அன்றைய காலை சுறுசுப்பாக விடிந்தது. தமிழகத்தில் நாங்கள் காணும் கடைசி காலை. அன்றைய முக்கிய நிகழ்வுகள் வசந்தகுமாரைக் காண்பதும் புத்தகங்கள் வாங்குவதும்தான். முன்தினமே வசந்தகுமாரிடம் சொல்லிவிட்டதால் காலையிலேயே புறப்பட்டோம்.
நான் ஏற்கனவே தமிழகம் வந்திருந்த போது வசந்தகுமாரைச் சந்தித்ததுண்டு. தமிழகப்பதிப்பகத் துறையில் அவர் இடம் முக்கியமானது. தமிழில் வெளிவந்துள்ள பல முக்கிய நாவல்கள் தமிழினி பதிப்பில் வெளிவந்தவை. பா.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ முதல் அண்மையில் நான் வாசித்ததில் மிக முக்கியமானதாகக் கருதும் ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’ வரை அதன் விரிவாக்கம் நீள்கிறது. ஜெயமோகனின் பல முக்கியப் பிரதிகளையும் தமிழினிதான் பதிப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயமோகன் வழியே நான் வசந்தகுமாரை அதிகம் அறிந்து வைத்திருந்தேன். தமிழகத்தில் இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு வசந்தகுமார் ஒரு மையம் என்பார். அதே போல இளம் எழுத்தாளர்களின் ஒவ்வொரு புத்தகத்தையும் செரிவு செய்து வெளியிடுவதில் அவர் பங்களிப்பு முக்கியமானது. அகப்பக்கங்கள், புளோக் என்பவை பரவலாக வந்து விட்ட சூழலில் ‘எடிட்டர்’ என்பவரின் இடம் பொதுவாக மறக்கப்படுகின்றது. நினைத்த மாத்திரத்தில் ஒன்றை பதிவேற்றம் செய்து அதை ஒரு குறிப்பிட்ட வாசகர் மத்தியில் இணையத்தில் கொண்டுசெல்வது இன்றைய சூழலில் கடினமானதல்ல. ஆனால் நாவல் போன்ற ஒரு அகன்ற வடிவை இன்னமும் நாம் புத்தகங்களில் வாசிக்க வேண்டியிருக்கையில் அதன் பதிப்பாளர் அவசியமாகிறார்.
அதுவும் அச்சுத்தொழில் எளிதாகிவிட்ட இன்றையத் தமிழகச்சூழலில் ஒரு வாசகன் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து புத்தகங்களை வாசிக்க வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு மூன்று வகையில் நடப்பதாக நான் கருதுகிறேன்.
முதலாவது : தனது வாசிப்பில் கண்டடைந்த ஒரு நல்ல எழுத்தாளனின் அடுத்தடுத்தப் பிரதிகளை எந்தக் கேள்வியும் இல்லாமல் வாங்குவது.
இரண்டாவது : முக்கிய விமர்சகர் மூலமும் தமிழ் சூழலில் அது ஏற்படுத்தும் சலனங்கள் மூலமும் தேர்வுசெய்வது.
மூன்றாவது : அதை வெளியிடும் பதிப்பகங்களின் மேல் கொண்ட நம்பிக்கையில் வாங்குவது.
அந்த வகையில் நாவல்களை , சிறுகதைகளை தமிழினி எனும் பதிப்பகத்தின் மேல் நம்பிக்கை வைத்து வாங்கலாம் என்பது உண்மை.
வசந்தகுமாரிடம் இலக்கியம் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் அண்மையில் வந்த நாவல்கள் குறித்து கேட்டேன். அண்மையில் அவரின் வாசிப்புக்கு மிக நெருக்கமானதாக பிரான்ஸிஸ் கிருபாவின் ‘கன்னி’ இருந்தது. தமிழினி வெளியிட்டிருந்த பெரும்பாலான நாவல்களையும் சிறுகளையும் வாங்கிக்கொண்டோம். வசந்தகுமார் வாசிப்பு மிக விரிவானது என ஜெயமோகன் கூறியுள்ளபடியால் அவரிடம் ‘தமிழில் நீங்கள் மிக முக்கியமாகக் கருதும் எழுத்தாளர் யார்?’ கேட்டேன்.
கொஞ்சமும் யோசிக்காது ‘எப்போதைக்கும் எப்போதுமான எழுத்தாளராக நான் ஜெயமோகனையும் சு.வேணுகோபாலையும் சொல்வேன். இளம் எழுத்தாளர்களில் என்னைக் கவர்பவர் ஷோபா சக்தி’ என்றார். அடுத்தக் கேள்வியாக , ‘நீங்கள் ஏன் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் செல்வதில்லை’ என்றேன். ‘எனக்கு இலக்கியம் தெரியாதே’ என்றார். சிவா அதிர்ச்சியானார் . ‘என்ன சார் இவ்வளவு சாதரணமா சொல்றீங்க’ என்றார். சிரித்தார். முன்பு உலகத்திரைப்படங்களை பார்ப்பதுண்டு இப்போது அதுவும் குறைந்துவிட்டது. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் தமிழில் வெளிவரும் முக்கியப் பிரதிகளை வாசிப்பதுண்டு. நான் வெளியிடும் புத்தகங்களை குறைந்தது மூன்று முறையாவது வாசிப்பேன் என்றார்.
இதை நான் எழுதும்போது எங்காவது ‘நான்’ என்ற செருக்கு வந்திருந்தால் அதற்கு நானே பொறுப்பு. உண்மையில் வசந்தகுமாரின் பேச்சில் எங்கும் ‘நான்’ இல்லை. நான் சந்திப்பவர்கள் மிகையாகச் சொல்லும் தங்களின் வாசிப்பு அல்லது கலை சார்ந்த செயல்பாடுகளை வசந்தகுமார் மிகுந்த தயக்கத்துடன் வெளியிட்டார். அனைத்தையுமே தனது ரசனை அடிப்படையில் வைத்து பேசினார். ‘அப்படிதான் இப்போதைக்கு புரிஞ்சிக்கிறேன்’ என்பதுபோல. நாங்கள் வாங்கிய புத்தகங்களுக்கு மேலாக பல புத்தகங்களை எங்கள் வாசிப்புக்கு இலவசமாகவே கொடுத்தார். பெற்றுக்கொண்டோம்.
பொதுவாக மலேசிய இலக்கிய சூழல் தொடர்பில் அறிய ஆவல் காட்டினார். எனக்குத் தெரிந்த சில நாவல்கள் குறித்து கூறினேன். மலேசியாவில் எழுத்தாளர் ரங்கசாமியின் இரு புத்தகங்களைப் பதிப்பித்துள்ளதில் அவரை நன்கு அறிந்து வைத்திருந்தார். அவரின் ‘இமயத் தியாகம்’ நாவலை கண்டிப்பாக வாசிக்கக் கூறினார். அதேபோல முத்தம்மாள் பழனிசாமியில் ‘நாடு விட்டு நாடு’ சுயவரலாற்று நூலையும் தமிழினியே பதிப்பித்திருந்தது. ‘தமிழினி’ இதழ்கள் தொகுப்பை அன்பாக வழங்கினார். ‘மாதாந்திர கலை இதழ்’ எனும் அடையாத்துடன் வரும் அதை ஒருதரம் புரட்டினேன்.தமிழின் முக்கிய ஆய்வாளர்கள் பங்களித்திருந்தனர். தரம். (இணையத்தில் வாசிக்க http://tamilini.in/)
இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பின்னர் நிழல்படம் எடுக்க அனுமதி கேட்டேன். ‘நான் எந்த அடையாளத்தையும் விரும்புவதில்லை’ என்றார் அன்பாக. எதிர்ப்பார்த்த பதில்தான். அவ்வளவு நேர உரையாடல்கள் வழியும் அவர் தமிழினி இதழ்கள் மூலமாகவும் என்னால் அதை முன்னமே உணர முடிந்திருந்தது.
கீழே இறங்கி காப்பி குடிக்க அழைத்துச் சென்றார். மதிய உணவை சாப்பிட பணித்தார். வயிற்றில் இடம் இல்லை. ஒரு ஆட்டோவைப் பிடித்து நாங்கள் அடுத்து செல்ல தீர்மாணித்திருந்த ‘நியூ புக் லெண்ட்’ செல்ல ஆட்டோகாரரிடம் பாதை சொன்னார். விடைப்பெற்று ஆட்டோ புறப்பட்டது. திரும்பிப் பார்த்தேன். அங்கு அவர் இல்லை. அவர் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.
… தொடரும்