நாளை எனக்குப் பிறந்தநாள்.
நாற்பத்து மூன்றாவது வயதின் இறுதி நாளில் நிற்கிறேன். இந்நாளில் நண்பர்களுடன் இணைந்து ‘வல்லினம் அறவாரியம்’ தொடங்கும் செய்தியைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இந்த முயற்சியை முன்னெடுக்க முதன்மையான உந்துசக்தி திரு அருண் மகிழ்நன் அவர்கள். மே 24ஆம் திகதி அவருடனான சந்திப்பில் இது காலத்தின் தேவையெனப் புரிந்தது. திட்டம் வகுப்பது மட்டுமல்லாமல், அத்திட்டம் முழுமையடைய தமது ஆதரவை அருண் மகிழ்நன் அவர்கள் உணர்த்தியபோது எனக்கு இம்முயற்சி குறித்த ஆழமான நம்பிக்கை பிறந்தது.
இப்படியான ஒரு திட்டம் 2016இல் வல்லினம் நண்பர்களுடனான சந்திப்பில் உருவானபோது அது அவ்வளவு எளிதல்ல எனும் எண்ணமே எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டு, அடுத்த நகர்வைத் தடுத்தது. அதற்குத் தேவையான பணபலம் எங்களால் நினைத்துபார்க்க முடியாதது. இன்று அது சாத்தியமே எனும் எண்ணம் உருவாக மலேசியாவிலும் உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளனர். இருபது ஆண்டு காலத்தில் வல்லினம் பலரது நம்பிக்கையைப் பெற்ற இலக்கிய இயக்கமாக வளர்ந்துள்ளது. தொடர் பயணத்தினால் சக மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கை எனக்குப் பலமடங்கு அதிகரித்துள்ளது.
எந்த மனிதனின் கண்ணீரும் என் கண்ணீர்தான் என நான் நாவல்கள் எழுதுவதன் வழியாகவே ஆழுள்ளத்தில் அறிந்தேன். அது நிலங்களை, எல்லைகளைத் தாண்டி என்னைச் சிந்திக்கச் செய்கிறது. அதன் விளைவு ‘தாரா’. அந்நிலையை என் மனம் ஏற்றபோது வழக்கறிஞர் பசுபதி மீதும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி மீதும் எனக்கு பலமடங்கு அன்பும் மரியாதையும் அதிகரித்தது. அவர்கள் செய்த, செய்கின்ற சமூகப் பணிகள் நாடுகள், மொழிகளைக் கடந்தவை. மனிதநேயத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டவை. தாராவை நான் எழுதி முடித்தபோது என்னை மொழி, இனம், தேசம் கடந்த எழுத்தாளனாக முழுமையாக உணர்ந்தேன். அவ்வுணர்வை அறுதியிட்டு வரையறை செய்ய முடியாமல் தவிப்பாக இருந்தது. காரணம் நான் என்னை மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக ஒன்று திரட்டிக்கொண்டவன். இந்த மனநிலை என்னைத் திரித்து, நிலைகொள்ளாமையை உருவாக்கியது.
சுவாமி பிரம்மானந்தாவிடம் ஒருமுறை சொன்னேன், ”இந்த உலகில் தண்ணீர் தீர்ந்து, மனிதன் பஞ்சத்தில் வாடும் ஒரு காலம் வரும் என எனக்குத் தோன்றுவதுண்டு. அப்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன். ஆனால் அப்போது தாகத்தால் அழும் உயிராக இருப்பதும் நான்தான் என எழும் எண்ணம் மன நிம்மதியைக் கெடுக்கிறது,” சுவாமி அதற்கான விளக்கத்தை தத்துவத்தின் வழியாகக் கொடுத்தார். ஆனாலும் பலவிதமான அலைக்கழிப்புகள், பேரன்பைச் சுமக்கும் மனமும் உடலும் எனக்கில்லையோ எனத் தோன்றிக் குழப்பியது.
இந்தக் கலவையான உணர்வை மெல்ல மெல்ல வடித்து ஓர் உருவம் கொடுத்தபோது, தமிழ் எழுத்தாளர்கள் எந்த நாட்டில் சிரமப்பட்டாலும் அந்தக் கண்ணீரைத் துடைக்க இங்கிருந்து ஒரு கை செல்ல வேண்டுமென முடிவெடுத்தேன். அந்த உணர்வு அரூபமானது. ஆனால் அரூபமானவைதான் பாசாங்கில்லாமல் உரையாடும் சக்தி கொண்டவை.
பலர், தாங்கள் வகுக்கும் திட்டங்கள் சாத்தியப்படுவதில்லை அல்லது தொடர முடிவதில்லை எனச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் திட்டங்களை அல்லது அவர்கள் ஆதரவுடன் முன்னெடுக்கும் கலை, இலக்கியப் பண்பாட்டு முயற்சிகளை இதற்கு உதாரணமாகக்கொள்ளலாம். அது ஏன் என்பதை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அவை ஆணவத்தால் உருவாகும் திட்டங்கள். தன்னை நிறுவவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் உருவாக்கப்படுபவை. அதைச் செயல்படுத்த அறிவே பிரதானமாகப் பங்களிக்கிறது. ஆணவம் நிறைவடையும்போதோ அல்லது ஆணவம் வேறு பெருந்தீனியைத் தேடும்போதோ அத்திட்டம் கைவிடப்படுகிறது.
முதலில், திட்டம் என்பது மனத்தில் உணர்வாக உருவாக வேண்டும். அவ்வுணர்வு அன்பு, கருணை, சமூக அக்கறை என நேர்மறையானதாக இருக்க வேண்டும். அந்த நேர்மறைச் சிந்தனையே பிரபஞ்சத்துடன் இணைந்து அதை சாத்தியமாக்குகிறது. அந்தச் சிந்தனையே சிக்கல் இல்லாமல் எவருக்கும் நம்மைப் புரியவைக்கிறது. நூறு சொற்கள் செலவிடும் இடத்தில் ஒரு பார்வை, சில சொற்கள் மானுட ஆழங்களைச் சென்று தொட்டுவிடுகின்றன. இப்படி நிகழும் உரையாடல் எளிய மனிதத் தொடர்பு அல்ல. எல்லா மனிதர்களுக்குள்ளும் உறைந்திருக்கின்ற அன்பை, பிரபஞ்சம் தன் மாயச்சங்கிலியால் பிணைக்கிறது. அத்தொடர்புகள் வழியாகவே அவ்வுரையாடல் நிகழ்கிறது. ஆனால் இது எல்லாருக்கும் நிகழ்வதில்லை. வன்மம், சுயநலம், பேராசை, சூழ்ச்சி போன்ற உணர்வுகளால் சூழப்பட்ட மனித மனங்கள் அன்பின் ஊற்றுகளை ஏந்தும் தருணங்களை அறிவதே இல்லை.
என் புரிதலில் சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் இதுதான். நான் என் சக நண்பர்களை கவனித்தே வருகிறேன். எவ்வளவு தீங்குகளை ஏற்படுத்தினாலும் சில பழக்கங்களை அவர்கள் கைவிடுவதில்லை. பருமனான ஒரு தோழியிடம் கேட்டேன், ”உனக்கு வயிறு நிறைந்துவிட்டதை நான் அறிவேன். ஆனால் புதிய உணவைப் பார்க்கும்போது ஏன் உன் கை அதை நோக்கி நகர்கிறது?” அவள் தன் உடல் எடையால் மூட்டு வலி ஏற்பட்டு நடக்கச் சிரமப்படுபவள். அவள் தன் சிரமத்தை அறிந்துகொண்டதாகவே நான் உணர்ந்ததில்லை. அவள் சொன்னாள், ”சாப்பிட்டேன், ஆனால் உணவைப் பார்த்தால் பசிக்கிறது.”
இங்கு அதீத பசி எனும் உணர்வுதான் அவளது நரகம். உண்மையில் அது பசியல்ல; இச்சை. புலன்களால் பெறத் தவிக்கும் இச்சை. இந்த இச்சை அவள் அடைய வேண்டிய சொர்க்கத்துக்கான பாதையை மழுங்கடிக்கிறது. அகக்கண்களை மறைத்துவிடுகிறது. ஒரு புனைவு எழுத்தாளனாக இதை இப்படி உருவகிப்பேன். அன்பை எதிர்மறை உணர்வுகளால் சிறை வைக்கும்போது, கைக்கால்களை நீட்டி ‘விடுதலை வேண்டும்’ எனும் அதன் பேரலறலை நாம் கேட்காதவாறு செய்வது நரகத்தால் உருவாக்கப்படும் இச்சைகள்தான். இப்படி ஒரு சிறை வதை நமக்குள் நடப்பதை நாம் அறிவதே இல்லை. இதை உணர்பவர்கள் தங்கள் வாழ்நாளில் அதிலிருந்து மீள முயல்கிறார்கள். அப்படி முயன்று அவ்வப்போது தோற்பது கூட பெருங்கொடுப்பினைதான்.
தோழி மிகவும் நல்லவள். ஆனால் பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்ள முடியாதவள். அதனால் வாழ்வின் இனிமையை அறியாதவள். எனவே வாழ்வின் மீது புகார்கள் கொண்டவள். பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்ள இச்சைகள் பலவீனப்பட வேண்டும். அதன் வழியாகவே நேர்மறை உணர்வுகள் சுதந்திரமாக வெளிப்படும். அதுவே வாழ்வில் நிறைவைக் கொடுக்கும். அவ்வகையில் நானும் என்னுடைய இருளை அறிந்தே வைத்துள்ளேன். புனைவுலகம் என் இருளை துல்லியமாக அறிய உதவுகிறது. நான் அதனுள் நுழைந்து பதைபதைக்கிறேன். என்னை எப்படி அதிலிருந்து மீட்பது எனக் குழம்புகிறேன்.
ஜெயமோகன், சுவாமி பிரம்மானந்தா, பசுபதி, சண்முகசிவா போன்ற பெரியவர்களின் அருகாமை அதிலிருந்து அவ்வப்போது விலகிச்செல்லவும் என்னை மீட்டுக்கொள்ளவும் உதவுகிறது. உண்மையில் அவர்கள் நேரடியாக எனக்கு எதையும் போதிக்கவில்லை. அவர்கள் செயல்களைப் பார்த்து நான் என்னை வடிவமைத்தும் மாற்றியமைத்தும் மீட்டும் கொள்கிறேன். மேலும் அவர்களிடம் என் குறித்து யார் வேண்டுமானாலும் எவ்வளவு அவதூறு வேண்டுமானாலும் சொல்லலாம். அவற்றையெல்லாம் கடந்து அவர்கள் என்னை அறிந்திருப்பார்கள். நான் அவர்களை அவ்வாறே உணர்ந்து வைத்திருக்கிறேன். எனவே நான் மதிக்கும் யாரிடமும் என்னை நிரூபிக்கும் நிர்பந்தம் வந்ததில்லை. அது எவ்வளவு பெரிய சுதந்திரம். கூடுதலாக ஜெயமோகனிடம் அவ்வப்போது என் தவறுகளையும் ஒப்பிப்பது உண்டு. பின்னர் இலக்கியமாக அது திரண்டு வெளியேருகிறது. அது எவ்வளவு பெரிய விடுதலை. அதுவே வாழ்வை இனியதாக மாற்றுகிறது. நம்பிக்கையைக் கொடுக்கிறது.
***
என் பிறப்பின் நோக்கத்தை நான் என்னுடைய இருபதுகளிலேயே அறிந்துகொண்டேன். எல்லாரும் அரசாங்கப்பள்ளியில் படிவம் ஆறு பயிலும் வாய்ப்புக்காகத் தவம் இருந்தபோது எனக்கு பத்தொன்பது வயதில் அந்த வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இரண்டு வாரங்கள் மட்டுமே அங்கு பயிலும் மனம் வாய்த்தது. பாட நூல்களை எடுத்தபோது ஒவ்வாமையும் நாவல்களைத் திறந்தபோது உற்சாகமும் பற்றிக்கொண்ட காலமது. ஜெயகாந்தனிலும் சுஜாதாவிலும் புதைந்துபோக வேண்டிய நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போதேல்லாம் தோன்றும். பின்னர் முழுநேர எழுத்தாளனாகப் போகிறேன் என குடும்பத்துடன் கோலாலம்பூருக்கு அந்த வயதிலேயே புலம்பெயர்ந்தேன். அது அவ்வளவு சாதாரண நிகழ்வாக அமையவில்லை. ஈராயிரத்தின் தொடக்கத்தில் பட்டதாரியை உருவாக்குதல் என்பது ஒவ்வொரு குடும்பத்தினதும் கனவாக இருந்தது. படிவம் ஆறு பயில்வது மட்டுமே என்னைப்போன்ற நடுத்தரவர்க்கக் குடும்பத்திற்கான முதன்மை வாசல். கிடைக்க அறிதான அவ்வாய்ப்பைக் கைவிட்டு வெளியேறியது குடும்பத்தில் எல்லாருக்குமே கடும் அதிருப்தி; நானும் குழப்பமாகவே அம்முடிவை எடுத்தேன்.
கோலாலம்பூர் வந்து சேர்ந்த பத்தொன்பதாவது வயதில் பத்திரிகை ஆசிரியர்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு சஞ்சிகையில் எந்தச் சம்பளமும் வாங்காமல் ஊழியம் செய்தேன். மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் ஊற்றக்கூட காசில்லாத சூழலில் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து இருபதாவது நாளில் விபத்துக்குள்ளானேன். வலது கையில் மூன்று விரல்கள் நசுங்கின. எதையும் எழுத முடியவில்லை. நீண்ட ஓய்வு, நிறைய சிந்திக்கச் வைத்தது. நாளிதழ்களில் வேலை செய்தால் முழு நேரமாக எழுத்தாளனாக இருக்கலாம் எனும் தவறான புரிதலில் இருந்து விடுபட்டு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இருபதாவது வயதில் சேர்ந்தேன். கல்லூரித் தனிமையை வாசிப்பால் நிறைத்துக்கொண்டு 2005இல் வேலைக்குச் சேர்ந்தபோது வாழ்க்கை முழுமையானதாக இல்லை. கூடுதல் பணத்துக்காக டியூஷன் சொல்லிக்கொடுக்கவும் ஆடம்பர வாழ்வை அமைத்துக்கொள்ளவும் எண்ணம் எழவில்லை. நான் யார் என்ற தொடர் தேடல் ஓயாமல் துரத்தியது. 2006இல் ‘காதல்’ சிற்றிதழில் ஒப்புக்கொடுத்து 2007இல் சொந்தமாக ‘வல்லினம்’ இதழைத் தொடங்கியபோது வயது இருபத்து ஐந்து.
கிடைத்த சொற்ப சம்பளத்தில் (1,800 ரிங்கிட் இருக்கும்) கணிசமான அளவை மோட்டார் சைக்கிள் பெட்ரோலுக்கு எடுத்து வைத்துக்கொண்டு சிற்றிதழ் கனவுடன் பயணித்த காலத்தில் என் வாழ்க்கை இலக்கியத்திற்கானது என முடிவெடுத்துக்கொண்டேன். என்னைச் சுற்றி இருந்த பலருக்கும் மலேசிய இலக்கியம் என்பது நகைப்புக்கு உரியதாக இருந்தது. ”இங்கெல்லாம் என்னாத்த எழுதிட்டாங்க,” என என் காதுபட பேசியவர்களின் இலக்கிய வழிபாடெல்லாம் தமிழகத்தை நோக்கியே இருந்தது. முற்றிலும் சாதகமற்ற சூழலில் நான் மலேசிய இலக்கியத்துக்கான சின்னஞ்சிறிய ஒற்றையடிப் பாதையாவது அமைக்கும் கனவில் இருந்தேன். அவ்வகையில் எனக்கு முன்னோடி சை.பீர்முகம்மது அவர்கள். பல விமர்சனங்கள் இருந்தாலும் மலேசிய இலக்கியத்திற்கு அவராற்றிய பங்களிப்பு முக்கியமானது.
இங்கு நவீன இலக்கியத்திற்கான மரபொன்றை உருவாக்க மூன்று தன்மைகள் அவசியமாக இருந்தன.
முதலாவது இலக்கிய விமர்சனம். அதன் வழியாக முதன்மையான படைப்பாளிகளை, படைப்புகளை முன்னிறுத்துதல். இவற்றை சமரசமின்றிச் செய்ய ஒரு சிற்றிதழ்.
என் வாழ்க்கை மலேசிய இலக்கியத்தின் போக்கை மாற்றி அமைப்பதுதான் என்று நான் உறுதியாக முடிவெடுத்தபோது என் வயது இருபத்து ஏழு. அதன் பின்னர் முப்பத்து ஆறு வயதுவரை தொடர் செயல்பாடுகள். நூல் பதிப்பு, வல்லினம் பயிலரங்குகள், ஓவிய-நிழல்பட கண்காட்சிகள், ஆவணப்படங்கள், வல்லினம் விருதுகள், மலேசிய எழுத்தாளர்களுக்கான அரங்குகள் என மலேசிய இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் மூழ்கியிருந்தேன். நான் எழுதுவது குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. இங்கு விதை விளைய நல்ல நிலம் இல்லை. அதை உழுது பண்படுத்துவதே என் நோக்கமாக இருந்தது.
என்னை நான் ஒரு நாவலாசிரியனாக மெய்ப்பித்துக்கொண்டது முப்பத்து ஏழு வயது தொடங்கியே. அருண்மொழி அக்காவின் சொல்லில் இருந்து அது தொடங்கியது. அது அன்னையின் கட்டளை. அடுத்த ஆறு ஆண்டுகள் புனைவும் செயல்பாடுகளுமாக காலம் நகர்ந்து நாற்பத்து நான்காவது வயதில் நான்கு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என 26 நூல்களை வெளியிட்ட நிறைவுடன் நிற்கிறேன்.
***
இந்த நாற்பத்து நான்காவது வயதின் தொடக்கத்தில், நான் செய்ய வேண்டிய பணிகள் மட்டுமே என் முன் நிற்கின்றன. அதற்கு கடந்து வந்த பாதையை அறிவது முக்கியம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்திய இடைவிடாத செயல்பாடுகளால் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் அடிப்படையாக ஐந்து விடயங்கள் நிகழ்ந்துள்ளன.
அ. தரமான இலக்கியம் என்றால் என்னவென்று அறியக்கூடிய வாசகர்களை உருவாக்கியது.
ஆ. தரமான எழுத்தாளர்கள் யார் எனும் எழுத்தாளர் நிரல் ஒன்றை பரவலாக உணரச்செய்தது.
இ. சிந்திக்கும் தலைமுறை ஒன்றை ஒன்று திரட்டியது.
ஈ. மலேசியத் தமிழ் இலக்கியத்தை பிற இன எழுத்தாளர்களிடம் பரவலாக்கியது.
இ. மலேசிய இலக்கியத்தை உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் பலன்பெற்றது.
யோசித்துப் பார்த்தால் இவையெல்லாம் சாதனைகள் அல்ல. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டியவை. சிலரது அறியாமையினாலும் அரசியல் நோக்கங்களாலும் பின்னகர்ந்தவை. இப்போது அதைச் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அனைத்தும் நல்லபடியாகவே நடந்து முடிந்துள்ளன.
இனி என்னால் எத்தனை தூரம் ஓட முடியும் என்ற கேள்வி மட்டுமே என் முன் உள்ளது. இருபது ஆண்டுகளில் நான் சம்பாதித்தது உலகளாவிய நண்பர்களின் நம்பிக்கையையும் அன்பையும் மட்டுமே. அதன் வழியாகவே இன்றும் என்னால் பொருளாதாரத் தடையின்றி இலக்கியச் செயல்பாடுகளில் நகர முடிகிறது; செயல்பட முடிகிறது. என்மீதும் வல்லினம் செயல்பாடுகளின்மீதும் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் நண்பர்கள் செய்துள்ள உதவிகள் எண்ணிலடங்கா.
ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில் நான் ஓயும்போது இதுவரை முன்னெடுத்த முயற்சிகள் தொடர வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் இத்தனை கால முயற்சிகளும் இறங்கு விசைக்குச் செல்லக்கூடும். வரலாறு அதைத்தான் நமக்குக் காட்டுகிறது. அதற்கு மூன்று திட்டங்களை முன்னெடுப்பது முக்கியம்.
அ. வலுவான பொருளாதார பலம் கொண்ட அமைப்பு.
ஆ. அதை முன்னெடுக்கும் நேர்மையும் செயலூக்கமும் கொண்ட இளைஞர்கள்.
இ. புதிய சிந்தனைகளை உருவாக்கும் வலு கொண்ட தலைமுறை.
இந்தக் கட்டமைப்பை உருவாக்க அறவாரியம் அவசியமாக உள்ளது.
***
அறவாரியம் ஒன்று அமைப்பது தொடர்பான எண்ணங்கள் பலமுறை வந்திருந்தாலும் வலுவாகத் தோன்றியது 2019இல். மரபுக்கவிஞர் வீரமான் ஒரு முதியோர் இல்லத்தில் யாருமற்ற நிலையில் காலுடைந்து தனித்திருப்பதைக் கண்டபோது நண்பர்களிடம் பணம் வசூலித்துக் கொடுத்தேன். சிறிய தொகைதான். அவருக்கு இன்னும் சில எழுத்தாளர்கள் உதவுகிறார்கள் என்பதே அப்போதைக்கு நிம்மதியாக இருந்தது. அதன் பின்னர் மஹாத்மனுக்கு 2022இல் பணம் திரட்டிக் கொடுத்தபோது அறவாரியத்தின் தேவை வலுவானது.
இப்படிப் பெயர் குறிப்பிட விரும்பாத பலருக்கும் நண்பர்களிடம் பணம் வசூல் செய்து கொடுக்க முனைந்துள்ளேன். அநேகமாகக் கடந்த பத்தாண்டுகளில் நான் நண்பர்களிடம் கையேந்தாத ஆண்டு என ஒன்று இல்லை. சிலருக்கு மாதாந்திரச் சமையலுக்கான உணவுப் பொருட்களையும் நண்பர்களின் உதவியுடன் வழங்கியுள்ளோம். கல்லூரியில் பயின்ற இளம் எழுத்தாளர் ஒருவர் தம் மடிக்கணினி பழுதடைந்ததைச் சொல்லி அழுதபோது இலக்கியச் சூழலில் இல்லாத என் நண்பர்கள்கூட பணம் வழங்க முன்வந்தனர். பிரம்மவித்யாரண்யத்தில் சுவாமியின் கையால் அவருக்கு அதை வழங்கினோம்.
ஆனால், சக கலைஞர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் இன்னும் இன்னும் பிரம்மாண்டமாகிக்கொண்டே செல்கின்றன. அதற்கேற்ப நான் கையேந்துவதும் அடிக்கடி நடக்கிறது.
நான் எப்போதும் கையேந்தத் தயங்காதவன். அது எனக்கானதல்ல எனும் மனநிலையில் தெளிவு இருக்குபோது அது குறித்து கூச்சம் எதுவும் இல்லாதவன்.
அறவாரியம் தொடங்கும் முடிவு எடுத்த அடுத்த நிமிடம் நான் எனக்கிட்டுக்கொண்ட முதல் கட்டளை, எப்போதும் சுய தேவைக்கும் சுய விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டே அறவாரியத்தை நிர்வகிக்கவேண்டும் என்பதே. என்னைக் கடுமையாக அவமதிக்கும், வெறுக்கும், பகை பாராட்டும் ஒருவருக்குக்கூட அந்த அறவாரியம் துணை நிற்கவேண்டும். காரணம் அது சமூகத்தின் பணம். அதில் தனிமனித உணர்வுகளுக்கு இடமில்லை; இடமேயில்லை.
இரண்டாவது கட்டளை அறவாரியத்தில் தவறு நடக்கும்போது இடித்துரைக்கும் ஆளுமைகள் எங்களுடன் இருக்க வேண்டும். அவ்வகையில் வழக்கறிஞர் பசுபதி அவர்களும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் அறக்காவலர்களாக இணங்கியது ஆசி.
அறவாரியம் அமைக்க எனக்கு முதலில் தெளிவான நோக்கம் இருப்பது அவசியமாக இருந்தது. யாரிடம் விளக்கம் தருவதற்கு முன்பும் நான் எனக்கு விளக்கம் கொடுப்பதே பெரும்பாடு. அதுவே என் சவாலும்கூட.
அ. முதன்மையானது எழுத்தாளர்களின் நலன். அதில் மலேசியா எனும் எல்லை எதுவும் இல்லை. தமிழ் எழுத்தாளர்களுக்கு சிக்கல் உருவாகும்போது அறவாரியம் வழியாக சிறிய பங்களிப்பாவது வழங்கும் நிலை உருவாக வேண்டும்.
ஆ. இரண்டாவது, வல்லினம் இன்று மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு முயற்சிகள், பயிலரங்குகள், கண்காட்சிகள், விருது விழாக்கள், அரங்குகள் என எதுவும் தடைப்படாத சூழலில் தொடர்ந்து நிகழ்வது.
இ. மூன்றாவது, மலேசியாவில் நவீன இலக்கியம் சார்ந்த புதிய ஆய்வுகள் நிகழ உறுதுணையாக இருப்பது. பல்கலைக்கழக மாணவர்கள் அதை மேற்கொண்டாலும் அவ்வாய்வுப் பயணத்துக்கு வேண்டிய வசதிகளை வழங்குதல்.
ஈ. நான்காவது, தரமான நூல்களைப் பதிப்பிக்கவும் கலை, இலக்கியம், தத்துவம், பண்பாட்டு ரீதியான ஆக்ககரமான முயற்சிகளை மேற்கொள்ளவும் நிதி வழங்குதல்.
உ. ஐந்தாவது, மலேசியாவில் எந்நாட்டுத் தமிழ் எழுத்தாளரும் மூன்று மாதம் வரை இலவசமாகத் தங்கி, நூல்களை எழுத வசதி செய்துக்கொடுத்தல்.
தொகுத்துச் சொல்வதென்றால் இங்கு படைப்பாளர், கலைஞர்களின் நலனும் அவர்களின் செயலுமே பிரதானம்.
யார் ஒருவர் தமிழ் இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்கிறார்களோ அவர்களுக்கு அறவாரியம் பக்கபலமாக அமையும்படி செய்யவேண்டும்.
எந்த ஆக்ககரமான முயற்சியும் பொருளாதாரப் பலமின்மையினால் சுணங்கிவிடக்கூடாது என்பது அறவாரியத்தின் அடிப்படையான நோக்கங்களில் ஒன்றாக இருக்கும்.
எப்படி என் பத்து ஆண்டுகளை (2009 – 2018) மலேசிய இலக்கியச் சூழலை வளப்படுத்தும் முயற்சிக்காக வழங்கினேனோ அதுபோல அடுத்த என் பத்து ஆண்டுகளை அறவாரிய உருவாக்கத்திற்கு வழங்க இந்தப் பிறந்தநாளில் முடிவெடுத்துக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் அறிவார்ந்த ஒரு தலைமுறை சிக்கலின்றித் தன் பணிகளைச் செய்ய சமகாலத்தில் வாழும் ஒரு தலைமுறை தன்னைத்தானே குருதிபலி கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி ரப்பர் தோட்டங்களில் அழிந்துதான் இன்றைய கல்விகற்ற மலேசியத் தமிழ்ச் சமுதாயம் உருவாகியுள்ளது. ஆனால், அச்சமூகம் நுண்ணுணர்வு கொண்டதாக மாற கல்வி மட்டும் போதாது.
இலக்கியம், தத்துவம், கலைகள் என அனைத்துமே அவர்களுடன் சேர்ந்து வளர வேண்டும். இல்லையென்றால் இயந்திரமான மனநிலை கொண்ட தலைமுறையே நாளை ஃசோம்பிகளாக உலாத்தும். இதை அரசியல் கட்சிகளோ, அதிகாரவர்க்கங்களோ செய்யப்போவதில்லை. இந்த எண்ணம்கொண்ட சிலரேனும் இணைந்தால் இன்றே இம்முயற்சி சாத்தியமாகும்; சாத்தியமாக்க வேண்டும். அதற்கு பொருளாதார பலம் வேண்டும்.
அதன் பொருட்டு நானும் என் நண்பர்களும் உங்களை நோக்கி வருவோம். நாங்கள் உங்களிடம் கையேந்தி வரும்போது எங்களை நிராகரிக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நீங்கள் புறக்கணிப்பது எங்களையல்ல, ஒரு காலத்தின் அறிவார்ந்த வளர்ச்சியை என்பதால் நாங்கள் மௌனமாகவே அச்சூழலை கடந்துவிடுவோம். உங்களுக்கு எங்கள் நோக்கம் புரியும்வரை பொறுமையாகக் காத்திருப்போம்.
இந்நாளில் தனிப்பட்ட முறையில் நான் பிரபஞ்சத்திடம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். வாழ்ந்து காட்டுவதன் வழியாகவே அடுத்த தலைமுறையை வழிநடத்த முடியுமென நான் உறுதியாக நம்புகிறேன். அறவாரியத்தை உருவாக்கி அதனால் தனிப்பட்ட எந்த சுயலாபமும் அடையாமல் நான் வாழ்ந்து மறைய போதுமான அவகாசம் கொடுத்தால் போதுமானது. அதற்காகவேணும் கூடுதலாகக் கொஞ்சகாலம் வாழ வேண்டும். அது பலருக்கும் வழிகாட்டியாக அமையும். பெருஞ்செயல்களைச் செய்ய எளிய கரங்கள் போதுமென்ற நம்பிக்கைப் பிறக்கும். அது தன்னலமற்ற தலைமுறை ஒன்றை உருவாக்கும். அதுவே இத்தொடக்கம் நீடுநிலைக்க உதவும்.









