கேள்வி: தங்களின் பார்வையில் மொழி என்பது என்ன?
பதில்: மொழி என்பது ஓர் இனத்தின் ஒட்டு மொத்த மனம். அதனை தொடர்பு கருவியாக மட்டும் பார்ப்பது மேலோட்டமானது. ஓர் இனத்தின் வாழ்வியல், பண்பாடு, கலை, நாகரீகம் முதலான பல அடிப்படைக் கூறுகளை மொழி தாங்கி இருக்கின்றது. ஒரு மொழியை அழித்தால் அம்மொழியைப் பேசும் இனத்தையே அழித்து விடலாம் என்பது செர்மானிய பழமொயோகும்.
கேள்வி: மொழி வெறும் கருவியாக மட்டுமே இன்றைய உலகில் பயன்படுவது குறித்து உங்கள் கருத்து?
பதில்: நான் மேலே குறிப்பிட்டது போல மொழியை வெறும் கருவியாகப் பார்ப்பது ஆழமான பார்வையன்று. நுட்பமான சிந்தனையுமன்று. மாந்தனின் அறிவுமனம் சார்ந்த ஒன்றாக மொழி அமைகிறது. மொழியை வைத்துக் கொண்டு ஓர் இனத்தின் முதிர்ந்த பண்பாட்டினை அறிய முடியும். ஓர் இனத்தின் நாகரீகத்தினை அறிய முடியும். அந்த இனத்தின் மெய்யியல் கோட்பாடுகளை அறிய முடியும். அந்த இனத்தின் அறிவு நுட்பத்தை அறிய முடியும். இன்னும் சொல்லப்போனால் ஓர் இனத்தின் வரலாற்றைக் கூட அறிய முடியும். பழக்கியல் கோட்பாட்டாளர்களும் அறிவுசார் கோட்பாட்டாளர்களும் கூறுகின்ற கருத்துகளே இதற்கு சான்று. எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஒன்று சொல்வேன். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ‘வியாழன்’ மற்றும் ‘உலகம்’ என்ற சொல், அறிவியல் கூறுகளைக் கொண்டுள்ளது. ‘வியழ்’ என்றால் பெரிது என்று பொருள். கிரகங்களில் வியாழனே பெரிது. அது போல உலவுவதால் பூமியை உலகம் என்கிறோம். இச்சொற்கள் அழிவதால் அவை கொண்டுள்ள அறிவியல் பூர்வமான அர்த்தங்களும் சேர்ந்தே அழிகிறது. இது போன்ற எண்ணற்றச் சொற்கள் தமிழில் உண்டு.
கேள்வி: நீங்கள் ஒரு மொழி ஆய்வாளராக இருந்தாலும் ‘தமிழர்’ என்ற அடிப்படையில் நீங்கள் சார்ந்த மொழியை உயர்த்திப் பிடிப்பதாக எழும் விமர்சனம் குறித்து….
பதில்: எந்த ஓர் இனத்தானுக்கும் அவன் மொழி மீதும் இனத்தின் மீதும் பற்று இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால்தான் அது வியப்பாகத் தோன்றும். நான் தமிழன். எனக்கு மொழிப்பற்று இருப்பது இயல்புதானே. என் மொழியில் காணக் கிடைக்கும் சிறப்புகளையும் பெருமைகளையும் பிறருக்காக நான் மூடி மறைத்துவிட முடியாது. தமிழின் தனித்தன்மைகளைப் பிறரும் அறிய வெளிபடுத்த வேண்டும். இதைத் தமிழர்கள் செய்தால்தான் வெளியாகும். நான் உண்மை அல்லாதவற்றைச் சொன்னால் வெறும் தம்பட்டம் என்று கூறி ஒதுக்கி விடலாம். தமிழ்தான் உலகத்தொன்மொழி என்ற கருத்தினை தமிழறிஞர்கள் சொல்லும் போது அதனை ஏற்க மறுப்பவர் எவருமே காய்தல் உவத்தலின்றி மொழி ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. மொழியியளாலர்களின் நூல்களைப் படிப்பதுமில்லை. முரண்பட்ட எதிர்ப்புகளையும் கருத்துகளையுமே வழங்குவர். அது சிறந்த தருக்கமன்று. மேலும், தமிழன் மட்டுமே தமிழை உயர்த்திப் பிடிக்கும் காரியத்தைச் செய்யவில்லை. ‘ஒகினோ சுசமு’ எனும் ஜப்பானிய மொழி அறிஞர், ‘நிகோங்கோ’ எனும் ஜப்பானிய மொழி தமிழின் கிளையாக இருந்திருக்க வேண்டும் எனச் சொல்கிறார். இதேபோல் இந்தியாவிற்கு வருகை மேற்கொண்டிருந்த சமயத்தில் ‘நோம் சோம்ஸ்கி’ உலகத் தொன்மொழி தமிழாக இருக்க வேண்டும் என்கிறார்.
கேள்வி: உங்களை மொழி வெறியராக சித்தரிக்கும் ஒருவருக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: தமிழைப் பாதுகாக்கும் எண்ணமுடைய எவருமே இப்படிக் கூற மாட்டார்கள். மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும் என்பது இயங்கியல். மொழி வாழ வேண்டுமானால் அந்த மொழியின் உயிர் இயல்புகளை உணர்ந்து பேண வேண்டும். இவ்வாறு மொழியைப் பாதுகாக்க நினைப்பதையும் பேண நினைப்பதையும் மொழி வெறி என்றால் அது வேடிக்கையானது. நகைக்கத் தக்கது. என் போன்றவர்களை மொழி வெறியர்கள் என்பவர்கள் தமிழை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், சிதைக்கலாம், கொல்லலாம் எனும் சிந்தனையுடையவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்பது பிறமொழியை அழிப்பதாகாது. என் தாய் மொழியைக் கொன்று பிறமொழியைப் பயில்வது அடிமைத்தனமானது.
கேள்வி: தமிழன் தனித்தமிழ் பேசியே ஆக வேண்டிய அவசியம்தான் என்ன?
பதில்: தமிழ்ப் பிறமொழிச் சொல் கலவாமல் இயங்கக்கூடிய ஆற்றலுடைய மொழி. எந்தப் புதிய பொருளுக்கும் சொல்லுருவாக்கம் செய்ய வல்ல ஆற்றல் தமிழுக்கு உண்டு. இவ்வாறுதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயிறுக்கு உருளைக்கிழங்கு என்றும் குதித்து ஓடிய வெளிநாட்டு விலங்குக்குக் குதிரை என்றும் மேலைநாட்டு பறவைக்கு பொருள் உணர்த்த வான்கோழி என்றும் தமிழில் சொற்கள் உருவாக்கப்பட்டன. இன்று புதிய மின்னியல் வரவுகளுக்கும் கணினி, இணையம், கைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி என்று பெயரிட தமிழுக்கு வல்லமை உண்டு. இவற்றையெல்லாம் நாம் இன்று பயன்படுத்திக்கொண்டுதான் வருகின்றோம். மொழிக்கலப்பு என்பது தமிழைப் போன்ற ஒரு மொழியை அழித்துவிடும். தமிழ்ப்பேச்சு வழக்கிலிருந்து மறையும் நிலைக்குத் தள்ளப்படும். தமிழில் ஒரு சொல் இரு சொல் எனும் நிலைமாறி பல சொல் கலந்து தமிழைக் கலவை மொயோக்கி இறுதியில் தமிழே இல்லாத நிலைக்கு வந்துவிடும். இன்று ஒரு சிலர் அதைத்தான் செய்து கொண்டுள்ளனர். இது ஒரு சிலரின் எதிர்பார்ப்பும் கூட. தமிழன் என்பவன் இக்கேட்டினைச் செய்யக்கூடாது. செய்பவன் ஒரு வகையில் தமிழ்ப்பகைவனாகவே ஆகிவிடுவான். தனித்தமிழ் என்றாலும் தமிழ் என்றாலும் ஒரு பொருள்தான். தனித்தமிழ் என்றால் தனியான ஒரு மொழியன்று. செந்தமிழ், வண்டமிழ், என்பது போல பிறமொழி கலப்பில்லாமல் இயங்கும் சிறப்புடையதால் தனித்தமிழ் என்றனர். சில வேளை இலக்கியத்தில் பயிலும் சொல் பேச்சில் பயிலாமலும் பேச்சில் புழங்கும் சொல் இலக்கியத்தில் பயிலாமலும் போகலாம்; எந்நடையாயினும் தமிழ்த் தமிழாக இருக்க வேண்டும். எந்தச் சொல்லும் புழக்கத்திலும் பழக்கத்திலும் வந்தால்தான் இயல்பாகும். அப்படியல்லாமல் தமிழ்ச்சொற்களை விளங்காது புரியாது என்று சொல்வது பேதைமை. எனவே, தமிழ் வாழ வேண்டும் என்று நினைப்பவன் தமிழில் பேசியே ஆக வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
கேள்வி: தமிழைப் பேசினால் மட்டும் போதும் என்கிறீர்களா?
பதில்: கூடாது. அதை மீறி ஏட்டுகல்வியிலும் அதன் வளர்ச்சி தொடர வேண்டும். நம் நாட்டைப் பொறுத்தவரையில் இந்நிலை கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது. தமிழுக்கு தொண்டு செய்கிறோம் எனக் கூறும் கல்விமான்கள் இலக்கியவாதிகள் பலரும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வியைப் போதிக்காததும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் `வீட்டில் தமிழ் போதிக்கிறோம்’ என்பதும் சமூகத்திடம் அவர்கள் போடும் போலி வேஷத்தினை மட்டுமே காட்டுகிறது.
கேள்வி: அந்தத் தனித்தமிழ் பாட்டாளி மக்களையும் சென்று அடையும் என நம்புகிறீர்களா?
பதில்: இன்று தமிழில் பயன்படுத்தப்படுகின்ற பல தமிழ்ச் சொற்கள் எளிய மக்களால் உருவாக்கப்பட்டவையே. bicycle என்ற ஆங்கிலச் சொல்லை தமிழ் நாட்டில் சிலர் ‘துவிச்சக்கர வண்டி’ என்றனர். நல்ல தமிழ் உணர்வாளர்கள் ஈருளி என்று பெயர் மாற்றினர். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்து மக்கள்தான் மிதித்துக் கொண்டு ஓட்டப்படும் வண்டி என்பதால் ‘மிதிவண்டி’ என்றனர். இந்த நாட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டு தோட்டப்புறங்களில் வேலை செய்த மக்கள்தான் ஒட்டுப்பால் என்றும் கோட்டுப்பால் என்றும் ஏணிவெட்டி, கழுத்து வெட்டு, கட்டிப்பால், அந்திவேலை, பொட்டு வைத்தல், வெளிக்காட்டு வேலை, ஆலை, புகைக்கூண்டு என்றெல்லாம் பெயர் வைத்தனர். இவர்கள் மிகப் பெரிய பேராசிரிய பெருமக்களுமல்லர், கல்விமான்களுமல்லர். பாட்டாளி மக்கள்தான். மொழியின் உயிர்ப்பினை மக்கள் நெஞ்சிலிருந்து மாற்றாத வரை அவர்கள் எந்த தட்டு மக்களாயினும் தாய்மொழியினை வாழ வைப்பார்கள். அப்படி அல்லாதவர்கள் சாகடிக்கத் தயங்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் எல்லாரும் வாழ்வித்த தமிழைத்தான் இன்று செய்தி ஊடகங்களும் கற்றறிந்த பெருமக்கள் என்று கூறுவாறும் கொல்லத் துணிந்து செயல்படுகின்றனர். இங்கே செய்தி ஊடகங்களின் பங்களிப்பும் கல்வி ஊடகங்களின் பங்களிப்பும் மிக இன்றியமையாதது. இவர்கள் சரியாக இருந்தால் எல்லாத் தரப்பு மக்களிடையேயும் தமிழ்வாழும். எனவே, மொழி நிலையில் எதுவுமில்லை. எல்லாமே அந்த மொழியைத் தாங்கிப்பிடிக்கும் மக்களிடம்தான் உள்ளது.
கேள்வி: இலக்கியம் மனிதனை மேன்மை அடைய வைக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் சங்க இலக்கியத்தில் ‘கூடல்’, ‘கலவி கொள்ளல்’ போன்றவை அதிகம் வருகின்றன. அப்பாடல்கள் நல்ல இலக்கியம் இல்லையா?
பதில்: சங்க இலக்கியத்தில் கூடல், கலவி முதலான சொற்களும் விளக்கங்களும் உள்ளனவே ஒழிய இவற்றை படம் பிடித்து வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. அவற்றை அளவோடும் முதிர்ச்சியோடும்தான் எழுதினார்கள். மனித மேன்மை எனும் சொற்றொடரை உணந்தவர்களுக்கு அம்மேன்மைக்கு வழிவிடும், நெறிமுறைகள் எது வழி விடாத நெறிமுறைகள் எது எனத் தெரியும். சங்க இலக்கியங்கள் இதுவரை எந்தத் தமிழனையும் சீர்கெடுத்து விட்டதாக யாரும் கூற முடியாது. அவற்றை ஆய்வு செய்த எல்லாரும் உயர்த்தியே போற்றுகின்றனர். கழிவுகளுக்குள் மூக்கை நுழைத்துவிட்டவர்களுக்கு சில வேளை நல்லது கூட நாறும். எனவே அறத்தையும் ஒழுக்கத்தையும் எல்லா இடங்களிலும் பேண நினைக்கும் எந்தப் படைப்பாளியும் தன் படைப்புகளைத் தரமாகவே படைக்க நினைப்பர். அப்படி அல்லாதவர் இழிவுகளைத்தான் எழுதுவர். அந்தக் குப்பைகளால் மாந்த மேன்மையைப் பெற முடியாது. மாந்த மேன்மையை உருவாக்க நினைப்பவர் கீழ்மையை வலியுறுத்தவோ வரவேற்கவோ மாட்டார். சங்க இலக்கியங்களால் மாந்த தன்மையும் பண்பும் மேன்மையுற்றதேயொயே கீழ்மையுறவில்லை. எனவேதான் பாவேந்தரும் நூலைப்படி சங்கத் தமிழ் நூலைப்படி எனக் கூறினார்.
கேள்வி: ‘தமிழ் நெறிக் கழகம்’ தோற்றுவித்த நோக்கம்?
பதில்: தமிழை தூய முறையில் எழுதவும் பேசவும் வேண்டும்; தமிழன் தன்னைத் தமிழன் என்று அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழனாகத் தமிழன் வாழ வேண்டும்; தமிழ்நெறியைத் தமிழன் போற்ற வேண்டும்; தமிழரின் தனித்துயர்ந்த சமய உண்மையை உணர்ந்து தமிழன் அதனைப் பேண வேண்டும் என்பதற்காகவே தமிழ்நெறிக் கழகப் பாவலர் அ.பு.திருமாலனாரால் 1983ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பெற்றது.
கேள்வி: இதுபோன்ற கழகங்கள் இருந்தும் அவற்றால் ஊடகங்களில் மலினமாகிவிட்ட ‘தமிழை’ மாற்ற முடியாதது பற்றி?
பதில்: அரசையும் அதிகாரத்தையும் இழந்த இனம் தமினேம். அவற்றை மீட்டெடுக்கும் போராட்டம்தான் தமிழீழத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மீட்பு வெற்றி பெறும் காலத்தில் உலகளாவிய நிலையில் தமினேத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். இன்று ஊடகங்கள் செய்து வரும் கேடுகளைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு மக்கள் வலு கொண்ட இயக்கங்கள் இல்லை. அந்த மக்கள் வலுவைத்தான் நாம் உருவாக்கி வருகின்றோம். வளர்ந்து வரும் தலைமுறையை எல்லா வகையிலும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் வேலையை இந்த ஊடகங்கள் செய்கின்றன. இவற்றை இயக்குபவர்களின் கழிச்டைத்தனமே இதற்குக் காரணம்; மக்கள் ஆற்றலுக்கு முன்னால் இவை எல்லாமே அடிபணியும் காலம் கண்டிப்பாய் வரும். அதுவரை நம் ஆற்ற வேண்டிய பணியைத் தொடர்ந்து செய்வோம்.
கேள்வி: தனித்தமிழ் வாழாது என்கிறார்கள்… உண்மையா? ஏன்?
பதில்:தன்னம்பிக்கை இல்லாதவன் முடியாது என்பான். அவலத்தோடு வாழ்பவன் நன்றாக வாழ்பவனைப் பார்த்து பொறாமைப்படுவான். வாழ்த்த மாட்டான். வாழவே முடியாது என்பான். இங்கே இப்படித்தான் பார்க்க வேண்டும். இதற்கு முன் எத்தனையோ கொம்பர்கள் இப்படி கூவி விட்டார்கள். தமிழ்க் கெட்டுச் சீரயே வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். ஒரு காலத்தில் தமிழா ஆரியமா எனும் போராட்டம் வலுத்திருந்தது. இதனால், குயக்கொண்டான் என்பவனை நக்கீரன் ‘ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த/ காரியத் தாற்காலக் காலக்கோட் கொண்டானை/ வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்/ செந்தமிழே தீர்க்க சுவா’ என்று அறம்பாடியே கொன்றாராம். தமிழில் சமற்கிருதச் சொற்களைக் கலந்து ‘மணிபிரவாள நடை’ என்ற ஒன்றை உருவாக்கி எழுதினார்கள். தமிழ் உணர்வாளர்களின் முயற்சியால் அது முறியடிக்கப்பட்டது. ஆனால், இக்காலத்தில் ஆங்கிலம் கலந்து எழுதுவம் பேசுவதும் வழக்கமாகி வருகின்றது. இதற்கு அடிமையாகிப் போனவர்கள்தான் இவ்வாறு கூறுகிறார்கள்.தனித்தமிழ் வாழாது என்கிறவர்களைப் பார்த்துதான் பாரதி ‘பேதைகள்’ எனச் சீறிப் பாய்கிறான்.
கேள்வி: இந்நாட்டில் ‘மொழிப்போர்’ நடக்க வாய்ப்புண்டா?
பதில்: தமிழுக்கும் தமிழ்ப்பகைக்கும் நீண்டகாலமாக பல வடிவங்களில் போராட்டம் நடந்து கொண்டுதான் வருகின்றது. இதில் தமிழ்ப் பகைவர்களின் எண்ணிக்கை வலுத்தால் தமிழுணர்வாளர்கள் கடுமையாகப் போராட வேண்டிவரும். ஊடகங்களைச் சரிப்படுத்தினால் சரியாகி விடும். அவற்றை நோக்கியும் கல்விக் களத்தை நோக்கியும் நாம் கவனம் செலுத்துகிறோம். அடிப்படையில் தமிழ்ப்பற்றுமிக்க இளைய தலைமுறையை நாம் உருவாக்கி வருகின்றோம். காலத்தால் எல்லாம் சரியாகும்.
கேள்வி: உங்கள் போராட்டங்களில் வெற்றி கிடைத்துள்ளதா… எவ்வகையில்?
பதில்: உலகளாவிய நிலையில் தனித்தமிழியக்கம் வளர்ந்துள்ளதே ஒழிய தேயவில்லை. கலைச் சொல்லாக்கங்கள் பெருகி உள்ளனவே ஒழிய குறையவில்லை. பல பிறமொழிச் சொற்கள் கலையபெற்று நல்ல தமிழ் சொற்கள் வழக்கத்திற்கு வந்துள்ளன. சில சான்றுகளைக் கூறலாம். எ.கா: உபாத்தியாயர்-ஆசிரியர், வித்தியாலயம்- பள்ளிக்கூடம், அப்பியாசம்-பயிற்சி, சம்சாரம்- மனைவி, காரியத்தரசி- செயலர். தமிழ்ப்பள்ளிகளிலும் பேரவை, மாணவர்த் தலைவர், ஐயை, அறிவியல், கணிதம் போன்ற பல சொற்கள் தூயத் தமிழாக உள்ளன. பல பாடங்களில் நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, சைக்கிள்-மிதிவண்டி, பஸ்-பேருந்து, ரயில்- தொடர்வண்டி, cablecar-தொங்கூர்தி, motorcar-மகிழுந்து, aeroplane-வானூர்தி. இன்றைய செய்தி மற்றும் ஏடுகள் பலவற்றில் படிப்படியாக நல்ல தமிழ்ச்சொற்களை பயன்படுத்தி வருகிறார்கள். அண்மையில் சுழியம், குறுஞ்செய்தி, குறுந்தகவல் முதலான சொற்களை நாம் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம். ‘மின்னல்’ வானொலி சுழியத்தை நடைமுறைப்படுத்தி தலைமை மாறியதும் கைவிட்டுவிட்டது. மீண்டும் நல்ல தலைமை வராமலா போகும்? நல்லதை வரலாறு என்றுமே போற்றும் தீயதை தூற்றும், பழிக்கும். மேற்கண்ட வரலாற்று ஓட்டத்தைப் பார்த்தால் நாம் படிப்படியாக சாதித்து வருகின்றோம் என்பதைத் தான் காட்டும்.
கேள்வி: தாங்களும் பாடல்கள் புனைந்துள்ளதை அறிவேன். உங்கள் இலக்கிய தாகம் பற்றிக் கூறுங்கள்?
பதில்: பாத்துறையில் நானும் ஈடுபடுகின்றவன்தான். எனக்கு பாவலர் ஐயா.திருமாலனாரும், பாவலரேறு பெருஞ்சித்திரனாரும், பாவேந்தரும், பாரதியாரும் வகோட்டிகள். என்னுடைய பள்ளி காலத்திலேயே ஆர்வமிகுதியால் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். என்னுடைய கவிதைகளில் என்னுடைய கொள்கை கோட்பாடுகள் மிகுந்திருக்கும். எந்த இலக்கியப் படைப்பாயினும் இந்தக் குமுகாயத்திற்கு உருப்படியான தரமான செய்திகளைத் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மீட்டெடுக்க வேண்டும். அப்படி அல்லாமல் வருபவை குப்பைகள்தான். நாம் அதிகமாக ஆய்வியல் நோக்கில் தருக்கக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளுமே எழுதி இருக்கின்றேன். சிறுகதைகள், புதினங்களுக்குள் நான் நுழைய வில்லை. இசைப்பாடல்கள் எழுதி இருக்கின்றேன். ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒட்டிய என்னுடைய பாடல்கள் இசையமைக்கப் பெற்று வெளிவந்துள்ளன. தொடர்ந்து எழுதிக் கொண்டுள்ளேன்.
கேள்வி: நமது மொழியில் ஏற்படும் மொழிக்கலப்பு வலிந்து திணிக்கப்படுகிறது என்கிறீர்களா?
பதில்: பெரும்பாலும் வலிந்துதான் தமிழில் பிறமொழிச் சொற்களைத் திணிக்கிறார்கள். தமிழைத் தமிழாக எழுதினால் திணிப்பு ஆகாது. பிறமொழி கலந்தால்தான் திணிப்பு. அப்பா அம்மா இருக்கும்போது எதற்கு மம்மி டாடி. பாப்பா இருக்கும் போது எதற்கு பேபி. மாமா அத்தை இருக்கும்போது எதற்கு அங்கில் அண்டி. தமிழை தமிழாகப் பேசு; ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசு; இரண்டையும் போட்டுக் கலந்து சீரழிக்காதே! என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
கேள்வி: இன்றைய தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: குமுகாயத்திற்குத் தரமான செய்திகளை வழங்கி தமிழையும் வாழ வைத்தால் தமிழ் இலக்கியம் சிறப்பு பெறும். இன்றைய இலக்கிய அன்பர்களில் நல்ல தமிழில் எழுதுவாரும் உண்டு. அவர்களைத் தமிழ் ஊடகங்கள் மதித்து போற்ற வேண்டும். இல்லையென்றால் சக்கைகள்தான் பேரும் புகழும் பெற்று ஆட்டமாக ஆடும். எனவே, இன்னும் அறம் சார்ந்த இலக்கிய ஆக்கங்களாக இன்றைய இலக்கிய படைப்புகள் மிளிரவில்லை. பாவேந்தரைப் போல்,பாரதியாரைப்போல், நிலைநிற்கும் ஆக்கங்களைப் படைப்பார் மிகவும் குறைவு. எவ்வகை படைப்பாயினும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லையெனில் அதை நல்ல படைப்பாக நான் ஏற்க மாட்டேன். நன்மைகள் பயக்குமெனில் ஏற்பதில் தவறில்லை.
கேள்வி: தமிழை நமக்குள்ளே போற்றுவது இருக்க உலக அரங்கில் அதன் நிலைப்பாடு அத்தனை மேன்மையாக இல்லையே…
பதில்: உலக அரங்கில் மேன்மையுடன் விளங்கிய மொழிதான் தமிழ். அதனை மேலும் நிலைநிறுத்தும் வகையில் தமிழனுக்கு ஒரு நாடு இல்லையே! தமிழை ஆட்சி மொயோகக் கொண்டுள்ள ஒரு நாடு உருவாகும் போது இன்று கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள மேன்மைகள் தெளிவாகப் புலப்படும். தமிழர்கள்தான் இதற்கு முயல வேண்டும்.
கேள்வி: நமது மொழி காலத்திற்கேற்ற மாற்றங்களைக் கண்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? வரவேற்கிறீர்களா?
பதில்: மாற்றம் தமிழுக்கு ஊறு செய்வதாக இருக்கக் கூடாது. அவ்வாறு நிகழ்த்தப்படும் எந்த மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோ ம். மரபு திரிந்தால் எல்லாமே கெட்டுச்சீரழிந்து விடும்.மரபைப் போற்றும் மாற்றமே ஏற்புடையது. எனவே உரைநடை, கவிதை, உரை வீச்சு என்பனவெல்லாம் பல்வேறு வடிவங்கள். ஆனால் ஒன்றை அழித்து இன்னொன்று உருவாகக்கூடாது. ஏனெனில் தமிழில் இருக்கும் மிகப்பெரிய சொத்து, கருவூலம் பாநடை அல்லது பாவியல். அதை மறப்பது இழப்பாகுமே ஒழிய மாற்றமாகாது.
கேள்வி: காலத்திற்கேற்ற மாற்றங்கள் மனித நாகரீகத்தில் நிகழத்தானே செய்கின்றன…
பதி: மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால், அடிப்படையில் உலக மக்கள் அனைவருக்கும் நாகரீகம் என்பது ஒன்றுதானே. நிர்வாணமாகத் திரிந்த மனிதன் உடைகள் அணிந்தும் காடுகளில் வாழ்ந்தவன் இருப்பிடங்கள் அமைத்தும் தனியனாக வாழ்ந்தவன் குமுகாயத்தை அமைத்தும் வாழத் தொடங்கினான். இதுவே, மனிதனின் பொத்தம் பொதுவான நாகரீக மாற்றம். இது என்றும் மாறாது. இதில் இன்று நாகரீகம் என்ற பெயரில் நடைபெறும் அவலங்கள் அனைத்தும் அநாகரிகமானவை.
கேள்வி: தமிழைப் பேசாதவன் தமிழன் இல்லையா?
பதில் : நாம் அவனைத் தமிழனா இல்லையா என்று கூறுவது இருக்கட்டும்; அவன் முதலில் தன்னைத் தமிழன் என்று கருதுகிறானா என்று பாருங்கள். முந்தைய தலைமுறை தமிழை மறந்து பின்னர் உணர்ந்து பயில நினைக்கும்போது நாம் துணை செய்ய வேண்டும். அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. இதற்குக் காரணமே தமிழை பேசாமல் விட்டதுதானே. பேசாமல் விட்டால் தமிழன் தமிழனாக வாழாமல் மாற்றானாகப் போய்விடுவான் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடமல்லவா? எந்த உறவில் உணர்வில் நாம் தமிழை மறந்தவனிடம் தொடர்பு கொள்வது. தமிழை மறந்தவன் தமிழனா இல்லையா என்பதை விட அவன் தமிழனாக இல்லாமல் போய் விடுவான் என்ற அச்சம் நமக்கு உள்ளது.
கேள்வி : மலேசியத் தமிழர்களின் கலாசாரம் , பண்பாடு, சடங்குகளில் (பண்டிகை, கோயில், விழாக்கள்) மட்டுமே இருக்கிறது என்றால் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில் : தமிழர்கள் தங்கள் பண்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு இவை வாய்ப்பாக அமைகின்றன. ஆனால் சீரழிவு என்பது எதையும் விட்டு வைக்கவில்லை. நமது சடங்குகள் விழாக்களில் ஆரியத்தாக்கம் நீண்ட காலத்திற்கு முன்பதாகவே ஏற்பட்டுவிட்டது. இன்று மனம்போன போக்கில் ஒரு ஒழுங்கு முறை இல்லாமல் பண்பாட்டு நடவடிக்கைகளை ஆளுக்கொரு முறையில் மேற்கொண்டு வருகின்றார்கள். இன்னும் கொஞ்சங்காலத்தில் மண்டையில் வண்ணம் பூசியவனும்,கரண்டி எடுத்தவனும் பல பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு வகோட்டிகளாக வந்துவிடுவார்கள் எனவே தமிழ்ப்பண்பாட்டினை கல்விக்கழகங்கள், ஊடகங்கள், குடும்பங்கள் வெளிப்படுத்த வேண்டும். பாதுகாக்க வேண்டும். இவை பாதுகாத்தால் மற்றவை சரியாகி விடும்.
நேர்காணல்/புகைப்படம் : ம.நவீன்
நன்றி வல்லினம் : 2007
Excellent interview Mr Naveen.We need people like Thirumavalavan