‘நாடு விட்டு நா டு’ எனும் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய தன் வரலாற்று புத்தகம் குறித்து எழுதத்தான் இந்தக் கட்டுரையைத் தொடங்கினேன். ஆயினும் அப்புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் ஒரு சுய வரலாறு எதற்காக எழுதப்பட வேண்டும் என்ற கேள்வி முன் வந்து நின்றது. அதன் அடிப்படையில் ஏற்கனவே நாவலாகவும் சுயவரலாறாகவும் எழுதப்பட்ட சில பிரதிகள் உடனடியாக நினைவுக்கு வந்தன.
இதில் பாமாவின் ‘கருக்கு’ சுயவரலாற்று தொணியில் இயற்றப்பட்ட நாவலாக இருக்கிறது. முதல் வாசிப்பில் ‘கருக்கு’ ஒரு நாவலாக என் மனதில் பதிய சிரமமாக இருந்தது. தன் வரலாறு பாணியில் பின்னப்பட்ட அக்கதை புனைவின் சாத்தியங்களை நிராகரித்துவிட்டு ஒளிவு மறைவற்ற நிஜத்தின் உக்கிரத்துடன் என் முன் பேசுவதாக உணர்ந்தேன். கடந்த ஆண்டு அதை மறுவாசிப்பு செய்யும் போது அது பாமா என்ற ஒரு தனிமனிதரின் கதையாக மட்டுமல்லாமல் தலித் மக்களின் வாழ்வில் எல்லா சூழல்களிலும் ஏற்படும் நிராகரிப்புகளை, ஏக்கங்களை, சுகதுக்கங்களை, தீண்டாமைகளை, பாசாங்கில்லாமல் பேசும் ஒரு முக்கியப் பிரதியாகத் தோன்றியது.
ஒரு தலித் பெண்ணாக, தான் எதிர்கொண்ட புறக்கணிப்புகளைத் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெருகிறார் பாமா. தன்னைப்போல பிற தலித் குழந்தைகளும் சிரமப் படாமல் இருக்க, அவர்களுக்குச் சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றச் செல்கிறார். ஆண்டவனின் பிரதிநிதிகளாகத் தங்களை வரிந்து கொள்பவர்களின் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நிகழ்கின்றன.
தனது முன்னுரையில் பாமா தான் எவ்வித முன் திட்டமும் இல்லாமல்தான் இந்நாவலை எழுதியதாகக் கூறுகிறார். ஆனால் நாவலில் அவர் பார்வை கூர்ந்த அவதானிப்புகளைச் செய்துள்ளது. முக்கியமாக நாவலின் நான்காம் பாகத்தில் இவ்வாறு வருகிறது. “இப்பிடி ராப்பகலா ஒழைக்கிற எங்க சனத்தைப் பாக்கையிலே இவுகளுக்கு இம்புட்டுத் தெம்பு எங்கிட்டு கெடந்து வருதுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும். ஆம்பள பொம்பள அம்புட்டுப் பேரும் இப்பிடித் தெனமும் தேஞ்சு போக ஒழைக்குறதுக்கு எம்புட்டு முன்னுக்கு வரலாம் அப்பிடீன்னும் நினைப்பேன். ஆனா இவுக ஒழைக்கறதுக்குத் தக்கன கூலி கெடைக்குறது இல்ல. அதுலகூட ஒரே வேலய ஆம்பளயும் பொம்பளயும் செஞ்சாக்கூட ஆம்பளக்கு ஒரு சம்பளம், பொம்பளக்கு ஒரு சம்பளம்தான்.” ஒடுக்கப்படுதலிலும் அதிகாரத்தின் முரட்டுக்கரங்கள் பெண்களையே அதிகம் நசுக்குகிறது. இரண்டாவது வாசிப்பில் இந்நாவல் இதையே மையமாகக் கொண்டிருந்தால் அதன் வீச்சு எவ்வாறு இருந்திருக்கும் என்றே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
‘கருக்கு’ நாவல் முழுதுமே இவ்வாறு சிந்திப்பதற்கான ஒடுக்குமுறை உருவாகும் மனங்களைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திச் செல்கிறார் பாமா. கல்லூரியில் ஒரு வாரம் முழுக்க ஒரே பாவாடை சட்டையுடன் இருந்து பட்ட அவமானம், தன்னைப்போல சிரமப்படும் குழந்தைகளுக்குச் சேவை செய்ய கன்னியாஸ்திரியாகி சேர்ந்த மடத்தில் பணக்காரன் ஏழை பாகுபாட்டால் மனச்சோர்வு, கன்னியாஸ்திரிகள் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்த போது கன்னியாஸ்திரிகள் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளாய் இருந்ததில் ஏமாற்றம் என மத பீடங்கள் ஒடுக்கப்படுபவர்களை ஒதுக்கும் நிறுவனங்களாகவே இருக்கும் உண்மையை வெளிப்படுத்துகிறார். மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் சாமியார்களாகவும் சிஸ்டர்களாகவும் இருக்க கிருஸ்துவ மக்கள் ஏழைகளாகவும் தலித்துகளாகவும் இருக்கும் படியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி அவர்களின் மேல் குருட்டுத்தனமான பக்தி என்ற பெயரில் அதிகாரம் செலுத்தும் பாங்கில் மனம் ஒவ்வாமல் அக்கட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார்.
ஒருவேளை இந்நாவல் ஒரு சுயவரலாற்று பாணியில் இல்லாமல் புனைவின் மொழியில் உருவாகியிருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தபோதுதான் ‘கருக்கு’ தேர்ந்தெடுத்த பாணியின் அவசியம் புரிந்தது.
சுயவரலாறு அல்லது தன்கதை கூறுதல் என்பது நாவலின் ஒரு வடிவம். தலித் மக்களின் வாழ்வை சொல்லவும் அல்லது ஒடுக்கப்படுபவர் தன் வாழ்வைச் சொல்லவும் ஏற்ற தொணி சுயவரலாற்று முறையே என கருதுகிறேன். சுயவரலாறு நிஜத்தை முகத்துக்கு நேர் நின்று பேசுகிறது. வாசகன் மனதில் இது உண்மை…உண்மை என சதா உள்ளுக்குள் முணகும் வண்ணம் செய்கிறது. அந்தக்குரலில் பாசாங்கு இருப்பதில்லை. ‘இது புனைவாக இருக்கலாம்… இப்படியெல்லாம் நடக்காது’ என்ற நம்பிக்கையின்மை வாசகனுக்கு எழுவதே இல்லை. அதன் மூலம் ஒரு சமூகம் தங்களுக்கு ஏற்படும் சுரண்டல்களை அதன் வெறுப்போடு முன்வைக்க முடிகிறது. அங்கு மொழியின் குழைவோ கவித்துவ அழகோ முக்கியமில்லை. தகக்கும் உண்மையின் உஷ்ணத்தின் நின்றே அப்படைப்பு தனக்கான இடத்தைப் பிடித்துவிடுகிறது.
பாமாவின் ‘கருக்கு’ போலவே ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் வாழ்வை, அதன் இடர்களோடு பதிவு செய்வது வாழ்வின் மீதான புதிர்களுக்குத் தொடர்ந்து விடைகான உதவும். அவ்வகையில் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவின் ‘நான் வித்யா’ மிக முக்கியப் பிரதி என்றே கருதுகிறேன்.
ஆண்களும் பெண் களும் மட்டுமே உலகில் வாழும் மனித வர்க்கங்கள் என நம்பப்படும் மனங்களில் ஒரு திருநங்கை தன் வாழ்வை அதற்கே உரிய சவால்களோடு எதிர்க்கொண்ட கதையை ‘நான் வித்யா’ சொல்கிறது. எவ்வகையான அரசியல் சிந்தனையும் இல்லாத இயக்குநர்கள் தங்கள் படங்களில் திருநங்கைகளுக்கு வழங்கும் வேடம் அதிகபட்சமாக ‘மாமா…மாமா’ எனக்குழைந் து கொண்டு கதாநாயகனையும் அவன் சகாக்களையும் சுற்றி வருவதுதான். இதையும் ஒரு நகைச்சுவையாக எண்ணி நமது நாட்டில் திருநங்கைகளை வைத்து பாலியல் இச்சையோடு படக்காட்சிகளை அமைப்பவர் கானா. மக்கள் விரும்புவதாக எண்ணி ஊடகங்கள் இப்படிப் போட்டாப்போட்டி போட்டுக்கொண்டு திருநங்கைகளை கேலி செய்துக்கொண்டிருக்கும் சூழலில் ‘நான் வித்யா’ தனக்காக மட்டுமல்லாமல் தன் போன்ற திருநங்கைகளுக்காகக் குரல் எழுப்புகிறார்.
சட்டம், சமூகப் பாதுகாப்பு, சமூகம், கல்வி, வேலை வாய்ப்பு என எவ்வகையான அங்கீகாரமும் கிடைக்க மறுக்கும் ஒரு சமூகத்திலிருந்து வித்யா எவ்வாறு தன்னை வெளிப்படுத்த முதலில் தயக்கம் காட்டுகிறார், பின்னர் அதன் அவமானங்களிலிருந்தும் வசைகளிலிருந்து எவ்வாறு தன்னை மீட்டுக்கொள்கிறார், கலையில் தன்னை எப்படிப் பிணைத்துக்கொள்கிறார் என முழுவதுமாக விவரிக்கிறது இந்நூல். மேலும் இந்நூல் வழி வித்யா இந்தச் சமூகத்துக்கும் அரசுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான தனது மாற்றுக்கருத்தையும் அதன் துயரத்தோடு வைக்கத் தவறவில்லை.
தனிப்பட்ட முறையில் எனக்கு இப்புத்தகம் மிக முக்கியமானது. திருநங்கைகளின் மனநிலை குறித்து எனக்கு போதித்த புத்தகம். அதன் மூலம் மலேசியாவில் வாழும் திருநங்கைகளின் வாழ்வையும் ஓரளவுக்குப் பதிவு செய்ய முடிந்தது. (http://www.vallinam.com.my/issue8/interview.html) ஒடுக்குமுறை ஏற்படுத்தும் நுட்பமான மன பாதிப்பு, ஒடுக்குமுறையின் பாய்ச்சல் எங்கெல்லாம் நீளுகிறது என இன்னும் கூர்மையாகப் பார்க்க ‘நான் வித்யா’ உதவியது.
இவ்வாறு சமூகம் சார்ந்த பிரச்சனையாக இல்லாமல் உளவியல் நோக்கோடு சுய வரலாற்றின் தன்மையில் எழுதப்படும் நாவலும் உண்டு. அவ்வகையில் முத்துமீனாளின் ‘முள்’ பிரதியைக் குறிப்பிடலாம்.
நோய்மை ஒருவனை எளிதில் மனம் தளரச் செய்வது. எவ்வளவு திடம் பொருந்தியவனாயினும் நோய் ஒருவனை அடக்குகிறது. அவன் புலன்களை அவனிடமிருந்து மறக்கடிக்கிறது. அந்நோய் என்னவாக இருக்கிறது என்பது மற்றுமொரு பிரச்சனை. வெளியில் தெரியாத நோயாக இருக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் நோயாளியால் மௌனிக்கவாவது இயலும் . அதுவே வெளியில் தெரியும்படியான நோயாக இருந்தால் சில கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் ஆளாக நேரலாம். இந்தப் பிரச்சனையெல்லாம் கூட ஆண்களுக்கு ஏற்படும் போது சகித்துக்கொள்ளக்கூடியதாகவும் அதுவே ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் குடும்பத்துக்கே பெரும் அவமானம் போலவும் மாறிவிடுகிறது.
தொழுநோய் என்ற ஒன்றை நான் ‘ரத்தக்கண்ணீர்’ எம்.ஆர்.ராதா மூலமே அறிந்தேன். அது பால்வினை வியாதியென நானும் தொடக்கத்தில் தவறாகவே அறிந்து வைத்திருந்தேன். இன்றும் தொழு நோய் என்றாலே அவர்கள் சமூகத்திடமிருந்து மிக நாசுக்காக விலக்கப்படுகின்றனர். இதன் பாதிப்பு தமிழக கிராமங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம். இப்படி ஒரு சூழலில் முத்துமீனாள் எனும் ஒரு சிறுமிக்குக் கன்னத்தில் தொழுநோயின் அடையாளங்கள் தெரிகின்றன. நாட்டுவைத்தியம், மாந்திரிகம் என தொடரும் சிகிச்சை பயனலிக்காமல் முத்துமீனாள் கும்பகோணத்தில் உள்ள இருதய ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறாள். அங்குப் பள்ளிக்கூடமும் இருக்கிறது. பகலில் பள்ளியில் படித்தபடியே சிகிட்சை மேற்கொள்ளத் துவங்குகிறாள்.
ஐந்து வருடங்கள் முத்துமீனாள் சிகிச்சைக்காகக் கழிக்கும் நாட்கள் இந்த நூலில் மிக முக்கியமானப் பகுதி. தொழுநோய்க்கான சிகிச்சை முறைகள் , உடன் இருப்பவர்களின் வாழ்க்கை சூழல், அவர்கள் உலவியல் சிக்கல், தனிமை, அதுவும் கால் அறுவை சிகிச்சைக்குப் பின் வரும் கொடும் தனிமை, பாலுணர்வு மாற்றம், புதிராகி இருந்த ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பெண்கள், காதல் போல போன்ற தோற்றமளித்த இனக்கவர்ச்சி, அதிலிருந்து விடுபடல், பிரார்த்தனைகள், கண்டிப்பு என முத்துமீனாள் மிகப்புதிய உலகத்தை வாசகனுக்கு பதற்றம் இல்லாத வார்த்தையில் விவரித்தப்படி செல்கிறார்.
புத்தகம் முழுதும் முத்துமீனாளிடம் தளர்ச்சி தெரியவில்லை. அவர் இந்த வாழ்வை மிகத்திடத்தோடு எதிர்க்கொள்கிறார். கல்விமீதான ஆர்வத்தையும் அவர் முதல் நிலை மாணவியாக மாறும் தருணமும் நெகிழ்வானது. கால் அறுவை சிகிகைக்குப் பின் முத்துமீனால் படும் துன்பங்களை என்னால் துள்ளியமாக உணர முடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நான் காலில் அறுவை சிகிச்சை செய்தப்பின், பலம் இழந்த காலை ஃபிசியோதிராப்பியின் மூலம் சரிபடுத்த பட்ட வலிகள் இந்நாவலை வாசிக்கும் போது ஏதோ ஒரு நரம்பின் வழியாக மூளைக்கு வந்துகொண்டே இருந்தது.
இந்தப் புத்தகத்தின் மற்றுமொரு பகுதி முத்துமீனாளுக்குத் திருமணம் ஆவது. தொழுநோயிலிருந்து குணமான பிறகும் பெண் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதில் உள்ள சிக்கல் குறித்து அவர் விவரிக்கிறார். தொழுநோயாளியாக இருந்த காரணங்கள் அவர் திருமணத்துக்குத் தடையாக இருக்கிறது. இறுதியில் அவர் எவ்வாறு அய்யனாரைத் (பௌத்த அய்யனார்) திருமணம் செய்து கொள்கிறார் என்பதில் புத்தகம் முடிகிறது.
இவ்வாறு ஒரு சமூகம் தங்கள் வாழ்வின் இடர்களையும், உலவியல் சிக்கல்களையும், மிக எளிதாக வாழ்க்கையை வாழவிடாமல் செய்யும் ஒடுக்குமுறையையும் பதிவுசெய்வது, தமிழ் இலக்கியத்தில் நிச்சயம் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுவும் மிகக் குறைவாகவே எழுதப்படுகின்ற பெண் படைப்பாளிகளின் சுயவரலாறு வாசகனுக்கு இன்னும் கூர்மையான வாழ்வை ஒட்டிய பார்வையைக் கொடுக்கும். இங்கு நான் ஒரு சமூகம் தன் சாதியை அல்லது அடையாளத்தைக் கொண்டாடுவதையோ அதன் மேன்மையை பறைச்சாற்றுவதையோ பற்றி பேசவரவில்லை. அவ்வாறான எந்த இலக்கியப்பிரதிகள் மீதும் எனக்கு மரியாதை இல்லை. எந்தச் சமூகமாக இருந்தாலும் தங்கள் வாழ்வில் இருக்கின்ற பிற்போக்கைக் கேள்வி எழுப்பும் போதும் அதன் ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் போதும் கொண்டுள்ள சமநிலை தங்களைக் கொண்டாடும்போது இருப்பதில்லை. மேலும் சில அதிகாரத் தோரணையை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். அவ்வகையில் ‘நாடு விட்ட நாடு’ எனக்கு இவ்வாறான தோற்றத்தைதான் ஏற்படுத்தியது.
‘நாடு விட்டு நாடு’ எனும் தன் வரலாறு புத்தகத்தின் சுருக்கத்தை இனி காண்போம்.
இப்புத்தகம் முத்தம்மாள் பழனிசாமி அவர்களால் 70 வயதில் எழுதப்பட்டது. இவர் ஒரு மலேசியர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவை மாவட்டத்தில் இருந்து மலேசிய நாட்டிற்கு சஞ்சிக் கூலியாகப் புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது இப்பிரதி. தொடக்கத்தில் ‘Shore To Shore’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் முத்தம்மாள் அவர்களாலேயே தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
முத்தம்மாள் பார்வையிலிருந்து சொல்லப்படும் புலம்பெயர்ந்த வாழ்வு இரண்டு முக்கிய விடயங்களை மையமாக கொண்டுள்ளது. முதலாவதாக முத்தம்மாளின் தந்தை பழனிசாமி கவுண்டர். அவரை நூல் முழுதும் ‘அய்யன்’ என்றே முத்தம்மாள் அழைக்கிறார். இரண்டாவது முத்தம்மாளின் தாத்தா குப்பண்ண கவுண்டர் . அவர் ஒரு திருடனை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காகத் தலைமறைவாகிவிடுகிறார்.
‘அய்யன்’ பல வேலைகள் செய்து மலேசியாவிற்கு (அப்போது மலாயா) ஆள் எடுப்பதாகக் கேள்விப்பட்டு, கட்டின வேட்டியோடு போகிறார். கப்பல் ஏறி பினாங்கு வருகிறார். ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாகிறார். அவருக்குள் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள முனைப்பு வருகிறது. அதனால் ரப்பர் மரம் வெட்டிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் தன்னை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு பலவிதமான வேலைகள் செய்து பணம் சம்பாதித்தார். நிலம் வாங்கி வீடும் கட்டுகிறார்.
அதே வேளையில் தமிழ்நாட்டில் பத்து வயதில் கல்யாணமான பழனியம்மாள் எனும் பெண் கணவனோடு சேர்ந்து வாழ விரும்பாமல் தாலியைக் கலற்றி போட்டுவிட்டு வீடு வருகிறார். அவமானம் அடைந்த தந்தை அவரை அழைத்துக்கொண்டு கப்பல் ஏறி பினாங்கு வந்து சேர்கிறார். பழனிசாமி பழனியம்மாளை இரண்டாவது மனைவியாக்கிக் கொள்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒருவர்தான் முத்தம்மாள்.
முத்தம்மாள் படித்து ஆசிரியர் ஆகிறார். நம் நாட்டில் பல இடங்களில் வேலை பார்க்கிறார். சார்லஸ் கிராண்ட் என்பவரை காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். குழந்தைகள் பிறந்து வளர்கிறார்கள். பல இனமக்கள் திருமணத்தால் இணையும் வாழ்வை ‘நாடு விட்டு நாடு’ முடிவாகக் கொண்டிருக்கிறது.
இந்த நூலை முதலில் வாசித்தபோது எனக்கு ஏற்பட்டது அதிர்ச்சி. இத்தனை சுவாரசியமாக எழுதும் ஆற்றல் கொண்ட ஒருவர் மலேசியாவில் இருக்கிறார்… அவரை அடையாளம் காணாமல் போய்விட்டோமே என பின்னர் வருந்தினேன். (அநேகமாக நீங்கள் இதைப் படிக்கும் தருணம் நான் அவரைச் சந்தித்திருப்பேன்.) அத்தனை சுவாரசியமான எழுத்து முத்தம்மாளினுடையது. காட்சிகளை அவர் விவரிக்கும் பாங்கு, ஒரு சூழலை அவர் தொடங்கும் இடம், ஒரு சூழலைச் சொல்லிக்கொண்டிருக்கும் போது சட்டென நினைவுக்கு வந்தவராக அதையொட்டிய மற்ற சூழலைச் சொல்லும் உக்தி என முத்தம்மாள் ஆச்சரியப்பட வைத்தார். அதைவிடவும் அவர் நினைவாற்றல் அபாரமானது. தனது நான்கு வயதிலிருந்து வாழ்வை மீட்டுக்கொண்டுவருகிறார்.
தமிழினி பதிப்பில் வந்திருக்கும் 288 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் மற்றுமொரு சிறப்பு முத்தம்மாள் உறவினர்கள், ஊர் மக்கள் சொன்ன கதைகளையும், பாடிய பாட்டுக்களையும், வைத்த ஒப்பாரிகளையும் இணைத்திருப்பது. இசையில்லாத பாட்டாளி மக்கள் பாடல்களில் சந்தமும் எதுகை மோனையும் தவழ்வது வாசிக்க சுவாரசியம் கொடுக்கின்றது. (இவர் ‘நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ) அவை ஒரு காலத்தின் கலாச்சாரத்தையும் காட்டுவதாய் உள்ளது. இவற்றையெல்லாம் விட நான் முத்தம்மாளிடம் வியந்தது அவர் அங்கதம். அதில் ஒன்றை மட்டும் இங்கு சொல்லலாம். எத்தனை முறை சொன்னாலும் சிரிப்பு மூழும் சம்பவம் அது.
தோட்டத்தில் சிலர் சாராயம் குடித்துவிட்டு போதையோடு சண்டைப் போட்டுக்கொள்வர். இது அவ்வப்போது நடக்கிறது. அவ்வாறான நேரமெல்லாம் பழனிசாமி (அய்யன்) அந்தப் பிரச்சனையைத் தீர்த்துவைக்கிறார். ஒரு சமயம் அப்படி இருவர் சண்டையிட்டு வீட்டு வாசலில் நிர்க்கின்றனர். அய்யனுக்கு உறக்கம். சண்டை வலுக்கிறது. கோபமடைந்த முத்தம்மாளின் அக்கா மாவு அறைத்துக்கொண்டிருந்த கையோடு அவர் இருவரின் முடியையும் கொத்தாகப் பிடித்து ஒன்றுடன் ஒன்று மோதுகிறார். அதில் அவர் கையில் இருந்த தோசை மாவு இடிப்பட்ட ஒருவர் முகத்தில் ஒட்டிக்கொண்டு வழிகிறது. அதை தொட்டுப்பார்த்த அவர் போதையில் அழுதப்படி சொல்கிறார் “தங்கச்சி நீ அடிச்சதுல மூளை வெளிய வந்து ஊத்துது “.
மலேசியாவில் உள்ள எந்தப் பெண் எழுத்தாளரிடமும் காணாத எழுத்து நடையைக் கொண்டதென ‘நாடு விட்டு நாடு’ புத்தகத்தைக் கூறுவேன். சொல்லும் முறை, மௌனமாக்கும் முறை, கோர்வை என முத்தம்மாள் மலேசியாவில் தனித்து தெரிகிறார். ஆனால் இதை ‘கறுக்கு’, ‘முள்’, ‘நான் வித்யா’ போல கொண்டாடுவதில் எனக்கு ஒரு தடையும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. கவுண்டர் சமூகத்தின் உயர்வையும் அவர்களின் சிறப்புகளையும் இந்தப் புத்தகம் தாங்கியுள்ளது. ஏறக்குறைய முதல் 40 பக்கங்கள் அந்தப் பெருமை வெளிப்படையாகவும் பின்னர் ஆங்காங்கும் தொனிக்கிறது. இதை நான் மூன்று விதத்தில் பார்ப்பேன்.
முதலாவது ஒரு சுய வரலாற்று புத்தகத்தில் தன் வாழ்வைச் சொல்ல சாதி அடையாளத்தைக் குறிப்பிடுவது. இங்கு சாதி என்பது தங்கள் தொழிலை அதன் தன்மையோடு சொல்வதாய் அமையும்.
இரண்டாவது தான் சார்ந்த சாதியின் பிற்போக்கை விமர்சிக்கும் நோக்கில் எழுதுவது.
மூன்றாவது சாதியின் மேலாதிக்கத்தைக் கொண்டாடுவது.
நாடு விட்டு நாடு இதில் மூன்றாவதைச் செய்கிறது. தான் சார்ந்த சாதியின் பெருமைகளைப் பற்றி தான் கேள்விப்பட்டதைக் கூறுகிறார் முத்தம்மாள் பழனிசாமி. எவ்வகையான இலக்கிய மற்றும் அரசியல் பார்வை அவருக்கு உண்டு எனத் தெரியவில்லை. ஆனால் நமது பாட்டிகள் கற்பனை உலகைக் காட்டுவது போலல்லாமல் அவரால் ரத்தமும் சதையுமான வாழ்வை எதிரில் உள்ளவனுக்குக் கதையாகச் சொல்ல முடிகிறது.
ஒளிவு மறைவற்ற தன் வரலாற்றை எழுத துணிச்சல் தேவைப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் தன் குடும்பத்தின் கதையை எழுதும் முத்தம்மாள் எந்த ரகசியங்களையும் மறைக்கவில்லை. தன் அப்பாரய்யன் ஒரு கொலையாளி என்றும் அம்மாவின் அப்பா சிறைவாசம் அனுபவித்தக் கைதி என்றும் தன் தாய் சட்டபூர்வமற்ற மனைவி என்றும் பெரியம்மா தன் கணவனை விட்டுக்கொடுத்தவர் என்றும் குடும்பத் தகவல்கள் எதையும் மறைக்காமல் சொல்லிச் செல்கிறார். அவரிடம் எவ்வித தற்காப்பு உணர்ச்சியும் குற்ற உணர்வும் இல்லை. மாறாக அவ்வடையாளங்களை தன்னுடன் இணைத்தே பயணிக்கிறார். புத்தகத்தின் இறுதியில் வெவ்வேறு இன மனிதர்களோடு அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும் நடக்கும் திருமணங்களில் முத்தம்மாள் தன் சாதிய அடையாளத்தை விட்டுவருவதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ஒரு திருப்தி. என் பாட்டி எனக்கு சொல்லாமல் விட்ட கதைகளை முழுதும் கேட்டுவிட்டதாலும்; மலேசியாவில் ஒரு புதிய எழுத்தாளரைக் கண்டுவிட்டதாலும்.
One thought on “நான்கு வாழ்வும் வரலாறும்”