அன்று காலை 10 மணிக்கு ஆதவன் தீட்சண்யாவை பார்க்கத் திட்டமிட்டிருந்தோம். இரவில் தாமதமாகப் படுத்தாலும் 7 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டிருந்தது. சிவா உறக்கத்தில் இருந்தார். வெளியில் லீனாவும் உறங்கிக் கொண்டிருந்தார். வாயில் கதவைத்திறந்தேன். முதல் ஆளாக வாயில் கதவைத் திறப்பதென்பது எனக்குப் பிடித்தமான செயல். ஏதோ அன்றைய வாழ்வை முதலாவதாகத் தொடங்கிவைப்பது போல ஓர் எண்ணம். முகத்தில் அடிக்கும் முதல் காற்று உற்சாகப்படுத்தக்கூடியது.
லீனாவின் வீடு அழகான சூழலில் அமைந்திருந்தது. அந்தக் குடியிருப்பு முழுவதிலும் தூங்கு மூஞ்சி மரங்களின் பூக்கள் உதிர்ந்திருக்கும். நகர சத்தங்களிலிருந்து விடுப்பட்ட தூய்மையானப் பகுதி அது. லீனாவின் வீட்டுக்குச் சற்று தள்ளிதான் அமைச்சர் அன்பழகன் வீடு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் வீட்டை கடக்கும் போது சில போலிஸ்காரர்கள் நின்று கொண்டிருப்பார்கள். தேர்தல் காலக்கட்டமானப்படியால் பிரச்சாரக் கார்கள் நிர்ப்பதைப் பார்க்கலாம். வெளியில் சென்று அன்று சந்திக்கப் போகும் நபர்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். எங்கள் சந்திப்பில் பௌத்த அய்யனாரும் கலந்து கொள்வது கூடுதல் மகிழ்வைக் கொடுத்தது. ஆதவன் அண்ணனிடம் பேச வேண்டிய விசயங்கள் குறித்து ஒரு வரைப்படம் ஓடியது.
கையில் இருந்த கைபேசியை உயிர்ப்பித்த போது ஆதவன் தீட்சண்யா அழைத்த செய்தி வந்திருந்தது. அழைத்தேன். என்னை அதிகாலை ஐந்து மணியிலிருந்து அழைப்பதாகச் சொன்னார். அதிகாலையிலேயே கிழம்பி ரயில் நிலையம் வந்துவிட்டதாகவும் அப்போதுதான் ஒரு மரணச்செய்தி தனக்குக் கிடைத்த படியால் மீண்டும் ஊர் நோக்கி செல்வதாகவும் கூறினார். ஒரு நாற்காலி இருந்தால் அங்கேயே அமர்ந்திருப்பேன். அவர் குரலிலும் வருத்தம் . ‘பரவாயில்லை அண்ணா நாம் மலேசியாவில் சந்திக்கலாம்’ என்றேன். வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்போதைய ஒரே அவசியம் அவர் வருத்தம் அடையாமல் இருப்பதுதான் எனப்பட்டது. நான் தொடர்ந்து சிலரிடம் கற்றுக்கொண்டே இருக்கிறேன். இந்தக் கற்றல் வாழ்க்கை முழுதும் நடைப்பெறப்போகிறது. அந்தக் கற்பித்தலுக்குக் காரணமாக இருப்பவர்களைச் சந்திப்பதென்பது ஓர் அனுபவம். அதுவும் ஆதவனின் பெரும்பாலான கருத்துகளோடு ஒத்துப்போகும் எனக்கு அவருடன் உரையாடுவது மேலும் பார்வையைக் கூர்மைப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கும்.
உள்ளே சென்றேன். இன்னும் எல்லாரும் உறங்கிகொண்டிருந்தனர். என் சோகம் சொல்ல ஆள் இல்லை. காத்திருந்து லீனா விழித்தவுடன் முதலில் தகவலைச் சொன்னேன். வருத்தப்பட்டார். அடுத்து என்ன செய்யலாம் என்றார். ‘கருப்பு பிரதிகள்’ நீலகண்டனைச் சந்திக்க வேண்டுமெனக் கூறினேன். லீனா அழைத்தார்.
நீலகண்டனிடம் ஓரிரு முறை தொலைப்பேசியில் பேசியதுண்டு. அவை வல்லினமும் கருப்பு பிரதிகளும் இணைந்து செயல்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பானவை. ‘கருப்பு பிரதிகளின்’ பதிப்பில் வந்த சில புத்தகங்களைக் கண்டுள்ளேன். முக்கியமானப் பிரதிகள். நீலகண்டன் இளைஞர். எதிர் அரசியல் சார்ந்த பதிப்புகளை அதிகம் வெளியிடுபவர்.
ஒரு மணி நேரத்தில் வந்தார். பேசினோம். சில திட்டங்கள் குறித்து உரையாடினோம். ‘கருப்பு பிரதிகள்’ பதிப்பில் வந்திருந்த புத்தகங்களை வாங்கினோம். அவற்றில் பெரும்பாலும் மலேசியாவில் கிடைக்காதவை. ஆனால் முக்கியமானவை. ஷோபா சக்தி ‘லும்பினியில்’ செய்த நேர்காணல்கள் தொகுப்பாக வந்திருந்ததை அப்போதுதான் பார்த்தேன். அதில் என் நேர்காணலும் இருந்தது.
நாங்கள் விடைப்பெரும்போது மணி காலை 10. அன்று பௌத்த அய்யனாரையும் சந்திக்க வேண்டியிருந்ததால் அழைத்தேன். தி.நகரில் சந்திக்கலாம் என்றார். உடன் எழுத்தாளர் பாவண்ணனும் இருப்பதாகக் கூறினார். நாங்கள் புறப்படத் தயாரானோம்.
…தொடரும்