நாளை எழுத்தாளர் ஜெயமோகன் அறுபது வயதை நிறைவடைகிறார். வயது என்பது கூடுதலாக ஒரு வருடம். எல்லோருக்குமே அப்படி ஒரு வயது வரக்கூடியதுதான். ஆனால் ஆளுமைகளை நாம் தொகுத்துப் பார்க்கவும் அவர்களை இன்னொரு தலைமுறைக்கு மேலும் தீவிரமாகக் கடத்திச்செல்லவும் அது ஒரு சந்தர்ப்பம். ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையைக் கொண்டாட அப்படியான சந்தர்ப்பங்களைத் தவறவிடுதல் கூடாது. அவருக்கான ஒரு களஞ்சியத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆவலை முதலில் சொன்னது சு. வேணுகோபாலிடம். அவருக்கே அப்படி ஒரு திட்டம் இருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.
தன் மனதில் இரண்டு ஆண்டுகளாகத் தேக்கி வைத்துள்ள ஆசை என்றார். சேர்ந்தே செய்யலாம் என்றார். ஆனால் எனக்கு நிச்சயம் விஷ்ணுபுரம் இலக்கியக் குழு அப்படி ஒரு முயற்சி எடுக்கக்கூடும் எனத் தோன்றியது. தனித்தனியாகச் செய்வது சரிவராது என்பதால் அவர்களுடன் சேர்ந்து செய்வதே முறையாக இருக்கும் என நினைத்தேன். நண்பர் ஜா.ராஜகோபாலன் அவர்களிடம் பேசியபோதுதான் அது குறித்த திட்டம் உள்ளதையும் சுனில் கிருஷ்ணனுடன் முன்னமே உரையாடல் நிகழ்ந்துள்ளதையும் கூறினார்.
அது ஆச்சரியமானது.
தன் முன்னோடிகளுக்கு ஜெயமோகன் சிறப்பிதழ்களை வெளியிட்டதுண்டு. ஆனால் ஜெயமோகனுக்கான சிறப்பிதழ் குறித்த திட்டம் இளம் எழுத்தாளர்கள் பலருடைய மனதிலும் ஒரே சமயத்தில் உருவாகி வந்துள்ளது வியப்பளித்தது. சுனில் கிருஷ்ணனே இவ்விதழுக்கான குழுவை இணைத்தார். ‘ஒரு சாலை மாணாக்கர்’ என குழுவுக்குப் பெயர். ‘சியமந்தகம்‘ என்பது இதழின் பெயர்.
மலேசிய இலக்கியத்தைத் தொடர்ந்து கவனித்து வருபவனாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகத்திலிருந்து வரும் ஆளுமைகளால் மலேசிய இலக்கியத்தில் மாற்றங்கள் நிகழ்வதை அறிந்துள்ளேன். 1950களில் கு. அழகிரிசாமியின் வருகையால் தமிழ் நேசன் நாளிதழ் வழி மலேசிய எழுத்தாளர்களின் படைப்புத்திறனில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 1970களில் இரா. தண்டாயுதம் அவர்கள் மலாயா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டபோது வரையறைக்குட்பட்ட நவீன இலக்கியம் குறித்த உரையாடல்கள் இருந்தன. 1980களில் சுந்தர ராமசாமியின் வருகை அன்றை நவீன இலக்கியக் களம் என்ற அமைப்பின் மூலம் தீவிர இலக்கிய உரையாடல்களுக்கு வித்திட்டது. 1990களின் ஜெயகாந்தனின் வருகை தேங்கிக் கிடந்த சிறுகதைப் போக்கில் எழுச்சியை ஏற்படுத்தியது. 2000இல் ஜெயமோகனின் தொடர் வருகை மலேசிய நவீன இலக்கியத்தில் பெரும் பாய்ச்சலை உண்டாக்கியது. ‘சியமந்தகம்’ இதழில் அது குறித்தே ‘பெருங்களிறின் வருகை‘ எனும் கட்டுரை எழுதியுள்ளேன். அந்தரங்கமாக என்னுள் நிகழ்ந்த மாற்றங்களையும் அதில் பதிவு செய்துள்ளேன். விரைவில் அது அத்தளத்தில் பதிவேறும்.
ஜெயமோகனிடம் நான் என் வாழ்வியலுக்காகக் கற்றது அதிகம். அந்தக் கட்டுரையில் சொல்லாத சிலவற்றை மட்டும் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
முதலாவது, நான் அவருடன் பயணித்தவரை ஒருபோதும் ஓர் எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறுகளை ஜெயமோகன் செய்ததில்லை. அவரது விமர்சனங்கள் அனைத்தும் படைப்பிலக்கியம் மீதுதான் இருக்கும். அல்லது கருத்தியல் ரீதியான மாற்று அபிப்பிராயங்களை முன்வைப்பார். அதுபோல தனக்கு நெருக்கமான நண்பர்கள் குறித்துப் பிறர் பேச முயன்றாலும் அப்போதே அவ்வுரையாடலை நிராகரிப்பதையும் பார்த்துள்ளேன். இலக்கிய உலகம் மட்டுமல்ல, தான் பணியாற்றும் சினிமா உலகம் குறித்தும் அவரிடமிருந்து கிசுகிசுக்கள் வந்ததில்லை. ஆனால் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது. ஆனால் இதற்கு நேரெதிராகவே ஜெயமோகனுக்கு நிகழும். மலேசியாவுக்கு வரும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஜெயமோகன் குறித்த தவறான அபிப்பிராயத்தை இங்குள்ளவர்களின் மனதில் விதைக்கப் போராடுவதைப் பார்த்துள்ளேன். இதை நான் ஏற்கனவே பதிவிட்டபோது பிரபல எழுத்தாளர் ஒருவர் பகிரங்கமாகவே என்னைத் திட்டினார். நான் ஜெயமோகனுக்கு அடிமையாகிவிட்டதாகக் கூறினார். ஆனால், இன்றுவரை ஜெயமோகனுடனான என் அனுபவம் என்பது இதுதான். சல்லிச்சொற்கள் அவர் நாவிலிருந்து உதிர்ந்ததை நான் கண்டதில்லை.
இரண்டாவது, ஒருபோதும் கீழ்மையெனக் கருதும் ஒன்றை எழுத்தாளன் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியபடியே இருப்பவர் ஜெயமோகன். உதாரணமாக, ஒன்றைக் கூறலாம். பேய்ச்சி தடை செய்யப்பட்டபோது பல்வேறு தரப்பிடம் இருந்து அழைப்புகள் வந்தன. அதில் ஜெயமோகனின் அழைப்பு நான் என்றும் நினைவில் வைக்கக்கூடியது. “உனக்கு மலேசியாவில் உள்ள மூத்த எழுத்தாளர்களிடம் இருந்து ஆதரவான குரல் வராமல் இருக்கலாம். அது அப்படித்தான். ஆனால், ஒருவேளை இன்னொருவருக்கு, அது உன் எதிரியாக இருந்தாலும் இப்படி ஒரு நிலை வந்தால், அவருக்குப் பக்கத்தில் இருந்து குரல் கொடுக்க வேண்டிய முதல் மனிதன் நீயாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் மனம் சுருங்கும். சுருங்கிய மனதில் பெரிய படைப்புகள் எழாது,” என்றார். எவ்வளவு விமர்சிக்கப்பட்டாலும் ஜெயமோகன் அதையே செய்தும் வருகிறார். நல்ல இலக்கியச் சூழலுக்கு எதிராகவோ இலக்கியவாதிக்கு எதிராகவோ நிகழும் ஒன்றுக்கு வெளிபடும் முதல் எதிர்குரல் அவருடையதாகவே உள்ளது.
மூன்றாவது, படைப்பாளி உலகியலில் இணைந்து வாழ்ந்தாலும் அது குறித்த ஆடம்பரமான திட்டங்கள் படைப்பிலக்கியத்திற்குத் தடையாகும் என்பதை 2006 முதல் அவர் எனக்கு உணர்த்தி வருகிறார். பதவி உயர்வுக்காகப் பணியிடத்தில் வேலை செய்வது, சொத்துகள் சேர்ப்பதற்காக நேரத்தை விரையமாக்குவது, பகட்டு வெளிப்பாட்டுக்காக அறிவைப் பிசைந்துகொண்டிருப்பது என எவையெல்லாம் படைப்பு மனதை பாதிக்கும் என அவரைப் பார்த்து நான் கற்றுக்கொண்டவை அதிகம். நான் 2005இல் வேலைக்கு அமர்ந்தேன். 2006இல் ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு வேலையிடத்தில் என் எல்லைகளை நானே வகுத்துக்கொண்டேன். இன்று ஜெயமோகனுக்கு சினிமா துறை சில வசதிகளைக் கொடுத்துள்ளது. ஆனால் அவையெல்லாம் இல்லாதபோதே அவர் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், காடு போன்ற பெரும் படைப்புகளை எழுதினார். நவீன இலக்கிய முன்னோடிகள் எனும் நூல் வரிசையைக் கொண்டுவந்தார். இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். இதழ் நடத்தினார். இன்றைய அவர் சாதனைகளுக்குச் சூழல் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கலாம். அது பணி விரைவுக்கு உதவுமே தவிர உருவாக்கத்திற்கு அல்ல. நெருப்புக்கு தன்னை தக்க வைக்கத் தெரியும்; நெய்யிடுவதால் மட்டுமே அது நிலைப்பதில்லை.
நான்காவது, தான் கொண்ட நோக்கத்திற்கு அவர் உண்மையாக இருப்பதைச் சொல்லலாம். ஒருமுறை நாங்கள் கேமரன் மலைக்குச் சென்றிருந்தோம். நான்கு மணிவரை உற்சாகமாக இருந்தவர் மாலை நெருங்கும்போது மெல்ல மெல்ல ஆவி பிடித்தவர்போல மாறினார். பேச்சைக் குறைத்துக்கொண்டு அறைக்குச் செல்ல வேண்டும் என்றார். நாங்கள் குழுவாகச் சென்றதால் மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் மட்டும் அவருடன் சென்றேன். ஐந்து மணிக்கு எழுத ஆரம்பித்துவிட்டார். இரவு பத்துமணிவரை எழுதிக்கொண்டே இருந்தார். ஜெயமோகன் முழுக்க வாழ்வது படைப்பிலக்கியத்திற்குள்தான். அவ்வப்போது அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் அதற்குள் அவசரமாகத் திரும்பிவிடுவார். நானறிந்து எல்லா பெருங்கலைஞர்களும் அவ்வாறானவர்கள்தான். இசை, ஓவியம், நடனம் என அவர்களின் மனம் அதற்குள் மட்டுமே திளைக்கிறது. எழுத்தாளனுக்கும் அந்த நீடித்த ஈடுபாடு மட்டுமே தன்னை தன் கலையின் மூலம் அறிவதற்கான சாத்தியங்களை உருவாக்குகிறது.
ஜெயமோகனை இளம் படைப்பாளிகள் ‘ஆசான்’ என அழைப்பதை சிலர் கிண்டல் செய்வதைக் காண்பதுண்டு. அதனுள் இருக்கும் கசப்பைப் பார்க்கும்போது வருத்தமாகவே இருக்கும். அது அவர்கள் தாழ்வுணர்ச்சியில் இருந்து எழும் கசப்பு. உண்மையில் இளம் படைப்பாளிகளுக்கு குரு பற்று என்பதெல்லாம் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் குறைவு. மிக எளிதாக யாரையும் நக்கல் அடித்துச் செல்லும் மனநிலையில் உள்ளவர்கள் பலர். ஆனால் அந்த இயல்பான துடுக்குத்தனங்களை மீறியே அச்சொல் ஒருவர் வாயிலிருந்து பிறக்கிறது. அப்படி அழைக்கப்படும் தகுதியை ஜெயமோகன் இயல்பாகவே வந்து அடைந்துள்ளார் என்றே சொல்வேன். நான் பலமுறை அவர் எவ்வாறு ஆசிரியராக இருக்கிறார் என்பதைக் கண்டு வியந்துள்ளேன்.
2012இல் தொடர்ந்து நாவல்கள் குறித்து வல்லினத்தில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல். ‘புயலிலே ஒரு தோணி’ குறித்த கட்டுரையைச் சுட்டி, “நீங்கள் இதுவரை எழுதியதில் இதுதான் முதன்மையானது,” எனக் குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஆச்சரியம். உண்மையில் எனக்கும் அதுவே முக்கியமான கட்டுரையெனத் தெரிந்திருந்தது. இது எனக்கு மட்டும் நிகழவில்லை. இளம் எழுத்தாளர்கள் பலரையும் அவர் இவ்வாறு கருதி வாசிக்கிறார். கவனிக்கப்பட வேண்டியவை குறித்து உடனடியாக குறிப்பு எழுதுகிறார். தன்னை எவ்வளவு வசை பாடியிருந்தாலும் தகுந்ததைப் பாராட்டுகிறார். எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் ஏமாற்றம் கொடுக்கும் படைப்புகளை விமர்சிக்கிறார். கடைசியாக 2020இல் மலேசிய நாவல்கள் குறித்து கட்டுரை எழுதிக்கொண்டிருந்தபோதும் “ரெங்கசாமி நாவல்கள் குறித்து எழுதியதுதான் முழுமையானது. கோ. புண்ணியவானின் செலாஞ்சார் அம்பாட் குறித்து எழுதியதை இலக்கிய விமர்சனமாகக் கருதமாட்டேன்,” என்றார். அதுதான் ஆசான். “நான் முக்கியமாகக் கருதும் இளம் படைப்பாளிகளை கவனித்துக்கொண்டே இருப்பேன்,” என அவர் 2014 பினாங்கு முகாமில் சொன்னது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல எனப் புரிந்தது. அவர் கவனிக்கிறார் என்பதாலேயே எழுதுவதில் கூடுதல் கவனத்தைச் சேர்க்க வேண்டியுள்ளது.
உண்மையில் ஜெயமோகன் என் படைப்புகளில் நிராகரித்தவைகள் அதிகம். 2006களில் நான் ஜெயமோகனிடம் ‘கூகுள் சாட்’ மூலமாகவே தொடர்பு கொள்வேன். சில படைப்புகளை அனுப்புவேன். “மொண்ணையாக உள்ளது” என பதில் அனுப்புவார். நேரில் கவிதை புத்தகம் கொடுத்தால் வாசித்துவிட்டு “எப்போ கவிதை எழுதப்போறீங்க நவீன்?” என்று கிண்டலடிப்பார். ஒருமுறை சிறுகதையை வாசித்துவிட்டு அதை திரும்ப கொடுத்தபோது அச்செடுத்த காகிதம் நீரில் விழ “புனல் வாதம் கேள்விப்பட்டிருக்கீங்களா? தரமற்றது நீரோடு போகும்” என்றார். மலேசிய சிங்கப்பூர் களஞ்சியத்தை 2010இல் அவர் கையில் கொடுத்து ஆர்வமாகக் காத்திருந்தபோது மறுநாள் காலையில் காரில் ஏறியதும், அதில் இருந்த ஒரு படைப்புக்காக நான் ஏன் ஒரு தகுதியுள்ள இதழாசிரியராக இல்லை என்றே முதலில் பேசினார். அப்போதெல்லாம் சூழ்ந்துள்ள வசை கும்பலோடு ஓடிச்சென்று சேர துடிப்பொன்று உருவாவதுண்டு. ஆனால் நான் உள்ளுணர்வை மதிப்பவன். எனக்குத் தெரியும் அவர் என் ஆசிரியர் என்று. எந்த மன நெருடலுக்குப் பிறகும் அவரிடம் பணிந்து கற்க வேண்டும் என்பதை என் மனம் அறியும்.
இலக்கிய விமர்சனம் இல்லாமல் ஜெயமோகன் என்னைத் திட்டியும் இருக்கிறார். ஒருமுறை மின்னஞ்சலில். பின்னர் என்னை அவ்வளவு திட்டியிருக்க வேண்டாம் என மின்னஞ்சலிலேயே வாஞ்சையாகத் தடவிக்கொடுத்தார். பிறகொருதரம் ‘சிற்றிதழ் வரையறை’ குறித்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தார். ஏறக்குறைய புரட்டி எடுப்பதுதான். நான் அப்போது என் திருமண முறிவு குறித்த மனச்சிக்கலில் இருந்தேன். அதனால் நான் அதை வாசித்திருக்கவில்லை. நண்பர் ஶ்ரீதர் ரங்கராஜ் சொல்லி வாசித்தேன். அன்றிரவு ஜெயமோகனுக்கு அழைத்தேன். “என்னை அவ்வளவு திட்டியிருக்க வேண்டாம்,” என்றேன். கனிவாகப் பேசினார். நான் எனக்கு நடக்கும் சிக்கலைச் சொல்லவில்லை. ஆனால் அவருக்கு மறுப்பு எழுத ஒரு மாதம் எடுத்துக்கொண்டேன். அந்தக் கட்டுரைக்காகச் செலுத்திய உழைப்பில் அப்போதைய மனவீழ்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தேன். இதை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியிடம் கூறியபோது, “அதுதான் குரு. குரு என்பவர் உங்களை வாழ்த்தி மட்டும் மீட்பவர் அல்ல; வசைகள் வழங்கியும் மீட்கக்கூடும். குரு – சீடன் உறவு நாம் எளிதில் அறிந்துகொள்ள முடியாத ரகசியங்கள் கொண்டது,” என்றார்.
அப்படியானதுதான்.
அந்த ரகசியம் நிறைந்த பாதை இன்னும் நீடித்து நிலைக்க வேண்டும். அவரிடம் பெற்றுக்கொண்டதைக் கொண்டு இளம் படைப்பாளிகள் தங்களுக்கான தனிப்பாதையை உருவாக்குவதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை. அவரிடம் முரண்படுவதும் அதில் அடக்கம்தான்.
அவர் பிறந்தநாளை ஒட்டி தமிழாசியா மூலம் 60 தலைப்புகளில் அடங்கிய நூல்களைத் தருவித்து விரிவான வாசகர் பரப்புப்புக்குக் கொண்டு சென்றேன். மகத்தான படைப்பாளிகளை வாசிப்பதும் கலைஞர்களை மேலும் விரிந்த தளத்துக்குக் கொண்டுச் செல்வதும்கூட அவர்களை வணங்கும் முறைதான்.
ஜெயமோகனின் மேன்மைகளை நான் முழுவதுமாகக் கொண்டிருக்கவில்லை. என்னிடம் நிறைய தடுமாற்றங்கள் உள்ளன. ஆனால் உயர்ந்தோரிடம் ஒட்டி இருக்கும்போது நாம் புனைவாக ஏற்படுத்திக்கொள்ளும் நற்குணங்கள் என்றாவது விடுபடாமல் நீடித்து நம்முடனேயே நிலைக்கும் என்று ஏதோ செய்யுளில் படித்த ஞாபகம். அதை நம்புகிறேன்.
ஆசானுக்கு என் வணக்கங்கள்.