‘நாடு விட்டு நாடு’, ‘நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்’ போன்ற வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட படைப்புகளை மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்குக் கொடுத்தவர் முத்தம்மாள் பழனிசாமி. தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், ஓய்வு பெற்றப்பின்னரே எழுத்துத்துறையில் தீவிரம் காட்டியுள்ளார். ஆங்கிலம் , தமிழ் என இரண்டு மொழியிலும் இயங்கும் இவர் மிக அண்மையில் ‘சயாம் மரண இரயில்வே’ குறித்த கள ஆய்வில் இறங்கி அதன் பலனாக ஓர் நூலையும் பதிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது 78 வயதிலும் இடையறாது இயங்கிகொண்டிருக்கும் முத்தம்மாள் அவர்களை நேர்காணல் செய்ய அணுகினோம். இந்த நேர்காணல் செம்பருத்தி இதழில் வெளியிடப்பட்டு இங்கு மறுபிரசுரம் காண்கிறது.
கேள்வி: எழுத வேண்டும் எனும் வேட்கை எவ்வாறு முதலில் உங்களிடம் தோன்றியது?
பதில் : நான் 35 வருடங்கள் ஆசிரியர் பணி செய்தேன். தலைமை ஆசிரியராகவும் இருந்தேன். நான் வேலை நிறுத்தம் செய்தப்பின் மேற்கொண்டு படிக்கலாமா என சிந்தித்தேன். அப்போதுதான் என் தம்பி என்னைத் தடுத்தார். குடும்ப வரலாறு எழுத ஆர்வ மூட்டினார். தமிழகத்தில் வாழ்ந்த ஒரு குடும்பம் எவ்வாறு இங்கு வந்து ஏழ்மை நிலையை அடைந்தது என்றும் அதன் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சி, அதை ஒட்டிய வாழ்வு, திருமணங்களால் ஏற்பட்ட புதிய உறவுகள் என சுவாரசியமான குடும்பப் பின்னணி எங்களது. வாழ்வை எழுதுவதிலிருந்து என் எழுத்து தொடங்கியது.
கேள்வி : முதலில் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் ‘Shore to Share’ எனத்தானே எழுதி வெளியிட்டீர்கள்.
பதில் : ஆம்! தமிழகத்தில் அப்புத்தகத்தைப் பார்த்த எனது சொந்தங்கள் தமிழில் எழுதப் பணித்ததன் காரணத்தால் ‘நாடு விட்டு நாடு’ என தமிழில் நானே மொழிப்பெயர்த்தேன். ஆயினும் ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழில் இன்னும் சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருப்பதாகக் கருதுகிறேன். அதற்கு காரணம் ஆங்கிலத்தில் இல்லாத சில தகவல்கள் தமிழில் உண்டு.
கேள்வி : உங்களின் வாசிப்புப் பின்புலம் என்ன?
பதில் : எனது ஆரம்பக்கல்வி தமிழ்நாட்டில் தொடங்கியது. அப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை பேசினால் தண்டம் விதிக்கப்படும். இந்நிலையில் பள்ளிக்கூடத்தில் நான் பயின்ற தமிழ்க் கல்வி, தமிழ் இலக்கியம் என் மொழி வளர்ச்சிக்கு உதவியது. ஐம்பெருங்காப்பியங்கள் , இராமாயணம் போன்றவற்றை சின்ன வயதில் மனனம் செய்து ஒப்புவித்த அனுபவம் உண்டு. சங்க இலக்கியங்களின் வாசிப்பு மட்டுமே என்னிடம் அதிகம் உண்டு. மற்றபடி நான் தமிழில் புலமை வாய்ந்தவள் அல்ல.
கேள்வி : உங்கள் ஆரம்பகால எழுத்தைப் படித்து ஒருவர் பித்துப் பிடித்து அலைந்ததாக ‘நாடு விட்டு நாடு’ புத்தகத்தில் படித்தேன். அப்படியானால் நீங்கள் இளம் வயதிலேயே எழுதத் தொடங்கியுள்ளீர்கள்.
பதில் : அவையெல்லாம் எழுதிப்பழகியக் காலக்கட்டம். (சிரிக்கிறார்) அந்த நபர் உண்மையில் பித்தன்தான். நானும் என் சகோதரியும் இணைந்து எழுதிய கற்பனை கதையைப் படித்து கடிதம் எழுதுவதும், தன் பெயருடன் என் பெயரையும் இணைத்து எழுதுவதுமாக இருந்தார். தம்பிகள் எச்சரிக்கை விடுத்தவுடன்தான் அடங்கினார். பின்னர் அவரைப் பல காலம் சென்று பைத்தியக்காரர் போல சாலையில் கண்டேன்.
கேள்வி : எவ்வளவு காலம் பிடித்தது. இந்த சுய வரலாறு புத்தகத்தை எழுத?
பதில் : 3 மாதங்கள். என் பிள்ளைகள்தான் என் எழுத்தைச் செரிவு செய்தனர். என் பிள்ளைகள் அனைவரும் தமிழ் பயின்றவர்கள். நான் ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டவள். என் பிள்ளைகள் அனைவரும் வெள்ளைத் தோல். மொழியால் நான் அவர்களுக்குத் தமிழ் அடையாளம் கொடுத்துள்ளேன்.
கேள்வி : அண்மையில் ‘நாடு விட்டு நாடுக்கு’ என்ற சுயவரலாறுக்கு முன் ஏதும் பத்திரிகைகளில் எழுதி உள்ளீர்களா?
பதில் : முன்பு ‘இந்தியன் மூவி நியூஸில்’ கொஞ்சம் எழுதியதுதான். ஆங்கிலப் பத்திரிகைகளில் பெரும்பாலும் ஆசிரியர் தொழில் தொடர்பாக சில கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
கேள்வி : ‘நாடு விட்டு நாடு’ புத்தகத்தில் பல தகவல்களை மிகத் துள்ளியமாகப் பதிவு செய்துள்ளீர்கள். உங்களின் நினைவு திறன் ஆச்சரியமளித்தது.
பதில் : என் அப்பாவுடன் பல வேலைகளில் நான் பங்கு எடுத்துள்ளேன். ஒன்றை கேள்விப்படுவதைவிட நிஜத்தில் அனுபவிப்பதுதானே மனதில் ஆழமாகப் புதியும். என் அப்பா எங்களை எல்லாம் ஆண்கள் போலத்தான் வளர்த்தார். அவர் அடிக்கடி சொல்வார். “பெண்களுக்கு நான்கு சுவர்கள் பாதுகாப்பு இல்லை. அவள் மனதுதான்” என்று. எங்கள் மனதிலும் உடலிலும் திடத்தை ஏற்றியே அவர் வளர்த்தார். ஒவ்வொரு முறையும் நினைவில் பதிந்துள்ள எண்ணங்களை மீட்டு உணர்ந்து எழுதும்போது மனம் கனக்கும். அச்சம்பவங்கள் ஒரு காட்சியாக மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அது போன்ற சமயமெல்லாம் ஒன்றும் செய்யாமல் அக்காட்சிகளையே பார்த்துக்கொண்டிருப்பேன். நான் கடந்து வந்த அனுபவங்களை எண்ணிப்பார்ப்பேன். வாழ்வென்பது எத்தனை சவாலான பாதைகளைக் கொண்டது என்று ஆச்சரியமாக இருக்கும்.
கேள்வி : ஒரு புனைவில் இருக்கின்ற சுதந்திரம் சுய வரலாறு எழுதும்போது இருப்பதில்லை. புனைவில் கற்பனைக்கும் நிஜத்துக்குமான கலப்பு இருக்கலாம். சுயவரலாற்றில் நிராகரிக்காத உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. இந்தச் சவாலை எப்படி எதிர்க்கொண்டீர்கள்?
பதில் : எனக்கு என்னிடமிருந்து உண்மை வெளிப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. அது மகத்தான அனுபவம். ஒருவகையில் ஏதோ ஒன்றை என்னிலிருந்து விடுவிக்கும் சுதந்திரம். நான் மாடு மேய்த்தது, பட்டினி கிடந்தது முதல் என் இரு தாத்தாக்களும் சிறை சென்றவர்கள் எனும் தகவல் வரை என் வாழ்வில் உள்ள அத்தனை உண்மைகளையும் எதிர்கால சந்ததியினருக்கு வெளிபடுத்த வேண்டும் என்பதே நோக்கம். என் வாழ்வைப் பகிர்வதன் வழி ஒரு காலத்தின் வரலாற்றையும் நான் பகிர்வதாகவே உணர்கிறேன்.
கேள்வி : உங்கள் பேரக்குழந்தைகள் குடும்ப இந்தக் வரலாற்றை எவ்வாறு அணுகுகிறார்கள்?
பதில்: அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பலமுறை வாசித்து விட்டதாகச் சொன்னார்கள். இன்று அப்புத்தகம் சமூகத்தில் பல்வேறான பார்வைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அடிப்படையில் நான் கதை சொல்ல நினைத்தது என் பேரப்பிள்ளைகளுக்குத்தானே.
கேள்வி: சுயவரலாறு என்பது ஒரு இலக்கியம் சார்ந்த வடிவம். ‘நாடு விட்டு நாடு’ எழுதும்போது உங்களுக்கு அவ்வடிவம் குறித்தான எவ்வகைப் புரிதல் இருந்தது.
பதில்: நான் மனதில் பட்டதையெல்லாம் முழுமையாக எழுதினேன். என் மூத்த மகள் இராஜலெட்சுமிதான் அவற்றை செரிவுப்படுத்தினாள். அதோடு தமிழகத்தில் உள்ள த.சா. கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் கோ.ந. முத்துக்குமார சுவாமியும் எனக்கு வழிக்காட்டினார்.
கேள்வி: இந்தப் புத்தகத்திற்கு எவ்வாறான விமர்சனங்கள் தமிழ்ச்சூழலில் எழுந்தது?
பதில்: பலர் ஆச்சரியப்பட்டனர். அது உண்மைகள் மேல் உள்ள ஆச்சரியம். எதிர்மறையான விமர்சனங்கள் இல்லை.
கேள்வி : இந்த நாட்டில் நாம் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கிறோம். நீங்கள் இப்புத்தகத்தில் ஏறக்குறைய 40 பக்கங்கள் வரை சாதிய அடையாளம் சார்ந்து பேசுகிறீர்கள். இந்நாட்டி அதன் அவசியம் என்ன?
பதில் : அக்காலத்தில் அவ்வாறு இருந்ததால் அதைப் பதிவு செய்தேன். தொழில் சார்ந்து தமிழகத்தில் சாதிகள் இருந்தன. தமிழர்களை இங்கு அழைத்து வரும்போது அவர்கள் அந்தச் சாதியத்தையும் இங்குக் கொண்டு வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்நிலை மாறியது. ஆனால் அதற்கு முன்பு தாழ்ந்தவர்கள் என அடையாளம் கொண்டவர்கள் சில இடங்களுக்கு வரவும் செருப்பை அணியவும் தடை இருந்தது. ஜப்பானியர் வருகைக்குப் பின் ‘சாதி என்ன எழுதி நெத்தியில ஒட்டியிருக்கா?’ என கேட்கும் அளவுக்கு மாற்றங்கள் இருந்தன. வறுமையும் துன்பமும் சாதிய அடையாளங்களை அழிக்கின்றன.
கேள்வி : சாதிய அடையாளம் நீங்குவதற்கு எது காரணியாக இருந்தது?
பதில் : திருமணமும் காதலும்தான் காரணம். முன்பு சாதிய அடையாளத்தைப் பாதுகாக்கப் பெண்களைத் தமிழகத்துக்கு அனுப்பி திருமணம் செய்து வைப்பர். இரண்டாம் உலகப் போருக்குப்பின் தமிழகம் சென்றால் மீண்டும் மலாயா வர முடியாது என்று இங்கேயே திருமணம் செய்து வைக்க முற்பட்டனர். அதே போல காதலும் சாதி அடையாளம் நீங்க முக்கிய காரணம்.
கேள்வி : இன்றைய சூழலில் சாதியத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: இன்றைக்கு அவ்வாரெல்லாம் பார்க்க முடியாது. நானே ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டவள்தானே. எங்கள் ஊரில் உள்ளவர்கள் இன்றும் அவரை இறக்கியே பார்க்கின்றனர். அவர் மாடு சாப்பிடுபவராக இருப்பது அதற்கு காரணம். எனக்குக் குழந்தைப் பிறந்தபோதுகூட அவளுக்குத்
‘டூ டூ வெள்ளைக்காரா
துப்பாக்கி வெள்ளைக்கார
மாடு திண்ணி வெள்ளைக்காரா’ என என் கணவரை வைது கொண்டேதான் தாலாட்டுப் படிப்பார்கள். (சிரிக்கிறார்). அதேபோல என் பிள்ளைகளும் சாதியை மையப்படுத்தி நான் திருமணம் செய்து வைக்கவில்லை.
கேள்வி : அந்த நூலில் பல இடங்களில் சில நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்துள்ளீர்கள். அக்காலக்கட்டத்தில் உள்ளது எப்படி உங்களால் இவ்வளவு துள்ளியமாக நினைவு கூற முடிந்தது.
பதில்: எனது ஞாபகச்சக்தி அவ்வாறானது.
கேள்வி : இங்கிருந்து உங்கள் ‘நாட்டுப்புறப் பாடல்களில் என் பயணம்’ எனும் நூலைப் பற்றி பேசலாம்.
பதில்: எனக்கு சிறு வயதிலிருந்தே நாட்டுப்புற பாடல்கள் என்றால் விருப்பம். நான் பிறந்து வளர்ந்த சூழல் இதற்கு காரணமாக இருக்கலாம். நாட்டுப்புறப்பாடல்களை நான் சிறுவயது முதலே சேகரிக்கிறேன். சிறு வயதில் கேட்கும் பாடல்களை நினைவு படுத்தி வீட்டில் வந்து நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்வேன். அவ்வாறான பாடல்களைக் கேட்பதற்காகவே என் அம்மாவுடன் மரணவீடுகளுக்கு ஆஜர் போட்டுவிடுவேன். அங்குதான் பல்வேறான பாடல்களைக் கேட்கலாம். உணர்வின் உச்சத்தில் அவ்வாறான பாடல் படிக்காத பாமர மக்களிடமிருந்து எழுகின்றன. ஆனால் இத்தொகுப்பில் நான் புகுத்தியுள்ளது அனைத்தும் மலேசிய நாட்டுப்புறப் பாடல்களே.
கேள்வி : வாழ்ந்த சூழல் காரணமாக இருந்தாலும் அதை பதிவு செய்து நூலாகி இருக்கிறீர்கள் அல்லவா?
பதில்: ஆம். ஒருமுறை தமிழகத்திற்குச் சென்றிருந்தபோது நாட்டுப்புற பாடல்கள் தொடர்பாகப் பேச்சு எழுந்தது. சிலர் மலேசியாவில் அதுபோன்ற நாட்டுப்புறப் பாடல்கள் கிடைக்காது எனக் கூறினர். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். சிலரிடம் பாடல்களைப் பெறுவது எளிதானதல்ல. நான் சந்தித்த பலரும் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அவர்களிடம் பேசி அப்பாடல்களை மீட்டெடுப்பது சிரமமாக இருந்தது. அவர்கள் ஒரு காலச்சூழலில், ஓர் உணர்வு தளத்தில் அப்பாடலைப் பாடி இருப்பர். அந்த உணர்வை அவர்களிடம் மீண்டும் சொற்களின் மூலம் புகுத்தி பாடலைப் பெற வேண்டியிருந்தது. ஆனால் சிரமமான இந்தப் பணியை மகிழ்ச்சியாகவே செய்தேன். ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன பாடல் கேட்கப் போகிறோம்’ என்ற எதிர்ப்பார்ப்பிலேயே என் பயணங்கள் இருந்தன.
கேள்வி: ஆனால் சில பாடல்களில் வரிகள் அற்புதமாக இருந்தன.
பதில்: அதையும் நான் ஆச்சரியப்பட்டு கேட்டதுண்டு. எங்கிருந்து இந்த வரிகள் அகப்பட்டதென. அதற்கு அவர்கள் சொல்வார்கள், “நான் என்னத்தக் கண்டேன்… எனக்குப் பாட்டு பாடத்தான் தெரியும்” என்று. மனிதனின் உணர்ச்சிகள் மிகையான ஆற்றல் கொண்டவை.
கேள்வி: நாட்டுப்புறப் பாடல்களில் இருந்த உங்கள் பயணம், ‘சயாம் மரண இரயில்வே’ தொடர்பாகப் பதிவுகளைச் சேகரிக்க எவ்வாறு திரும்பியது?
பதில்: பங்கோர் தீவுக்கு மீனவர் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். எனது நோக்கம் மீனவர்களின் பாடல்களைச் சேகரிப்பதாய் இருந்தது. ஆனால் அங்கு ஒரு மீனவர் ‘எதுக்கு நாங்க பாடுன பாட்ட எழுதுறீங்க … நாங்க சயாமில் பட்டப்பாட்டை எழுதுங்களேன்’ என்றார். அங்கிருந்து அந்த ஆர்வம் தொடங்கியது. அதற்காக பலரையும் தேடிச்சென்றேன். சிலர் அத்துயரச் சம்பவத்துக்குப் பின் தமிழகம் சென்று விட்டனர் என அறிய முடிந்தது. அவர்களையும் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை.
கேள்வி: ‘சயாம் மரண இரயில்வே’ என்று தலைப்பில் ஆர். சண்முகம் எழுதிய புத்தகம் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் பாடப் புத்தகமாகி உள்ளது. அங்குள்ள மாணவர்களின் கேள்வி, ‘சயாம் மரண இரயிலுக்குப் பல இனத்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தாலும் ஏன் தமிழர்கள் மட்டும் அடிமையாக நடத்தப்பட்டனர்’ என்பதாக உள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: அவர்கள் தமிழர்களை அடிமைகளாக்கச் சுலபம் என்ற காரணத்தினாலேயே அழைத்துச் சென்றனர். காரணம் தமிழர்களுக்குக் கல்வி இல்லை. கடுமையான உழைப்பாளிகள் என அறிந்து வைத்திருந்தனர். தமிழர்களை இங்குப் பிடித்து வந்ததே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தியும் பொய்கள் பல சொல்லியும்தானே. வறுமையில் வாழ்வு தேடி வந்த மக்களை அடக்கி ஒடுக்க ஆள்பவர்களுக்குச் சிரமமாக இருக்கவில்லை.
கேள்வி : உங்கள் தேடலின் படி அவ்வாறு வந்தவர்களிடம் சமூக உறவுகள் அக்காலத்தில் எப்படி இருந்தது.
பதில்: முன்பே நான் சொன்னது போல சாதிய அடிப்படையில்தான் அனைத்தும் இருந்தன. லயன்களும் சாதிய முறையிலேயே பிரிக்கப்பட்டிருந்தன. இது நான் பயிலும் பள்ளிவரை நீண்டிருந்தது.
கேள்வி: நாடு சுதந்திரம் பெற்றபோது அக்காலக்கட்ட மக்களுக்கு ‘இது நமது நாடு’ என்ற பிரக்ஞை இருந்ததா?
பதில்: சுத்தமாக இல்லை. எல்லா சொத்துகளையும் விற்றுவிட்டு பலர் ஊரை விட்டுச் செல்லவே விருப்பப் பட்டனர். அவர்கள் இங்கு நடத்தப்பட்ட விதம் அதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் சம்பாதிக்க வந்தவர்களின் மனம் எப்போதும் தாயகத்தில்தானே இருக்கும்.
கேள்வி: கங்காணி முறையால் ஏமாற்றப்பட்டு வந்தவர்கள், இங்கு வந்து நிஜச்சூழலைப் பார்த்து திரும்பி செல்ல எத்தணிக்க மாட்டார்களா?
பதில்: இல்லை. வேலை கடினமானதாக இருந்தாலும் தமிழர்களை மயக்கி வைக்க ஆங்கிலேயர்கள் சிலவற்றைத் தோட்டங்களில் ஏற்படுத்தி இருந்தனர். அதாவது குடிப்பதற்குக் கள்ளுக்கடையும், பொழுதுபோக்க கூத்து மேடையும், திருவிழாக்களுக்குக் கோயில், அப்புறம் ஒரு தமிழ்ப்பள்ளி என தமிழர்களை, ‘நாளை’ எனச் சிந்திக்க விடாத அளவுக்கு மயக்கி வைத்திருந்தனர்.
கேள்வி: அக்காலக்கட்டத்தில் தமிழர்களுக்கும் பிற இனங்களுக்குமான உறவு எப்படி இருந்தது.
பதில்: தமிழர்களும் மலாய்க்காரர்களும் மிகவும் நெருக்கம் உள்ளவர்களாக இருந்தனர். சீனர்களிடம் நெருக்கம் குறைவு. மலாய்க்காரர்கள் அன்புள்ளவர்கள். இப்போதும்தான். என் அவதானிப்பில் ஈரான் ‘ரெவலூஷன்’னுக்குப் பிறகுதான் அவர்களிடம் மதம் சார்ந்தப் பிடிப்பை அதிகம் காண்கிறேன்.
கேள்வி: பேரப்பிள்ளைகளுக்காக எழுதத் தொடங்கிய உங்கள் எழுத்துப்பணி பல தளங்களுக்கும் சென்று சேர்ந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். இப்போது என்ன உணர்கிறீர்கள்.
பதில்: எழுத்தில் வல்லமை தெரிகிறது; பொறுப்புணர்வு கூடியுள்ளது.
நேர்காணல் : ம.நவீன், சிவா பெரியண்ணன், பாலமுருகன், தயாஜி
எழுத்து/ புகைப்படங்கள் : ம.நவீன்
இவரை சந்தித்து உரையாடல் நிகழ்த்த வாய்ப்பளித்த வல்லினம் குழுவினர்க்கு நன்றி………
arumayaana neerkaanal…varalarum meendum uyir peruvathai inthan vali nan arigiren..nandri vallinam..
arputamaana neerkaanal…vallinam kuluvinaruku nadri..vallinam elutallarkalin kalam.