வீடு திரும்பும் போது ஓர் உணவத்தில் புகுந்தோம். உணவுக்கு ஆர்டர் எடுப்பவர் சிவாவைக் கண்டதும் உற்சாகம் அடைந்தார். அவர் 10 வருடங்கள் மலேசியாவில் கோலாகட்டில் எனும் பகுதியில் பணியாற்றியவராம். முஸ்தஃபா.
சிவாவிடம் சில பெயர்களைச் சொல்லி நலம் விசாரித்தார். சிவாவும் சிலரை நினைவு கூர்ந்தார். மகிழ்ச்சியான பொழுதுகள் சம்பவங்கள் நம் மன ஆழத்தில் பதிந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுக்கும் சந்தர்ப்பமோ அவகாசமோ எப்போதும் வாய்ப்பதில்லை. அதற்கு தோதான ஒருவர் நம்வசத்தில் இருக்கும் போது பழைய புகைப்படங்கள் போல அவற்றை எடுத்துப் பார்க்கிறோம்; சிரிக்கிறோம்.
சிவா சைவ பிரியாணிக்கும் நான் கொத்துப்பரோட்டாவுக்கும் ஆர்டர் செய்தோம். இரண்டுமே வந்தது. அவற்றை உண்பதற்குக் கரண்டி கேட்டோம். எடுத்து வந்தவர் தன் அழுக்கடைந்த சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சிவா சிரித்துக்கொண்டே ‘இதை இப்படி செய்துட்டு சாப்பிடனும்’ என குடிக்க வைத்திருந்த குவளை வெண்ணீரில் நனைத்து சாப்பிடத்தொடங்கினார். நானும் அதையே செய்தேன். பிரியாணி நம்ம ஊர் ‘நாசி கொரெங்’ போல இருந்தது. கொத்துப்பரோட்டாவை விழுங்க முடியவில்லை. பழைய எண்ணெய்.
வீடு அருகில்தான் இருந்தது. அப்போதுதான் மணி 8. அதற்குள் வீட்டிற்குள் அடங்க வேண்டுமா என்று தோன்றியது. சட்டென நினைவுக்கு வந்து காலை நாளிதழில் கண்ட ‘ஏ’ சான்றிதழ் படம் ஏதும் பார்க்கலாமா என சிவாவைக் கேட்டேன். ‘அடங்காத அவளின் உணர்ச்சி ‘ என்ற தலைப்புடன் ஒரு படம் இரவு 9 மணிக்கு ஓடியது. சிவா எப்போதும் போல உணர்ச்சியற்ற முகத்துடன் இருந்தார். அதில் கொஞ்சம் ஆர்வம் தெரிந்திருந்தாலும் ஆட்டோ பிடித்திருப்பேன். “எல்லாம் ச்சும்மா பிட்டுப்படங்கள்தான் ” என்றார் சலிப்புடன். அது தெரிந்த கதைதான். ஆனால் அங்கு படம் பார்ப்பவர்களைப் பார்ப்பதற்காவது போக வேண்டும் போல இருந்தது.
எஸ்.ஜெ.சூரியாவை எடுக்கும் தமிழ்ப்படங்களை மிஞ்சி தமிழில் ஓர் ஆபாசப் படத்தை எடுக்க முடியாது என்றும் பாலாவை மிஞ்சி ஒருவனால் மசாலா படம் எடுக்க முடியாது என்றும் எனக்கு முழுமையாக நம்பிக்கை இருப்பதால் பிட்டுப்படமெல்லாம் பெரிய பிரச்சனையாகப் படவில்லை. ஏற்கனவே தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது மூன்று முறை திரையரங்குகளுக்குச் சென்றிருந்தேன்.
முதல் படம் ‘சிவப்பதிகாரம்’ . இப்படத்தை ஈரோட்டில் இருந்த ஒரு திரையரங்கில் பார்த்தேன். இரண்டாவது ‘ஜேம்ஸ் பாண்டின்’ படம். இதை ஒரு புறநகரத்தில் பார்த்தேன். இருக்கைகளை இஷ்டம் போல தேர்ந்தெடுக்கலாம். தகர நாற்காலி என்பதால் நகர்த்தி வைத்து அமரவும் செய்யலாம். படம் ஆரம்பித்த போது ஜேம்ஸ் பாண்ட் தமிழில் பேசினார். அடுத்து ‘வெயில்’. சத்யம் திரையரங்கம் என நினைவு. மலேசிய திரையரங்கைவிட பிரமாண்டம். இதன் சிறப்பு காட்சிக்காக மனுஷ்ய புத்திரனுடன் சென்றேன். பின்னால் எழுத்தாளர் திலகவதி அமர்ந்திருந்தார். பக்கத்தில் பசுபதி. வசந்த பாலனும் இருந்தார். ஒரு இயக்குநரோடு அமர்ந்து அவர் இயக்கியப் படம் பார்ப்பாது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. மூன்றிலுமே படத்தைவிட அதன் சூழலே என்னை ஈர்த்தது. ஒவ்வொரு வாழிடத்திலும் அவர்களின் வசதிபடி கேளிகை சூழல் அமைவதைப் பார்க்க முடிந்தது. அங்கு அமர்ந்து பார்ப்பவரின் மனோ நிலை. தன் ரசனையை வெளிப்படுத்தும் விதம் எல்லாமே வேறுப்பட்டிருந்தன.
படைப்பாளனுக்கு இருக்க வேண்டிய கிரகித்தலின் (observation) அவசியத்தை எனக்கு முதலில் சொன்னவர் ஜெயமோகன்தான். முதல் பயணத்தில் “இங்கு பேருந்து பயணங்களும், தமிழகச் சூழலும் உங்களுக்கு அசூசையாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் கிரகித்துக்கொள்ளுங்கள். அதை முழுமையாக அனுமதியுங்கள். அதுதான் படைப்பாளிக்கு தேவை” என்றார். அதே போல நாஞ்சில் நாடனுடன் மலேசியா வந்த போதும் “மலேசியா தொடர்பான எல்லா தகவல்களும் இன்று இணையத்தில் கிடைக்கின்றன. அதுகுறித்தெல்லாம் அதிகம் கவலைப் படாதீர்கள். சூழலை, மனிதர்களை முழுமையாக பார்வையிடுங்கள். கிரகித்துக்கொள்ளுங்கள்” என்றார். பயணிக்கு இதுதான் அவசியம் என்று கருதுகிறேன்.
எந்தத் திட்டமும் சரிவராமல் இருந்ததால் வீட்டிற்கே சென்றோம். போகும் வழியில்தான் கவனித்தேன். அங்கு இருக்கும் பெரும்பாலான மோட்டார் சைக்கிள் இருக்கைகளில் இரப்பரால் ஆன தக்கைகள் துருத்திக்கொண்டு இருந்தன. சிவாவிடம் காட்டினேன். ‘மசாச்சுக்குப் போல’ என்று கூறி சிரித்தார். இதுபோன்ற இருக்கைகளை மலேசியாவிலும் யாராவது அறிமுகம் செய்யலாம் என நினைத்துக்கொண்டேன்.
வீட்டில் லீனா இருந்தார். அவர் இயக்கியப் படங்கள் தொடர்பான பேச்சு வந்தது. அவர் இயக்கிய ஆவணப்படங்களான ‘மாத்தம்மா’ , ‘பறை’ , ‘பலிபீடம்’ போன்றவற்றை ஏற்கனவே பார்த்ததுண்டு. அவர் ஆற்றலில் வியந்ததும் உண்டு. பெரிதும் பேசப்பட்ட ‘தேவதைகள்’ ஆவணப்படத்தைப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. சொன்னோம். பார்க்க அனுமதி கொடுத்தார்.
தேவதைகள் வந்தனர்.
…தொடரும்