“என்னை மீறி எழுதுவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை” – ரெ. கார்த்திகேசு

ரெ.கார்த்திகேசு

முனைவர் ரெ.கார்த்திகேசு மலேசியாவின் வட மாநிலமான கெடாவில் பீடோங் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை திராவிடர் இயக்கத்தில் தீவிரப் பற்றுடையவர்; எனினும் பக்தி இலக்கியங்களும் நவீன இலக்கியமும் படிப்பவராக இருந்தார். சைனீஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தொடக்கக்கல்வி கற்ற ரெ.கார்த்திகேசு ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப் பள்ளியிலும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தமது கல்வியைத்தொடர்ந்தார்.பின்னர் ஆங்கில இடைநிலைப் பள்ளியில் கல்வியை முடித்து, மலாயாப் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு இந்திய இயலில் பி.ஏ.ஆனர்ஸ்; நியூ யார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையில் M.Sc., இங்கிலாந்து லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் Ph.D என தனது கல்வியைத் தொடர்ந்தார்.

மலேசிய வானொலியில் 1961 முதல் 1976 வரை அறிவிப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணிபுரிந்த இவர் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் 1967 முதல் 1998 வரை விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், ஒலிபரப்புத் துறை தலைவர், தொடர்புத் துறை துணை டீன், பேராசிரியர், செனட் உறுப்பினர் என பல பொருப்புகளை ஏற்று பணிபுரிந்துள்ளார்.

1996ஆம் ஆண்டு பேரரசரிடமிருந்து KMN விருது பெற்ற முனைவர் ரெ.கார்த்திகேசு இதுவரையில் 5 நாவல்களையும், 4 சிறுகதை தொகுப்புகளையும் , 1 கட்டுரை நூலையும் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். இவரது சிறுகதைகள் பல மலேசியா மட்டுமல்லாது தமிழக இதழ்களிலும் பரிசுகளைத் தட்டிச்சென்றுள்ளன.

பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வந்திருந்த அவரை ஒரு காலை வேளையில் நானும் சிவமும் அருகிலிருந்த பூங்கா ஒன்றுக்கு அழைத்துச்சென்றோம். நடந்தபடியும் அமர்ந்தபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

கேள்வி: உங்களை எழுதத் தூண்டிய சக்தி எது?

பதில்: எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் வீட்டில் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன. என் அம்மா ஜெகன் மோகினியின் வாசகி. அப்பா தொடக்க காலத்தில் பக்தி இலக்கியம் படித்தாலும் பிற்காலத்தில் திராவிடர் கழக இலக்கியங்களையே விரும்பினார். குத்துசியைப் படித்துச் சிரிந்து சீர்திருத்த உணர்வுகள் பெற்றோம். நான் கதை படிக்க ஆரம்பித்தது தமிழ்வாணனிலிருந்து. பின்னர் கல்கி. பின்னர் மு.வ,அகிலன், நா.பா,மாயதேவன், மா.இராமையா இவர்கள் போல் பெயர் பெற ஆசை பிறந்தது. கப்பாளா பாத்தாசில் ந.வரதராசன் என்னும் எழுத்தாளர் எனக்கு நண்பராகி என் எழுத்துக்குத் தூண்டுதலாக இருந்தார். எல்லாரும் தூண்டு சக்திகள்தான்.

கேள்வி: மலேசியத் தமிழ் இலக்கியத்தின் தற்காலச் சூழல் என்ன?

பதில்: மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு இப்போது ஆதரவாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். தமிழ் இலக்கிய முயற்சிகளை ஆதரிப்பதை ஒரு நல்ல காரியமாகக் கருதி அதற்கு நிதி ஆதரவு தரும் நெஞ்சங்கள் அதிகம் உள்ளனர். தமிழ்நாடு கூடத் தராத பெரும் பரிசுகளை நாம் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கிறோம். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் படைப்பாளர்களை ஆதரிப்பதிலும் கௌரவிப்பதிலும் பெரும் முனைப்புடன் இருக்கிறது. ஆனால் இந்தச் சூழ்நிலைக்கிடையில் படைப்புத் திறன் கொஞ்சம் முடங்கித்தான் கிடக்கிறது.

கேள்வி: ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதன் வளர்ச்சி நிலை மாறுபடுவதாக உணர்கிறீர்களா?

பதில்: மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு கேக்டஸ் செடி போலத்தான் வளர்கிறது. வளர்ச்சி மிக மெதுவாக, கண்ணுக்கு எளிதில் புலப்படாத வகையில் இருக்கிறது. ஆனால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை திரும்பிப் பார்த்தால் கொஞ்சம் வளர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

கேள்வி: மலேசிய இலக்கியம் தனது சுயத் தன்மையை விட்டு தமிழக இலக்கியத்தை அதிகம் பின்பற்றுவதாக கூறப்படும் விமர்சனம் குறித்து.

பதில்: மலேசியத் தமிழ் இலக்கியம் தமிழக இலக்கிய அடிவேரிலிருந்து வளர்ந்ததுதான். அதன் DNA தான் நம் இலக்கியத்துக்கு இருக்கிறது. ஆகவே தாயைப் போலப் பிள்ளைதான். அதன் மலேசியத் தன்மை அதன் உள்ளடக்கத்தில் இருக்கிறது. நாம் வாழும் மலேசிய வாழ்க்கை பற்றியே நாம் பெரிதும் எழுதுவதால் தமிழக இலக்கிய உள்ளடக்கத்திலிருந்து அது மாறுபட்டிருக்கிறது. அதுதான் அதன் சுயத்தன்மை. அதை நாம் இன்னும் விட்டுக் கொடுத்துவிடவில்லை.

கேள்வி: ஈழத்து எழுத்தாளர்களுக்கு தனி எழுத்து நடை உள்ளதே. மா.ராமையா, மா.செ.மாயதேவன் போன்றோர் எந்த தமிழ் நாட்டு எழுத்து நடையையும் பின்பற்றவில்லை என கருதுகிறேன். அப்படி இருக்க ஏன் நாம் இன்று அந்த எழுத்து அடையாளங்களைத் தொலைத்து இருக்கிறோம்?

பதில்: நமக்கென ஒரு தனி எழுத்து நடை என்றுமே இருந்ததாக நான் நினைக்கவில்லை. நம்முடைய நடை நாம் வரித்துக் கொண்ட தமிழ்நாட்டு எழுத்து நடைதான். அதுதான் நமது DNA-யைத் தீர்மானித்துள்ளது என்பதை முன்பே சொல்லியுள்ளேன். ஆனால் நமது தோட்டப் புறங்களில் ஒரு விதமான நாட்டார் மொழி வழங்குகிறது (இப்போது மறைந்தும் வருகிறது). அதை உரையாடல்களுக்குப் பல எழுத்தாளர்கள் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

கேள்வி: மலாய் இலக்கியம் குறித்தான உங்கள் பார்வை என்ன?

பதில்: மலாய்ப் புத்திலக்கியத்தை நான் கொஞ்சமாகவும் அவ்வப்போதும்தான் படிக்கிறேன். அதிலிருந்து எனக்கு ஏற்படும் தோற்றம் அது மிகவும் சுறுசுறுப்பாகவும் உலக நவீன இலக்கிய வளர்ச்சிகளை உள்வாங்கிக்கொண்டும் வளர்ந்து வருகிறது என்பதுதான். மலாய் எழுத்தாளர்கள் இந்தோனேசியாவை தங்கள் இலக்கிய மெக்காவாகப் பார்க்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க, ஆங்கில இலக்கியத் தாக்கங்களும் உண்டு. மலாய் எழுத்தாளர்கள் பலர் இலக்கியத்தைப் பல்கலைக் கழகப் பாடமாக எடுத்துப் படித்து உயர்கல்வி கற்றவர்கள். ஆகவே இலக்கியப் படைப்புக் கொள்கைகளை அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். அவர்களின் இலக்கிய வளர்ப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

கேள்வி: மலாய் இலக்கியம் வளர மலேசிய அரசாங்கம் அமல் படுத்தும் திட்டங்கள் பற்றி விரிவாக கூற முடியுமா?

பதில்: பல திட்டங்கள் உள்ளன. அரசாங்கம் நேரடியாகவும் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவும் பலவிதமான பரிசுகள் கொடுக்கின்றது. தேசிய எழுத்தாளர் என்ற அந்தஸ்து கொடுக்கிறார்கள். அவர்களுக்கு முதல் வகுப்பு ரயில் டிக்கெட், பொது மருத்துவமனையில் இலவச முதல் வகுப்பு மருத்துவம், வெளிநாடுகள் செல்ல உதவி நிதி, பதிப்பிக்க உதவி நிதி என்று கொடுக்கிறார்கள். நாம் (தமிழ் எழுத்தாளர்கள்) வெளியிலிருந்து பார்த்து வாயூறுவதோடு சரி.

கேள்வி: மலாய் இலக்கியத்திற்கு கிடைக்கும் இத்தகைய சலுகைகள் நமது படைப்புக்கு கிடைக்க வாய்ப்பு உண்டா? அதற்காக எழுத்து சார்ந்த இயக்கங்கள் ஏதாவது முயன்றுள்ளனவா?

பதில்: அரசாங்கத்திடமிருந்து அந்த மாதிரியான வாய்ப்புக்கள் என்றும் கிடைக்கா. அவர்களை நெருக்கினால் “நீங்கள் எல்லாம் தேசிய மொயோன மலாயில் எழுதுங்கள்; உங்களுக்கு எல்லாச் சலுகைகளும் கிடைக்கும்” என்று சொல்கிறார்கள். அந்த வாதத்தை எதிர்ப்பது கடினம். ஏற்கனவே பல எழுத்தாளர்கள் மலாயில் எழுதி அவர்களோடு இணைந்திருக்கிறார்கள். தங்களை மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். தமிழை நேசிக்கும் நாம், நம் எழுத்தினை நம் முயற்சியில்தான் வளர்க்க வேண்டும். நம் வணிகப் பெருமான்களும் பிரமுகர்களும்தான் நமக்குரிய பரிசுகளையும் வாய்ப்புக்களையும் வழங்க வேண்டும். ஏற்கெனவே இப்படி நம்மை ஆதரித்து வரும் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும்.

கேள்வி: ஒரு நல்ல இலக்கியத்தின் அடையாளமாக எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: இப்போது இலக்கியத்தைப் பிரசுரம் செய்வது எளிதாகிவிட்டது. காசுக்கு மூன்று புத்தகம் போட பதிப்பாளர்கள் முன் வருகிறார்கள். ஆகவே பிரசுரம் ஒன்றே இப்போது நல்ல இலக்கியத்தின் அடையாளம் அல்ல. பிரசுரத்துக்குப் பின் அது வாசகரிடத்தும் (விற்பனையில்) பத்திரிக்கைகளிடத்தும் (விமர்சனத்தில்) பெறுகின்ற வரவேற்பு பெரிதாக இருந்தால் அது நல்ல இலக்கியம் என்று சொல்லலாம். ஆனால் இந்த இரண்டு விஷயத்திலும் மலேசிய இலக்கிய உலகம் மிகவும் அசிரத்தையாக உள்ளது. ஆகவே எந்த அளவுகோலை நாம் வைத்துக் கொள்ள முடியும் என எனுக்கும் விளங்கவில்லை.

கேள்வி: ஒரு படைப்புக்கு கருத்துகள்…. அறிவுரைகள் அவசியமா?

பதில்: படைப்பு வாசகனுக்கு அறிவுரை கூற வேண்டுமா என்றால் தேவையில்லை. படைப்பு எந்த அறிவுரையையும் வாய்விட்டுக் கூறக்கூடாது. ஆனால் அது ஒரு கருத்தை மறைவாகத் தாங்கியிருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால் அது இல்லாவிட்டாலும் ஒன்றும் பழுதில்லை. வாசகனின் உள்ளத்துக்குள் அது சிறிய சலனங்களை ஏற்படுத்தினாலுமே போதும். படைப்பில் அதன் சொல்லும் முறை முக்கியம். சொல்லப்படும் பொருள் முக்கியமல்ல.

கேள்வி: மலேசிய இதழியல் தன்மை குறித்து…

பதில்: பிரபலமான இதழ்கள் பல்சுவைக் களஞ்சியங்களாக இருக்கின்றன. இந்தக் காப்பிரைட் காலத்தில் தமிழ்நாட்டு இதழ்களிலிருந்து இத்தனை தைரியமாகத் திருடித் தங்கள் இதழ்களில் போட்டுக் கொள்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நவீன இலக்கிய இதழ்கள் என இப்போது ஒன்றுமில்லை.

கேள்வி: நாம் இன்னும் யதார்த்த எழுத்தை விட்டு நவீனத்துவத்திற்கு நகரவே இல்லை எனும் விமர்சனம் குறித்து.

பதில்: உண்மைதான். ஆனால் இந்த வகை நிர்ணயங்களுக்குள் நம்மை சிறைப்படுத்திக் கொள்வது வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். நான் மலேசியாவில் படிக்கின்ற கதைகள் அத்தனையும் யதார்த்தமாகத்தான் இருக்கின்றன. கதை சொல்லும் விதம் பழையதாக, தட்டையாக, போலியாக இருக்கிறது. (விதிவிலக்குகள் பல உண்டு; இங்கு பெரும்பான்மையையே பேசுகிறேன்) ஆகவே கதை சொல்லும் முறையை மாற்றினால்தான் நாம் நகர ஆரம்பிப்போம்.

கேள்வி: மலேசிய கவிதை இலக்கியம் குறித்து உங்கள் பார்வை.

பதில்: புதுக் கவிதைகளில் சில நேரங்களில் மனதை வருடுவதாகவும் கிள்ளுவதாகவும் தாக்குவதுமான கவிதைகள் வருகின்றன. மரபுக் கவிதைகள் மங்கிக் கிடக்கின்றன. இரண்டுக்குமிடையே இன்னும் கடுமையான போட்டிகள் இருப்பதனால் மட்டுமே கவிதை உலகில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கிறது. ஆனால் மொத்தமான இலக்கியம் மங்கிய சூழலுக்குள்தான் கவிதைகளும் இருக்கின்றன.

கேள்வி: இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியம் எதை நோக்கி நகர்வதாக உணர்கிறீர்கள்?

பதில்: முதலில் சொன்ன ஒப்புமைதான். கேக்டஸ் செடியின் வேகத்தில்தான் நகருகிறது. இயற்கையான ஈர்ப்புச் சக்தியின் வழி வளர்வதைத் தவிர்த்து அதற்கு சுயமான இலட்சியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: இன்றைய இலக்கியத்திற்கு இணையத்தின் பயன்பாடு பற்றி கூறுங்கள்.

பதில்: அதிகம் மிக அபாரம். தமிழ் அச்சு ஊடகத்தில் தங்கள் தலையைக் காட்ட விருப்பமில்லாத ஏராளமான படைப்பாளர்கள் இணையத்தைத் தங்கள் ஊடகமாக வரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறிவு பூர்வமாக எதனையும் சிந்திக்கிறார்கள். சொல்கிறார்கள். இலக்கிய / சமூக மரபின் தளை எதுவும் இவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. மரபைப் பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதனையும் அறிவு பூர்வமாக விவாதிக்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சமவிருப்பமுள்ளவர்கள் குழுக்களாகச் சேர்ந்து வலைப்பூக்கள் ஆரம்பிக்கிறார்கள். கருத்துப் பரிமாறிக் கொண்டு விவாதிக்கிறார்கள். ஏராளமான அறிவியல் கருத்துக்களும் விவாதிக்கப்படுகின்றன. புதிய புதிய சொல்லாக்கங்களும் நடைபெறுகின்றன. நான் பலவற்றைப் படித்துப் பயன் பெறுகிறேன். அச்சு ஊடகங்களை விட இணைய ஊடகமே எனக்கு உற்சாகமும் இலக்கியத்தின் மேல் புதிய விருப்பத்தையும் அளிக்கிறது.

கேள்வி: பரிசுகள் நல்ல படைப்புகள் உருவாக காரணமாக இருக்கும் என நம்புகிறீர்கள்?

பதில்: இந்த நாட்டில் வழக்கமாக எழுத்தாளர்களுக்கு எந்த ஊதியமும் தரப்படுவதில்லை. இது நான் உட்பட பல நல்ல எழுத்தாளர்களை எரிச்சல் படவைக்கும் ஒரு நிலைமை. ஆதி குமணன் மறைவதற்குச் சில காலம் முன்பு அவர் பத்திரிகை (அப்போதைய மலேசிய நண்பன்) எல்லா எழுத்தாளர்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அவர் மறைந்த பின் இப்போது அவரின் வாரிசுகள் என போட்டி போட்டுக் கொள்ளும் எந்தப் பத்திரிக்கையும் அந்தக் கொள்கையைப் பின் பற்றுவதில்லை. இதனால் பல நல்ல எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை. அப்படிப்பட்ட பலர் பரிசுகளை ஒரு வித ஊதியமாகக் கருதுவதாகத் தெரிகிறது. ஆகவே பரிசுகள் அறிவிக்கப்படும்போது அவர்கள் எழுதுகிறார்கள். தரமான படைப்புகள் கிடைக்கின்றன. இப்படி ஒரு மறைமுகமான பொருளில்தான் பரிசுகள் நல்ல படைப்புகள் உருவாகக் காரணமாகின்றன.

கேள்வி: எழுத்தை படைப்பது மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளனுக்கு இந்த சமூகத்தின் பால் வேறென்ன கடப்பாடு இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

பதில்: எழுத்தாளர்களாக இருக்க வேண்டியது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அவர்கள் தங்களுக்கு உகந்த பல்வேறு சமூக மொழி இலக்கியத் தொண்டுகளில் ஈடுபடுவது அவர்கள் விருப்பத்தையும் ஈடுபாட்டையும் சார்ந்தது. ஆனால் இந்தத் தொண்டுகள் எழுத்தாளர்களுக்கென்று சிறப்பாக விதிக்கப்பட்டவையல்ல. ஒன்றும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அவர்கள் தமிழில் எழுதி வருவதே ஒரு தொண்டுதான்.

கேள்வி: எழுத்தைத் தவிர வேறென்ன கலைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டு?

பதில்: எனக்கு கர்நாடக இசை ரொம்பப் பிடிக்கும். ஆண்டுதோறும் சென்னை இசைவிழாவுக்காக நான் யாத்திரைகள் மேற்கொள்வதுண்டு. நிறைய ஒலிப்பேழைகளையும் குறுந்தட்டுகளையும் சேர்த்து வைத்து அவற்றை நாள்தோறும் போட்டுக் கேட்டு அவற்றையும் என் நேரத்தையும் தேய்த்து வருகிறேன். குழந்தை வளர்ப்புக் கலையும் குடும்பக் கலையும் எனக்குப் பிடிக்கும். நல்ல குடும்பத்தை நானும் துணைவியும் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். இப்போது பேரக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறோம். (அவர்களும் எங்கள் ஆன்மாக்களைப் பராமரிக்கிறார்கள்). தோட்டக் கலையில் எனக்கு மிகுந்த ஆர்வம். ஆனால் இப்போது முதுகு வளைந்து வேலை செய்ய முடிவதில்லை.

கேள்வி: கவிதைகள் எழுத முயன்றதுண்டா?

பதில்: வேடிக்கையாகச் சில முயற்சிகள் செய்ததுண்டு. ஆனால் இப்போது அதில் ஈடுபடுவதில்லை. நிறையக் கவிதைகள் படிக்கிறேன். வைரமுத்து வகை, மனுஷ்யபுத்திரன் வகை இரண்டையும் வாசிக்கிறேன்.

கேள்வி: சிறுகதை மற்றும் இதர உங்களின் படைப்புகள் மனநிறைவைத் தந்துள்ளனவா? அல்லது குறிப்பிட்ட கதைகளின் வழி, நீங்கள் உங்கள் முழுமையை வெளிப்படுத்தியதாக உணர்கிறீர்களா?

பதில்: பல கதைகள் எனக்கு மனநிறைவைத் தந்துள்ளன. ஆனால் இது பிள்ளையைக் கண்டு தாய் பெறுவது போன்ற இயற்கையான, எளிமையான மகிழ்ச்சிதான். எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்த மகிழ்ச்சி இருப்பது இயற்கை. ஆனால் விமர்சன ரீதியாக மற்றவர்கள் சில கதைகளைப் பாராட்டும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி இன்னும் அதிகம். ஆனால் மிக அபூர்வமாகவே இப்படிப்பட்ட உள்ளார்ந்த விமர்சனப் பாராட்டு எனக்குக் கிடைத்திருக்கிறது. என் கதைகள் வழி என்னை நான் வெளிப்படுத்தியது நிகழ்ந்திருக்கிறது. அதாவது என்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன், மற்றவர்களைப் பற்றியும் உலகைப் பற்றியும் நான் என்ன நினைக்கிறேன் என்ற கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். முழுமையாக என்று சொல்ல முடியாது. முழுமை இப்படி அளக்கக் கூடியதல்ல.

கேள்வி: உங்கள் கதைகளில் உங்களுக்கு பிடித்தவையும், நமது நாட்டில் இதர எழுத்தாளர்களின் கதைகளில் உங்களுக்கு பிடித்தவையாக அமைந்திருப்பவை குறித்து சொல்லுங்கள்?

பதில்: என் கதைகளில் ‘ஒரு சுமாரான கணவன்’ எனக்குப் பிடித்தது. ஆனால் இந்தக் கதை வெளிவந்தபோது அந்த இதழில் நான் வாசகர்கள் நேரத்தை வீணடிப்பதாக ஒரு வாசகர் ஒரு கட்டுரையே எழுதியிருந்தார். ‘மகேஸ்வரியின் பிள்ளை’, `பாக்கியம் பிறந்திருக்கிறாள்’ ஆகியவையும் எனக்குப் பிடித்தவை. மற்றவர்கள் கதைகளை இப்போது நினைவு கூர்ந்து சொல்ல முடியவில்லை. ஆனால் டாக்டர் சண்முக சிவா, சீ.முத்துசாமி ஆகியோரின் பல கதைகளை நான் ரசித்துப் படித்ததுண்டு.

கேள்வி: நமது நாட்டில் தமிழர்கள் வாழ்வைச் சொல்லும்படியான படைப்புகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? அதில் உங்களின் பங்கு குறித்து விவரியுங்கள்.

பதில்: நமது தோட்டப்புற வாழ்வை பல எழுத்தாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இளவழகுவின் ‘லட்சியப் பயணம்’ எம்.குமாரனின் ‘செம்மண்ணும் நீலமலர்களும்’ ஆகியவை classics என்று வருணிக்கத் தக்க அளவில் அமைந்த நாவல்கள். நமது மூவின வாழ்க்கையை மா.இராமையா, ஆர்.சண்முகம், சி.வடிவேலு ஆகியோர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஜப்பானியர்கால வாழ்வு பற்றி சா.ஆ.அன்பானந்தன் எழுதியிருக்கிறார். அ.ரெங்கசாமியின் நாவலான ‘நினைவுச் சின்னம்’, மரண ரயில்வே போட நம் தமிழர்கள் சென்று பட்ட அவலத்தை வருணிக்கிறது. அவருடைய அண்மைய நாவலான ‘லங்காட் நதிக்கரை’ அவசரகாலத்தின் போது நம்மவரின் அவலத்தைப் பதிவு செய்துள்ளது. இன்னும் பல படைப்புக்களும் இருக்கின்றன. நான் சமகால வாழ்வைக் கவனித்து அது பற்றி எழுதுபவன். சரித்திரத்தைப் பதிவு செய்வதில் எனக்கு ஆர்வமில்லை.

கேள்வி: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தற்போது உதவித் தலைவராகவும், அண்மைய காலமாக அதன் செயற்குழுவிலும் இடம்பெற்று வருகிறீர்கள்.

-அவ்வமைப்பின் செயற்பாடுகளில் பெரிய தேக்கம் ஏற்பட்டிருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?

-தேக்கத்தை நிவர்த்தி செய்ய மூத்த முன்னனி எழுத்தாளர் என்ற வகையில் முயற்சிகளை ஏதும் மேற்கொண்டீர்களா?

-அதில் சமரசம் ஏதும் செய்து கொண்டீர்களா?

பதில்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயற்பாடுகளில் தேக்கம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது என்றும் போல தனக்கென நிர்ணயித்துக் கொண்ட சில நிகழ்வுகளை நடத்தி வருகிறது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தற்போதைய தலைவர் இராஜேந்திரன் மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு பெருமையும் கௌரவமும் சேர்க்க வேண்டும் என்பதில் துடிப்பாக இருக்கிறார். அந்த நோக்கம் உயர்வான நோக்கமாக இருப்பதால் அவருக்குப் பக்கபலமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். தமிழ் எழுத்தாளர் சங்கம் சில நிகழ்ச்சிகளை சடங்கு பூர்வமாக நடத்த விருப்பம் கொண்டுள்ளது. மானாவாரியாக மாலை, பொன்னாடை போரத்துவதில் மிக ஆர்வமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் குறைத்துவிட்டு ஆக்ககரமான இலக்கிய முயற்சிகளில் அது ஈடுபட வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கெல்லாம் ஆசைப்படுகிறார்கள் என்று தெரிவதால் நானும் இருந்து தலையாட்டிப் போகிறேன். அந்த அளவுக்கு நான் சமரசம் செய்து கொண்டது உண்மைதான்.

கேள்வி: இன்றைய இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் முந்தைய தலைமுறை படைப்புகளுக்கும் மாற்றம் பாய்ச்சல் தெரிகிறதா?

பதில்: இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரின் படைப்புக்களில் ஒரு புதுமை தெரிகிறது. ஆனால் அவர்கள் எழுத்து வடிவம் எப்படிப்பட்டது என்பதை அடையாளப்படுத்தும் அளவுக்கு அவர்கள் தொடர்ந்து எழுதுவது இல்லை. ஏதோ இந்த படைப்புலகில் தொட்டும் தொடாமலும்தான் அவர்கள் இருந்து வருகிறார்கள். இளைய தலைமுறை எழுத்துக்கள் தொடர்ந்து வந்தால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கண்டு கொள்ள முடியும். ஆனால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு திறமுடைய இளையவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் படுகிறது.

கேள்வி: மலேசியாவில் தீவிர இலக்கியம் வளர வாய்ப்புண்டா?

பதில்: ம்…. வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே கொஞ்சம் தீவிர இலக்கியம் இந்நாட்டில் இருக்கிறது. ஆனால் அதை எழுதவும் அது பற்றிப் பேசவும் ஆட்கள்தான் இல்லை. நமது பிரச்சினை இந்தத் துறையில் போதிய மனிதவளம் இல்லை என்பதுதான். இதை ஒரு இயக்கமாக வளர்த்தெடுக்க நமக்கு வேண்டியது ஒரு சிறுபத்திரிகை என்னும் கருவியும் அதையொட்டிய ஒரு குழுமமும்.

கேள்வி: மலேசிய இலக்கியத்தில்’காதல்’ இதழ் வருகை மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூற முடியுமா?

பதில்: காதல் வந்தது ஒரு மகிழ்ச்சியான விளைவு. அதன் தாக்கம் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. அது பரவலாக விநியோகிக்கப்பட்டதாகவும் அதன் மையமாக ஒரு குழு உண்டாகப்பட்டதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் தூரத்தில் இருந்து பார்த்ததைத்தான் சொல்லுகிறேன்.

கேள்வி: சிறுகதையாளர்கள் என்று குறிப்பிடும் போது முதலில் நீங்கள் டாக்டர் சொக்கலிங்கம், சு.கமலா, ஆர்.சண்முகம் போன்றவர்களை முன்நிறுத்தி விட்டு பின்னர் சீ.முவையும் டாக்டர். சண்முக சிவாவையும் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ஏன்?

பதில்: யார் இந்த பட்டியல் போடுகிறார்கள் என்பதைப் பொறுத்துப் பட்டியல்கள் மாறுபடுகின்றன. என் பட்டியல்கள் நான் எதைப் பற்றி எழுதுகிறேன் என்ற context-ஐப் பொறுத்தவை. இந்த நாட்டில் தமிழ்ப் படைப்பிலக்கிய முன்னோடிகள் என்று பட்டியலிட்டால் அதில் மா.செ.மாயதேவனும் மா.இராமையாவும் முன்னால் இருப்பார்கள். அதிகமாக எழுதி வளம் சேர்த்தவர்கள் வரிசையில் டாக்டர் சொக்கலிங்கம், ஆர்.சண்முகம் இருப்பார்கள். நம் நாட்டு இலக்கியத்தை உத்திகளால் செழுமைப்படுத்தியவர்கள் பட்டியலில் சண்முகசிவாவும் சீ.முத்துசாமியும். இருப்பார்கள். பட்டியல்கள் எப்போதும் சர்ச்சைக்குரியன. நான் பட்டியல் போடும்போதெல்லாம் என்னை யாராவது அழைத்து ‘என்னை ஏன் விட்டு விட்டீர்கள்?” என்று கேட்கிறார்கள்.

கேள்வி: இந்நாட்டு விமர்சனங்களில் திருப்தி உண்டா? உங்கள் எழுத்துகள் இதுவரை முறையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளனவா?

பதில்: பொதுவாகவே விமர்சனங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றன. சில வேளைகளில் ஒரு விமர்சனம் வந்திருப்பதே பெரிதாக இருக்கிறது. பெரும்பாலான விமர்சனங்கள் என்னைப் பாராட்டியே அமைகின்றன. என் எழுத்தின் உள்ளார்ந்த அர்த்தங்களை விவரித்துச் சொல்லும் விமர்சனங்கள் அபூர்வம். மலாயாப் பல்கலைக் கழகத்தில் முனைவர் கிருஷ்ணன் மணியம் மட்டுமே என்னுடைய படைப்புக்கள் சிலவற்றைக் கூர்ந்து பார்த்து எழுதியிருக்கிறார். என்னைப் பாராட்டி வரும் விமர்சனங்கள் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. அவை எனக்கு ஊக்கமூட்டக் கூடியவை. ஆனால் அவை சிறந்த விமர்சனங்கள் என்று பொருளல்ல.

கேள்வி: எழுதும் பொழுது உங்களுக்கு ஏற்படும் தடைகள் பற்றி கூறுங்கள்?

பதில்: ஒன்றும் இல்லை. சோம்பலால் எழுதாமல் இருப்பது ஒன்றுதான். இப்போதெல்லாம் நான் எழுத உட்காரும் நேரத்தில் என் பேரப் பிள்ளைகள் வந்து என்னை விளையாட இழுக்கிறார்கள். எழுத்து விளையாட்டை விட அந்த விளையாட்டு எனக்குப் பிடித்தே இருக்கிறது.

கேள்வி: உங்கள் கதைகளைப் படிக்கையில் (இறுதியாய் வந்த சூதாட்டம் ஆடும் காலம்) உட்பட வாசகனை முன் வைத்து செல்வதகாதத் தோன்றுகிறது. உங்களை மீறிய எழுத்து உங்கள் படைப்புகளில் காண முடியவில்லையே?

பதில்: ஆம். நான் வாசகனை முன் வைத்துத்தான் எழுதுகிறேன். வாசக/வாசகியை என் கதையில் ஈடுபடுத்தத்தான் எழுதுகிறேன். அப்படி ஈடுபட்டு வாசிக்கும்போது அவர்கள் பாத்திரங்களில் வாழ்க்கையின் பகுதிகளை வெளியிலிருந்து பார்க்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் தங்கள் மன,குடும்ப,சுற்ற, நட்பு வட்டத்துக்கு வெளியே வாழ்க்கையின் விரிவுகளை அறிந்து கொள்ளுகிறார்கள். அதுவே அதன் பயன்.என்னை மீறி எழுதுவது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: மலேசிய கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இலக்கியம் வளர்க்கப்படுவதாகக் கருதுகிறீர்களா?

பதில்: இலக்கிய வாசனையே இல்லாத பல இளசுகளுக்கு இலக்கியத்தைக் கல்லூரிகளும் பல்கலைகழகங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இலக்கியம் இங்கு சிலரைப் பற்றிக் கொள்கிறது. அப்படிச் சிலர் இலக்கிய ரசிகர்களாகவும் அதிலும் சிலர் எழுத்தாளர்களாகவும் உருவாகிறார்கள். இப்படித்தான் அவை இலக்கியம் வளர்க்கின்றன. படைப்பிலக்கியம் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்க முடிந்த பாடம் அல்ல. ஆனால் விமர்சனம் அப்படிச் சொல்லிக் கொடுக்கக் கூடிய பாடம்தான்.

கேள்வி: சமூக மதிப்பு கருதி இந்நாட்டில் பல எழுத்தாளர்கள் பாதுகாப்பாக எழுதுகிறார்கள். இந்தப் பாதுகாப்பு நல்ல இலக்கியம் வளர உதவுமா?

பதில்: இதைப்பற்றி நான் ரொம்ப சிந்தித்திருக்கிறேன். பெரும்பாலான படைப்பிலக்கியவாதிகள் சமுதாய மதிப்பை முன்வைத்தே எழுதுகிறார்கள். சமுதாயத்தில் ஏற்கெனவே ஏற்றுப் பாராட்டப்படும் சனாதனமான விழுமியங்களை மேலும் வலியுறுத்துவதும் மேலும் பாராட்டுவதும் பலருக்கு சமுதாயப் பெருமைகளை உண்டாக்கித் தருகின்றன. ஆனால் சமுதாய விழுமியங்களை மாற்ற வேண்டும் என்னும் எதிர்ப்பு உணர்வு மிகச் சிலருக்கே உதிக்கிறது. இதை ரொம்ப வலியுறுத்தினால் தங்களுக்குள்ள சமுதாய மதிப்புப் போய்விடும் என்ற பயம் சூழ்ந்து கொள்ளுகிறது. ஆனால் இந்தச் சூழ்நிலையிலும் இலக்கியம் வளர முடியும். சமுதாயத்தில் கொண்டுவரவேண்டிய மாற்றங்களை தீவிரமாகவும் உரத்த குரலிலும் சொல்லாமல் நயமாகவும் மென்மையாகவும் சொல்ல வேண்டும். சமுதாயத்தை மாற்றி அமைப்பதென்பது ஒரு படைப்பிலக்கியவாதிக்கு கொள்கையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் நடக்கின்ற மாற்றத்தை அவன் ஒரு கண்ணாடியாக இருந்து பிரதிபலித்துக் காட்டலாம்.நானும் எனது கதைகளில் சில எல்லைக்கோடுகளை தீர்மானிக்கிறேன்.குறிப்பாக காதலன் காதலிக்கான கூடல் பகுதிகளில்.அதுபோன்ற ஒரு சூழலை மிக அற்புதமாக எழுத்துகளில் என்னால் வடிக்க முடியும் என்றாலும் சமூக மதிப்பு கருதி தவிர்த்து விடுகிறேன்.வெகு சிலரே இந்தக் கோடுகளைத் தாண்டி வருகின்றனர்.

கேள்வி: இலக்கியம் படைப்பதை ஒரு தமிழ்த் தொண்டாக இந்நாட்டு மக்கள் கருதுவது பற்றி.

பதில்:இலக்கியம் பெரிதும் ஒரு நளின கலைதான். எழுத்தாளர்கள் கலைஞர்கள். அதைத் தமிழ்த் தொண்டாகவும் கருதலாம். தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை மேலும் நமது படைப்புத் திறனால் பெருக்குகிறோம் என்ற அடிப்படியில் அது தமிழ்த் தொண்டுதான். ஆனால் இந்தத் ‘தமிழ்த் தொண்டு’ என்னும் சொல் உ.வே.சா போன்ற அறிஞர்களை நினைவுக்குக் கொண்டு வருவது போல் இருக்கிறது. அந்தப் பொருளில் இதனை எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

கேள்வி: தங்கள் எழுத்தைப்பற்றி தமிழக எழுத்தாளர்கள் கணிப்பு என்ன?

பதில்: ஒன்றும் இல்லை. மிகச் சிலரே படித்திருக்கிறார்கள். என்னைப் பார்க்கும்போது எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்பார்கள். எஸ்.பொன்னுதுரை படித்திருக்கிறார். ஆனால் கருத்துச் சொன்னதில்லை. மேலாண்மை பொன்னுசாமி என் கதைகளைப் பாராட்டியுள்ளார். பொதுவாகத் தமிழக எழுத்தாளர்கள் அயலக எழுத்தாளர்களின் கதைகளைக் கூர்ந்து கவனிப்பதில்லை. அவர்கள் உலகமே மிகப் பெரிதாக இருந்து அவர்கள் கவனத்தை முழுமையாக விழுங்கிக் கொள்ளுகிறது. தஞ்சைக் கோயில் கோபுர நிழல் கோயிலின் மேல்தளத்திலிருந்து கீழே விழாமல் இருப்பது போல அவர்கள் பார்வையும் நம்மேல் விழுவதில்லை. இணையத்தில் தமிழ் வாசகர்கள் என்னைக் கவனித்திருக்கிறார்கள். அந்த வெளியில் உலவுவதையும் குலவுவதையும் நான் விரும்புகிறேன்.

கேள்வி: இன்னமும் நமது புத்தக வெளியீடுகளில் (நீங்கள் உட்பட) அரசியல் தலைவர்களையே நம்புவதன் காரணம் என்ன?

பதில்: முதலில் நான் அழைத்திருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் தமிழ் எழுத்துகளைப் படிப்பவர்களாகவும், நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். சாமிவேலு, (மறைந்த) பத்மநாபன், சுப்பிரமணியம் ஆகியோர் நன்கு தமிழும் இலக்கியமும் படித்தவர்கள். ஆகவே அரசியல்வாதிகள் என்பதை விட தமிழ் இலக்கிய நேசர்கள் என்றுதான் இவர்களை நான் கருதுகிறேன். அனைவரும் தமிழில் வாக்கு வன்மை உள்ளவர்கள். இரண்டாவதாக இவர்களுக்கு இருக்கும் சமூகச் செல்வாக்கால் இவர்களின் ஆதரவாளர்கள் வந்து இடங்களை நிரப்பி நிறையப் பணம் கொடுத்து நூல்களையும் வாங்கவும் செய்கிறார்கள். கூட்டம் கலகலப்பாகவும் இருக்கிறது. இந்த ஒரே சந்தர்ப்பத்தில்தான் எழுத்தாளன் தன் நூல்களை விற்க முடிகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவும் இல்லையானால் நூல்களை விற்க வேறு வழியில்லை. அப்புறம் எப்படி நூல் பதிப்பிப்பது?

கேள்வி: இது ஒருவகை முரணாக இல்லையா?

பதில்: ஆம். இதில் ஒரு முரண் இருக்கிறது. எழுத்தாளர்களும் வாசகர்களும் இதில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருந்து (விடாமல் வந்து கலந்து கொள்ளுபவர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு என் வணக்கம்) அலட்சியம் செய்யும்போது அதனை ஒரு இலக்கிய கூட்டம் என்று நாம் சொல்லிக் கொள்வதில் முரண் இருக்கிறது. இந்த முரணை நான் முன் எப்போதையும் விட இப்போது அதிகமாகவே உணர்ந்து வருகிறேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் வராத இலக்கிய நிகழ்வுகளை ஏன் நடத்த வேண்டும் என்னும் கேள்வி புடைத்துக் கொண்டு எழுதுகிறது. ஆகவே இனி இதுபோன்ற சூழல் தேவையில்லை என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது.

கேள்வி: மலேசிய தமிழ் இலக்கிய உலகம் பற்றிய உங்கள் எதிர்கால நம்பிக்கை…

பதில்: யாராவது சிலர் முனைந்து எழுதிக் கொண்டிருக்கும் வரை அது இருக்கும். மலேசியத் தமிழ் இலக்கியத்தைத் தூக்கிப் பிடிக்கவும் பிரபலப் படுத்தவும் சில இயக்கங்கள் வேண்டும். இப்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முனைப்பாக இருக்கிறது.அது தளர்ந்து போனால் மலேசியாவில் எழுத்தியக்கம் தளர்ந்து போகும். தீவிர இலக்கியம் வளர ஒரு நல்ல இதழ் வேண்டும்.

கேள்வி: ஐந்து நாவல்கள் எழுதியுள்ளீர்கள். அந்த அளவிற்கு உங்கள் வாழ்வை அடர்த்தியானதாகக் கருதுகிறீர்களா?

பதில்: என் வாழ்வுக்கும் என் நாவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் வாழ்வு அடர்த்தியானதுதான். ஆனால் என் நாவல்கள் என் வாழ்வை முற்றாகப் பிரதிபலிப்பவை அல்ல. என் நாவல்கள் என் கற்பனா சக்தியையும் ‘மற்றவர்கள்’ வாழ்வு பற்றிய என் பார்வையையுமே கொண்டிருக்கின்றன.

கேள்வி: உங்கள் மதம்,ஆன்மிகம் அல்லது கடவுள் நம்பிக்கைப் பற்றி கூறுங்கள்.

பதில்: ஆன்மிகம் எனக்கு பிடிக்கிறது.அது ஆழ்ந்த சிந்தனையும் உலக நேயத்தையும் மனித நேயத்தையும் அமைதியையும் தரவல்லது. மதம் எனக்குப் பிடித்தமான விஷயம் அல்ல. அது குறுகிய சிந்தனைகளை ஏற்படுத்துவது. பக்தி உணர்வு புனிதமானது. ஆனால் அதன் உச்சத்தில் வைக்கப்படும் கடவுள் நம்பிக்கை கற்பனையானது. பக்தியும் பக்தி இலக்கியமும் எனக்குப் பிடிக்கும். நான் அவற்றை இன்றும் நிறைய படித்து அனுபவிக்கிறேன். ஆனால் நான் ஆத்திகன் அல்ல.

கேள்வி: திரைப்படங்கள் பார்ப்பதுண்டா? எம்மாதிரியான படங்கள்?

பதில்: பார்ப்பதுண்டு. அது ஒரு பொழுது போக்குதான். அதில் சிரத்தை ஒன்றும் செலுத்துவதில்லை. எந்தப்படமும் எந்த நடிகர் பெயரும் நினைவில் இருப்பதில்லை. ஆனால் சினிமா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

கேள்வி: ‘அந்திம காலம்’ எழுத உங்களைத் தூண்டிய சம்பவம் எது?

பதில்: ஒரு சம்பவம் என்றில்லை. வாழ்வில் பலர் எதிர் கொள்ளும் பயம் இது. புற்று நோய் பற்றிய பயம் எனக்கும் உண்டு. எனக்கு அணுக்கமானவர்கள் சிலர் புற்று நோயால் அவதிப்பட்டு மடிந்திருக்கிறார்கள். அந்த நினைவுகள் சில நாட்களாக நெஞ்சில் இருந்தன. அவையே கதையாக உரு பெற்றன.

கேள்வி: நீங்கள் வாழும் வாழ்வை எப்படிப் பார்கிறீர்கள்?

பதில்: எனக்கு வாழ்வு பல இன்பங்களைக் கொடுத்திருக்கிறது. துன்பங்களை நான் அதிகம் அனுபவித்தவன் அல்ல. வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் வந்தபோது நான் துணிவினாலும் முன் யோசனையினாலும் யுக்திகளாலும் வென்றிருக்கிறேன். வெல்ல முடியாது என தெரிந்தால் நெகிழ்ந்தும் கொடுத்திருக்கிறேன். என் வாழ்வில் நான் அடைய முடிந்த இலட்சியங்களை மட்டுமே நான் எப்போதும் கொண்டிருக்கிறேன். இப்போது வாழ்க்கையை எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி ஒவ்வொரு கனமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சூடான காப்பி சாப்பிடுவது முதல், கடற்கரை ஓரம் நடை போவதையும், பேரப்பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்வதையும், கணினி முன் அமர்ந்து உலகை வலம் வருவதையும், எனக்கு விருப்பமான வீட்டு சாப்பாடு சாப்பிடுவதையும், விரும்பிய போது கடையில் `மலாய் குவே’, `நாசி லெமாக்’, ’தே தாரிக்’ சாப்பிடுவதையும், மாலை முழுவதும் பேரன்களோடு விளையாடுவதையும், இரவு பெரும்பகுதி படிப்பதையும், மறுநாள் பற்றிய கவலை இல்லாமல் உறங்குவதையும் நான் கணம் கணமாக அனுபவிக்கிறேன். இப்போது எழுத்து எப்போதாவது யாராவது வற்பறுத்தும் போது செய்வதுதான். என்னுடைய இந்த வயதிலிருந்து வாழ்க்கையைத் திரும்பி பார்க்கும் போது இனி வாழ்க்கை எனக்கு நோய் முதலிய எந்தத் துன்பத்தைக் கொடுத்தாலும் இதுநாள் வரை நான் பெற்றுள்ள இன்பங்களுக்காக வாழ்க்கை மீது நான் கொண்டுள்ள நன்றி உணர்ச்சி மாறவே மாறாது.

நேர்காணல்/புகைப்படம் : ம.நவீன் / பா.அ.சிவம்

நன்றி : வல்லினம் ஜூன் 2007

(Visited 554 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *