சகோதரர் நவீன் அவர்களுக்கு,

ஜூலை மாத வல்லினம் வாசித்து முடித்தேன். மூன்று சிறுகதைகள் எனக்குப் பிடித்திருந்தன. அதில் எஸ்.ராவின் சிறுகதை அடக்கம் என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஏற்கெனவே அனுப்பிய சிறுகதைகளை நீங்கள் வல்லினத்தில் பிரசுரிக்காமல் நிராகரித்ததுண்டு. நீங்கள் நிராகரித்தவற்றை மற்ற இணைய இதழ்கள் பிரசுரித்ததும் உண்டு. அதனால் எனக்கு சங்கடம் இல்லை. நான் ஆச்சரியப்படுவது இவ்விதழ் 142ஆவது இதழ் என உங்கள் முக நூலில் அறிவித்திருந்தீர்கள். இத்தனை இதழ்களையும் இதே தீவிரத்துடன்தான் செய்கிறீர்களா? இத்தனை ஆண்டுகள் இந்தத் தீவிரம் குடிகொண்டிருக்க எது காரணமாக உள்ளது? அப்படி தீவிரமாகத் தோன்றிய சில இதழ்கள் ஏன் நின்றுவிடுகின்றன? வாசகர்களின் எண்ணிக்கையா? இணைய இதழ்களில் பணமும் வருவதில்லையே. எது உங்களை இயக்குகிறது?
பவன்
பவன், முதலில் கடிதத்தைப் பிரசுரிக்க ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. கடிதத்தை என் வசதிக்கு கொஞ்சம் சுருக்கி மாற்றியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள், இதழ்களின் பெயர்களை நீக்கியுள்ளேன். நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி உங்கள் பெயரையும் மாற்றிவிட்டேன். மகிழ்ச்சிதானே.
முதலில் ஓர் இதழ் நிராகரிக்கும் படைப்பை இன்னொரு இதழ் பிரசுரிப்பது எங்கும் சாதாரணமாக நடப்பதுதான். ஆசிரியர் குழுவில் அவரவருக்கான ரசனைகளும் தேர்வுகளும் இருக்கும். அப்படி இன்னொரு இதழ் நிராகரித்த படைப்பொன்று வல்லினத்தில் பிரசுரமாகியிருக்கலாம். இதில் பெருமையோ சிறுமையோ இல்லை.
இரண்டாவது கேள்வி எனக்கு முக்கியமாகத் தோன்றியதால்தான் இக்கடிதத்தைப் பொதுவில் பிரசுரிக்க அனுமதி கேட்டேன். எது ஒரு செயலை இடைவிடாது செய்யத் தூண்டுகிறது?
பவன், வல்லினத்திற்கு முன்னர் 2006இல் ‘காதல்’ என்ற இதழை பத்து மாதங்கள் நடத்தியுள்ளேன். அது இலக்கிய இதழ். இன்னொருவர் முதலீடு செய்து நடத்திய இதழ். அந்தப் பணிக்கு எந்தச் சம்பளமும் பெற்றுக்கொண்டதில்லை. ஆர்வத்தின் அடிப்படையில்தான் அதில் செயல்பட்டேன். அதற்கு முன்னரே 2002 தொடங்கி ‘மன்னன்’ என்ற வெகுசன மாத இதழிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் என் உழைப்பை வழங்கியிருக்கிறேன். சம்பளம் இல்லாமல்தான். இவ்விரு இதழ்களும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. ஆனால் இந்த இரண்டு இதழ்களுக்கும் நான் வழங்கிய உழைப்பில் எந்தப் பாகுபாடும் இருந்ததில்லை. அதற்கு காரணம் எழுதுவதும் வாசிப்பது எனக்குப் பிடித்திருந்தது என்பதன்றி வேறொரு காரணம் இருப்பதாய் தோன்றவில்லை.
‘மன்னன்’ இதழைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும், அப்போது நான் அந்த இதழில் கார்ட்டூன் வரைந்துள்ளேன், கற்பனை உரையாடல்களை எழுதியுள்ளேன், நேர்காணல்கள் செய்துள்ளேன், தைப்பூசம், கல்வி யாத்திரை என எங்கு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்கு சென்று பொதுமக்களிடன் ஏதும் தலைப்பை ஒட்டி கருத்து கேட்டு அதை இதழில் எழுதியுள்ளேன். எனது ஒவ்வொருநாளும் இன்று என்ன புதிதாக எழுதப்போகிறேன் என்பதில்தான் தொடங்கும். அதுபோலதான் ‘காதல்’ இதழிலும். இலக்கிய இதழுக்குப் படைப்புகளைத் தேடிச் சேர்ப்பது அவ்வளவு சாதாரணமானதில்லை. அதைத் தாண்டி பிழைத்திருத்தம் வடிவமைப்பு என எல்லாவற்றிலும் ஓர் அங்கமாக உடன் இருந்துள்ளேன். புத்தகம் அச்சாகி வந்தபிறகு அவற்றைச் சுமந்துகொண்டு மலேசியா முழுவதும் உள்ள பல புத்தகக்கடைகளில் விற்பனைக்குப் போட்டுள்ளேன். மலேசியாவைத் தாண்டி சிங்கப்பூர் தேக்காவில் உள்ள சில கடைகளிலும் நூல்களை விற்பனைக்கு வைக்க முயன்றுள்ளேன். ஒரு பழைய காரில்தான் உற்சாகமாகப் பயணித்தேன். அப்போது ஆசிரியர் தொழிலில் இப்போது கிடைக்கும் சம்பளத்தில் பாதி கூட இல்லை. என் சொந்த பணத்தில்தான் பெரும்பாலான பயணச் செலவுகளைச் செய்தேன். எது என்னை இடைவிடாமல் இயக்கியது? நிச்சயமாக ஆழுள்ளத்தில் இருந்த விருப்பம்தான்.
அது மட்டுமே இன்றுவரை என்னை இயக்குகிறது. ஒவ்வொரு இதழையும் முதல் இதழ்போல உற்சாகமாக பிரசிக்க அதுதான் காரணம். என்னிடம் நெருங்கியுள்ள நண்பர்களுக்குத் தெரியும், இப்பணிகள் குறித்து ஒருபோதும் சலிப்பான ஒரு சொல்லைக்கூட நான் சொன்னதில்லை. யார் மீதும் புகார்களும் இருந்ததில்லை. புத்தாண்டு கொண்டாட வெளி ஊர்களில் நண்பர்களுடன் தங்கியிருந்த பொழுதுகளில் கூட தன்னந்தனியாக வல்லினத்தின் ஒவ்வொரு கட்டுரையாகப் பதிவேற்றியிருக்கிறேன். எனது புதிய ஆண்டுகள் வல்லினத்துடன்தான் தொடங்கியிருக்கின்றன. என்னை அறியாதவர்கள் இதனை தியாகம், அர்ப்பணிப்பு என்றெல்லாம் சொல்வார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கும் இல்லையா? ஆனால் அதையெல்லாம் தாண்டி எனக்கு இப்பணிகளில் ஆழமான விருப்பம் உண்டு என்பது மட்டுமே உண்மை.
பலமுறை சொன்னதுதான். வல்லினத்தின் படைப்புகளை நான் மட்டுமே தேர்வு செய்வதில்லை. அ. பாண்டியனுக்கும் அதில் சம உரிமை உண்டு. நான் அலுவலாக இருக்கும் காலங்களில் அவரே முழு வல்லினத்தின் படைப்புகளையும் வாசித்துத் திருத்தியுள்ளார். ஒரு படைப்பைத் தேர்வு செய்யும் முன்னர் எனக்கு அவரின் அபிப்பிராயமும் முக்கியம். அதுபோல லதாவும் பல சமயங்களில் படைப்புகளை செறிவாக்குவதில் துணை நின்றுள்ளார். இன்று அடுத்தத் தலைமுறையினர் அப்பொறுப்புகளை மெல்ல மெல்ல ஏற்கின்றனர். இப்படி ஒத்த விருப்பம் கொண்ட சிலர் இணைந்து பணியாற்றுதல் என்பதே இன்பமானது இல்லையா? நமக்கு விருப்பமான உலகு எவ்வளவு சிறியதாக இருப்பினும் அதை நாம்தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதனுள் இயங்கி நாம்தானே உயிர்ப்பிக்க வேண்டும்.
ஏன் பலரது இதழியல் இயக்க முயற்சிகள் நீண்டு நிலைப்பதில்லை எனக்கேட்டுள்ளீர்கள்.
என் அவதானிப்பில் நான் உணர்ந்தது வெறுப்பு, பொறாமை, தாழ்வுணர்ச்சி, அகங்காரம் ஆகிய மனநிலையில் உருவாகும் எந்த முயற்சிகளும் நெடுங்காலம் நீடிப்பதில்லை என்பதுதான். 2007இல் வல்லினம் அச்சு இதழ் உருவானது. இந்த பதினைந்து ஆண்டு காலத்தில் ஏராளமான இதழ்கள் மலேசியாவில் தோன்றி மறைந்துள்ளதை நான் பார்க்கிறேன். என்னால் அவை உருவான பின்புலத்தை மிகச்சரியாகவே கணிக்க முடியும்.
ஒன்று, பிறர் மீது கொண்ட பொறாமையின் காரணமாக தன்னை ஓர் இலக்கியச் சூழலின் மையம் என நிறுவ உருவாகும் முயற்சிகள்.
இரண்டு, புறக்கணிப்பின் வலிகளால் இந்தச் சமூகத்திற்கு தான் யாரென காட்டுவதற்காக சவால் விடும் முனைப்பு.
மூன்று, அப்போதைக்கு உருவாகும் வெறுமையை நிரப்ப செயல்படும் வேகம்.
நான்கு, தன் தாழ்வுணர்ச்சியில் இருந்து விடுபட்டு எழுந்து நிற்க தேவைப்படும் பாவனை.
இந்த நான்கு செயலூக்கத்தின் பின்னணியில் இருப்பது எதிர்மறையான மனநிலை. ஆனால் மனிதனால் தொடர்ச்சியாக எதிர்மறை மனநிலையில் உழல முடியாது. நீங்களே யோசித்துப் பாருங்கள்… சில நாட்களுக்கு அல்லது வாரங்களுக்குப் பிறகு யார் மீதாவது நீங்கள் வைத்திருக்கும் வெறுப்பு நீடிக்கிறதா? வெறுப்பை சுமந்தலையும்போது நம் உடலும் மனமும் எவ்வளவு கனமுள்ளதாகிறது? நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் எவ்வளவு பிறழ்ச்சியுறுகிறது? அப்போது இருள் சூழ்ந்த உங்கள் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு அகோரம்?
எதிர்மறை குணங்கள் ஒருவர் தனக்குத் தானே உருவாக்கிக்கொள்ளும் நரகம். அந்த நரகத்தில் ஒருவர் தான் வெறுப்பவற்றை இழுத்துவந்து கொதிக்கும் கொப்பறையில் வீசி துடிக்க வைக்க முயல்கிறார். ஆனால் அதற்காக அவர் தன்னைத்தானே வருத்திக்கொண்டு கொதிக்கும் கொப்பறை அருகில் காலமெல்லாம் காத்திருக்க வேண்டியுள்ளது. வெறுப்பின் தனலுக்கு ஒருவன் தன்னைத்தானே பலி கொடுக்காமல் பிறரை அதை நோக்கி இழுத்துவர முடியாது.
அப்படி இருக்கும்போது இந்த மனநிலையில் உருவாகும் முயற்சிகள் மட்டும் எப்படி நீடிக்கும்? மனிதனின் இயல்பாக குணம் எதிர்மறை அழுத்தங்களில் இருந்து மீண்டு வரவே முயலும். இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்ந்துவரவே விரும்பும். அப்போது இந்த முயற்சிகளும் இயல்பாகக் கைவிடப்படுகின்றன. காரணம் அம்முயற்சிகள் எல்லாம் எதிர்மறை பண்பினை தந்திரமாக மறைத்துக்கொண்டு செய்த பாவனைகள் மட்டுமே.
இன்னொரு துணைக்கேள்வி எழலாம். அப்படி வெறுப்பில் உருவாகும் முயற்சிகள் எதுவும் நீடிப்பதில்லையா?
இருக்கலாம்… ஆனால் அது ஜீவிக்க வேறு இரைகள் தேவையாக உள்ளது. உதாரணமாக, அந்த முயற்சியை விற்பனை பண்டமாக மாற்ற முடிகிறதா? அரசியல் தலைவர்களோடும் தனவந்தர்களோடும் நெருங்கி இருக்க அவை ஒரு நுழைவு அட்டையாகப் பயன்படுகிறதா? அதன் வழி பதவி, அடையாளம் உள்ளிட்ட சுய லாபம் கிடைக்கிறதா என்பதைப் பொறுத்து அதன் ஆயுள் காலம் கூடலாம்; குறையலாம்.
தமிழகத்தில் எனக்குத் தெரியவில்லை. நான் மலேசியாவில் நடக்கும் எல்லாவகை இலக்கிய முயற்சிகளையும் அவதானிப்பவன். அதற்கு பின்னால் இருக்கும் பாசாங்குகளை மிக எளிதாகவே என்னால் உள்வாங்க முடியும். அதன் உள்ளே இருக்கும் அரசியலை முதலிலேயே நான் கண்டடைந்து சொல்லும்போது நண்பர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மெல்ல அது தன்னை அம்பலப்படுத்தும்போது ஆச்சரியப்படுவார்கள். ஆரம்பத்தில் அதுபோன்ற முயற்சிகளை நோக்கிச் செல்லும் இளைய எழுத்தாளர்களைக் கண்டு எனக்கு கஷ்டமாக இருக்கும். அவர்கள் ஆர்வத்தை பிறர் தவறாக உபயோகிக்கிறார்கள் என்றே நினைப்பேன். ஏதோ சூழ்ச்சி வலையில் சிக்குகிறார்கள் என கொதிப்படைவேன். அந்த அசட்டுத்தனம் எல்லாம் தேவையில்லை எனத் தாமதமாகவே உணர்ந்தேன்.
யாரைவிடவும் இளைஞர்கள் தெளிவாகவே உள்ளனர். அவர்களுக்கு வெற்றுப் புகழ்ச்சியும் அவசரமான அங்கீகாரமும் தேவையென்றால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்கிறார்கள். உழைப்பெதையும் வழங்காமல் அடையாளத் தேவைக்கு மட்டும் எங்கு ஒட்டிக்கொள்ளவேண்டுமே அங்கே இணைகிறார்கள். அவரவருக்கு எது தேவையோ அங்கே தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இதில் யார் குறித்தும் கவலை அடைய ஒன்றும் இல்லை. அவரவரின் ஆன்மா விரும்பும் பாதையை இயற்கையே அவர்களுக்குக் காட்டுகிறது. இதில் எவரும் பதற்றமடைய ஒன்றும் இல்லை. எல்லாமே அதனதன் பாதையில் இயல்பாகச் செல்கிறது.
இதற்கு முற்றிலும் மாறுபட்ட பாதை உண்டு. அது லட்சியத்தின் பாதை. ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பின் பாதை. என் புரிதலில் அதுவுமே குறைந்த ஆயுள் கொண்டதுதான் என்பேன். லட்சியங்கள் எல்லைகளைக் கொண்டவை. அவரவர் மனதில் நிச்சயிக்கப்பட்ட உயரங்களை ஏற்றுக்கொண்டவை. மன நிறைவு அடையும்போது மரவட்டைகள் போல சுருட்டிக்கொள்பவை. வெறுப்பின் பாதை நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் லட்சியத்தின் பாதை நாணயத்தின் மற்றுமொரு பக்கம்.
அப்படியானால் எது ஒரு முயற்சியை நீடிக்க வைக்கிறது?
என் பதில் ஒரு மனிதனின் விருப்பம் மட்டும்தான். விருப்பம் என்பது உலகியல் விருப்பம் அல்ல. இந்த வார்த்தையை நான் ஆன்மிகத் தளத்தில் பயன்படுத்துகிறேன். முழுமையை நோக்கிய பயணம் என அதை விரிவாகச் சொல்லலாம். தன்னை நோக்கி முழுமையடைதல். ஓர் இசைக்கலைஞனை, ஒரு நடனக் கலைஞனை ஓர் ஓவியனை எது இடைவிடாது இயங்க வைக்கிறது? நாம் பார்ப்பது அவர்களின் இறுதிக்கட்ட பகிர்வை மட்டும்தான். நான் அதைச் சொல்லவில்லை. அதற்கு முன்பான அக்கலைஞர்களின் வெளிப்பாடுகள் அனைத்தும் அந்தரங்கமாகவே நிகழ்கின்றன. ஏன் அவர்கள் தன்னந்தனியாக தங்கள் கலையில் மூழ்கியிருக்கிறார்கள்? எதன் பொருட்டு அவர்கள் தாங்கள் வாழும் சூழல் மொத்தத்தையும் அதற்கொப்ப மாற்றியமைக்கிறார்கள்? எதற்காக அவர்கள் அந்த மனநிலையில் இருந்து விலகாத நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள்? எழுத்தும் அப்படியானதுதான். நான் பணியாற்றும் சூழலைத் தவிர பிற பொழுதுகள் அனைத்தையும் அவ்வாறு வடிவமைக்கவே முயல்கிறேன்.
நான் எழுதுவது மட்டுமல்ல, பிறர் எழுதுவதற்கான தகுந்த களம், தரமான நூல்களை வாங்க மலிவான தளம், இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டறைகள், கலந்துரையாடல்கள், பயணங்கள் எல்லாமே அந்தச் சூழலை வடிவமைக்கவே. ஒருவர் தன் ஆளுள்ளம் எதை விரும்புகிறது என அறிவதே அவரது விடுதலைகான முதல் தொடக்கம். அதை அறிந்தபிறகு புறச்சூழல்களின் போலி விளம்பரங்கள் எதுவும் ஒருவரை பாதிப்பதில்லை.
ஒரு செயலைச் செய்யும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியடைகிறதா? அந்தச் செயலைச் செய்யும்போது மனம் முழுமை பெற்றதாக உணர்கிறதா? அதுவே நமக்கான செயல். நம் முழுமையை அடைய நாம் சென்றடையும் தவம்.