மா.சண்முகசிவா : அடையாளம் சுமக்காத ஆளுமை!

  •  

    நான் ச‌ண்முக‌சிவாவைச் ச‌ந்தித்த‌போது காத‌லித்துக்கொண்டிருந்தேன். என் காத‌ல் ப‌ற்றிச் சொல்ல‌தான் நான் ச‌ண்முக‌ சிவாவைச் ச‌ந்தித்த‌தாக‌ச் சொல்ல‌லாம். எதையும் சிந்திக்க‌விடாம‌ல் செய‌ல்ப‌ட‌விடாம‌ல் ச‌தா ந‌ச்ச‌ரித்துக்கொண்டிருந்த‌ காத‌ல் அது. நான் இந்த‌ப் பிர‌ப‌ஞ்ச‌ம் முழுதும் ப‌ர‌வியிருப்ப‌தாக‌ப் பெரும் க‌ற்ப‌னையில் இருந்த‌போது என் கால்க‌ள் த‌ரையில் இருந்த‌தைத் திரும்ப‌த் திரும்ப‌க் காட்டிய‌ காத‌லை நான் உள்ளூர‌ வெறுக்க‌த் தொடங்கியிருந்தேன். என் காத‌லை நான் உள்ளூர வெறுப்ப‌தை வேறு யாராவ‌து சொல்லி நான் கேட்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கார‌ண‌ம் ஒவ்வொரு க‌ன‌மும் நான் காத‌லை நேசிப்ப‌து போன்ற‌தான‌ ஒரு பாத்திர‌த்தில் மிகத் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தேன்.


    சண்முகசிவாவைச் சந்திக்க அவரது கிளினிக் செல்ல வேண்டும். தாதியிடம் பெயரைக் கொடுத்து காத்திருந்தால் அழைப்பு வரும். இலக்கியம் தொடர்பாகப் பேசப்போகிறோம் என்றால் பக்கத்து அறையில் காத்திருக்கச் சொல்லி அவ்வப்போது வந்து உரையாடிச் செல்வார். பொதுவாகவே அவர் கிளினிக்கில் நோயாளிகள் அதிகம் இருப்பதால் அவரைத் தொந்தரவு படுத்துவதாகவே ஆரம்பத்தில் தோன்றியது. பின்னர் அவரைத் தொந்தரவுபடுத்துவது ஒரு விளையாட்டாகவே மாறியிருந்தது. அதில் சண்முகசிவாவும் ஆர்வமாகப் பங்குபெற்றார்.

    சண்முகசிவாவின் பேச்சு மனதின் மிக ஆழத்தில் ஒளிந்திருக்கும் உண்மைகளை மேலேடுத்து வருவதாக இருந்தது. மனம் மிக இயல்பாய் பூசியிருக்கும் அரிதாரங்களை அவரது பேச்சு மெல்ல ஊதிக் கலைக்கும். அது நாம் நம்மீது கொண்டிருக்கும் போலியான மதிப்பீடுகளைப் பகடி செய்யும். அது ஒன்று போதும்! மனம் மீண்டும் தனது சிடுக்குகளிலிருந்து வெளிப்பட்டு இயல்பாகப் பயணிக்க. அவர் மனநல நிபுணராய் இருந்தது எதிரில் அமர்ந்திருப்பவனின் மனதை அறிய ஏதுவாக இருந்தது.

    சண்முகசிவா எனக்கும் இதைதான் செய்தார். ‘காதல்’ எனும் இதற்கு முன்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் ஓர் அமைப்பிலிருந்து வெளியேறி நான் என்னை ஒருதரம் திரும்பிப் பார்க்க அவர் பேச்சு தூண்டுகோளாய் இருந்தது.

    என் வாழ்வின் சிக்கல்கள் பற்றிய பேச்சை சண்முகசிவா இலக்கியத்திற்கு மாற்றினார். முதலில் நான் ஒரு மகத்தான படைப்பாளி என என்னையே நம்பவைக்க முயன்றார். நான் ஏற்கனவே அவ்வாறுதான் நினைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கு அதில் பெரிய சிரமம் ஏற்படவில்லை. ஓரளவு மனரீதியில் நெருங்கிய பின்னரே அவரது விமர்சனம் கிண்டல் தொணியிலும் கேள்விகள் மூலமாகவும் என் மீது விழுவது புரிந்தது. தீவிர இலக்கியத்திற்கும் வெகுசன இலக்கியத்திற்குமான பேதங்களை ஒட்டி திரும்ப திரும்ப என்னிடம் உரையாடியபடி இருந்தார். நான் ‘கலை மக்களுக்கு’ என்ற வாசகத்தின் தவறான அர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டு அவருடன் வெகுசன இலக்கியங்களுக்காகத் தொடர்ந்து வாதடியபடி இருந்தேன். திக்கித் திணறி நான் முன்வைக்கும் கருத்துகளை சண்முகசிவா எளிய கேள்விகள் மூலம் தகர்த்துக் கொண்டிருந்தார். எங்கள் உரையாடல் எவ்வாக்கியத்தில் தொடங்கியது என்று நினைவில் இல்லாவிட்டாலும் எந்தப் பகுதியில் முடிந்தது என்பது நன்கு நினைவில் உள்ளது:

    நான்: வாசகனுக்கு விளங்காத எழுத்து எதற்கு? அதனால் பயன் என்ன? வாசகனுக்கு விளங்கும் படிதான் கவிதை எழுத வேண்டும்.

    சண்முகசிவா: வாசகனுக்கு விளங்க எதற்கு கவிதை என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுக்குற ? பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதினால் நீ சொல்ல வருவது எல்லோருக்கும் விளங்குமே.

    அதற்கு பின் நான் சண்முகசிவாவை சில காலம் சந்திக்கவில்லை. அவரது பேச்சு என் அமைதியைக் கெடுத்தபடி இருந்தது. எனது வாசிப்பு , எழுத்து மீதான தீராத பகடியை அது செய்துகொண்டே இருந்தது.

    0 0 0

    மீண்டும் நான் சண்முகசிவாவைப் பார்ப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு அவர் கிளினிக் சென்ற போது நான் வாசிக்க எம்.ஏ.நுஃமானின் ‘மார்க்ஸிய இலக்கியம்; எனும் நூலைக் கொடுத்தார். ‘ஓர் இலக்கியவாதிக்கு மார்க்ஸிய பார்வை மிக முக்கியம். இந்தப் புத்தகம் உனக்கு அதற்கான அடிப்படை அறிமுகத்தை ஏற்படுத்தும்’ என்றார். நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். மீண்டும் அவரைச் சந்தித்தபோது கோவை ஞானியின் ‘மார்க்ஸிய அழகியல்’ புத்தகம் கிடைத்தது. அப்புத்தகங்கள் பற்றி உரையாட சண்முகசிவா ஒரு விஸ்தாரமான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். வாசிப்பில் நான் புரிந்துகொண்ட எதை சொன்னாலும் பாராட்டினார். அவரிடம் பாராட்டு வாங்குவதற்காகவே நான் ஆழ்ந்து படிக்கத் தொடங்கியிருந்தேன்.

    ஏழெட்டு உரையாடல்களுக்குப் பிறகு என் சிந்தனைப் போக்கும் வாசிப்பும் மாறியிருந்தது. தொடர்ந்து யாரை வாசிக்க வேண்டும் என்ற பட்டியலை சண்முகசிவா வழங்குவதோடு புத்தகங்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். நானும் அவ்வப்போது எழுதும் கவிதைகளை உடனுக்குடனே சண்முகசிவாவிடம் தொலைபேசியில் அழைத்து வாசித்துக் காட்டுவேன். அது போன்ற சமயமெல்லாம் அவர் எங்கே எந்த வேலையில் இருக்கிறார் என்று முன் அனுமதியெல்லாம் கேட்காமலேயே வாசிப்புத் தொடரும். சண்முகசிவா எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டு சில திருத்தங்கள் செய்யலாம் என்பார். ஆனால் அந்தப் பேச்சு நிச்சயம் பாராட்டில்தான் முடியும். அவருக்கு எல்லோரையும் பாராட்டப் பிடித்திருந்தது; எனக்கு பாராட்டை வாங்கப் பிடிப்பதுபோல.

    0 0 0

    சண்முக சிவாவிடம் நெருங்கிப் பழகும் போதுதான் அவரது உண்மையான ஆளுமை புரியத் தொடங்கியது. அவர் மருத்துவம், இலக்கியம் மட்டுமல்லாமல் சமூகத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டிருந்தார். எந்த ஒரு இயக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தானே ஓர் இயக்கமாக செயல்படுவது பின்வரும் காலங்களில் புரிந்தது. பொதுவாகவே அவருடன் உணவகங்களுக்குச் சென்றால் , எல்லோரையும் நாங்கள் பார்க்கும்படியும் எங்களை யாரும் எளிதில் பார்க்க இயலாதபடியுமான ஓர் ஒதுக்குப் புறமான இடத்தைத் தேர்வுசெய்வதுதான் அவரின் இயல்பாக இருந்தது. அவர் அங்கு இருந்தாலும் இல்லாதது போன்றதொரு மாயையை அவ்விருக்கைக் கொண்டிருக்கும். அத்தகைய பிரத்தியேகமான இடத்தைத் தேர்வு செய்யும் சூத்திரத்தை அவர் பயின்றிருந்தார். என் பார்வையில் இயக்கங்களிலும் அவர் இதைதான் கடைப்பிடிக்கிறார் என்று தோன்றுகிறது. இயக்கங்கள் அவருக்கு ஏற்றதாய் இல்லை. போட்டி, பொறாமை பதவி மோகம் என இருந்த அவற்றுடன் அவர் எப்போதும் விலகியே நிரற்கிறார். எவ்விதத்திலும் முழுமையாக அவற்றில் தன்னைப் பிணைத்துக் கொள்ளாமல் தன்னாலான உதவிகளை மட்டும் எவ்வித அடையாளங்களையும் ஒழுகவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்.

    நான் அவ்வப்போது சண்முகசிவாவிடம் இது குறித்து வாதாடுவது உண்டு. சில இலக்கியம் சார்ந்த இயக்கங்கள் அவரை பயன்படுத்திக்கொள்வதாய் நான் கோபமும் கொண்டுள்ளேன். அப்போதெல்லாம் சண்முகசிவா , “நான் ஒரு கருவி. கருவி பயன்படத்தான் செய்யும். பயன்படுவதுதான் அதன் குணம். எனக்கு இயக்கங்களிம் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இயக்கங்களில் நடக்கும் சில ஆரோக்கியமான நகர்வுக்கு நான் தேவைப்படுகிறேன். என்னை அவர்களின் நல்ல முயற்சிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறேன். எனக்கு இதில் எந்தச் சிக்கலும் இல்லை. நான் ஒரு இயக்கம் அல்லது அமைப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் முன்பும் பங்கெடுத்த பின்பும் என் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. நான் நானாக இருக்கிறேன். அவ்வமைப்பின் நிகழ்வுகளில் எனக்குள்ள முரண்களையும் அவர்கள் முன்னிலையிலேயே வைக்கிறேன். இது சமரசம் இல்லை. ஒருவேளை அப்படி சொன்னாலும் எனக்கு கவலையில்லை. காரணம் நான் என்னைக் குறித்த எவ்வகையான பிம்பங்களையும் உருவாக்க விரும்பவில்லை. “

    சண்முகசிவா பிறர் மனதில் இருக்கின்ற செயற்கையான வாசனைத் திரவியங்களைக் கழுவி விடுவது போலவே தன் மனதையும் வைத்திருந்தார். அவரிடம் அதன் பின்னர் இது குறித்தெல்லாம் வாதடுவது இல்லை. உண்மையை நோக்கி வாதிட முடியாது. அதில் வாதாடுவதற்கு ஒன்றும் இல்லை. அது அதுவாக இருக்கிறது.

    0 0 0

    இயக்கம் அல்லாமல் சண்முகசிவா தனியனாய் சில சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். சிறைச்சாலையில் உள்ள இந்தியக் கைதிகளின் மன எழுச்சிக்கு வித்திடுபவராகவும், தேசிய வளர்ச்சியில் முழுமுற்றாய்ப் புறக்கணிக்கப்பட்டுவிட்ட அடித்தட்டு இந்திய மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று ஆலோசனை வழங்குபவராகவும் , சிரமப்படும் அந்நிய தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்குபவராகவும் தொடர்ந்து தனது நேரத்தை சமூகத்துக்காகச் செலவழித்து வருகிறார். அதேபோல ‘வல்லினம்’, ‘செம்பருத்தி’ போன்ற இதழ்களுக்கும் பாரதி இளைஞர் இயக்கம், தமிழ் அறவாரியம், இ.டபிள்யூ. ஆர். எஃப் போன்ற இயக்கங்களுக்கும் ஆலோசகராகவும் தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறார்.

    ஒருமுறை சண்முகசிவாவின் அயராத சமூகப் பணிகள் குறித்து கேட்டபோது , “மனிதரில் இரு வகை இருக்கிறார்கள். ஒருவன் தேவை உள்ளவன். மற்றவன் கொடுக்க முடிந்தவன். என்னால் இவ்விரு சமூகத்தினரையும் காண முடிகிறது. அவர்களோடு பழக முடிகிறது. தேவை உள்ளவனுடன் கொடுக்க முடிந்தவனை இணைத்துவிடுகிறேன். இது மிகச் சுலபம். இதுவும் தரகு தொழில் போலதான். எனது நோக்கம் என் கண்முன் இருக்கும் மனிதனின் தேவை இறுதியில் பூர்த்தியாக வேண்டும். அதை நான் செய்தால் என்ன ? யார் செய்தால் என்ன? நான் செய்கிறேன் என்பதும் ஆணவம்தான். எனக்கு அதுவேண்டாம். தொடர்பை ஏற்படுத்தி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். நமது இறுதி இலக்கு ஒருவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் அவ்வளவே.” என்றார்.

    அவர் சொன்னது போல கண்ணீரைத் துடைப்பதுதான் அவர் இயல்பாகவே இருந்தது. எவ்வகையான விளம்பரமும் இல்லாமல் சண்முகசிவா தனிப்பட்ட முறையிலும் பலருக்கு பண உதவி செய்ததை நான் பார்த்ததுண்டு. சில சமயங்களில் உதவ கோரி நானே சிலரை அழைத்துச் சென்றதுமுண்டு. மேற்கல்வி கற்பது முதல் இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பும் விமான செலவு வரை ஏதோ உதவி பெரும் மௌனத்தோடு தொடர்ந்து செய்து வருகிறார்.

    0 0 0

    எனது எழுத்தின் மீது அவருக்கு ஒரளவு நம்பிக்கை வந்த பின்தான் அவரது தீவிரமான விமர்சனம் என் எழுத்தின் மீது விழுந்தது எனலாம். அச்சமயத்தில் அவர் பாராட்டுவதைக் குறைத்திருந்தார். அந்தப் பொய்யான மயக்கத்திலிருந்து நானும் வெளிவந்திருந்தேன். எனது படைப்புகளை மொண்ணையாக விமர்சித்துவிட்டுப் போகாமல் அதன் காரணங்களையும் தடுமாற்றங்களையும் கூர்மையாக கவனித்து சொல்பவராக இருந்தார். எங்கள் உரையாடலிலும் நான் செய்யும் தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியது மீண்டும் மீண்டும் என்னை செறிவாக்கிக்கொள்ள உதவியாக இருந்தது.

    அதேபோல எழுத்தாளர்கள் பற்றியும் எழுத்தாளர்களின் அமைப்புகள் பற்றியும் நான் எதிர்வினையை முன்வைக்கும் தொணி அவருக்கு எப்போதுமே ஏற்றதாய் இருந்ததில்லை. ‘இன்னும் மென்மையாகச் சொல்லலாமே’ என்பார். நான், ‘அது உங்கள் பாணி’ என்பேன். சிரித்துக் கொள்வார். சண்முகசிவாவும் நானும் அதிகம் முரண்படுவது இந்த விஷயத்தில்தான். இலக்கியம் சார்ந்து போலியாக இயங்கி பணம் பண்ணுபவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்ளும் போதெல்லாம், “அவர்ளை எதிர்ப்பதில் என்ன பயன் இருக்கிறது. அவர்கள் செய்ய முடியாததை நீ செய்ய முடியுமா என்று பார். செய்ய முடிந்தால் அதுதான் அவர்களுக்கான எதிர்வினை. அது இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமானதும் கூட. சும்மா சத்தம் போட்டு எழுதுவதால் ஒன்றை அழிக்கமுடியுமே தவிர ஆக்க முடியாது.”

    சண்முக சிவா சொன்னதில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொண்டேன். அதன் அடிப்படையில் உருவானதுதான் ‘வல்லினம்’ , கலை இலக்கிய விழா மற்றும் நூல் பதிப்பக முயற்சிகள் எல்லாம். மற்றபடி சமூக, இலக்கியச் சுரண்டல்களுக்கு தொடர்ச்சியான எதிர்வினையைக் காத்திரத்தோடு வைப்பது இலக்கியத்தின் அறம் என்ற எண்ணத்துடன்தான் சண்முகசிவாவிடம் தொடர்ந்து வாதாடிக்கொண்டிருக்கிறேன். என் எதிர்வினைக்கான தனது மாற்றுக்கருத்துகளை வைத்துவிட்டு இறுதியாகச் சொல்வார். “நீ செய்றது சரியா தப்பா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எதிர்ப்பதற்கான சுதந்திரம் உனக்கு இருக்குன்னு முதல்ல உனக்கு தெரியறதே எனக்கு பெரிய சந்தோஷம். அது தெரியாம இங்க பல பேரு அடிமைகளா இருக்காங்க” . அவரது சொற்கள் நான் தொடர்ந்து இலகுவாகப் பயணிக்க ஏற்ற வழவழப்புடன் இருப்பவை.

    ஒரு சமயம் ஏதோ மருத்துவம் குறித்து பேசும்போது மாதவிடாயைப் பழக்க தோஷத்தில் ‘தீட்டுந என்று சொல்லிவிட்டேன். சண்முகசிவாவுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். ” ‘தீட்டு’ என்ற சொல்லைவிட பெண்களை ஒடுக்கும் சொற்கள் வேறு இல்லை. இந்தத் தீட்டு என்ற சொல்லை வைத்துக்கொண்டுதான் ஆண்கள் பெண்களின் புனிதங்களைக் கட்டமைக்கிறார்கள். அவர்களை ஒடுக்கவும் செய்கிறார்கள். நீ பெண்ணியம் குறித்து பேசுகிறாய். நீ எப்படி இது போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்?” என்றார். நான் தவறுக்கு மன்னிப்புக்கேட்டுக் கொண்டேன். அதுமுதல் சண்முகசிவாவிடம் சொற்களை கவனமாகவே பயன்படுத்தினேன். எழுத்தாளனுக்குப் பேச்சு ஒன்றாகவும் எழுத்து ஒன்றாகவும் இருக்கக் கூடாதென நினைவில் வைத்துக்கொண்டேன். என் பெற்றொர்களுக்கு அடுத்து என்னைத் திட்டும் முழு உரிமையை சண்முகசிவாவுக்கு மட்டுமே தாராளமாகக் கொடுத்துள்ளதால் அவரது அன்பு கலந்து ஏச்சுகளை சிரித்தபடியே ஜீரணிக்க இயல்கிறது.

    சண்முகசிவாவுக்குக் கோபம் வரும். சில சமயங்களில் அவர் குரல் அதன் உச்சத்தில் தனிப்பட்ட உரையாடல்களில் வெளிப்படுவதைக் கேட்டுள்ளேன். அக்கோபம் முழுவது தனக்கானதாக இல்லாமல் சமூகத்தைச் சுரண்டுபவர்கள் மீதும் போலி வேசம் போடுபவர்கள் மீதுமே இருந்தது. ஆனால் அந்தக் கோபம் அவரை யாரையும் வெறுக்கக் காரணியாக இருந்ததில்லை. எல்லா குறைகளையும் மீறி அவர் மனிதம் என்ற ஒன்றின் மீது தீராத நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்.

    “நான் ஓர் முழுமையான எழுத்தாளனாக மட்டுமே இருப்பதை விரும்பவில்லை. எல்லா இலக்கியங்களைவிடவும் என் கண்முன் தேவைகளுடன் இருக்கின்ற மனிதர்கள்தான் முக்கியமாகப் படுகிறார்கள். இலக்கியத்தைப் படித்து கண்ணீர் விட்டேன் என்று கதைச் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் மனிதனை வெறுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அருகில் கண்ணீருடன் இருக்கும் மனிதனை முதலில் அணைத்துக்கொள்ள விரும்புகிறேன். “

    நான் சண்முகசிவாவிடம் சொன்னேன். “எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை டாக்டர். ஓர் இலக்கியவாதி படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையையும் எழுதும் படைப்புகளையும் பொறுத்து அவன் ஆளுமை அமைவதில்லை. மாறாக அவன் தன் வாசிப்பின் மூலம் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்பதில்தான் உள்ளது. அவ்வகையில் நீங்கள் நிறைவான எழுத்தாளர் ” என்றேன்.

    மென்மையாகச் சிரித்தார். எல்லோரிடமும் அவர் காணவிரும்பும் சிரிப்பை.

    (Visited 77 times, 1 visits today)

    One thought on “மா.சண்முகசிவா : அடையாளம் சுமக்காத ஆளுமை!

    1. vallinam kuluvinaruku nadri…siva aiya avarkal marutuvar matume enru ninaitirunthen,maaraga avar nadpanpukalayum ,manita neyathaiyum paditaal biramibaga ullathu.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *