இரவுணவுக்கு லீனாவை எங்காவது நல்ல உணவகமாக அழைத்துச் செல்லப் பணித்தோம். லீனாவுக்கு உணவு வாங்கிதருவது எங்கள் பிரதான நோக்கம். ஆட்டோ ‘ஹாரிஸன் மீனம்’ அருகில் நின்றது. நாங்கள் சென்ற தளத்தில் சீன உணவகமும் இருந்தது. லீனா சீன உணவு சாப்பிடுகிறீர்களா என்றார். அவசரமாக மறுத்தேன். அங்கு சீன உணவை தமிழர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். எங்கள் ஊரில் சீன உணவுகளைச் சீனர்களே சமைக்க உண்போம் என்றேன்.
மலேசியாவில் இப்போதெல்லாம் தாய்லாந்து உணவுகளை மலாய்க்காரர்கள் சமைப்பதும், ஜப்பானிய உணவுகளைச் சீனர்கள் சமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு சமைக்கும் போது அதன் அசல் சுவையிலிருந்து மாறுபட்டதாக அவ்வுணவு அமைந்துவிடுகிறது. அவரவர் இனத்துக்கே உரிய சிறப்பாம்சம் பிற உணவு முறையில் கலந்து விடுகிறது. விளைவாக இதுதான் அவர்கள் நாட்டின் உணவோ என்ற கற்பனையில் தின்று தொலைக்க வேண்டியுள்ளது. அந்த ஆபத்து அங்கு நிகழக்கூடாது என விரும்பினேன்.
அருகில் இருந்த இந்தியர் உணவகத்தில் நுழைந்தோம். லீனா ஒரு அப்பம் மட்டும் அவருக்கு ஆர்டர் செய்தார். அவருக்கு வீட்டில், தான் சமைப்பதில்தான் விருப்பம் இருந்தது. நாங்கள் என்ன சாப்பிட்டோம் என்று நினைவில் இல்லை. பிரதானமாக கோழி இறைச்சி இருந்தது மட்டும் ஞாபகம். வந்த நாளிலிருந்து லீனாவிடம் சாவகாசமாகப் பேச அன்றுதான் வாய்ப்பு கிடைத்தது .
“நீங்க இங்க கத்துக்கிறதுக்கு ஒன்னும் இல்ல சிவா. டெக்னிக் கத்துக்க நீங்க வேலைய விட்டுட்டு வர வேண்டியதில்லை. என் ஒரு மாதத்தை உங்களுக்குத் தருகிறேன். மலேசியாவில் நாமே ஒரு படம் செய்யலாம். நீங்க டைரக்டரா இருங்க. நான் உதவியா மட்டும் இருக்கேன். முழுமையா ஒரு படம் செய்து ,அதை எடிட் பண்ணி , இசை சேர்க்கும் வரை கூட இருந்து செய்து கொடுத்துட்டுப் போறேன். எனக்கு சம்பளமெல்லாம் வேண்டாம். மலேசிய கலைத்துறைக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும்” – லீனா.
சிவா என்னை ஒரு தரம் அதிர்ச்சியாகப் பார்த்தார். “ஒட்டுமொத்தமா நாங்க சந்திச்ச இடத்தில என்ன மாதிரியான பதில் வந்ததோ அதைதான் நீங்களும் சொல்றீங்க. “
“ஒரு படத்துக்கு வேண்டுமானா நீங்க இங்க அசிஸ்டனா வேலை செய்யலாம். அதோட கிளம்பி மலேசியாவுலயே படம் செய்யுங்க. உங்க வாழ்வு உங்க மண்ணுலதான் படமாகனும். ” – லீனா
“அதைதான் நானும் விரும்புறேன்.” – சிவா
“நான் அதைதான் செய்துக்கிட்டிருக்கேன் சிவா. நீங்கள் இணைந்து எப்படி எளிய முயற்சியில வல்லினம் கொண்டு வறீங்களோ அப்படிதான். ” – லீனா
“…………”
“ஒரு படம் இங்க வேலை செய்ய பாருங்க. இல்லையா மலேசியாவில உங்க நண்பர்கள் படம் செய்யறாங்க சொன்னீங்களே அங்கயே கூட பழகிக்கலாம். அதன் பின்னர் உங்க தேர்வுக்கு ஏற்ற கதையில உங்க கிரியேட்டிவிட்டியில படம் செய்ங்க. தமிழகத்தை விடுங்க. உலக ரசிகர்கள் நல்ல படங்களைப் பார்க்க எப்பவும் தயாரா இருக்காங்க.” லீனா.
லீனாவின் வார்த்தைகள் உறுதியானவை. நான் கேட்டுக்கொண்டிருந்தேன். சிவா பொதுவாக முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாதவர். அப்போதும் காட்டவில்லை. நான் கொஞ்சம் முந்திரிகொட்டை. எனது ஆசிரியர் தொழிலுக்கான நேர்முகத்தேர்வில்கூட அவர்கள் கேள்வி கேட்கும் முன்னரே நானே எல்லாவற்றையும் விளக்கிவிட்டு வந்துவிட்டதுண்டு. சில சமயம் கேட்கப்போகிறவர் கேள்வி அவர் முடிப்பதற்குள் தெரிந்து விடுவதால் பதிலை சட்டென சொல்லி உரையாடலை வீணாக்கிவிடுவேன்.
எனது இந்தக்குறையை முதன்முதலில் சொன்னவள் மணிமொழிதான். “நீங்க, சிவாவை கூட்டிக்கிட்டு போறிங்க. நீங்க ஒரு வாகனம். அவ்வளோதான். எல்லாத்துக்கும் நீங்களே பதில் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. சிவா பதில் பேசவே ஒரு நிமிஷம் ஆகும். அதுக்குள்ள நீங்க உள்ளே பூந்துடாதீங்க ” என்றாள்.
இந்தப் பயணம் முழுவது நான் இதை நினைவில் வைத்துக்கொண்டே இருந்தேன். ‘நானொரு வாகனம்’. இல்லாவிட்டால் லீனா பேசியதற்கு “சரி…படம் பண்ணிடலாம்” என சிவாவைப்பற்றி நினைக்காமல் லீனாவை அழைத்துக்கொண்டு மலேசியா வந்திருப்பேன்.
… தொடரும்