சினிமாவைத் தேடி சென்னை பயணம்…7

பாலுமகேந்திரா

பேசுவது , பழகுவது போலவே சிலரைப் பார்ப்பது ஒருவகை அனுபவம்தான். இயக்கு நர் பாலுமகேந்திராவைப் பார்க்க ஆவல் கூடிக்கொண்டிருந்தது. அவர் நடத்தும் சினிமாப் பட்டறை குறித்து கேள்விப்பட்டதுண்டு.  சிவாவுக்கு சினிமா கல்லுரியில் இணைந்து பயிலலாம் என திட்டங்கள் இருந்தபோது அவர் சிந்தனையில் இருந்தது பாலுமகேந்திராவின் இந்தச் சினிமா பட்டறையும்தான். ஆனால் அதன் சட்டத்திட்டங்கள் தொடர்பாக எதுவும் சரியாகத் தெரியாமல் இருந்தது. சரியாக ஐந்து மணிக்குச் சென்று விட்டோம். சிவா வழக்கம் போல ஸ்டைலாக ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தார். அவர் மாணவர்கள் வகுப்பு முடிந்து வெளியில் நின்றிருந்தனர். எங்கள் வருகையை இயக்குநரிடம் கூறினர். உள்ளே சென்று காத்திருக்க அனுமதி கிடைத்தது.
பாலுமகேந்திராவைப் பற்றிய ஆர்வம் கூடியதற்கு நண்பர் காளிதாஸ் ஒரு முக்கியக் காரணி. திரைப்படம் தொடர்பான உரையாடல்களில் பாலுமகேந்திரா குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஈழத்தில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், பெஞ்சமின் மகேந்திரா.அவரது அண்டை வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன். லண்டனில் தன்னுடைய இளநிலை கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார். மூடுபனி,மூன்றாம் பிறை, வீடு,மறுபடியும்,சதி லீலாவதி போன்ற படங்கள் அவர் பெயரைச் சொன்னதும் சட்டென எனக்கு எப்போதும் வந்துபோகும்.

சினிமாப் பட்டறை முன் சிவா

பாலுமகேந்திரா அவர் அறைக்குள் வந்தார். சினிமா நிகழ்வுகளில் பார்ப்பது போலவே தலையில் தொப்பியும் கழுத்தில் ஸ்கார்ஃபும் கட்டியிருந்தார். மெலிதாகப் புன்னகைத்தவர் . ‘பிளேக் டீ’ சொல்றேன் என்றார். சிவா நேராக விசயத்திற்கு வந்தார். கல்லூரியில் படிப்பதற்கான சட்டத்திட்டங்களைக் கேட்டார். நேர்முகத் தேர்வு வைத்துதான் தேர்ந்தெடுப்பதாக பாலுமகேந்திரா கூறினார். குடி, சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்றதும் சற்றுமுன் சிவா புகையை ஸ்டைலாக விட்டது நினைவுக்கு வந்தது. இதோடு அடுத்த ஆண்டுதான் புதிய மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றார்.  நான் அவர்கள் பேச்சைக் கேட்டதைவிட அறையை மேய்ந்து கொண்டிருந்தேன். புத்தகங்கள் குவிந்து கிடந்தன. பெரும்பாலும் புனைவுகள். மற்றுமொரு பேழையில் உலகத் திரைப்படங்கள். எனக்கு இவ்வாறு அறையைப் பார்வையிடுவது பிடித்தமானது. ஒருவரின் ஆளுமையை ஒரு பகுதியை அறையில் கண்டுவிடுவது போன்ற உணர்வு.

பேசி முடிந்த பின் நான் “பூனாவில் உங்களைத் தவிர வேறு யாரும் தமிழ் இயக்குநர்கள் பயின்றுள்ளார்களா?” என்று கேட்டேன். பின்னர் அப்படிக் கேட்டிருக்க வேண்டாமோ என யோசிப்பதற்குள் “எனக்கு தெரிஞ்சி நான் மட்டும்தான்” என்றார். அவர் பதில் தொடர்ந்து பேச உற்சாகம் அளித்தது. எவ்வகையான சிறுகதைகளை உங்கள் பயிற்சிக்குப் பயன்படுத்துவீர்கள் என்றேன். “எல்லாவகையான கதைகளையும்…குமுதத்துல ஒரு பக்கத்துக்கு வருமே அதில கூட ஒன்னு ரெண்டை பயன்படுத்துவேன்” பாலுமகேந்திரா அழுத்தம் திருத்தமாகப் பேசினார். பெரும்பாலும் ஆங்கிலம். அவரின் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள விரும்பாமல் விடைப்பெற்றோம். ஒரு நிழல்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டேன். தாராளமாக என்றவர். எந்த கேமராவுல பிடிக்க போறீங்க என்றார். என் கைத்தொலைப்பேசியைக் காட்டினேன். “அதுல வேணாம்” என்றவர் தன் கேமராவை எடுத்து தனது மாணவனை அழைத்து எந்த அளவில் படம் பிடிக்க வேண்டும் என்று கூறி கேமராவை வழங்கினார். அவரும் பணிவோடு “ஃபிள்ஷ் போடலாமா ?” என்றார். “போடலாம்” என்றதும் படம் பிடித்தார். நேர்த்தி.

“மின்னஞ்சல் செய்கிறேன்” என்றார் பாலுமகேந்திரா. விடைப்பெற்றோம்.

தேர்தல் நாடகம்

வெளியேறி ஆட்டோ ஸ்டேஷனுக்குச் செல்லும் போது தெருவே கூட்டமாக இருந்தது. அரசியல் பிரசாரமாம். முன்தினம் அங்கு வடிவேலு தி.மு.காவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததால் அன்று சிங்கமுத்து அ.தி.மு.காவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார் என்று தெரியவந்தது. சிங்கமுத்துவைப் பார்த்துவிட காத்திருந்தோம். தாமதம் ஆனது. ஆட்டோவிடம் விலை பேசி புறப்பட்டோம். செல்லும் வழியில் ஓர் அரசியல் பிரச்சாரத்தைப் பார்க்க முடிந்தது.

அசல் தமிழ்ப்படங்களில் பார்ப்பது போல ஒரு பிரச்சார பீரங்கி தனது தொகுதி தலைவரை போற்றி புகழ தலைவர் கைகளை கூப்பி மண்டையை இட வலமாக ஆட்டிக்கொண்டிருந்தார். முகத்தில் ஒட்டி வைத்த சிரிப்பு. பேச்சுவாக்கில் ரெண்டு மூனு கொச்சை வார்த்தையை விட்டால் கூட தெரியாது போல. பாவம் தமிழ் நாட்டு மக்கள் என நினைத்துக்கொண்டேன்.

சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் என இருந்தது. லீனா இருப்பார். இந்த பொய்களுக்கு மத்தியில் வாழும் உண்மையான ஆத்மா. அவரை அழைத்துக்கொண்டு உணவருந்த செல்ல நானும் சிவாவும் திட்டமிட்டிருந்தோம். மறுநாள் லீனா பம்பாய் போவதாக இருந்தது.

“நாளைக்கு ஒருநாள் அவர் வீடு நமக்கு சொந்தமாகிவிடும்” எனப் பேசிக்கொண்டோம்.

…தொடரும்

 

(Visited 89 times, 1 visits today)

One thought on “சினிமாவைத் தேடி சென்னை பயணம்…7

  1. படைப்பிலக்கியத்தில், சிறுகதை, நாவல்வடிவம் போலவே கட்டுரைக்கென தனி வடிவம் உண்டு.
    மைக்கேல் சார்ஸ் எனும் கட்டுரையாளர் ஒரே நாளில் திடீரென்று பேசப்பட்டார்.பொதுவாகவே அரை வேக்காட்டுக் கட்டுரையாளர்களிடையே காணப்படும் வறட்டுத்தன்மை இத்தொடரில் இல்லை.எள்ளல், சீண்டல்,நகைச்சுவை, முரணியக்கத்தையும் மீறிய சுவாரஸ்யம் இத்தொடரை ரசித்து வாசிக்கத் தூண்டுகிறது.

    தொடருங்கள் . வாழ்த்துக்கள்
    கமலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *