சினிமாவைத் தேடி சென்னை பயணம்…6

 

நாசருடன்...

நாசரை ‘நடிகர்’ என்பதை மீறி ஒரு கலைஞராகவே அடையாளம் கண்டுவைத்திருந்தேன்.  ‘அவதாரம்’ திரைப்படம் அவருக்குள் இருக்கின்ற கலைத்தன்மையை அடையாளம் காட்டியிருந்தது. அதை தவிர்த்து பல படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களை ரசிகனின் முன் வைக்கும் விதத்தில் அவர் நடிப்பாற்றல் மிளிர்ந்திருக்கிறது. சிங்கை இளங்கோவன் நாசர் பற்றி பேசும்போதெல்லாம் ‘தமிழ்த்திரையுலகில் ஒரு வித்தியாசமான கலைஞன்’ எனப் பாராட்டுவார். அவர்களுக்குள் நட்பு இருந்தது. இளங்கோவன் ஒருவரை அப்படிச் சொல்வது சாதாரணம் அல்ல. அவர் கலையையும் கலைஞனையும் எவ்வித சமரசமும் இன்றி அணுகக்கூடியவர்.

பவுத்த ஐயனார் காலாண்டிதழாக வெளியிட்டு வரும் ‘நேர்காணல்’ மூன்றாம் இதழில் நாசரின் நேர்காணல் வந்திருந்தது. அவ்விதழ் முழுதும் நாசர் வரைந்த ஓவியங்கள். அந்த நேர்காணல் வழி அவரை முழுவதுமாக உணர முடிந்தது.

ரசிகர் மன்றங்கள் செயல்பாடுகளின் பின்னடைவு . அதற்கு பதிலாக விமர்சனங்கள் உருவாக வேண்டிய அவசியங்கள். மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்குப் போதுமான வெளி இல்லாத சூழல். உலக சினிமா அனுபவத்துடனான மனப் போராட்டத்துடன் தமிழக சினிமா சூழலில் இயங்குவது என அந்த நேர்காணல் முழுவது தனது எண்ணங்களைப் பதித்திருந்தார். ஒரு கலைஞனிடம் இருக்கும் தடுமாற்றங்களும் குழப்பங்களும் தீவிரத்தன்மையும் அந்த நேர்காணல் முழுவதும் வியாபித்திருந்தது. இலக்கியம் பற்றி பேசும்போது அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ பற்றி அவர் சொல்லும் இடத்தில் நெகிழ்ந்திருந்தேன். நானும் அசோகமித்திரனைக் ‘கரைந்த நிழல்கள்’ வழியேதான் வாசிக்கத் தொடங்கினேன். அதன் பின்னர்தான் ‘தண்ணீர்’.

பவுத்த ஐயனார் அறிமுகத்தின் பேரில் நாசரை அழைத்தேன். நட்பாகப் பேசினார். 3க்கு  வரச் சொன்னார். நான் 2.30க்கு முடியுமா என்றேன். அதற்குள் வர முயல்கிறேன் என்றார். சரி என்று கூறிவிட்டு 2 க்கெல்லாம் சென்று விட்டோம். எங்கள் வருகையை அவர் உதவியாளர் நாசரிடம் சொல்லியிருக்க வேண்டும் 3 மணிக்கு வருவதற்குள் 4 முறையாவது தொலைபேசியில் அழைத்து பேசியிருப்பார். தாமதத்திற்காக வருத்தம் கூறினார். அவரை நேரில் சந்திப்பதற்குள் மனதளவில் நெருக்கம் ஏற்பட்டிருந்தது. அவர் அறையில் காத்திருந்தோம். அங்கும் புத்தகங்கள்தான்.

நாசருடன் சிவா

3 மணிக்கு நாசர் வந்தார். அன்பாகப் பேசினார். மலேசியா அரசியல் சூழல் பற்றி சில கேள்விகள் கேட்டார்.அவரது இரு மகன்களும் இங்கு பயில்வதால் மலேசியா அவருக்கு அறிமுகமாகியிருந்தது. வல்லினம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். தாமதமாக வல்லினம் தனக்கு அறிமுகமானது வருத்தம் கொடுத்தது என்றார். சிவா, தனது சினிமா குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார் . இயக்குநர் ராமை சந்தித்தது குறித்தும் அவர் கருத்து குறித்தும் கூறினார். நாசர், ராம் சொன்னது முழுதும் உண்மை என்றார்.

“இங்க என்ன நீங்க கத்துக்கப்போறிங்க. இங்கக் கத்துக்கப்போற சினிமாவுக்காக எதுக்கு உங்க வாழ்வையும் தொழிலையும் இழக்கனும்? இப்ப உங்க வயது 30. 30 வயது துடிப்போட இயங்குவதற்கான வயது. வாழ்வை முழுதுமா வாழப்போற வயது. இந்த வயதை நீங்க சென்னையில வந்து விரயமாக்கப்போறீங்களா? ஏன் மலேசியாவில இருந்துக்கிட்டே நீங்க படம் செய்ய முயல கூடாது? தமிழ் நாட்டுல எடுக்குற படம் மலேசியாவில ஓடும் போது மலேசியாவுல எடுக்குற படம் ஏன் தமிழ் நாட்டுல ஓடக்கூடாது?”

“அதான் என் கேள்வியும் சார். ஏன் மலேசியாவில் எடுக்கும் படம் தமிழ்நாட்டில் ஓடுவதில்லை ?” – சிவா

“ஏன்னா நீங்க மலேசியாவில்  படம் எடுப்பதில்லை. தமிழகத்துல எடுக்கப்படுற மிக மோசமான ஏதாவது படத்தைப் பார்த்துட்டு அதைவிட மோசமான படத்தை எடுக்கறீங்க. அங்க வந்து பார்த்தா ஒருவர் மலேசிய விஜய்னு சொல்றார், ஒருதர் மலேசிய அஜித்துன்னு சொல்றார். இங்கயே விஜய், அஜித் இருக்கும் போது எதுக்குங்க இன்னொரு விஜய், அஜித்?”

“அப்ப மலேசியாவில் எடுக்கும் டெலிமூவிகளை நீங்கள் பார்த்ததுண்டா?”- சிவா

“ஐயோ ஒருமுறை ரொம்ப பொறுமையோட பார்த்து முடிச்சேங்க. ரொம்ப வருத்தமா இருந்தது.”

நாசர் சொன்ன சில டெலிமூவிகள் பெயரைக் கேட்டவுடன் சிவா சிரித்தார். “சார்…அவற்றை நாங்களே படங்கள் என ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார். நாசர் தொடர்ந்தார்.

“நாம இன்று உலகத்திரைப்படம் குறித்து பேசுகிறோம். ஈரான் படங்கள் குறித்தும், ஜப்பான் படங்கள் குறித்தும், தென்னமெரிக்க படங்கள் குறித்தும் விவாதிக்கிறோம்…சிலாகிக்கிறோம். இன்றைக்கு திரைப்படம் உலகமயமாகியுள்ளது. அதில் மலேசியாவில் இயக்கப்படும் திரைப்படங்களுக்கு இடம் இல்லாமலா போய்விடும். உங்கள் வாழ்வை அதன் அழகியலோடு நீங்கள் வெளியிட்டால் ஏன் பார்க்க மாட்டார்கள். நீங்கள் ரூபாயில்தான் சம்பாதிக்க வேண்டும் என்பது என்ன அவசியம்? டாலரில் சம்பாதித்தால் என்ன தப்பு? உங்கள் படத்தை தமிழக ரசிகன் பார்க்காவிட்டால் என்ன இழப்பு வந்தது…உலக ரசிகர்கள் காத்திருக்கிறார்களே…”

நாசர் பேசுவது உண்மையான அக்கறையிலிருந்து வெளிப்பட்டது. அவர் பேச்சின் மூலம் பலமுறை மலேசியா வந்து , பல இயக்குநர்களையும் சந்தித்த ஏமாற்றம் தெரிந்தது. இளங்கோவன் குறித்து அக்கறையோடு விசாரித்தார்.நாசர் மலேசியாவில் ஆரோக்கியமான திரைப்பட சூழலை உருவாக்க சில திட்டங்களை வகுத்துக்கொடுத்தார். அதுகுறித்து சிந்திக்கச் சொன்னார். அதற்கு முன் எக்காரணத்தைக் கொண்டும் எங்கள் பயணத்தை நிறுத்த வேண்டாம் என்றும், இயக்குநர்களைச் சந்திக்க வந்த எங்கள் திட்டங்களை முழுமை படுத்திவிட்டப்பின் தான் சொன்னதை சிந்திக்கச் சொன்னார். தனது ஆதரவு எப்போது உண்டு என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. அது கலைஞனின் குரல்.

சற்று நேரத்தில் நாசர் மனைவி கமீலா நாசர் வந்தார். நாசர் அவரை “இவர்தான் என் மனைவி, எஜமானர் எல்லாம்” என்றார். கமீலாவைப் பார்த்தேன். ‘நேர்காணல்’ இதழில் நாசர் தன் மனைவி தனக்குச் செயலாளராக இருப்பது பற்றி விவரித்த இடம் மிக முக்கியமானது. அவரிடம் கொஞ்ச நேரம் பேசினோம். தான் முன்பிருந்தே ‘வல்லினம்’ வாசிப்பதாகக் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்திக்க நேரமாகிவிட்டதால் விடைப்பெற்றோம். மீண்டும் நாசர் நினைவுப்படுத்தினார்.

“இங்க கத்துக்க பெருசா ஒன்னும் இல்லை. உங்கள் வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தை இழக்காதீங்க. மலேசியாவின் திரை சூழலை உங்கள் போன்ற இளைஞர்கள் நினைத்தால் மாற்றலாம்.”

ஆட்டோ பிடித்து செல்லவேண்டிய இடத்தைச் சொன்னேன். சிவா எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். கலைஞர்களைச் சந்தித்தப்பின் ஏற்படும் சிந்தனை என எனக்குத் தோன்றியது.

நேர்காணல் இதழில் நாசரின் நேர்காணல் : http://www.vallinam.com.my/issue28/nerkanal-issue3.html

…தொடரும்

(Visited 142 times, 1 visits today)

2 thoughts on “சினிமாவைத் தேடி சென்னை பயணம்…6

  1. சிவா மனசுல மலேசிய சினிமா!
    அப்படித்தானே…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *