சிடிக் கொடுத்த 72,000 ரிங்கிட்டும் புத்தகக் காட்சியில் 100 ரிங்கிட்டும்

எழுத்தாளர் சங்கத்தின் ஆண்டறிக்கையை இன்று வாசிக்க நேர்ந்தது. அதில் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கு செடிக் (SEDIC) மூலம் ரி.ம 72,000 கொடுக்கப்பட்டதாகவும் அப்பணத்தை எழுத்தாளர் சங்கம் அவ்வமைப்பிடமே திரும்ப கொடுத்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. சங்கம் திட்டமிட்ட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு 240,000 ரிங்கிட் தேவைப்பட்டதாகவும் ஆனால் 72,000 மட்டுமே கிடைத்ததால் அப்பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டதாகவும் அந்த அறிக்கையிலேயே சங்கத்தின் பதிலும் உள்ளது.

இந்நிலையில் இன்று (1.5.2022) எழுத்தாளர் சங்கம் ஏற்று நடத்தும் புத்தகக் காட்சிக்கு மேசை ஒன்றுக்கு 100 ரிங்கிட் வசூழிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இந்த முரண் உண்மையில் ஆச்சரியமானது.

புத்தகக் காட்சி ஒரு சிறந்த திட்டம். இனி வருடம் தோறும் நடைபெற வேண்டிய திட்டம். ஆனால், இதை நடைமுறை படுத்தியுள்ள விதத்தால் நிச்சயம் சில எழுத்தாளர்கள் மட்டுமே லாபம் அடைய முடியும். ஒரு கண்காட்சியில் எல்லாருக்கும் கணிசமான அளவு நூல்கள் விற்பதில்லை. உதாரணமாக ஒருவர் கெடா அல்லது ஜொகூரிலிருந்து கோலாலம்பூர் வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குறைந்தபட்சம் இருநூறு ரிங்கிட்டாவது போக்குவரத்துக்குச் செலவு செய்ய வேண்டும். இவற்றோடு நூறு ரிங்கிட் வாடகையும் செலுத்தி ஒரு எழுத்தாளர் என்ன லாபம் பார்த்துவிட முடியும்? அத்தனை நூல்கள் எல்லாருக்கும் விற்பனையாகுமா?

சிடிக் கொடுத்ததாகச் சொல்லும் 72,000

இதில் தமிழக புத்தகச் சந்தையின் நிலை முற்றிலும் வேறானது. குறைந்தபட்சம் தங்கள் பதிப்பகம் மூலம் நூறு நூல்களை பதிப்பித்திருந்தால் மட்டுமே தைரியமாக கடை அமைக்க முடியும். அப்படியும் சிலர் நட்டமடைவதாக சொல்லப்படுவதுண்டு. பதிப்பகம் என்பது வணிக நிறுவனம். எனவே அதில் லாப நஷ்டங்கள் சாதாரணமானதுதான். ஆனால், ஒன்றிரண்டு நூல்களை மட்டுமே சொந்தப்பணத்தில் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள் நிலை அப்படியல்ல. மலேசியாவில் தனித்த ஆர்வத்தின் காரணமாகவே பலரும் நூல்களைப் பதிப்பிக்கின்றனர். அவர்களுக்கு இருக்கும் சுமையில் கூடுதலாக பணம் வசூலிக்க வேண்டிய அவசியம் என்ன?

‘சிடிக்’ போன்ற அமைப்புகள் கொடுக்கும் 72,000 ரிங்கிட்டை திரும்ப கொடுத்துவிட்டு எழுத்தாளர்களிடம் 100 ரிங்கிட் வசூல் செய்துதான் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா? இந்தக் கேள்வியில் உள்ள சில நுட்பமான சிக்கலையும் நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். அதாவது அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்கு மட்டுமே இத்தொகையை வழங்கியதாகவும் இதனை மற்ற நிகழ்ச்சிகளுக்கு உபயோகிக்க முடியாததால் திரும்ப வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

நான் ஆராய்ந்தவரை இந்தப் பணம் எதன் பொருட்டு சங்கத்துக்கு வழங்கப்பட்டதென போதுமான விபரம் ஆண்டறிக்கையிலும் இல்லை. ஆண்டறிக்கை என்பது மிக முக்கியமான ஆவணம். இன்னும் ஐம்பது வருடங்கள் கடந்தாலும் அதுவே இந்தச் சிக்கலின் பின்னணியைச் சொல்லப்போகிறது. சங்கத்தின் தரப்பினர் கூறிய புரிதலின் படி, குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்கு அப்பணம் வழங்கப்பட்டு மீண்டும் வழங்கப்படுவது சாத்தியம்தான். ஆனால் அது என்ன திட்டம் என்பது குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இல்லை. அதனை 72000 ரிங்கிட்டில் ஏன் செய்ய முடியாது என்பதற்கான நியாயங்கள் இல்லை. ஆண்டுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்குத்தான் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் என்பதும் இல்லை. நாளிதழில் வந்த செய்திக்கு நாளிதழிலேயே தெளிவு படுத்தலாம். நிலை இப்படி இருக்க இது மேலும் சந்தேகத்தையே வலுக்க வைக்கிறது. நம் சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பலனை ஏன் விட்டுக்கொடுத்தோம்? இது குற்றச்சாட்டு அல்ல; குழப்பம் மட்டுமே. தகுந்த பதில் கிடைத்தால் அனைவருமே தெளிவடையலாம்.

இப்போது இந்த புத்தகக் காட்சி ஒருவகையில் எழுத்தாளர்களே தங்களுக்காக ஏற்பாடு செய்துக்கொண்டதுபோலதான். ஒரு தனி மனிதன்கூட இந்த முயற்சியை முன்னின்று செய்யலாம். அந்த மண்டப வாடகை அதிக பட்சம் ஆயிரம் ரிங்கிட் வருமென்றால் பத்து மேசைக்கு மேல் உள்ள அனைத்துமே லாப கணக்குதான். எழுத்தாளர்களே ஒற்றுமையாக இணைந்து செய்தால் இதைவிட மலிவாகவே செலவிலேயே இந்தத் திட்டத்தை ஒருங்கமைத்திருக்கலாம்.

ஆண்டறிக்கையில்

இது ஒருபுறம் இருக்க, சிடிக் 72,000 கொடுத்துவிட்டதாக நாளிதழில் அறிக்கை கொடுத்துள்ள சூழலில் அதை திரும்ப செலுத்திவிட்டதாகவும் எழுத்தாளர் சங்கம் நாளிதழில் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும் அல்லவா? ஒரு அமைப்புக்குக் கிடைக்கும் பணம் என்பது வணிக நிறுவனத்துக்குக் கிடைக்கும் பணமல்ல. அது அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் நலன் காக்க வழங்கப்படும் நிதி. திட்டத்துக்கு ஏற்ற தொகை அமையாவிட்டால் தொகைக்கு ஏற்ப திட்டத்தை வகுப்பதுதானே அறிவுடமை. சீடிக் அமைப்பில் பேசி மாற்று திட்டங்களுக்கு உபயோகிக்க அனுமதி பெறுவதுதானே தலைமைத்துவ பண்பு.

அப்பணத்தைக் கொண்டு எத்தனையோ நல்ல திட்டங்கள் வகுக்கலாம். குறைந்த பட்சம் 20 மலேசிய எழுத்தாளர்களின் நூல்களையாவது பதிப்பித்திருக்கலாம். எழுத்தை மொழியை மட்டுமே நம்பி முதுமையில் வறுமையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கான உதவித்தொகை வழங்கியிருக்கலாம். இதேபோன்ற புத்தகச் சந்தையை மாநிலமெங்கும் செய்திருக்கலாம். குறைந்தபட்சம் இந்த புத்தகச் சந்தையில் அதிகமான வாடிக்கையாளர்கள் வர, ஒரு எழுத்தாளருக்கு குறைந்தபட்சம் 500 ரிங்கிட்டுக்காவது நூல் விற்பனையாக திட்டம் வகுக்கலாம். அதற்கேற்ற கூட்டத்தை அழைத்துவரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். புகழ்ப்பெற்ற பேச்சாளர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.

எழுத்தாளர் சங்கம் என்பது அதன் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் சொந்த நிறுவனமாக இருந்தால் அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால் இது அறுபது ஆண்டுகளாக இயங்கி வரும் இயக்கம். இயக்கம் என்பது எழுத்தாளர்களின் நன்மைக்காக உருவானது. தனி மனிதர்களின் உணர்ச்சிகளை ஒட்டி அதை மடக்கி வைக்கக்கூடாது.

இது குறித்தெல்லாம் நம் எழுத்தாளர்கள் குறைந்தபட்சம் சிந்திக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. குறைந்தபட்சம் தங்கள் நிலைப்பாட்டை ஆன்ம விசாரம் செய்துக்கொள்ளலாம். அப்படிக் கிடைத்த பதிலை அச்சத்தினாலோ கூச்சத்தினாலோ வெளியே சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஆனால் மௌனம் காக்கும் எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசீலனை செய்ய இந்த சிந்தனை உதவக்கூடும்.

இதுபோன்ற மாற்று கருத்தை முன்வைக்கும்போது கடந்த காலங்கள் எழுத்தாளர்களே அழைத்து திட்டியதும் உண்டு. வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். அவர்கள் அறியாதவர்கள். தொடர்ந்து பேசி பேசிதான் புரிய வைக்க வேண்டும். எங்கு யார் நன்மை செய்கிறேன் எனச் சொன்னாலும் அதுகுறித்த குறைந்தபட்ச சிந்தனையும் இல்லாமல், பின்னால் ஓடும் ஆட்டு மந்தைகளாகிவிட்டோம். இது குறித்து பேசும் என்னைப் போன்ற சிலருக்கு தொடர் வசைகளும் மிரட்டல்களும் மொட்டைக்கடிதங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அது இயல்பானது. இதற்கெல்லாம் பயந்துதான் பலரும் மௌனம் காக்கின்றனர். ஆனால், இலக்கியச் சூழலில் நடக்கும் அருவருப்பான தருணங்களைப் பற்றி மௌனமாக இருந்துவிட்டு வேறெப்படி அறிவார்ந்த தலைமுறையை இந்நாட்டில் உருவாக்குவது?

குறைந்தபட்சம் யாரோ சில எழுத்தாளர் சிந்திக்கக் கூடும் என்றும் இளம் தலைமுறையினர் விழிப்படையக்கூடும் என்றும் நாம் கொண்டுள்ள அற உணர்வை நம்பியும்தான் தொடர்ந்து பேச வேண்டியுள்ளது.

(Visited 1,119 times, 1 visits today)