சிட்டி செண்டருக்குள் புகுந்து மேல் தளம் நோக்கி சென்றோம். அங்குதான் சாரு எங்களுக்குக் காத்திருப்பதாகக் கூறினார். லிப்ட் கதவுகள் திறப்பதற்கு முன்பே கண்ணாடி கதவின் வழியாக சிவா சாருவைப் பார்த்துவிட்டிருந்தார். ‘இங்கதான் நிக்கிறார்’ என்றார்.
சிவா சாருவை முழுமையாக வாசித்திருந்தார். நான் சாருவை வாசிக்கத்தொடங்கியது ‘ராஸ லீலா’ மூலமாகத்தான். ஐந்து வருடங்களுக்கு முன் மனுஷ்ய புத்திரன் வீட்டில் தங்கியபோது இரவோடிரவாகப் படித்து முடித்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தான் ஸீரோ டிகிரி. ஸீரோ டிகிரி தமிழில் குறிப்பிடத்தக்க நாவல் என எண்ணிக்கொண்டிருக்கும் போது ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சிங்கை இளங்கோவன் எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் மற்றும் காமரூப கதைகளை அன்பளிப்பாக வழங்கினார். (இதற்கிடையில் சாருவின் மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் , கட்டுரைத்தொகுப்புகள் மிக முக்கியமாக ‘பாலியல்’ என்ற தலைப்பில் நளினி ஜமீலாவுடன் செய்த உரையாடல் போன்றவை மூலம் சாருவின் பல்வேறு ஆளுமைகளை உணர முடிந்தது. ) எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் குறித்து விரிவாக எழுதவேண்டும் என அதை வாசித்து முடித்த நிமிடமே முடிவெடுத்தேன். சாரு தமிழில் மறுக்க முடியாத ஆளுமை என அந்நாவல் எனக்கு உணர்த்தியது. காமரூப கதைகள் பாதியில் நிர்க்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணம் ‘தேகம்’ இறுதி பாகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். (சிவா ‘தேகம்’ வாங்கி வந்த ஓர் இரவிலியே கண்விழித்து படித்து முடித்திருந்தார். மறுநாள் அழைத்தபோது தொலைபேசியை எடுக்காமல் தூங்கிக்கொண்டிருந்தார்)
லிப்டுக்கு வெளியே ஓர் இளைஞர் நின்று கொண்டிருந்தார். தன்னை சாரு என அறிமுகம் செய்து கொண்டார். வெள்ளை நிற சட்டை மற்றும் ஜீன்ஸ். பொதுவாகவே எனக்கு தமிழகத்தின் பெரும் பான்மையானவர்களின் ரசனை குறித்த ஓர் எண்ணம் உண்டு. அவர்கள் உடை பாணி குறித்த பிரக்ஞை இல்லாதவர்கள். வர்ணங்கள் குறித்த அக்கறை இல்லாதவர்கள். அதை தீர்க்கும் பொருட்டு சினிமாவில் குவிக்கப் படும் போலி வர்ணங்களைக் கண்டு வியப்பவர்கள். இம்மனநிலை சென்னை இளைஞர்களிடம் இல்லை. ஆனால் நான் சாருவை வாசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் அணியும் உடைகள் என்னைக் கவர்பவை. ஓர் இளைஞனின் குதூகல மனதோடு தொடர்புடையவை. வசீகரிக்கக் கூடியவை. அன்று எங்களில் சாருதான் இளமையாகக் காட்சியளித்தார். (பின்னர் ஓஷோவின் ஜென் மற்றும் சூஃபிசம் குறித்த வெளிப்பாட்டின் மூலம் மன அமைப்பிற்கும் வர்ணத்திற்குமான தொடர்பை உணர முடிந்தது.)
“நீங்க மலேசியக்காரர்கள் என்பதால் இங்கு வரச்சொன்னேன். இங்கு மலேசிய உணவுகள் கிடைக்கும்” என்றார். நாங்கள் மலேசியாவை நினைத்துப்பார்க்கக் கூட தயாராக இல்லை என்பதால் அருகில் இருந்த அரேபிய உணவகத்தில் உணவு வாங்கினோம். அங்கிருந்த தொலைக்காட்சியில்தான் அனைவரும் கண்களும் மொய்த்துக்கொண்டிருந்தன. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி. இந்தியாவின் விளையாட்டில் அனைவரும் லயித்திருந்தனர். இடையிடையே கேட்ட கைத்தட்டல் சத்தமும் கூச்சலும் நாங்கள் பேசத் தடையாக இருந்தது. “தமிழிலக்கியம் படிப்பவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்பதால்தான் இங்கு அழைத்து வந்தேன். சத்தமாக உள்ளது…வேறெங்காவது போகலாம் என்றார்.”
சுற்றிலும் பார்த்தேன். மார்டன் உடைகளுடன் இளமை பட்டாளம். நான் சாருவிடம் “வந்த நாளிலிருந்து இந்த மாதிரி கண்ணுக்குக் குளிர்ச்சியா பார்க்கவே இல்லை சாரு” என்றேன். “அதுக்குத்தான் முன்னமே என்னை வந்து பார்த்திருக்கனும் சொல்றது ” எனக்கூறிச் சிரித்தார். பின்னர் சட்டென நினைவுக்கு வந்தவராக “இந்தச் சத்தத்தில் பேசியதற்கு நான் முன்னமே உங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றிருப்பேன் என்று கூறி எங்களை CHAMIERS எனும் COFFE HOUSE க்கு அழைத்துச் சென்றார்.
நகர பரபரப்பிலிருந்து ஒதுங்கியிருந்தது அவ்விடம் . உள்ளே நுழைந்ததும் மெல்லியதாகக் காப்பி வாசம் வீசியது. அமர்ந்து பேச ஏற்ற இடம். “உங்களுக்கு இன்று அதிஷ்டம் இல்லை. ஜோதிகா இங்கதான் அடிக்கடி உங்காந்திருப்பாங்க” என்றார். “ரசிகர்கள் தொல்லை இருக்காதா” என்றேன். “தொல்லைப் பண்ணக்கூடிய ரசிகர்கள் இங்க வர மாட்டார்கள்” என்றார். CHAMIERS பேசுவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தியிருந்தது. சாருவிடம் வெகு இயல்பாய் பேச முடிந்தது. எதிரில் அமர்ந்து பேசுபவருக்கான வெளியை சாரு ஏற்படுத்தியிருந்தார்.
இலக்கியம் குறித்து சிறிது நேரம் பேசினோம். பின்னர் சாரு தான் அண்மையில் பார்த்த இந்தோனெசிய திரைப்படம் குறித்து பேசத்தொடங்கினார். அப்படத்தின் காட்சிகளை சுவாரசியமாக விளக்கிக் கொண்டிருந்தார். சில தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை வாசிக்கப் பரிந்துரை செய்தார்.
Mediocre மற்றும் Status Quo எழுத்துகளுக்கு மத்தியில் சாரு தமிழ்ச்சூழலில் தொடர்ந்து மாற்று வரலாறு, மாற்று ஒழுங்கு, நோன் லீனியர் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார். ஒழுக்கவாதிகளால் அவர் தொடர்ந்து நிராக்கரிக்கவும் படுகிறார். சாதியம், மதமேன்மை, பேசும் இலக்கியங்களைவிட சாருவின் இலக்கியம் ஆபத்தானதல்ல என்றே நினைக்கிறேன். அவர் எழுத்து கலகம் செய்கிறது. அது உயர்ந்த இலக்கியமா இல்லையா என்பதெல்லாம் எனக்கு கேள்வியாகப் படவில்லை. உயர்ந்த இலக்கியம் என்பது கூட ஒருவகை மேட்டிமை வாதம்தான். ஆனால் அது தமிழ்ச்சூழல் தொடாத சில இடங்களை சென்றடைகிறது. அதன் மூலம் சில திறப்புகளைச் செய்ய முயல்கிறது. அந்தத் திறப்பில் அடுத்தடுத்த இலக்கியப்பிரதிகள் இன்னும் தீவிரத்துடன் பயணிக்க வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
உரையாடல் இறுதியில் சாருவிடம் எஸ்.ராமகிருஷ்ணனை சந்திக்க முடியுமா என்றேன். கைப்பேசியில் அழைத்தார். எங்கள் வருகையைக் கூறி தொலைபேசியைக் கொடுத்தார். எஸ்.ராமகிருஷ்ணன் உடனே வீட்டிற்கு வரச்சொன்னார். குரலில் உற்சாகம் இருந்தது. அவர் எப்போதும் உற்சாகத்துடன்தான் பேசுவார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். சாருவிடம் விடைப்பெரும்போது இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம் என்று தோன்றியது. இலக்கியம் , சினிமா மட்டும் அல்லாமல் சாரு தனது வாழ்வில் வந்துபோகும் எளிய மனிதர்களின் வாழ்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆட்டோவில் ஏறியதும் சாரு ஒரு நேர்காணலில் சொன்ன வரிகள் ஞாபகத்திற்கு வந்தது. எந்த நேர்காணல் என சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் அது இவ்வாரு ஒலிக்கும்.
‘நான் கவலையுள்ளவன். உலகம் அவ்வளவு குரூரமானது. வன்முறை நிறைந்தது. அதனால் நான் வேதனை அடைகிறேன். அதன் துக்கத்தை எழுதுகிறேன் ‘.
… தொடரும்
great meeting
சுவையான பகிர்வு 🙂
svaasiyama irukku…todaruttum unggal eluttu sevai…
ஷீரோ டிகிரிக்குப் பிறகு சாருவைத் தீவிரமாக வாசிக்கத் துவங்கியிருந்தேன். சமீபத்தில் அவருடைய பழைய சிறுகதை தொகுப்பிலுள்ள ‘சைக்கிள்’ சிறுகதையை வாசித்துவிட்டு பிரமித்தேன். சமூகத்தின் ஒழுக்கத்தை அப்பொழுதே தன் சிறுகதையின் மூலம் மீள்பரிசோதனை செய்துள்ளார். காலத்தால் ஒரு படைப்பாளி தொடர்ந்து தனக்கான வெளி சார்ந்து தீவிரமாக சலிப்பில்லாமல் இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமான உதாரணமாகும்.