லீனா அன்று காலையில் பம்பாய் கிளம்பியவுடன் வீடு எங்களுக்குச் சொந்தமாகியிருந்தது. அன்று இயக்குநர் சேரனைக் காலை 10 மணிக்கு லீனா அழைக்கச் சொல்லியிருந்தார். அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு. சேரன் அலுவலகம் தி.நகரில் இருந்தது. எப்படியும் தி.நகருக்குப் போவதில் நஷ்டமில்லை என்ற படியால் புறப்பட்டோம். ஆட்டோ, சரவணன் ஸ்டோர் முன்பு நின்றது. ஹாரன் சத்தம் அதிகரித்திருந்தது.
சரவணன் ஸ்டோர் உள்ளே புகுந்தோம். சட்டென அங்காடி தெரு திரைப்படம் நினைவுக்கு வந்தது. சில பெண் ஊழியர்களிடம் பேசினோம். நட்பாகப் பேசினர். சிவா ரங்கநாதன் தெருவைப் பார்க்க வேண்டும் என அடம்பிடித்தார். அங்காடி தெரு படத்தின் பிரதான லொகேஷன் அது. அருகில்தான் இருந்தது. ஒரு சாயா குடித்துவிட்டு கிளம்பினோம். கூட்டத்தைப் பார்க்க பயமாக இருந்தது. அதில் இறங்கி வெளியேறுவது சிரமம் என முடிவெடுத்து மணியைப் பார்த்தேன்.
10.00.
சேரனை இரண்டு மூன்று முறை அழைத்து பதில் இல்லை. அப்படியே இறங்கி பர்மா பஜாரைச் சுற்றலாம் என முடிவெடுத்தபோது சேரன் அழைத்தார். விவரத்தைச் சொன்னேன். இன்று சந்திக்க முடியாதெனக்கூறி திங்கள் அழைக்கப் பணித்தார். திங்கள் நாங்கள் புறப்படும் நாள் என்பதால் ஒன்றும் சொல்லாமல் “சரி” என்றேன். அந்த நிமிடத்திலிருந்து அது இலக்கியப் பயணமாக மாறியது.
முன்னமே சாரு நிவேதிதாவைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்ததால் அழைத்தேன். அமெரிக்க தூதரகத்தில் இருப்பதாகவும் சற்று நேரத்தில் அழைப்பதாகக் கூறினார். உயிர்மைக்குச் சென்று மனுஷ்ய புத்திரனைச் சந்தித்துவிட்டு சில புத்தகங்களையும் வாங்கலாம் என முடிவெடுத்தோம். ஆட்டோ அபிராம புறம் சென்றது.
அலுவலகத்தில் மனுஷ்ய புத்திரன் இருந்தார். அவருக்கு முன் லல்லியைச் சந்தித்தேன். நலம் விசாரித்தேன். அன்பானவர். மலேசியா வந்த போதும் நான் முன்பு ஒரு வாரம் அங்கு தங்கியிருந்த போதும் அதை உணர முடிந்திருந்தது. மனுஷ்ய புத்திரன் அறை மூடியிருந்தது. வருகையைச் சொல்லி வெளியே காத்திருந்தோம். உடனே செல்வி வந்தார். முன்பிலும் இளமையாகியிருந்தார். அதே அன்பு.
உயிர்மை பதிப்பில் வெளிவந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மனுஷ்ய புத்திரன் அழைத்தபோது உள்ளே சென்றோம். “அப்புறம் இரண்டு நாட்களுக்கு முன்னமே வந்துட்டிங்க தானே” என்றார். எப்படி தெரியும் என்றேன். “நீங்க சென்னைக்குள்ள நுழைந்தாலே விசயம் வந்துடுங்க” என்றார். பொதுவாக சில விசயங்கள் பேசினோம். இன்றைய உயிர்மையின் நிலைபாடு குறித்து கேட்டேன். அதை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் அதற்காக தனக்கு உள்ள காரணத்தையும் கூறினார்.
மனுஷ்ய புத்திரன் இயல்பாகவே நகைச்சுவை குணம் கொண்டவர். அவர் தொடங்கும் வாக்கியங்கள் எங்கு சென்று முடியும் என அனுமானிக்க முடியாதவை. அவ்வாறு முடியும் இடம் சட்டென சிரிப்பை ஏற்படுத்தும். ஏறத்தாழ ஒரு மணி நேர உரையாடல். அவரிடம் சில புகார்கள், சில விமர்சனங்கள், சில நம்பிக்கைகள் பேச்சில் துளிர்த்தபடி இருந்தன. அவற்றில் பெரும்பாலும் எனக்கு மாற்று கருத்துகள் உள்ளவை. இதற்கு முன் அவர் நம்பிய எழுதிய ஒன்றிற்கு முரணானவை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம் மிக முக்கியமானதாகப் பட்டது.
“இன்று பலர் தனக்கு எழுத வரவில்லை என நிரூபிக்கவே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றனர். இதழ்களிலோ அல்லது புத்தகமாகவோ வரும் படைப்புகளுக்குப் போதுமான விவாதங்கள் நடப்பதில்லை. படைப்புகள் மீது நடத்தப்படும் விவாதங்களால்தான் ஒரு படைப்பை முன்னெடுக்க முடியும். அல்லது அதன் தரம் குறித்து விவாதிக்க முடியும். இன்று தமிழகத்தில் அதற்கான தேக்கம் உண்டு. நான் உயிர்மையில் வெளியிடும் சில முக்கியமான பிரதிகளுக்கு சிலரிடம் விமர்சனங்களைக் கேட்டு வாங்குகிறேன். அதன் மூலம் அதன் அவசியத்தை தெரியப்படுத்துகிறேன். அல்லது விவாதங்களின் மூலம் அவற்றுக்கான இடம் என்ன என்பதை உறுதிபடுத்த முயல்கிறேன் “
எனக்கு மலேசியாவின் இலக்கிய சூழ்நிலை கண்முன் வந்தது. அவரவருக்கு அவரின் படைப்புகளைப் பற்றி பேசவே இங்கு நேரம் போதுமானதாக இல்லை. விமர்சனங்கள் இங்கு கோப்பிக்கடைகளில் நடக்கின்றதே தவிர எழுத்துப்பூரவமாக இல்லை. எழுத்துப்பூர்வமாக வைக்க பலருக்குத் தைரியமும் வருவதில்லை. போகிற போக்கில் சொல்லிவிடும் கருத்துகளை எழுத்தில் வைத்தால் எவ்விதமான எதிர்வினைகள் வரும் என அறிந்து நாசுக்காகத் தவிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், எழுதுபவர் புண்பட்டு விடுவார்களாம். தன் கருத்தை எழுத்தில் வைத்து , ஒரு பொது விவாதத்திற்கு வராத எந்த ஆளுமையின்மீதும் எனக்கு மரியாதை இருந்ததில்லை. தன் சுயபுராணத்தைப் பாடியே காதில் ரத்தம் வடிய வைத்துவிடும் சூழலில் தமிழகத்தை உதாரணம் காட்டிக்கொண்டிருக்க அதன் தேக்கத்தையும் அல்லது கூடுதலான தேவையையும் மனுஷ்ய புத்திரன் பேச்சில் உணர முடிந்தது. ஓர் இதழாலனாக நான் செய்ய வேண்டிய மிக முக்கியப்பணியை எண்ணிக்கொண்டேன்.
சட்டென மின்சாரத்தடை ஏற்பட்ட போது மனுஷ்ய புத்திரன் பதற்றம் அடைந்தார். அன்று இந்தியா – இலங்கையின் கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டி. யாரையோ அனுப்பி மின்சார வாரியத்தைத் தொடர்புகொள்ளச்சொன்னார். அதற்குப் பின்பான அவர் பேச்சில் இடையிடையே மின்சாரம் தடைப்பட்ட சோகம் வந்து கொண்டிருந்தது.
அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துப் புறப்பட தயாரானபோது சாருவிடமிருந்து அழைப்பு வந்தது.
…தொடரும்
சுயப்புராணம் மட்டுமல்ல, தன் படைப்பு மட்டுமே ஆகச் சிறந்ததனென நம்பிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்கும் வரமறுப்பவர்கள்தான் அதிகம். மேலும் எதிர்வினையை அதன் கூரிய தன்மையுடன் எதிர்க்கொள்ள மனதளவில் பக்குவம் பெறாதவர்கள் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன?
I am reading literature through literary magazines like ‘uyirmai’. And I have met atleast two
thousand tamil youngsters all over India through IAF but it was shocking to know that they dont know
or even heard of ‘uyirmai’or Charu!!! they just wasted part of their life. I am very happy to see youngsters like you to take lot of interest in Charu and ‘Uyirmai’
Siva