சினிமாவைத் தேடி சென்னை பயணம்…18

 

மிஷ்கினுடன் நான்...

நியூ புக் லென்ட் (New Book Land) பல சிற்றிதழ்கள் , ஆவணப்படங்கள், நூல்கள் என குவிந்திருக்கும் புத்தகக் கடை. முந்தயைப் பயணத்திலும் அங்குச் சென்றதுண்டு. வாசகனின் தேர்வுக்கேற்ப அந்தப் புத்தக ஊழியர்களும் புத்தகங்களை உடனுக்குடன் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள்.

என்னிடமும் சிவாவிடமும் சில ஆயிரங்கள் மீதம் இருந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு சிறுதொகையை மட்டும் வைத்துக்கொள்வதாக முடிவு செய்தோம். எங்கள் தேவைக்கு ஏற்ற புத்தகங்களை அடுக்கத் தொடங்கினோம். மொத்தமாக எண்ணியபோது புத்தகங்கள் நூறுக்கும் மேற்பட்டு இருந்தன. விலை நாங்கள் வைத்திருந்த பணத்தைத் தாண்டியது. ஒரே தலைப்பில் இருவரும் வைத்திருந்த சில புத்தகங்களை எடுத்து எண்ணியபோது அனுப்பும் செலவுடன் சேர்த்து எட்டாயிரம் ரூபாய் ஆனது. ஆச்சரியமாக எங்களிடம் மொத்தமே அவ்வளவுதான் இருந்தது. பணத்தை கட்டினால் அடுத்து ஆட்டோ எடுக்கக் கூட மீதம் இருக்காது. புத்தகங்களை விடவும் மனமில்லை. அதன் நிர்வாகி சீனிவாசனிடம் 7500 ரூபாய் செலுத்திவிட்டு மீதப்பணத்தை நண்பர் பௌத்த அய்யனார் பெயரை அவர் அனுமதியுடன் அடகுவைத்தோம்.

பிரச்சனை இப்படி இருக்கும் போது ஒருவர் சில நண்பர்களோடு கருப்பு கண்ணாடி சகிதமாக உள்ளே நுழைந்தார். சிவா ‘இயக்குநர் மிஷ்கின்’ என்றார். மிஷ்கின் நேராக சென்று புத்தகங்களை எடுக்கத்தொடங்கினார். சிவா அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயங்கியபடி இருந்தார். அவர் யோசித்து முடிக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என கொஞ்ச நேரம் திரும்பி புத்தகங்களைச் சரிப்பார்த்து மீண்டும் திரும்பியபோது சிவாவைக் காணவில்லை. தொலைவில் மிஷ்கினிடம் கைக்கொடுத்துக்கொண்டிருந்தார். நானும் இணைந்து கொண்டேன்.

சிவா தான் வந்த நோக்கத்தைக் கூறத் தொடங்கியபோது மிஷ்கின் சட்டென அதிர்ச்சியானார். “ஐயையோ… அந்த மாதிரி முடிவையெல்லாம் எடுக்காதிங்க. இங்க நாங்க பண்ற வன்முறை பத்தாதா? நல்ல சினிமாவைப் பாருங்க. மற்றவர்களைப் பார்க்க வலியுறுத்துங்க … அது போதும்… இங்க நடக்குற மாதிரி அசம்பாவிதம் எல்லாம் மலேசியாவுல நடக்கக் கூடாது” என்றார். சிவாவுக்கு அதற்கு மேல் ஒன்றும் பேச தோன்றியிருக்காது என நினைக்கிறேன். மீண்டும் கைக் கொடுத்து விடைப்பெற்றார். வெண்சுருட்டோடு  வெளியேறினார்.

மிஷ்கினுடன் சிவா…

மிஷ்கின் தொடர்ந்து புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் சங்க இலக்கியங்கள். சில ஆங்கில புத்தகங்கள். கடைக்காரர் நாங்கள் வாங்கிய புத்தகங்களின் பெயர் கூறி சரிப்பார்த்தார். சிவா வாங்கிய ஈரானிய சினிமா தொடர்பான புத்தகமும் பௌத்தம் தொடர்பான புத்தகமும் உச்சரிக்கப்பட்டப் போது ‘அசம்பாவிதம் நடப்பதைத் தடுக்க முடியாது போலிருக்கே’ என மிஷ்கினிடமிருந்து குரல் வந்தது. சிவா மீண்டும் உள்ளே நுழைந்த போது மிஷ்கின் சிவாவை அணுகி பேசினார். “நீங்கள் வாங்கிய புத்தங்களைப் பார்த்தேன். முக்கியமானவை…” எனத்தொடங்கி சிவா குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். தனது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தார். நாங்கள் வல்லினம் அகப்பக்கம் தொடர்பாகச் சொன்னோம். “மலேசியாவுல ஒன்னு விடாம எல்லா அநியாயமும் செய்றீங்களா? எதையாவது விட்டு வைங்க ” எனக்கூறிச் சிரித்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

திரும்பும் போது மீதம் 500 ரூபாய் இருந்தது. விமானத்துக்கு நேரம் நெருங்கிவிட்டதால். அவசர அவசரமாக உணவைச் சாப்பிடாமல் பொட்டலம் கட்டினோம். வீட்டுக்குச் சென்றபோது லீனா தயாராக டாக்சி பிடித்து வைத்திருந்தார். இருக்கின்ற பணம் போதுமா என சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. அவசரமாக எல்லாவற்றையும் அடுக்கி அவசரமாக லீனாவிடம் விடைப்பெற்றோம். டாக்சிக்கு கட்டியது போக மீதம் நூறு ரூபாய் இருந்தது.

விமான நிலையத்திலேயே அமர்ந்து வாங்கிய உணவைச் சாப்பிட்டோம். சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டீயும் சாப்பிட்ட பின்பு ஒரு காப்பியும் நாவை நனைத்தது. தமிழகத்தின் இறுதி காப்பி …டீ என அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டேன். ருசித்தது.

விமானம் ஏறும்போதுதான் சிவா, லீனா வீட்டு சாவியை உடன் கொண்டு வந்துவிட்டதை உணர்ந்தார். ‘மீண்டும் நீங்கள் தமிழகம் வர வேண்டி இருக்கலாம்’ என்றேன். விமானம் புறப்பட்டு ஓரிரு மணி நேரத்தில் உணவு வழங்கப்பட்டது. சிவா “ஒரு காப்பி குடிக்கலாமா? ” என்றார். ஏர் ஆசியாவில் ‘old town white coffee’ மட்டுமே இருந்தது. பருகினோம்.

காப்பியை ஒரு மடக்கு குடித்த சிவா அதிர்ச்சியாகக் கூறினார் …”நவீன் நாம மலேசியா வந்துட்டோம்”.

… முற்றும்

(Visited 150 times, 1 visits today)

2 thoughts on “சினிமாவைத் தேடி சென்னை பயணம்…18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *