சா. ஆ. அன்பானந்தன், அ. ரங்கசாமி மற்றும் மரவள்ளிக்கிழங்கு!

சின்ன வயதிலிருந்தே நான் மலேசியாவில் ஜப்பானியர் ஆட்சி குறித்த சுவாரசியமான சம்பவங்களை என் ஆத்தாவின் பேச்சின் வழிக் கேட்டதுண்டு. ஆத்தா என் அம்மாவின் அம்மா. அவர் நினைவில் ஜப்பானியர்கள் குறித்த சில சம்பவங்கள் மிக அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. அவர்கள் ‘குரா குரா’ எனும் ஓசையெழப் பேசுவார்கள் என்பது அதில் சுவாரசியமானது. ஆத்தா எப்போதும் ஜப்பானியர்களைக் கொஞ்சம் உயர்த்திதான் பேசுவார். அவரின் அப்பாவுக்கு ஓரளவு ஜப்பான் மொழி தெரிந்ததால் ஜப்பானியர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதன் பலனாக ஜப்பானியர்கள் காலத்தில் எல்லோருக்கும் கிடைத்த சுண்ணாம்பு அரிசி ஆத்தா குடும்பத்துக்கு வழங்கப்படாமல் நல்ல அரிசி கிடைத்திருகிறது. நல்ல அரிசி கிடைத்த நன்றி அவருக்கு இன்றுவரை உண்டு. மற்றபடி சயாம் மரண ரயில் குறித்தெல்லாம் அவர் கேள்விப்பட்டதோடு சரி.

ஜப்பானியர்கள் சென்றபின் ஆங்கிலேயர்கள் மீண்டும் வந்தபோது கையில் இருந்த வாழை மர நோட்டுகள் (ஜப்பானியர் பணம்) ஒரே நாளில் பயன்படாமல் போனதுதான் ஆத்தாவுக்கு ஏமாற்றமானது. அக்காலக்கட்டத்தில்தான் பணம் இல்லாமல் சிரமப்பட்டதாக ஆத்தா சொல்வார். ஆனால் வாழ்வென்பது அத்தனை சுருங்கியதில்லை என இலக்கியங்கள் மூலம்தான் மீண்டும் மீண்டும் அறிய முடிகின்றது. அது ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியான அனுபவங்களைக் கொடுத்தே வருகிறது.

தோட்டத்திலிருந்த தமிழர்கள் சயாம் மரண இரயில் அமைக்கச் சென்றதையும்; உழைக்க ஆளில்லாமல் தோட்டத்தில் வறுமையில் சிரமப்பட்ட தமிழர்கள் நிலையையும் அதை அவர்கள் எதிர்க்கொண்ட விதத்தையும் சுருங்கிய வடிவில் சொல்லக்கூடியதாய் இருக்கிறது சா. ஆ. அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’ எனும் நாவல்.

அண்ணன் சா.ஆ. என்று அன்புடன் அழைக்கப்பட்ட சா. ஆ. அன்பானந்தன் 1958 ஆம் முதல் எழுதத் தொடங்கியவர். நயனங்கள் (கவிதை), திருப்பம் (நாடகம்), காலத்தின் விளக்கு (சிறுகதை), மரவள்ளிக்கிழங்கு (நாவல்) ஆகியன இவரது நூல்கள். ஓர் இலக்கியவாதியாக மட்டும் இல்லாமல் இயக்கவாதியாகவும் விளங்கியவர். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தேசியப் பேரவையின் சிறப்புத் தலைவராக இருந்து அக்கால இளைஞர்களின் மன எழுச்சிக்காகச் செயல்பட்டவர். பேரரறிஞர் அண்ணாவின் வழியில் பயணித்த அவர் சீர்திருத்த எண்ணம் கொண்டவராக இருந்தார். அவர் எழுத்துகளிலும் அக்கருத்துகள் மிகுந்துள்ளன.

1979 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரின் ‘மரவள்ளிக் கிழங்கு’ எனும் நாவலைத் தேடி எடுத்தப்போது முதல் பக்கத்தில் ‘நாம் பொய் நம் சேவையே மெய்!’ என்ற அவரின் கையெழுத்துப் பளிச்சிட்டது. நிதானமான எழுத்துகள். அவரும் அவ்வாரனவர் என அவருடன் நெருங்கிப் பழகியவர்களின் வழிக் கேள்விப்பட்டதுண்டு. நாவல் இரு பிரிவான கதைகளைக் கொண்டிருந்தன. அக்காலக் கட்டத்தில் மலேசியாவில் நேர்க்கோட்டில் எழுதப்பட்ட கதையமைப்பைத் தவிர்த்துவிட்டு சயாம் மற்றும் மலேசியத் தோட்டப்புற வாழ்வை மாறி மாறி காட்டியது. கதை மிக எளிதானது.

சயாம் மரண இரயில் பாதை போட ஜப்பானியர்களால் வலுக்கட்டாயமாகக் கொண்டுச் செல்லப்படும் மாரிமுத்துவின் வாழ்வும் தோட்டத்தில் இருக்கும் அவன் மனைவி சீனியம்மாள், மகன் கண்ணன் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் சிங்காரன் என்பவனின் வாழ்வும் கதையைச் சூழ்ந்துள்ளன. ‘நினைவுச்சின்னம்’ எனும் அ. ரங்கசாமியின் நாவலில் மிக விரிவாக விளக்கப்பட்ட சயாம் ரயில் பாதை அமைப்பிற்கான கொடுமைகள் மாரிமுத்துவுக்கு நிகழும் துயரங்கள் மூலம் இந்நாவலிலும் விளக்கப்படுகிறது. (சயாம் மரண ரயில் போடுவதில் ஏற்பட்ட இன்னல்கள் குறித்த பதிவை நினைவுச்சின்னம் வழி நான் ஏற்கனவே விரிவாகப் பதிவு செய்துள்ளதால் http://www.vallinam.com.my/issue25/thodar13.html இம்முறை அச்சூழலை விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்)

ஆனால் சா. ஆ. அன்பானந்தன் ஜப்பானியர்களின் கொடுமையை மட்டும் பேசவில்லை. எவ்வாறான கொடுமைகளுக்கு மத்தியிலும் மனிதன் தனக்கான அடையாளத்தையும் அதிகாரத்தையும் எவ்வாறு தொடர்ந்து பெற முயற்சிக்கிறான் என்பதை அங்கிருக்கும் குருத்தோவான முருகப்பன் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார். அடிமையாக்கப்பட்டாலும் அதற்குண்டான அதிகாரத்தைக்கொண்டு தனக்கு கீழ் இருப்பவனை அடக்குவதன் மூலம் நிறைவடையும் மனித இயல்பை நாவலாசிரியர் கதையில் ஆங்காங்கு பதித்துள்ளார்.

மாரிமுத்துவின் கரம் ஜப்பானியனால் அவசரப்பட்டு வெட்டப்பட்டதை அடுத்து அவரிடம் மன்னிப்புக் கேட்கும் விதமாக குருத்தோ பதவி வழங்கப்படுகின்றது. இதனால் ஏற்கனவே இருக்கும் குருத்தோ முருகப்பனின் பொறாமைக்கும் ஆளாகிறான். தொடக்கத்தில் தனது தோளை மாரிமுத்து தொடுவதையே அவமானமாக எண்ணும் முருகப்பன், தனக்கு நிகராக நிற்கும் மாரிமுத்துவை வெறுக்கிறான். இவ்வெறுப்பு மாரிமுத்து சயாமிலேயே இறந்துவிட்டதாக அவன் மனைவியிடம் பொய்சொல்லும் வரை நீள்கிறது. மாறாக மாரிமுத்து அன்பை மட்டும் செலுத்தும் நல்லவராகவே நாவல் முழுவதும் சித்தரிக்கப்படுகிறார்.

அதே போல தோட்டத்தில் ஆதரவில்லாமல் இருப்பவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளான எளிய உதவிகள் மூலம் வாழ்வைத் தொடர்கின்றனர் என்றும் சீனியம்மாள் – சிங்காரம் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். ஊடே வழக்கமாக அக்காலத் தமிழ்ப்படங்களில் வரும் உறவின் புனிதத்தையும் ஒழுங்கின் உன்னதத்தையும் பிசராத நேர்மையையும் பிரச்சாரம் செய்யாமல் அவரால் இருக்க முடியவில்லை.

தோட்டப்புறத்தில் மக்கள் உணவுக்காகக் கஷ்டப்பட்டபோது மரவள்ளிக்கிழங்கு ஒரு முக்கிய உணவாக இருந்ததை நாவல் பல இடங்களில் சொல்கிறது. மற்றவர் தோட்டங்களிலிருந்து மரவள்ளிக்கிழங்குகள் திருடவும் படுகிறது. நாவலைப் படித்து முடித்தவுடம் ஆசிரியர் வரலாற்றில் நிகழும் ஒரு கொடிய அனுபவத்தில் மனித மனத்தின் செயல்பாட்டை சொல்ல முயன்றுள்ளார் என்றே தோன்றியது. அதில் அவர் வெற்றியடையாவிட்டாலும் மலேசியத் தமிழர்களின் ஓர் இருண்ட வரலாற்றினைப் பதிவு செய்ததற்கு இந்நாவலை அதற்குரிய இடத்தில் வைத்து பாராட்டலாம்.

நான் கம்பத்தில் வசித்தக் காலங்களில் அப்பா வீட்டின் பக்கத்திலேயே மரவள்ளிக்கிழங்குகள் நட்டிருப்பார். மரவள்ளிக்கிழங்கு எளிதாகத் துளிர்த்து வளரக்கூடியது. ஆனால் அது வளரும் காலத்தில் லாலான் புற்களை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். லாலானின் வேர்கள் கிழங்கில் பாய்ந்தால் சுவை கெட்டுவிடும். மரவள்ளிக்கிழங்கைவிட எனக்கு அதன் இலைகளின் மேல் பிரியம் அதிகம். சிவப்பு நிற காம்பை அகலமாகக் கை விரித்தது போன்று இருக்கும் இலையோடு பறித்து சங்கிலி செய்யலாம். காம்பை சிறு துண்டாக உடைத்தால் அதன் மற்றப்பகுதியின் மெல்லிய தோல் காம்போடு ஒட்டியிருக்கும். இவ்வாறு இட வலம் என பிய்த்தால் சங்கிலி வடிவம் கிடைக்கும். நான் மரவள்ளி சங்கிலியோடு கம்பத்தில் சுற்றியது அதிகம்.

மரவள்ளிக்கிழங்கைப் படித்தப்பின் ஜப்பானியர் ஆட்சி காலத்தில் சயாம் மரண இரயில் பங்கு பெறாத ஏனையர்களின் நிலை பற்றி இன்னும் முழுமையாக அறியும் ஆவலில் அ. ரங்கசாமியின் ‘புதியதோர் உலகம்’ நாவலைத் தேடி எடுத்தேன். 300 பக்க நாவல். 1993 வெளியீடு கண்டிருந்தது. மலேசியத் தமிழர்களின் வரலாற்றை நாவல் வடிவில் தொடர்ந்து வழங்கும் அ. ரங்கசாமியின் படைப்புகள் கற்பனையால் இயற்றப்படுவதல்ல. அவர் ஒரு கள ஆய்வாளர். தொடர்ச்சியாக தன்னை வரலாற்றுடன் இணைத்துக்கொண்ட அவரின் நாவல்கள் வாழ்வனுபவத்தைக் கொடுப்பதைவிட வரலாற்றில் புதைந்துள்ள கண்ணீரை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருபவை. ‘புதியதோர் உலகம்’ அவ்வாறு இல்லாமல் ஓர் உற்சாக நடையில் இருக்கிறது.

வழக்கம் போலவே அவரது இந்த நாவலும் வாழ்வினைக் காட்டுகிறதே தவிர அதை கேள்வி எழுப்பவில்லை. மனித மனங்களின் மேலோட்டமான ஒரு தன்மையையே அது தொடர்ச்சியால் ஓட்டிச் செல்கிறது. காட்சி முழுதும் வாசகன் பார்வைக்காக அவர் நகர்த்தும் கேமரா, முகத்தின் நுண்ணிய கோடுகளைப் பதிவு செய்வதில் தவறியபடியே செல்கிறது. வாழ்வினை ஆசிரியர் சொல்லாமல் காட்டுவதன் வழி இந்நாவல் வாசிப்புக்கு உகந்ததாக இருந்தாலும் நாவலின் தன்மை அதுவாக மட்டுமே இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு புகைப்படக் கருவியால் காட்ட முடிகின்ற காட்சிகளை மட்டுமே எழுத்தும் செய்யும் என்றால் அது ஆழமாகப் பயன்படுத்தப் படவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அ. ரங்கசாமியின் நோக்கம் வரலாற்றை பதிவுசெய்வதாக மட்டுமே இருக்கும் பட்சத்தில் அவர் அடுத்தத் தலைமுறைக்காக விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்களைப் போற்றவே தோன்றுகிறது.

‘புதியதோர் உலகம்’ நாவலில் கருப்பையா கங்காணி நாவலின் மைய பாத்திரமாக இருக்கிறார். பெரும்பாலான சம்பவங்கள் அவரைச் சுற்றிதான் நிகழ்கின்றன. அவரையும், தோட்ட மக்களையும் ஜப்பானியரிடம் சயாம் மரண இரயில் பாதை போட ஆள் பிடித்துக் கொடுக்கிறார், அத்தோட்டத்து கிராணி. இருப்பினும், இரயிலில் சயாம் போகும் போது கருப்பையா தைப்பிங்கில் தப்பி மீண்டும் தோட்டத்திற்குச் செல்லாமல் அருகிலிருக்கும் கம்பத்திற்கு சென்று வாழ்கிறார். தைப்பிங்கிலிருந்து தப்பிக் காட்டுப்பாதையில் அவர் கம்பத்தை அடைய மேற்கொள்ளும் பயணம் சுவாரசியமானது.

இந்நாவலின் கதை கோலாக்கிள்ளான், பண்டமாரன், துலுக்குஞ்சான் பகுதிகளில் நடைபெறுவதாக உள்ளது. ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கொடுமைகள், பசி, பஞ்சம், பட்டினி போன்றவற்றை விலாவாரியாகச் சொல்லிச் செல்கிறார் ரெங்சசாமி. இவற்றோடு சில கிளைக் கதைகள் உள்ளன. காட்டுப்பன்றி வேட்டை, நெடும்பி எனும் பெண்ணின் வறுமை, பூர்வக்குடியினரின் பேய் நம்பிக்கைகள், காட்டில் மாட்டிக்கொண்ட கதை என துயரங்களை எதிர்க்கொள்ளும் விதத்தை மெல்லிய குதூகலத்துடன் சொல்லிச் செல்கிறார். தோட்டத்தைவிட ஆசிரியரால் காட்டில் இன்னும் வசதியாக உலாவ முடிகிறது. அவருக்குக் காடு பிடித்திருக்கிறது. அதே போல பச்சிலை வைத்தியமும் நாவலில் விரவி வருகிறது.

நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள் (கருப்பையா கங்காணி உட்பட) ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். நாவலின் இறுதியில் ஆங்கிலேயர் வருகையால் அகம் மகிழ்கின்றனர். அன்பொழுக அவர்களை ‘துரை’ என அழைக்கின்றனர். அக்காலம் மட்டுமல்ல எனக்கு என்னவோ நான் கிழங்கை மறந்துவிட்டு இலைகளின் கவர்ச்சியில் சுற்றியதுபோலத்தான் இன்றும் தமிழர்களின் மனநிலை இருப்பது போலத் தோன்றுகிறது. நாம் நம்மை இரட்சிக்க வரும் ஒருவனுக்காக காத்திருக்கிறோமே தவிர புதைந்துகிடக்கும் ஆற்றலை அறிவதே இல்லை. இந்த நாவல் நெடுகிலும் நமது அடிமை புத்தியின் பூர்வீகம் குறித்தே எனது எண்ணங்கள் போய்க்கொண்டிருந்தது.

ஆங்கிலேயன் நாட்டைவிட்டு ஓடியதில் தொடங்கி மீண்டும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நாட்டில் நுழைவது வரையிலான காலக்கட்டத்தை ரங்கசாமி விரிவாகச் சொல்லியிருக்கிறார். உடுத்த உடையின்றி சாக்குப்பைகளைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு காலத்தில் மலேசியத் தமிழர்கள் தங்களது அன்றாட வாழ்வின் நகர்வுக்குத் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு குதூகல வாழ்வை அதன் சவால்களோடு உற்சாகம் குன்றாமல் சொல்லிச்செல்கிறார் .

‘நினைவுச்சின்னம்’ போல இந்நாவலிலும் ஜப்பானியர்களின் கொடுமைகள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. அதைவிடவும் தற்காலிகமாக ஆட்சி செய்த அவர்களின் நிராகரிப்பினால் ஏற்பட்ட பசி, பிணி, வறுமையை தங்களின் செயல்பாடுகளால் எவ்வாறு தோட்டப் பாட்டாளிகள் எதிர்க்கொண்டார்கள் என்பதையே இந்நாவல் அதிகம் பேசுகிறது.

வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிவிட்ட வாழ்வில் மிக எளிய செயல்களால் மகிழ்ச்சியடைவதும், மகிழ்ச்சியைத் தேடிக்கொள்வதும், தொடர்ந்து சுவாரசியங்களை ஏற்படுத்த முயல்வதும், அதன் மூலம் மறத்துப்போகும் மனங்களை உயிர்ப்பிப்பதுமாக கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் உரையாடிக்கொண்டே இருக்கின்றன.

எனக்கென்னவோ அது மிகையாகத் தோன்றவில்லை. மிச்சமிருக்கும் வாழ்வு இன்னும் கொடூரமானது என அறிந்தவர்களுக்கு நிகழ்கால வாழ்வை ரசிப்பதில் தடையிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நன்றி : வல்லினம்

(Visited 825 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *