Menghidupi Sastera Tamil Malaysia
2021இல் நடந்த ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் என் நேர்காணலும் இடம்பெற்றது. என் இலக்கியப் பின்னணி, பேய்ச்சி தடை, மலேசிய இலக்கியம் என விரிவாக நடந்த கலந்துரையாடல் அது. அந்த நேர்காணலின் தமிழாக்கம்.
இலக்கியத்தில் நீங்கள் இயங்கத்தொடங்கிய வரலாற்றைக் கூற முடியுமா? இள வயதில் உங்களை எழுதத் தூண்டியது எது? நீங்கள் இப்போது முழு நேர எழுத்தாளரா அல்லது வேறு பணிகள் செய்கிறீர்களா?
ம.நவீன்: என் வீட்டில் பெற்றோர் இருவருக்குமே வாசிப்புப் பழக்கம் இருந்தது. எனவே வீட்டில் புத்தகங்களுக்குப் பஞ்சம் இல்லை. அவை வெகுசன நூல்கள்தான். துப்பறியும் கதைகள், மர்ம கதைகள், பேய் கதைகள் என ஏராளமாக இருந்தன. நான் அவற்றை சிறுவனாக இருக்கும்போதே வாசிக்கத் தொடங்கியிருந்தேன். எனவே என் 16வது வயதிலேயே கவிதைகளும் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தேன். அவை எதுவும் நாளிதழ்களில் பிரசுரமாகவில்லை. ஆனால் பள்ளியில் எனக்கு அது ஒரு தனித்துவத்தை வழங்கியது. எனக்கு காற்பந்து விளையாட வராது. அந்த வயதில் காற்பந்து விளையாடுபவர்களே பள்ளியில் கதாநாயகர்கள். நான் கருமை நிறமானவன். எளிதாகக் கூட்டத்தில் மறைந்துவிடுபவன். மேலும் நான் பேசும்போது சொல்லுக்குச் சொல் திக்கிப் பேசுவேன். ஆனால் நான் என்னை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. என் தாழ்வு மனப்பான்மையை எதிர்க்கொள்ள வலுக்காட்டாயமாக பேச்சுப்போட்டி, திருக்குறள் ஓதும்போட்டி ஆகியவற்றில் கலந்துகொள்வேன். சபையில் பலரும் சிரித்து கேலி செய்தாலும் என்னை மறுபடி மறுபடி எதிலாவது திணித்து என்னிடமே என்னை நிரூபிக்க முயல்வேன். நான் எனக்கான அடையாளத்தைத் தேட வேண்டியிருந்தது. நான் யார்? எனச் சதா கேட்டுக்கொண்டே இருந்தேன். என்னிடம் இருந்த மொழி ஆளுமையும் புனைவு உத்தியும் என்னை எனக்கு அடையாளம் காட்ட உதவின. நண்பர்களுக்குக் காதல் கடிதங்கள் எழுதிக்கொடுப்பதன் வழி என் தேவையை உணர்த்திக்கொண்டே இருந்தேன். பள்ளியில் ஒவ்வொரு ஆண்டு தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவனாக நானே இருந்தேன். இந்த ஆர்வம் மெல்ல மெல்ல வளர்ந்து இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்ததும் நாளிதழ்களில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமாக எழுந்தது. அந்த ஆசை என்னை விடாமல் துரத்தியதால் என் படிவம் 6 கல்வியைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு கெடாவில் இருந்து கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்தேன். நாளிதழ்களில் பணியாற்றுவது இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது என்பதை வெகு சீக்கிரமே அறிந்தேன். ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பித்து கல்லூரியில் இணைந்தேன். இப்போது கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். அதோடு எழுத்தாளராக என் பயணத்தைத் தொடர்வதோடு வல்லினம் என்ற இணைய இதழையும் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.
மொழிப்பெயர்ப்பில் உங்கள் பல கதைகளை வாசித்தேன். உங்கள் பார்வை மிக நுட்பமானது. விசித்திரமான பல்வேறு வாழ்வை அறிமுகம் செய்கிறீர்கள். பெரும்பாலும் விளிம்புநிலை மக்களே உங்கள் கதையின் மாந்தர்களாக உள்ளனர். அவர்களின் பல்வேறு சவாலான வாழ்வை உங்கள் கதைகளில் அறிமுகம் செய்கிறீர்கள். இந்த மனிதர்களின் வாழ்க்கை உங்களிடமிருந்து திட்டமிட்டு வருகிறதா அல்லது தன்னிச்சையாக கதையைப் பொருத்து உருவாகிறதா?
ம.நவீன்: நான் 2006 தொடங்கி மலேசியத் தமிழ் இலக்கியத்தை மிக கவனமாக வாசித்து வருகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் போதாமைகளை இடைவெளிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்தும் வருகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியம் இரண்டு வகையான பலவீனங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, தோட்டம் அது சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே பேசுவது. இரண்டாவது சமூகம் கட்டமைத்த விழுமியங்களை மறுபடியும் வலியுறுத்தி புனைவுகள் எழுதுவது. இந்த இரண்டு போக்கும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே வகையான கதைகளை மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் உருவாக்கியுள்ளன. ஆனால் உண்மையில் மலேசியா மிகப் பரவலான நிலச்சூழல்களைக் கொண்ட நாடு. பல்வேறு இனங்களும் கலாச்சாரங்களும் இங்கு பின்னிப்பிணைந்துள்ளன. எனவே இங்குள்ள சிக்கல்களும் அந்தச் சிக்கல் நம் முன் வைக்கும் கேள்விகளும் நுட்பமானவை. நான் இந்த இடைவெளிகளை நிரப்ப நினைக்கிறேன். மலேசியத் தமிழர்கள் என்பவர்கள் தோட்டக்காட்டில் பாடு பட்டவர்கள் மட்டுமல்ல. அவர்கள் மீனவர்களாக, தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக, குப்பை வண்டி ஓட்டுபவர்களாக எனப் பலதரப்பட்டு உள்ளனர். குண்டர் கும்பல்களில் சூடுபட்டு இறப்பவர்களிலும் பாலியல் தெருக்களில் அவதியுறுபவர்களிலும் திருநங்கையாக வாழ்க்கையைக் கடத்துபவர்களும் பெருநகரங்களில் கைவிடப்பட்ட முதியவர்களிலும் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் வாழ்க்கையை யார் எழுதுவது? இவர்கள் மொழியை மன உணர்வை யார் பதிவு செய்வது? கடந்த ஐம்பது ஆண்டுகளாக மலேசியத் தமிழ் இலக்கியத்தில் இவர்களின் வாழ்க்கை அதிகம் இடம்பெறவில்லை. எனவே நான் அதை செய்கிறேன். அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம்தான். அவர்களை அவர்களது நியாயங்களோடு புனைவுகளில் நான் அணுக நினைக்கிறேன்.
4 மார்ச் 2021 இந்து நாளிதழில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தை முக்கியமானதாகப் பார்க்கிறேன். அதாவது, தமிழ் இலக்கியம் என்பதை தமிழக இலக்கியம் என்பது கூடாது. மற்ற நாடுகளில் எழுதப்படும் தமிழ் இலக்கியங்கள் மலேசியத் தமிழ் இலக்கியம், இலங்கை தமிழ் இலக்கியம் என வகைப்படுத்துதல் வேண்டாம். எல்லாமே தமிழ் இலக்கியம்தான். நாங்களும் தமிழ் எழுத்தாளர்கள்தான். அதன் வழியாகத்தான் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலில் நுழைவது சாத்தியம். நான் என்னை சிறிய வட்டத்தில் அடக்குவதை விரும்பவில்லை என்கிறீர்கள். இதை பற்றி மேலும் விளக்குங்கள்.
ம.நவீன்: ஆம். இந்தியாவில் எழுதப்படுவது மட்டுமே தமிழ் இலக்கியம் என்ற ஒரு எண்ணம் கடந்த காலங்களில் பரவலாக இருந்தது. அப்படி சுருக்கிப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. மாறாக, மலேசியாவில் எழுதப்படும் தமிழ் புனைவுகள் மட்டுமல்ல சிங்கப்பூர், இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் புனைவுகள் எல்லாமே தமிழ் இலக்கியம் எனும் அடையாளத்துடன் கவனிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அதுபோல என்னைத் தமிழ் எழுத்தாளனாக அடையாளம் கொள்கிறேன். காரணம் நான் தமிழ் மொழியில் எழுதக்கூடியவன். அம்மொழியில் சிந்திக்கக் கூடியவன். ஆனால் நான் என் புனைவுகளில் பேசுவது நான் வாழும் மலேசியா நிலத்தின் கதைகளை. அதில் இங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை மட்டுமல்ல சீனர்கள், மலாய்க்காரர்கள், ஈபான், கடாசான், பூர்வகுடிகள் என பலரது வாழ்வும் அடையாளங்களும் பதிவாகின்றன. இந்த வாழ்க்கை உலகம் முழுவதும் தமிழ் வாசிக்கும் வாசகர்களைச் சென்று சேர வேண்டும் என நான் விரும்புகிறேன். இப்படி ஒரு நாட்டின் பண்பாட்டையும் சிந்தனைகளையும் தமிழ் என்ற குறிப்பிட்ட ஒரு மொழியில் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் என்னை மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளன் என வேண்டுமானால் சொல்லலாம்.
இதற்கு முந்தைய தலைமுறையுடன் எப்படி மாறுபடுகிறது என விளக்குவது முக்கியம். காரணம் ஒரு சொல்லுக்குப் பின்னால் எவ்வாறு உளவியல் கட்டமைகிறது என்பதையும் அறியலாம்.
எனக்கு முந்தையை தலைமுறை எழுத்தாளர்கள் தங்களை மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் என வகை படுத்துவதன் வழி அவர்கள் இலக்கியத் தரத்தை இன்னொரு மலேசியப் படைப்போடு மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கவும் அதன் வாசிப்பு வட்டம் இங்குள்ள தமிழ் வாசகர்களை மட்டும் மையமிட்டதாகவும் கட்டமைத்துக்கொண்டனர். மேலும் தங்கள் முன்னோடிகளாக இங்கு சுமாராக எழுதக்கூடிய இன்னொரு எழுத்தாளரையே அடையாளம் காட்டினர். எனவே அதிகமும் இங்குள்ள குறிப்பிட்ட தமிழர்களின் வாழ்வை இங்குள்ள தமிழர்களுக்காக மீண்டும் எழுதினர். நானும் எனது நண்பர்களும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் தரம் குறித்து விமர்சனத்தை வைக்கும்போதெல்லாம் மலேசியப் படைப்புக்கு இது போதுமானது என்றும் மலேசியத் தமிழர்களுக்குத் தமிழகம் போல தமிழில் உயர்க்கல்வி வாய்ப்போ தரமான தமிழ்க்கல்வி சூழலோ இல்லை எனச் சொல்வது உண்டு. நான் இந்தக் கூற்றுகளைத் தொடக்கம் முதலே மறுத்து வருகிறேன்.
இலங்கை போரினால் புலப்பெயர்வுகள் நடந்தபோது அவர்கள் வழி உருவான தமிழ் இலக்கியங்களை அதற்கு ஒரு ஆதாரமாக முன்வைப்பேன். அவர்களில் பலரும் பல்கலைக்கழகம் வரை பயிலாதவர்கள்.. ஆனால் அவர்களால் தங்களுக்கு நிகழ்ந்த போர் கொடுமைகளை இலக்கியமாக வடிக்க முடிந்தது. நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேச முடிந்தது. தங்கள் பிரச்சினையை அவர்கள் தங்களுக்காக மட்டும் எழுதிக்கொள்ளவில்லை. உலகம் முழுவதும் உள்ள பிற தமிழ் வாசகர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்வை கடத்தினர். இந்த பரிமாற்றம் அவர்கள் புலம்பெயர்ந்து இருவது ஆண்டுகளில் நடந்தது. ஆனால் இந்நாட்டில் நான்காம் தலைமுறையாக வாழும் தமிழர்களின் வாழ்க்கைச் சிக்கல் எங்களைப் போன்ற தமிழ் பேசுகின்ற இன்னொரு நாட்டு சகோதரர்களுக்குத் தெரிவதில்லை. உலகத் தமிழ் வாசகர்களை விடுவோம். இந்த நாட்டில் உள்ள பிற இன வாசகர்களால் மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களால் என்ன பேசப்படுகிறது என அறிவதில் சாத்தியங்கள் குறைவு. இலக்கியங்களை அறியாதபோது தமிழ்ச் சமூகம் எதிர்க்கொள்ளும் நுட்பமான சிக்கல்களையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. தெரிந்துகொள்ளாதது அவர்கள் தவறு அல்ல. அது இந்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் தவறு. அவ்வகையில் மலேசிய எழுத்தாளராகவோ தமிழ் எழுத்தாளராகவோ எனக்கு முந்தைய தலைமுறையினர் தங்களை விரிவான தளத்தில் முன் வைக்கவில்லை. தங்கள் பாடுகளை தங்களுக்குள் பேசி தங்களுக்குள் அழுதுகொண்டனர். நான் இந்தச் சுவர்களைத் தாண்ட விரும்புகிறேன்.
நான் என் படைப்புகளை ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலில் வைத்தே மதிப்பிட விரும்புகிறேன். தமிழில் இதுவரை எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளுடன் ஒப்பிடும்போது என் படைப்பின் இடம் என்ன என்று அறியவே விளைகிறேன். தமிழ் எனும் மொழியில் எழுதப்படும் என் படைப்புகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வாழ்வை பேசினாலும் அதன் இலக்கியத்தரம் என்பது ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தை சார்ந்ததாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். உலக இலக்கியங்களை வாசிக்கும் வாசகனாக தமிழ் இலக்கியத்தின் தரம் எவ்வகையிலும் குறைந்ததில்லை என்பதை அறிவேன். நான் அதன் நீட்டியாக இருக்கவே விரும்புகிறேன். அதற்கு அடுத்தக்கட்டமாக நான் வாழும் நாட்டில் உள்ள பிற இன மக்களுக்கு என் எழுத்துகளைக் கொண்டுச் செல்ல முயல்கிறேன். தமிழ்ச் சமூகத்தின் மனநிலையை என் எழுத்தின் வழியாக அவர்களிடம் கடத்த விளைகிறேன். எனது முந்தைய தலைமுறையினர் எங்கு இடைவெளி விட்டார்களோ அதை நிரப்ப நினைக்கிறேன்.
ஒரு தமிழ் எழுத்தாளனாக உணர்வதால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் என்ன?
ம.நவீன்: நான் உலக இலக்கிய வாசகன். எனவே என்னால் தமிழ் இலக்கியம் உலகத் தரத்தில் உள்ளது என உறுதியாகச் சொல்ல முடியும். உலக இலக்கியத்தில் என்ன மாற்றம் நடக்கிறதோ அது உடனடியாக தமிழில் கையாளப்படுகிறது. பலவிதமான கோட்பாடு சார்ந்த முயற்சிகள் தமிழில் நடந்துள்ளன. தமிழில் தலை சிறந்த எழுத்தாளர்களுடன் எனக்கு நேரடி நட்பு உள்ளது. சமகால தமிழ்ச் சூழலில் யாரெல்லாம் முக்கியமான படைப்பாளிகளோ அவர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்துள்ளேன். அவர்களுடன் ஆழமான இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தியுள்ளோம். இலக்கிய முகாம்களை நடத்தியுள்ளோம். இந்த உரையாடல்கள்தான் என்னையும் என் நண்பர்களையும் புதுப்பித்துக்கொள்ள வசதியாக உள்ளது. என் போதாமைகளைக் கண்டறியவும் நான் செல்ல வேண்டிய தூரத்தை அறியவும் இத்தகைய ஆளுமைகளின் அருகாமையே உதவுகிறது.
உங்கள் சிறுகதைகள் எஸ்.தி. சரவணன் அவர்களால் மலாய் மொழியிலும் ஶ்ரீதேவியால் ஆங்கில மொழியிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. இந்த மொழிப்பெயர்ப்பு பணிகள் எப்படி நிகழ்கின்றன. அந்த மொழிப்பெயர்ப்பில் உங்கள் கதையில் உள்ள உணர்ச்சிகளோ அர்த்தமோ மாறுபடுகிறதா?
ம.நவீன்: எஸ்.தி. சரவணன் என் நண்பர். அவர் மொழிப்பெயர்ப்பு செய்யும் முன்பாகவே என் நண்பர். எனவே அவரால் என் உள்ளுணர்வுகளை அறிய முடியும். நான் என் கதைகளை மொழிப்பெயர்க்க வேண்டும் என முடிவெடுத்தபிறகு இத்துறையில் நிபுணர்களாக இருந்த யாரையும் அணுகவில்லை. சரவணன் அவர்களும் ஒரு மலாய் ஆசிரியர். மலாய் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். அம்மொழியை நேசிக்கக் கூடியவர் என உரையாடலில் அறிந்துள்ளேன். அவரால் அம்மொழிப்பெயர்ப்பை நேர்த்தியாகச் செய்ய முடியும் என எனக்குத் தோன்றியதால் அப்பணியை அவரிடம் கொடுத்தேன். மலாயில் வாசிக்கும்போது சில கதைகள் அவ்வுணர்ச்சியை அப்படியே கடத்தின. மோனா ஃபெண்டி, யாக்கை போன்ற கதைகள் என்னை ஆச்சரியப்படுத்தின. ஆனால் எப்போதும் ஒரு மொழிப்பெயர்ப்பாளரால் நூறு சதவிகிதம் அப்படியே ஒரு புனைவை உருவாக்க முடியாது. காரணம் அவர் உணர்ச்சிகளை எழுத்தாளரிடமிருந்து கடன் வாங்குகிறார். அது சவாலானதுதான். அந்தச் சவாலுக்கு உரிய எல்லைகளும் உள்ளன.
மலேசியாவில் தமிழ்ச் சூழலில் நடக்கும் மொழிப்பெயர்ப்பு பணிகள் குறித்து உங்கள் பார்வை என்ன? பிற மொழி வாசகர்கள் மத்தியில் தமிழ் இலக்கியத்தைக் கொண்டுச் செல்லும் முயற்சிகள் எவ்வாறு உள்ளன.
ம.நவீன்: மலேசியாவில் எழுதப்படும் தமிழ் இலக்கியங்களை மொழிப்பெயர்க்கும் பெரிய முயற்சிகள் இதுவரை அதிகம் நடந்ததில்லை. ஆங்காங்கு சிலர் தனிப்பட்ட முறையில் முயன்றுள்ளனர். நாங்கள் நடத்தும் வல்லினம் பதிப்பகம் மூலமாக மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களின் 8 சிறுகதைகளை ஆங்கிலத்தில் நூலாகக் கொண்டு வந்தோம். பறை என்ற சஞ்சிகை மூலம் மலாய் சீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைச் செய்தோம். உண்மையில் இதுபோன்ற பெருமுயற்சிகளை எடுக்க வேண்டியவர்கள் தமிழ் இலக்கியத்தை வளர்க்கப் போவதாக அரசாங்கத்திடம் மானியம் வாங்கும் அமைப்புகள்தான். அப்படி ஒரு ஆக்ககரமான தொடர் முயற்சிகள் நடப்பதை நான் இதுவரை அறியவில்லை.
உங்கள் பேய்ச்சி நாவல் டிசம்பர் 2020இல் மலேசிய அரசால் தடைவிதிக்கப்பட்டது. இந்த நாவல் கெடாவில் உள்ள லூனாஸ் என்ற வட்டாரத்தில் நடந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது என அறிகிறேன். அந்த துர்நிகழ்வால் பல உயிர்கள் இறந்ததையும் பலருக்கு பார்வை பரிபோனதையும் அறிகிறேன். இதுபோன்ற நாவல்கள் மலேசியாவில் வருவது மிகக் குறைவு. ஆனால் அரசாங்கம் சில காரணங்களால் இந்த நாவலை தடை செய்துள்ளது.
இந்த நாவலை எழுதிய அனுபவத்தைக் கூறுங்கள்.
ம.நவீன்: நான் லூனாஸில் வாழ்ந்தபோது எங்கள் ஊரில் நடந்த இந்த கொடும் நிகழ்வு குறித்து பலவாறு கேள்வி பட்டுள்ளேன். அது குறித்த சிறு ஆவண நூல் ஒன்று கூட வந்திருந்தது. நான் கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்தபோது என் முதல் அடையாளமே சாராயத்தினால் செத்தவர்கள் வாழ்ந்த ஊர்க்காரன் என்றே இருந்தது. அந்த அளவுக்கு லூனாஸ் சாராய மரணச் சம்பவம் மலேசியாவில் பேசப்பட்டது என்பதை அறிந்தபோதுதான் மறுபடியும் என் ஊருக்குத் திரும்பி, அதில் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தேன். எனக்கு அப்போது நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. ஆனால் ஒரு முக்கிய வரலாறு நிகழ்ந்த ஊரில் உள்ளவனாக அதை முழுமையாக அறிந்திருக்க வேண்டுமென விரும்பினேன். பின்னர் இச்சம்பவத்தை சிறுகதையாக எழுதிப்பார்த்தேன். அது நாவலாக முழுமை பெற்றது. சுமார் 9 நாட்களில் இந்த நாவலை எழுதி முடித்தேன். ஏறக்குறைய முன்னூறு பக்க நாவல். அந்தக் காலக்கட்டத்தில் நான் என்னை நாவலுக்கே முழுமையாக ஒப்படைத்தேன். என் கையைப் பிடித்து யாரோ எழுத வைப்பதாக உணர்ந்தேன்.
படைப்பின் தனிக்கை மற்றும் மற்றும் தடை குறித்து உங்கள் கருத்து என்ன?
ம.நவீன்: தமிழில் உண்மையில் என்ன எழுதப்பட்டுள்ளது, அதன் தேவை என்ன என்பதை தடை செய்த அமைச்சரோ அதிகாரிகளோ அறிந்திருப்பதில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் நாளிதழ்களில் வரும் செய்திகளை மட்டுமே உண்மையென நம்புகின்றனர். நான்கு அரசுசாரா அமைப்புகள் மறுப்பு சொன்னால் அதை சமூகமே சொல்வதாக அவர்கள் நம்புகின்றனர். ஆனால் நாளிதழ்களுக்குத் தனி அரசியல் உள்ளது. பேய்ச்சி நாவலுக்கு ஆதரவாக எழுந்த குரல்களை நாளிதழ் பிரசுரிக்கவில்லை. அவர்கள் கவனத்துக்குக் கொண்டுச் சென்றும் பிரசுரிக்க மறுத்துவிட்டனர். அப்படி ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தமிழில் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன். உலகில் மிகப் பெரிய நாவல் எழுதியவர் என அவர் பெயரை கூகுளில் பார்க்கலாம். அவர் பேய்ச்சியை வாசித்து தான் சமீபத்தில் வந்த முக்கிய ஆக்கம் எனச் சொல்லியிருந்தார். அவரைப் போன்ற பல முன்னணி எழுத்தாளர்களும் ஆக்ககரமான கருத்தையே பதிவு செய்திருந்தனர். மலேசியாவில் உள்ள ஆன்மிக தலைவர்கள் கூட நாவலை வாசித்து அதை வெளியீடு செய்ததுடன் அதற்கான ஆதரவு குரல் கொடுத்திருந்தனர். இவர்களைத் தவிர மலேசியாவில் பல்வேறு எழுத்தாளர்கள், தமிழாசிரியர் அமைப்புகள், நூலகர்கள் என பலரும் தங்கள் ஆதரவை எழுத்தின் வழி வழங்கியும் அவை எதுவும் நாளிதழில் இடம்பெறவில்லை. நான் நாளிதழ்களையும் பல்வேறு அரசு சாரா அமைப்புகளையும் கடுமையாக விமர்சனம் செய்பவன். எனவே எனக்கு நிகழும் இந்தப் புறக்கணிப்பு எதிர்ப்பார்த்ததுதான். ஆனால் அரசாங்கம் நாளிதழை மட்டும் ஓர் ஆவணமாக எடுப்பதில்தான் வருத்தம் உள்ளது. உண்மையில் அவர்கள் என்னை நேரடியாக அழைத்து விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை
எழுத்துச் சுதந்திரம் என்பது இன்னும் விரிவாகப் பேச வேண்டிய விசயம். நான் அதற்குள் செல்லவில்லை.. ஏற்கனவே நடப்பில் உள்ள அவர்களது அணுகுமுறையையாவது மறுபரிசீலனை செய்ய வேண்டும். நான்கு அமைப்புகள் நினைத்தால் ஒரு படைப்பை ஒடுக்க முடியும் என்பது ஒரு நாட்டில் அவல நிலை. இந்த அவலத்தை தமிழகம் மட்டுமல்ல அஸ்திரிலிய அரசாங்க வானொலி தொடங்கி பிற நாட்டு அமைப்புகளும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டன. கடும் கட்டுப்பாடுகளைக் கொண்ட நமது பக்கத்து நாடான சிங்கப்பூர் நாளிதழில் கூட நாவல் மலேசியாவில் தடைபட்ட மறுநாளே அவசியம் வாசிக்க வேண்டிய நூல் என பேய்ச்சியைக் குறிப்பிட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அவர்கள் அரசு நூலகத்தில் பேய்ச்சியை வாசிப்புக்கு வைத்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள சூழல் இப்படி இருக்க மலேசியாவில் மட்டும் அதற்கு தடை விதிப்பது சரியா என அரசாங்க அதிகாரிகள் ஆராய்ந்திருக்கலாம். இந்தக் கூச்சல்களில் உள்நோக்கம் இருப்பதை அவர்கள் கொஞ்சம் ஆராய்ந்தாலே புரிந்திருக்கும்.
இங்கு அது முக்கியமல்ல. நாடே கொதிப்பதுபோல ஒரு பதற்ற நிலையை நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டாலோ அரசியல் கட்சிகள் தலையீடு இருந்தாலோ விசாரணை இல்லாமல் தடைதான்.
உங்கள் நாவலை அரசாங்கம் தடை செய்தது. ஆனால் இலக்கியச் சூழலில் அதற்கான வரவேற்பு அல்லது மறுப்பு எப்படி அமைந்தது?
ம.நவீன்: முன்பே நான் சொன்னதுபோல எப்போதும் இல்லாத அளவுக்கு மலேசியாவில் நாவல் விற்பனை இருந்தது. சுமார் ஒரு வருடம் நாவல் குறித்த சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களிலும் நாளிதழிலும் இருந்ததால் பலரும் அதை வாங்கி வாசித்து ஆதரவாக கருத்தை வெளியிட்டனர். உண்மை புரியாமல் புலனம், முகநூலில் பரப்பப்பட்ட செய்திகளால் கோபம் அடைந்தவர்கள் நாவலை வாசித்து முடித்ததும் என் வாசகர்கள் ஆனார்கள். 2020இல் நடந்த தமிழக புத்தகச் சந்தையும் பேய்ச்சி அதிகம் விற்கப்பட்டது. பல எழுத்தாளர்கள் பேய்ச்சியைக் குறித்து எழுதினர். தமிழகத்தில் அதிகம் விற்கப்படும் சஞ்சிகை மற்றும் நாளிதழ்களில் பேய்ச்சி குறித்த கட்டுரை எழுதப்பட்டது. நூல் தடை என்பது மலேசியாவுக்குள் மட்டுமே. நூலை நான் தமிழகத்தில் பதிப்பித்ததால் அது பல்வேறு நாடுகளுக்கு இந்தத் தடையில் மூலம் பிரபலமாகியுள்ளது. மலேசியாவில் சாராயத்தின் மூலம் இத்தனை கொடுமையான மரணம் நிகழ்ந்ததா என சம்பவம் நடந்த லூனாஸை சென்று பார்வையிட்டவர்களும் உண்டு. அவ்வகையில் எனக்குத் திருப்திதான். இந்நாட்டின் வாழ்வையும் வரலாறையும் இன்னொரு தேசத்துக்கு புனைவு மூலம் கடத்த முடிந்துள்ளது. அடையாளம் தெரியாத லூனாஸ் என்ற சிறு பட்டணம் இப்போது உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்கள் அறிந்த நிலமாக உள்ளது.
மலேசிய இலக்கியம் குறித்து உங்கள் கருத்து என்ன? அது அதிகம் மலாய் இலக்கியத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கருதுவதாக நினைக்கிறீர்களா? மலாய் இலக்கியத்தில் இயங்காத மலேசிய எழுத்தாளராக நீங்கள் உங்கள் உணர்வுகள் என்ன?
ம.நவீன்: ஆம். நான் இது குறித்து ஏற்கனவே சிலமுறை பதிவு செய்துள்ளேன். மலேசியா என்பது பல்லினங்களும் இணைந்த நாடு. இந்நாட்டின் சிறப்பே அதில் உள்ள பல்வகை கலாச்சாரமும் பழக்க வழக்கங்களும்தான். தமிழ் இலக்கியம் அதிகம் எழுதப்படுகின்ற நாடுகளாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளைக் கூறலாம். இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் தமிழ்மொழியில் எழுதப்படுகின்ற இலக்கியங்களுக்கு தேசிய அங்கீகாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவின் மத்திய அரசின் புழங்கு மொழியாக இந்தி இருந்தாலும், அந்நாட்டில் எழுதப்படுகின்ற எல்லா மொழி இலக்கியத்துக்கும் சரிசமமான அங்கீகாரங்களை அந்நாட்டு அரசு வழங்குகிறது. அரசு விருதுபெரும் இலக்கியம் உடனடியாக பிற இந்திய மொழிகளுக்கு மொழிப்பெயர்க்கப் படுகின்றன. இதனால் அந்நாட்டில் ஒரு இனத்தை பிற இனங்கள் எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவை விடுவோம். இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் போர் நடந்தது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடந்த போர் அது. ஆனாலும் அங்கும் தமிழில் எழுதப்படுகின்ற இலக்கியங்களுக்கு அரசு விருதுகளும் அங்கீகாரங்களூம் கிடைக்கின்றன. நமது பக்கத்து நாடான சிங்கப்பூரைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அங்கு நான்கு மொழிகளுக்கும் சம அளவிலான அங்கீகாரமும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. தேசிய விருதுகளும் தென்கிழக்காசிய விருதுகளும் நான்கு மொழிகளுக்கும் வழங்கப்படுகின்றன. அதேபோல் தேசிய அளவிலான இலக்கிய மானியங்களும் பரிசுகளும் புழங்குமொழியாக இருக்கும் ஆங்கிலத்துக்கும் பெரும்பான்மையினரின் மொழியாக இருக்கும் சீனத்துக்கும் வழங்கப்படுவதுபோலவே மலாய் மொழிக்கும் தமிழுக்கும் வழங்கப்படுகின்றன. நான்கு மொழி இலக்கியங்களையும் தேசிய இலக்கியமாகக்கொண்டு, அவற்றை வளர்ப்பதில் அரசாங்கம் ஒரே கொள்கை, ஒரே அணுகுமுறையுடன் செயல்படுகிறது.
மலேசியாவில் அந்நிலை இல்லை என்பது வருத்தமானது. நான் விருதுகளையும் பரிசுகளை முன்வைத்து இதனைக் குறிப்பிடவில்லை. இந்நாட்டில் எழுதப்படுகின்ற தமிழ், சீன இலக்கியங்களும் தேசிய இலக்கியமாகக் கருதப்படுகின்றபட்சத்தில் சிறந்த படைப்புகளுக்கான மொழிபெயர்ப்புகள், இலக்கியவாதிகளுக்கிடையிலான உரையாடல்கள் என வளமான ஒரு சூழல் உருவாகும். இந்நாட்டில் ஏற்கெனவே, தமிழ்க் கல்வி, சீனக் கல்விக்கு அரசாங்கம் பலவகையிலும் உதவுகிறது. இவற்றில் பல அரசாங்கப் பள்ளிகளாகவும் உள்ளன. மேலும், எழுத்தாளர் குழுக்கள், அமைப்புகள், நிகழ்ச்சிகளுக்கு உதவிகளை அளிக்கிறது. இது அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். தரமான படைப்புகளை அடையாளம் கண்டு தேசிய அளவில் அங்கீகரிக்க வேண்டும். இலக்கியம் படைக்கவும் வளர்க்கவும் நிதி உதவி அளிக்க வேண்டும். இப்போதும் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதியால் உருவான திட்டங்களின் விளைபயன் என்ன என்ற ஆழமான ஆய்வு நடந்தால் நடப்பு சூழல் குறித்து தெளிவு உண்டாகும். மலேசிய ஓர் அற்புதமான நாடு. பல இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை உருவாக்க ஒரே தேசிய பள்ளி கொள்கை வேண்டுமென பலகாலமாகச் சொல்லப்படுகிறது. என்னைக் கேட்டால் அந்தப் புரிந்துணர்வை இலக்கியத்தின் வழியாகவே உருவாக்கிவிடலாம். காரணம் இலக்கியம் அசலான வாழ்வை பேசுகிறது. இந்நாட்டில் ஒரு தமிழருக்கும் ஒரு மலாய்க்காரருக்கும் இருக்கும் சிக்கல் வித்தியாசமானது. அதை அறிவதால் மட்டுமே ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு உண்டாகும்.
மலாய் மொழியில் இடம்பெற்ற நேர்காணலைக் காண