மீண்டும் வந்த போது இயக்குநர் ராம் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரின் உதவி இயக்குநர் செல்வம் இருந்தார். ஏதோ புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். இளைஞர் .24 அல்லது 25 வயதிருக்கும். சட்டம் படித்துள்ளார். ராமுடன்தான் தங்குகிறார். “எப்படிப் போகிறது வேலை ” என ஆரம்பித்தோம்.
“கற்றது தமிழ் படத்திலிருந்து சாருடன்(ராம்) இருக்கிறேன். நிறைய விஷயங்களை அவரிடம் கற்றுக்கொண்டுள்ளேன். சார் அதிகம் வாசிப்பார். என்னையும் வாசிக்கத்தூண்டுவார். அவர் பட வேலைகளில் இருக்கும் போது முக்கியமான புத்தகங்களை வாசித்து சுருக்கத்தை எழுதித்தரப் பணிப்பார்.”
“கற்றது தமிழில் சில லொகேஷன் வித்தியாசமாக இருந்ததே”
“சார் நல்ல பயணி. நானும் அவருடன் மோட்டாரில் கன்யாகுமரி வரை சென்றுள்ளேன். தனது பயணத்தின் மூலமாக பல புதிய இடங்களை அவர் கண்டடைந்துவிடுவார்.”
“தங்க மீன்கள் படத்தில் அவர் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தது அவர் நடிப்பு”
“நான் சாருடனேயே இருக்கிறேன். அவர் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு நன்கு அறிமுகம். நடிப்பு என்று வந்தவுடன் அதற்கென பிரத்தியேகமாகவெல்லாம் சார் மெனக்கெடவில்லை. மிக இயல்பாக நடித்தார். எப்படி தன் குழந்தையைத் தூக்கி கொஞ்சுவாரோ அதே போலதான் படத்திலும் குழந்தையுடன் இருந்தார்.”
“கற்றது தமிழ் வந்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் வரும் படம் இது. அத்தனை காலம் என்ன செய்தீர்கள்?”
“சார் ஒரு வித்தியாசமானவர். எப்போதும் சம நிலையில்தான் இருப்பார். படம் இல்லாத காலங்களில் அவர் பதற்றமடைந்து நான் பார்த்ததில்லை. அவருக்கு அவரின் நிலைபாடு தெரியும். சமரசம் செய்துக்க மாட்டார். சில உதவி இயக்குநர்கள் படம் செய்ய மாட்டார் என பாதியிலேயே போய்விடுவார்கள். அவர்களுக்குப் பொறுமை இருக்காது.”
“நிறைய பேர் துணை இயக்குநராக வருவார்களா?”
“உங்களுக்காவது ஏது முன்பே நட்பிருந்த காரணத்தால் தொலைபேசியில் அழைத்து வந்துவிட்டீர்கள். எத்தனையோ பேர் ஊரிலிருந்து எந்த வகையான தொடர்பும் இல்லாமல் எப்படியோ இடத்தைக் கண்டுப்பிடித்து காலையில் வந்து வாசலில் நிர்ப்பார்கள். அவர்களுக்குக் கதவைத் தட்டக்கூட தயக்கமாக இருக்கும். நாங்களே கதவை திறக்கும் வரை காத்திருப்பார்கள். பாவமாக இருக்கும். என்ன செய்வது ஏற்கனவே சாரிடம் போதுமான இணை இயக்குநர்கள் உள்ளனர்.”
பேசிக்கொண்டிருக்கும் போதே ராம் உள்ளே நுழைந்தார். ஏ.வி.எம் பார்த்தாச்சா என்றார். தொடர்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கிடையே சில விஷயங்கள் பேசினோம். மணி ஐந்தை தாண்டியும் இயக்குநர் பாலுமகேந்திராவிடமிருந்து அழைப்பு வராததால் நானே அழைத்தேன். என் எண்ணுக்கு அவர் அழைத்தபோது தொடர்பு கிடைக்காததால் புறப்பட்டுவிட்டதாகக் கூறி மறுநாள் மாலை 5க்குச் சந்திக்கலாம் என்றார்.
நாங்கள் ராமிடமிருந்தும் செல்வத்திடமிருந்தும் விடைப்பெற்றோம். மணி ஆறு . மலேசியாவில் 8.30 என நினைத்துக்கொண்டேன். நேற்றிலிருந்து உறங்காத களைப்பு இப்போதுதான் உடலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஆட்டோவை நிறுத்தினோம். இப்போது சிவா பேரம் பேச கற்றிருந்தார். கீழ்பாக்கம் செல்ல 150 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூட தர முடியாது என கரார் செய்தார். ஆட்டோ நகர்ந்த போது அன்றைய நாளில் ஒரு நிறைவு இருந்ததை உணர முடிந்தது.
‘வாய்ப்பு கிடைப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஓர் எழுத்தாளன் எழுத தொடங்கும் காலத்தில் சக எழுத்தாளர்களைத் தேடிச்சென்று காண்பது போலதான் இதுவும். பயணமும் சக மனிதர்களுடனான உரையாடலும் வாழ்வின் மீதான பார்வையை மேலும் கூர்மை படுத்தும்’ என்றேன். சிவாவும் அதை உணர்ந்தே வைத்திருந்தார்.
…தொடரும்
அன்பு சிவா,….உங்கள் இலட்சியம் ஈடேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நவீன், பயணங்கள் தொடரட்டும்…வாழ்த்துக்கள்.
அன்பே சிவம்,
இல.வாசுதேவன்,
ஸ்கூடாய்,ஜோகூர்.