சினிமாவைத் தேடி சென்னை பயணம்…5

காலையில் எழுந்தவுடன் லீனா பரபரப்பாக எங்களுக்குப் பசியாரை தயார் செய்து கொண்டிருந்தார். நம்ம ஊர் (மலேசியா) பாலப்பம் போல இருந்தது ஆனால் இனிப்பில்லை. அப்பத்திற்குப் பிரத்தியேகமாய் குழம்பு செய்திருந்தாலும் முன்னிரவு வைத்த மீன் குழம்பைக் கேட்டுவாங்கி சாப்பிட்டேன். சுவை கூடியிருந்தது. சமையல் என்பது ஒரு மாபெரும் கலை. கலையுணர்வு உள்ளவர்களால்தான் அதை புதுமை செய்ய முடிகிறது.

சமையல் செய்வதை ஒரு படைப்பை உருவாக்கும் நேர்த்தியோடு ஈடுபடுபவர்களைப் பார்த்துள்ளேன். முன்பு நான் உணவகத்தில் வேலை செய்தபோதும் மீ கோரெங் பிரட்டுவதில் அதிக கவனம் செலுத்துவேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான சுவையும் வாசனையும் சட்டியிலிருந்து வெளிப்படும். இப்போது யோசிக்கும் போது அத்தருணங்களை எத்தனை கவனத்தோடு கையாண்டுள்ளேன் என எண்ணிப்பார்க்க முடிகிறது.

லீனாவின் பரிமாறலில் அன்பு மிகுந்திருந்தது. முடிய முடிய போட்டுக்கொண்டே இருந்தார். எப்படி ஒருவரால் இத்தனை கலைகளில் சிறக்க முடிகிறது என நானும் சிவாவும் பேசிக்கொண்டோம். “அங்க என்ன என்னைப் பத்தி கோசிப்?” என லீனா மிரட்டியதும் அடங்கி கொண்டோம். அநேகமாக மலேசியா திரும்புவரை லீனாவிடமிருந்து சின்னதும் பெரிதுமாகத் திட்டு வாங்கி கொண்டே இருந்தோம். அழகான பெண்களிடம் திட்டு வாங்குவதும் எவ்வளவு சுவாரசியமானது.

வெற்றி மாறன் அலுவலகம்

திட்டமிட்டபடி காலை பத்து மணிக்கெல்லாம் இயக்குநர் வெற்றிமாறனைப் பார்க்க கிளம்பினோம். லீனாவின் ஏற்பாடு. அவர் அலுவலகம் ஆழ்வார்திருநகரில் இருந்தது. நாங்கள் சென்று சேர்ந்த போது மணி 11.00. வெற்றி மாறன் எங்களைச் சந்திப்பதாய் சொன்ன நேரம் 11.30. ஆர்வக்கோளாறு.

நாங்கள் சென்ற நேரம் வெற்றி மாறன் எங்கோ வெளியில் கிளம்பிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் ஒரு நிமிடம் ‘என்ன’ என்பது போல பார்த்தார். ‘லீனா சொன்னாங்களா… மலேசியா…’ என நான் இழுத்து முடிப்பதற்கு. “11.30க்கு சொல்லியிருந்தேன். பரவால உள்ள உக்காருங்க. கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன்” எனக்கூறி காரில் ஏறி எங்கோ சென்றார். சிவாவுக்கு ஆட்டோகாரர் நண்பராகிவிட்டபடியால் அவரையும் அழைத்துக்கொண்டு டீ கடைக்குப் போகலாம் என்றார். சிவாவுடன் சுற்றுவதில் எனக்கு பிடித்த விசயம் இது. மனுஷன் கால நேரம் பார்க்காமல் காப்பி , டீ குடிப்பதில் என்னைப் போலவே சிறந்து விளங்கினார்.

சாயா

டீ கடையில் கண்ணாடி கிளாஸைக் கண்டவுடன் கிளர்ச்சி அடைந்தவராக “இதுக்குதான் நவீன் காத்திருந்தேன் ” என்றார் சிவா. இங்கு (மலேசியாவில்) அந்த சைசில் உள்ள குடுவைகளைக் குழந்தைகள் கூட்டாஞ்சோறுக்குத்தான் பயன்படுத்துவார்கள். தமிழ்ப்படங்களில் அத்துணூன்டு கிளாஸை நேரில் கண்டதும்தான் தமிழகத்தில் இருக்கும் நம்பிக்கையை முதன்முதலாகக் காட்டினார்.

11.30க்கு வெற்றி மாறன் அலுவலகம் சென்ற போது அவர் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அருகில் இருந்த சுவரில் ஏறி அமர்ந்தோம். தமிழகத்தில், வீடுகளுக்கு உட்காரும் உயரத்தில் மதில்கள் எழுப்பிருக்கிறார்கள். மலேசியாவில் இதை கடைப்பிடித்தால் கதையடிக்க நெரிச்சல் மிகுந்த ரெஸ்டாரன்டுகளைத் தேடும் கொடுமை ஏற்படாது. சற்று நேரத்திற்கெல்லாம் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் உள்ளே வந்து அமரும் படி அழைக்க உள்ளே சென்றோம். 12.00 மணிக்கு வெற்றி வந்தார். ஒரே தாவலில் இரண்டிரண்டுப் படிகளாக ஏறி மாடிக்குச் சென்றவர் எங்களை அழைத்தார்.

வெட்டியாக

அவர் அறையில் நாற்காலிக்குப் பதிலாக மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. பிற அறைகளிலும் அவ்வாரே இருந்தது. விவாதிக்க ஏற்ற சூழல். நாங்களும் மெத்தையில் பாதி அமர்ந்தோம். சிவா தான் வந்த நோக்கத்தை விளக்கிக் கொண்டிருந்தார். நான் வெற்றி மாறனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய சிரிப்பு தொடர்ச்சியாகவே அவரிடம் இருந்தது. சில கேள்விகள் கேட்டார். சிவா விளக்கிக்கொண்டிருந்தார். “நான் பார்த்துவிட்டு அழைக்கிறேன்” என்றார் வெற்றி. திரும்பும்போது ராமிடம் கொடுத்தது போலவே வெற்றிமாறனிடமும் கொண்டு சென்றிருந்த வல்லினம் பதிப்பக புத்தகங்களைக் கொடுத்தேன். அதே சிரிப்பு.

அலுவலகத்தை விட்டு வெளியானபோது மணி மதியம் 12.30. ஆட்டோகாரர்களிடம்  ‘சுவையான உணவு எங்கு சாப்பிடலாம்’ என கேட்டோம். ‘ஆந்திரா மில்ஸ்’ என்றனர் கோராஸாக.

வெற்றிமாறனுடன்

ஆந்திரா மில்ஸில் பிரியாணி உண்மையில் சுவையாகத்தான் இருந்தது. நான் எதிர்ப்பார்த்தகாரம். சிவாமுதலில் அசைவம் சாப்பிட தயங்கினார். உடலுக்கு ஒத்துப்போகுமா என்ற பயம்.நான் நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிடும் அளவுக்குத் தமிழகத்திற்குப்பழையவனாகியிருந்தேன். சிவா முட்டை பிரியாணி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும் அதிர்ச்சி. அங்கு காப்பி, டீ இல்லை என்றார்கள். கடுப்புடன் வெளியாகி பக்கத்தில் இருக்கும் உணவகங்களில் கேட்டாலும் அதுவே பதில் . மதிய உணவு வேளைகளில் சூடான பானங்கள் கிடைக்காது என அப்போதுதான் தெரிந்தது. மலேசியாவில் 24 மணி நேரமும் திறந்து கிடக்கும் கடைகளுக்காக ஒரு நிமிடம் நன்றி கண்ணீர் வடித்தோம்.

இயக்குநர் பாலுமகேந்திராவை 5 மணிக்கு பார்ப்பதாகத் திட்டம் . இடையில் 4 மணி நேரம் இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்த போது முன்தின இரவு பௌத்த ஐய்யனார் சொன்ன திட்டம் நினைவுக்கு வந்தது. ஆட்டோவைப் பிடித்து வலசரவார்க்கத்திற்கு விடச்சொன்னோம்.

…தொடரும்

(Visited 94 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *