சினிமாவைத் தேடி சென்னை பயணம்…11

 

எஸ்.ராமகிருஷ்ணனுடன் நான்...

நாங்கள் திரும்பவும் சாலி கிராமம் நோக்கி செல்வது எங்களுக்கே வியப்பாக இருந்தது. வந்த நாளிலிருந்து நாள் தவறாமல் நானும் சிவாவும் அங்குச் சென்று கொண்டிருந்தோம். எஸ்.ராமகிருஷ்ணன் அங்குதான் இருக்கிறார் என முன்னமே தெரிந்திருந்தால் பயண அட்டவணையை மாற்றி இருந்திருக்கலாம். ஆட்டோ தோழரிடம் கைப்பேசியைக் கொடுத்து எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேச விட்டேன். இடம் அவருக்குப் பிடிப்பட்டது. சரியாகக் கொண்டு சென்று நிறுத்தினார்.

எஸ்.ரா ஏதோ கணினியில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் படிக்கும் அறைக்கு எங்களை அழைத்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஓர் எழுத்தாளரின் படிக்கும் அறை எனக்கு ஈர்ப்பானது. சில நிமிடம் அவர்கள் சேமிப்பில் இருக்கும் புத்தகங்களை அப்படியே பார்த்துக்கொண்டிருப்பது பிரமிப்பாக இருக்கும். நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த புத்தக அலமாரி ஷோபா சக்தியினுடையது. “எந்தப் புத்தகம் வேணுமுன்னாலும் எடுத்துக்கிங்க” என அவர் அதை திறந்துவிட்டதும் அது என்னுடையதாகிவிட்டது அதற்கு காரணமாக இருக்கலாம். மலேசியாவில் இலக்கியம் சார்ந்த புத்தகங்களை அதிகம் பார்த்தது கோ.முனியாண்டியின் வீட்டில். அறிவுத்துறைகள் சார்ந்த புத்தகங்களை டாக்டர் ஜெயபாரதியின் வீட்டில் பார்த்திருக்கிறேன்.

எஸ்.ராவின் படிக்கும் அறை புத்தகங்களால் சூழ்ந்திருந்தது. உள்ளே மூன்று பேர் அமரும்படியான ஒரு கதிரை. வழக்கமான நலவிசாரிப்புகளுக்குப் பின் பேச்சு இலக்கியம் குறித்து சென்றது. நாங்கள் வந்த நோக்கத்தைக் கூறிய பின் சினிமாவில் வேலை செய்து, நடைமுறையில் பெற வேண்டிய பயிற்சியின் அவசியம் குறித்தும் கூறினார். எஸ்.ராவின் விளக்கம் சுவாரசியமாக இருந்தது. செயல்முறை பயிற்சியின் மூலமே ஓர் இயக்குநரால் பொருளாதார நஷ்டத்திலிருந்து தப்ப முடியும் என்றார். அதற்கான சில உதாரணங்களையும் துள்ளிதமாக விளக்கினார்.

எஸ்.ராமகிருஷ்ணனுடன் சிவா

எஸ்.ராவின் பேச்சு முழுவதிலும் ஒரு குதூகலம் இருந்தது. தனது வாசிப்பு குறித்தும் பயணங்கள் குறித்தும்பகிர்ந்து கொண்டார். “நான் ஒருவரை வாசிக்கிறேன். தொடர்ந்த வாசிப்பால் ஒருவர் எனக்குப் பிடித்த எழுத்தாளராகிவிடுகிறார். அந்த எழுத்தாளரோடு நான் ஒரு வார்த்தைக்கூட பேசியிருக்க மாட்டேன். ஆனால் எழுத்து மூலமாக அவரை நான் தொடர்ந்து நெருங்கி சென்று கொண்டிருப்பேன். அது என் அந்தரங்கமான ஒரு தேர்வாகவும் இருக்கும். இதை எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருக்க முடியாது. எழுத்தாளன் கொஞ்சம் ரகசியங்களையும் சேகரித்திருக்க வேண்டும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் நான் என் பயணங்கள் குறித்து அதிகம் எழுதியுள்ளேன். அவை எனது மொத்த பயணத்தில் 15% மட்டும் இருக்கும். இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. நான் எனக்கான சில விடயங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதில் புளோக் கலாச்சாரத்தில் உள்ளவர்கள் மாலை ஆறு மணி ஆகிவிட்டால் அன்றைக்கு ஒன்றும் பதிவிடவில்லையே என வேறு பதறுவதைப் பார்க்கிறேன். அதற்காகவாவது ஏதாவது எழுதுவார்கள். தங்கள் வாழ்வில் எந்தச் சம்பவங்களையும் வாசகனிடம் மறைத்துவைப்பதில்லை. வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான சொல்லப்படாத தருணங்கள் அவசியம் என நான் கருதுகிறேன். “

சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து கேட்டேன். மோட்டார் சைக்கிளிலேயே மெரினா கடற்கரையில் பயணித்து ஆட்கள் வராத பகுதிகளைக் கண்டடைந்ததைக் கூறினார். சமண மலை குறித்து கூறினார். மிக முக்கியமாக சென்னை தொல்பொருளகத்திற்குச் சென்றால் வரலாற்றில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் வந்துவிடும் என்றார். முன்னமே எஸ்.ராவைப் பார்த்திருந்தால் ஏதாவது ஓர் இடத்திற்குச் சென்றிருக்கலாம் எனத்தோன்றியது. அவகாசம் இல்லாத பயணங்கள்.

புத்தகம் வாங்கும் எங்கள் நோக்கம் பற்றி கூறியபோது அவர் இருப்பிடத்திலிருந்து மிக அருகில் இருக்கும் ஒரு புத்தகக் கடை குறித்து கூறினார். அண்மையில் பதிப்பானவற்றில் வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து கேட்டேன். சிலவற்றைக் கூறினார். குறித்துக்கொண்டோம். திருப்தியான சந்திப்பாக இருந்தது.

எஸ்.ரா சொன்ன இடம் சென்றபோதுதான் அந்தப் புத்தகக்கடை சாத்தப்பட்டிருப்பதைக் கண்டோம். அருகில் இருந்த இளைஞர் ‘கிரிகெட் போட்டியால் சீக்கிரமா அடைச்சுட்டாங்க’ என்றார். கிரிக்கெட் மட்டையைக் கொண்டு எங்களை ஆளாலுக்குப் பந்தாடுவதாக உணர்ந்தேன். களைப்பாக இருந்தாலும் உற்சாகமாக இருந்தது. அதற்கு காரணம் ஆதவன் தீட்சண்யா.

மறுநாள் அவர் ஓசூரிலிருந்து எங்களைக்காண சென்னை வருவதாகக் கூறியிருந்தார். அந்தச் சிந்தனையே என்னை உற்சாகப்படுத்துவதாக இருந்தது. ஆட்டோவில் ஏறினோம். லீனா பம்பாயிலிருந்து திரும்பி சென்னை விமான நிலையத்தில் இருந்தார்.

“எல்லாவற்றையும் எழுதக்கூடாது. வாசகனுக்குக் கொஞ்சம் மிச்சம் வைக்கனும். அதுதான் எழுத்தாளன் மீதான சுவாரசியத்தைக் கூட்டும்” எஸ்.ரா சொன்னது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. இந்தத் தொடர் முழுக்கவும் அதைதான் கடைப்பிடிக்கிறேன் என்ற எண்ணம் இந்த நிமிடம் சட்டென தோன்றி மறைகிறது.

… தொடரும்

(Visited 109 times, 1 visits today)

2 thoughts on “சினிமாவைத் தேடி சென்னை பயணம்…11

  1. எஸ்.ராமகிருஷ்ணனை 2006 தொடக்கம் வாசிக்கத் துவங்கியிருந்தேன். அதன் ஈர்ப்பால் 2008ஆம் ஆண்டு அவரை ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ நிகழ்வில் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினேன். மிகவும் அற்புதமான பேச்சாளரும்கூட. நட்புடன் பழகினார். அவர் சென்ற இடமெல்லாம் உடன் சென்ற அனுபவம் சுவாரஷ்யமானது. அவரும் கோணங்கியும் வாசகர்களாக அலைந்து திருந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட இடம் முக்கியமானவை. வாழ்த்துகள் நவீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *