தீபனையும் ஈபுவையும் இணைக்கும் கோடாகவும் மீட்பும் தியாகமும் தீபனையும் சராவையும் இணைக்கும் கோடாகவும் பெண்மையும் தாய்மையும் ஈபுவையும் சராவையும் இணைக்கும் கோடாகவும் இருக்கின்றன.
மீட்பர்கள் அனைவரும் தங்களைப் பலிகொடுத்துதான் பாவப்பட்ட ஆத்மாக்களை மீட்டெடுக்க வேண்டுமா?ஆயிரம் கைகள் கொண்ட குவான்-யின்னான சராவுக்குத் தீபனை மீட்டெடுக்க ஒரு கை கூட உதவவில்லையா?குவான்-யின்னின் கைகளில் இருக்கும் வில்லோ கிளை வளைவதற்கான குறியீடு. உடைவதற்கானது அல்ல. தீபன் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக வில்லோ கிளை காற்றில் அசைவதுபோல சரா அந்தரத்தில் ஆடினாளா?சராவின் மகத்தான தியாகத்திற்குத் தீபன் அருகதையானவனா? யாரும் ஒத்துக்கொள்ள மறுத்த அவளது பெண்மையை ஒரு மாத காலமே ஆனாலும் கூட முழு முற்றாக அங்கீகரித்த தீபனைவிட இத்தியாகத்திற்குப் பொருத்தமாக வேறு யார் இருக்க முடியும்? என பல கேள்விகள் நாவல் வாசிப்பின் ஊடாக வாசக மனதில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒரு நல்ல இலக்கிய படைப்பு இப்படியான கேள்விகளை எழுப்பாவிட்டால்தான் ஆச்சர்யப்படவேண்டும்.
பகுச்சரா அன்னையை மேட்டிலிருந்து கீழே கொண்டு வர மதுரைவீரன் மனித ரூபத்தில் வந்து உதவுவது போல வீரனின் பேரனனான தீபனைப் பள்ளத்திலிருந்து மேட்டிற்குக்கொண்டு வர பகுச்சரா அன்னை சரா வடிவில் வந்து நிற்கிறாள். மனிதர்களை வைத்து தெய்வங்களும் தெய்வங்களை வைத்து மனிதர்களும் ஆடும் நுட்பமான ஆட்டமும் ‘சிகண்டி’ நாவலில் நிகழ்கிறது.சிகண்டிக்கு உதவும் மாரிமுத்து,கெரெந்தோ சைன் போட்ட துரையை ஏமாற்றக்கூடாதென நினைக்கும் மாமா, பூஸ் பூனைக்காக கண்ணீர் சிந்தும் கண்ணன்,தீபனுக்காகத் தன் உயிரையே தரும் சரா என நாவல் காட்சிப்படுத்துகையில் அவர்களுக்குள் இருக்கும் கலைதான் இந்த நல்லியல்புகளுக்குக் காரணமோ என எண்ணத்தோன்றுகிறது. கலை மனிதனுக்குள் அறம், கருணை, ஈரம் அனைத்தையும் விதைத்துவிடுகிறது போலும்.
என் வாசிப்பில் நவீனின் முதல் நாவலான பேய்ச்சியிலிருந்த அழுத்தமும் கச்சிதமும் சிகண்டியில் சற்று குறைந்திருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டியுள்ளது. தகவல்களைக்கலையாக்குவதில்நவீன்வல்லவரென நண்பர்களிடம் நான்சொல்வதுண்டு. ஆனால் சிகண்டியில் இருள் உலகைப் பற்றி தான் சேகரித்த அத்தனை தகவல்களையும் சொல்லிவிடும் அவரது முனைப்பால் தீபனின் புற உலகம் நீண்டதாகவும் சற்று அயர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருந்தது. ஓர் உதாரணத்திற்கு காசியின் பைக் ரேஸ் பகுதியைச் சொல்லலாம்.இதுபோல இன்னும் ஓரிரு பகுதிகளை வெட்டி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
தனது புஜத்தில் கண்ணன் பூ ஒன்றை வரைகையில் “நா என்னா பொம்பளயா? பூ வரையுற” என்று தீபன் கேட்டவுடன் “நாளைக்கு அதுவா வாடி உழுந்துரும் மாமா” என கண்ணன் சொல்வான். அந்தப் பூ வாடி உதிராமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் சராவின் ரோஜா செடி அனாதையாகி இருக்காது. இந்த உலகில் அன்னையாக, காதலியாக, சகோதரியாக, மகளாகத் தோற்றமளிக்கும் ஒட்டுமொத்த பெண்மையும் ஆண்மையிடம் எதிர்பார்த்து ஏங்குவது உதிராத அந்த ஒற்றைப் பூவுக்காகத்தான்.