மலேசிய தமிழிலக்கியத்தின் புதிய சட்டாம்பிள்ளை(நவீன்)க்கு ‘இராமனின் நிறங்கள்’ கோ.முனியாண்டியின் பதில்.
பரிதாபத்திற்குரிய வல்லினம் வாசகர்களே சமீபத்தில் எமது ‘இராமனின் நிறங்கள்’ குறித்தும் அதன் வெளியிட்டு விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு முக்கியத்துவம் பெற்றது குறித்தும், தனது அங்கலாய்ப்பை இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு உதவக்கரை பிலாக்கணத்திற்குப், சில விளக்கங்களை கட்டாயமாக தெரிவிக்க வேண்டிய கடப்பாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டது. இணையப் பக்கத்தில் காணப்பட்ட புதிய சட்டாம்பிள்ளையின் உளறல்களையும் ஆதங்கத்தையும் நண்பர் பக்கம் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார் அதில் காணப்பட்ட சில விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டு அதற்கு நான் அவசியம் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ஏனென்றால், இந்தச் சட்டாம்பிள்ளைக்குள் குடிகொண்டிருக்கும் பொய்யும் புனை சுருட்டும் எங்கே, கொண்டுபோய் சேர்க்கும் என்ற கேள்வி நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்!
இதன் காரணமாகத்தான், சட்டாம்பிள்ளையின் பிலாக்கணத்திற்குப் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது நடந்தது. இந்த நாட்டின் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளான, கதை, நவீன கதை கவிதை,புதுக்கவிதை, நவீன கவிதை, பின் நவீனத்துவக் கவிதை, நாவல், நவீனநாவல் என்று எல்லா படைப்பிகளுக்குள்ளும் கூடுவிட்டு கூடு பாய்ந்து கூறுபோட்டுப் போட்டுபிரித்தெடுத்து ஆய்வு செய்து இறுதியாக ‘மார்க்கும்’ போடும் மாயவித்தையைக் கற்றறிந்து, இலக்கியப்பணியை செவ்வனே; செயல்படுத்திவரும், புதிய சட்டாம்பிள்ளைக்கு!
‘இராமனின் நிறங்கள்’ மன்னிக்க ‘ராமனின் நிறங்கள்’ ஒரு நாவலே! இல்லை என்கிற முடிவெடுக்க, அதுவும் முழுவதையும் படிக்காமல் ‘நுனிப்புல்’ மேய்ந்து கருத்துச் சொல்ல என்ன? தகுதி இருக்கிறது.இதற்குப் பட்டாபோட்டுக் கொடுத்தது யார்? சிலாங்கூர் மாநில அரசாங்கமா? சமீபத்தில் ஒரு பரிசுகூட கிடைத்ததுபோல் செய்தி வந்ததே! எந்தவொரு அரசியல்வாதியின் சிபாரிசும் இல்லாமல்தான் இந்தப் பரிசு சட்டாம் பிள்ளைக்கு நேரடியாக மந்திரிபெசார் ‘காலிட் இப்ராஹிம்’ வழங்கினாரோ!
அது போகட்டும்! அரசியல் அரசாங்கம் சிபாரிசு இவற்றையெல்லாம் கடந்துதான் எழுத்தாளனுக்கு பரிசு வந்து சேரவேண்டும். என்ன – செய்வது விஷயத்துக்கு வருகிறேன் நயனம் வார இதழில் .இராமனின் நிறங்கள்’ தொடராக வெளிவந்தபோது, அதனைப் புத்தகமாகக் கொண்டுவரும் திட்டத்தை நான் வைத்திருந்தேன் அதையும் ‘ வல்லினம்’ இயக்க சார்பாகவே கொண்டுவர வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். சட்டாம்பிள்ளையுடன் நடைபெற்ற இரண்டொரு சந்திப்புகளிலும் அதை கூறியிருந்தேன். அதற்காக எனது நாவலின் கையெழுத்துப் பிரதியையும் கொண்டுவந்து ஒப்படைத்தேன். கையெழுத்து பிரதியை ஒப்படைத்தபோது சட்டாம்பிள்ளையான நீங்கள் என்னிடம் கூறியதுபோல, ‘டைப்’ செய்வதற்கு வெள்ளி 200.00 செலவாகும் என்றீர்கள். உடனே அந்தப்பணத்தைக் கொடுத்தேன். ஏனென்றால், கடந்த 50 ஆண்டுகளாக எழுதிவரும் கோ.முனியாண்டி, சிறுகதைகளையும், கவிதைகளையும், பத்திரிகையில் வெளிவரும் வகையில், நீட்டி, முழக்கி, செழுமையும் கூர்மையும் படுத்தி அதற்குப்பின் எடிட்டும் செய்துவரும் ஆற்றல் படைத்த சட்டாம்பிள்ளையாயிற்றே! அதனால், எந்தவிதமான மறுப்பும் இன்றி பணத்தைக்கொடுத்தேன்.
என்னுடைய நாவல் ‘டைப்’ செய்து கொண்டு வந்து தரப்பட்டு, அதனைப் பிரித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது அதில் பக்கத்துக்குப்பத்து ஒற்றுப்பிழைகளும், வாக்கியப்பிழைகளும் இருப்பதை படித்துப்பார்த்து எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. சட்டாம்பிள்ளை இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவே இல்லை எனக்கு இதை எப்படிப் புத்தகமாக்குவது என்கிற நோக்கம் மட்டுமே இருந்ததால் ‘டைப்’ செய்யப்பட்டதை அடித்துத் திருத்தி கையில் வைத்துக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தேன். அடித்துத் திருத்தி வைத்திருந்த நாவலை, புத்தகமாக்குவதற்குப் முன், அதை ஆய்வு செய்து எடிட்டும் செய்தால் நன்றாக இருக்குமே என்று சட்டாம்பிள்ளையிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன்.
தற்போதைக்கு அந்தப் பணியை செய்வதற்கு மிகவும் பொருத்தமான நபர், வல்லினம் குழுவைச் சேர்ந்த யுவராஜன் ஒருவர்தான் என்று அடித்துக் கூறினார் சட்டாம்பிள்ளை. மலாய், ஆங்கிலம், தமிழில் வெளிவந்துள்ள தரமானப் படைப்புகளை குறிப்பாக நாவல்களை ஆழ, அகலம் பார்த்தவர் இவர் ஒருவர்தான் என்றும் எடிட்டும் ஆய்வும் செய்வதற்கு நீங்கள் வெள்ளி 500.00 கட்டணமாகக் கொடுக்க வேண்டும் என்று சட்டாம்பிள்ளை கேட்டுக்கொண்டார். அவருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டேன்.
இரண்டு மூன்று மாதமாக எடிட்டும் ஆய்வும் செய்யப்பட்ட நாவல் பிரதியைப் பெறுவதற்குப் பொறுமை இழந்து காத்துக்கொண்டிருந்தேன். இதற்கிடையே ; ஒருமுறை கோலாலம்பூருக்குச் செல்லவேண்டிய அவசியம் வந்தது. இயக்குனர் நண்பர் திரு.பிரான்சிஸ் செல்வன் ஏற்பாடு செய்திருந்த சினிமா கதை கலந்துரையாடலுக்கு எழுத்தாளர் சீ.முத்துசாமி கவிஞர் க.இளங்கோவன், மஹாத்மன் ஆகியோரோடு என்னையும் அழைத்திருந்தார்.ஓரிரண்டு நாட்கள் விடுதி ஒன்றில் நாங்கள் தங்கி இருந்தோம்.
ஒருநாள் கொஞ்ச நேரம் வெளியில் போய்விட்டு விடுதிக்கு திரும்பிவந்தபோது, ஒரு நெகிழிப்பையில் நிரப்பி முடிச்சுப்போட்டு வைத்திருந்த பொருளை, நண்பர் முத்துசாமி என்னிடம் கொடுத்தார்.
நெகிழிப்பையைப் பிரித்துப்பார்த்தால் டைப் செய்து சட்டாம்பிள்ளை(நவீன்)யிடம் கொடுக்கப்பட்டிருந்த எனது இராமனின் நிறங்கள் பரிதாபமாக முடங்கி கிடந்தது. முத்துசாமிதான் கூறினார் – சட்டாம்பிள்ளை(நவீன்)யும் யுவராஜனும் இதை உங்களிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள் என்று அவர்கள் இருவரும் இராமனின் நிறங்கள் நாவலின் எடிட் செய்திருந்த பிரதியைக் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு, தலை தப்பிய திருடர்களைப்போல் ஓட்டம் பிடிப்பதற்கு முன்பே, இவர்களின் திருகுதாளம், தில்லுமுல்லுகளை எங்களோடு தங்கியிருந்த ஓட்டவாய் எழுத்தாளர் போட்டு உடைத்து விட்டிருந்தார்.
‘இராமனின் நிறங்கள் நாவலின் கையெழுத்துப் பிரதியைக்கொடுத்து டைப் செய்யச் சொன்னவன் நான் அதற்கு வெள்ளி 200.00 கொடுத்தது நான் இராமனின் நிறங்கள் நாவலை எடிட் செய்து ஆய்வும் செய்யச் சொல்லி அதற்காக வெள்ளி 500.00 கொடுத்தவனும் நான்.
இப்படியிருக்க! என்னிடம் நாவலின் பிரதியைக் கொடுக்காமல் மற்றவர்களின் கையில் கொடுத்துவிட்டு தலைதெரிக்க ஓடவேண்டிய அவசியம் என்ன? கெட்டிக்காரர்களின் புளுகு தெரிய ஒரு அருமையான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
சரி! போனவர்கள் போகட்டும் என்று எடிட் செய்த பக்கங்களைப் புரட்டினால் மேலும் எனக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. 450 பக்க நாவலில் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் அடித்துத் திருத்தப்பட்டிருந்த ஒரு வாக்கியம்
“கூலா பேராக்” என்று நான் விளித்திருந்த ஒரு பெயரை
“குவாலா பேராக்” என்று திருத்தம் செய்து எடிட் செய்திருந்த ஒரு கன்றாவியைத் தவிர வேறு எந்த ஒரு திருத்தமும் அதில் செய்யப்ப்பட்டிருக்கவில்லை. “கூலா பேராக்” என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். அதை “குவாலா பேராக்” என்று திருத்துவதுதான் அந்த வல்லின குழுவினர் கற்றறிந்த பாடமோ? என்னங்கடா! உங்களுக்குடைய இலக்கிய அறிவும் அது சார்ந்த இலக்கிய ரசனையும் நல்ல வேலை என்னுடைய இராமனின் நிறங்களுக்கு ஏற்பட்டிருந்த அகால மரணத்தை தன்னிச்சையாக ஏற்படுத்திக்கொண்ட முயற்சிகளினால் தவிர்த்துக் கரை சேர்த்துவிட்டேன் இவர்கள் பொறுப்பு எடுத்து தொகுத்து வெளியிட்ட நூல்களின் லச்சணத்தை நன்கு பார்த்த பின்பும் இவர்களை நான் நம்பியது எவ்வளவு பெரிய அறியாமை .
நல்லவேளை! சை.பீர்முகம்மது, காலச்சுவடு பற்றி குறிப்பிட்டது. நயனத்தில் 68 வார காலம் வெளிவந்த பக்கங்களை அனுப்பி வைத்து காலச்சுவடு செய்த எடிட் வேலைக்குப்பின்னர், புத்தகம் கைகளுக்குக் கிடைத்தபோது நான் அடைந்த பேரானந்தம் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஆனந்தம் இந்த வேளையில் சை.பீர்முகம்மதுவிற்கு நன்றி சொல்லவேண்டும் சரி இராமனின் நிறங்கள் ஒரு நாவலே இல்லை என்பது சட்டாம் பிள்ளையின் குதாய்ப்பு;
ஆமாம்! கணக்கற்ற நூல்களைப் படித்துவிட்டு அதை ஆய்வும் செய்து (உலக மொழிகளில் யாவற்றிலும்) கட்டுரைகளை எழுதிவிட்டு, இவர் தன்னுடைய பிரஸ்தாபத்தை இப்படி வெளியிட்டுள்ளார் ஆமாம் நானும் கேட்கிறேன் தமிழில் நாவல்களே இதுவரை வெளிவரவில்லை என்று தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ் ஏஜண்டும் இந்துத்வா பூஜாரியுமான ஜெயமோகன் பிதற்றுவதைப் போலவே; சட்டாம் பிள்ளையும்(நவீன்) இன்னும் சிலரும் கூவத்தொடங்கியிருக்கிறீர்களே! நீங்கள் என்ன இந்துத்வா பூஜாரியின் ஜால்ராக்களா? இல்லை வேறு எதுவோ ஜந்துக்களா? இதற்கு அப்புறம் ஒரு தடவை தற்செயலாக இராமனின் நிறங்களை எடிட் செய்துக் கொடுத்த பெருமையைக்குரிய யுவராஜனைச் சந்திக்க நேர்ந்தபோது, அதை நாவல் என்று சொல்ல முடியாததற்கான காரணத்தை என்னிடம் சொன்னார். எனக்கு மேலும் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.
வல்லினம் வாசகர்களும் தெரிந்து கொள்ளட்டுமே! என்று தெளிவுபடுத்துகிறேன். அவசியமும் முக்கியத்துவமும் கருதி யுவராஜன் சொல்கிறார்‘சார், இராமனின் நிறங்கள் நாவல் அதன் நாவல் தரத்திலிருந்து விலகியிருப்பதற்கு காரணமே, அந்த நாவல் முழுக்கநல்லவர்களே மட்டுமே கதை மாந்தர்களாக இருக்க முடியும்?அதைக்கேட்டு அழுவதா சிரிப்பதா என்ற சிந்தனையில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன்.வல்லினம் வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் எப்போதாவது, நாவல் என்று எதையாவது எழுத நேர்ந்தால் இங்கே நாட்டில் புதியதாய் முளைத்திருக்கும் சட்டாம்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை கனவிலும் மறக்காமல் நினைவு வைத்துக்கொண்டு எழுத மறந்துவிடாதீர்கள் சட்டாம்பிள்ளை நவீனுக்கும் உம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு கேள்வி இந்த நாட்டு இலக்கியத்திற்கு பாஸ் மார்க்கும் பெயில் மார்க்கும் போடுவதற்கு “அதாரிட்டி” வழங்கியது யார்? கோ.முனியாண்டி என்கிற நான் உம்மைப் போன்ற சிறுமைகளிடமிருந்தெல்லாம் பெருமை பெறவேண்டிய அவசியம் இல்லை கடந்த 30 ஆண்டுகளாக 46 நூல்களை என்னுடைய வட்டாரத்தில் வெளியீடு செய்திருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகாலமாக தான் வாழ்ந்த மண்ணை மீட்டெடுக்க யுகப்போராட்டம் நடத்திவரும் கடல்கடந்த தொப்புள் கொடி உறவுகளுக்காக உதவுவதற்காக செயலாற்றியிருக்கிறேன் தனிமனித சமுதாய உணர்களுக்காக போர்க்குரல் எழுப்பியிருக்கிறேன் இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் பின்பலமாக நின்றவர்களும், உதவியவர்களும் அரசியல்வாதிகளே நான் வாருங்கள் என்றால் வந்தவர்களையும், தாருங்கள் என்றால் தந்தவர்களையும் இத்தனை காலமும் அவர்களோடு கலந்திருந்த காரணத்தினால் என் நாவல் வெளியீட்டு விழாக்களில் முன் நிறுத்தப்பட்டார்கள் எந்த அரசியல்வாதியிடமும் கெஞ்சுவதும் வாலையாட்டுவதும் என் பழக்கமல்ல வழக்கமும் அல்ல ம.இ.காவின் தேசியத்தலைவர் டத்தோ பழனிவேலுவை வைத்து முதல் நூல் வெளியீடு செய்தது அவரை கௌரவிக்க அதற்கு காரணம் உண்டு தலைநகரில் நடைபெற்ற இரண்டாவது நிகழ்வை டத்தோஸ்ரீ சாமிவேலுவை வைத்து நடத்தினேன். அதற்குக் காரணம் அவர் அரசியல்வாதி மட்டுமல்ல கலை, இலக்கியதின்பால் அவர் கொண்டிருக்கும் மேலான காதலுக்காகவும்தான் என்பதை கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
மிஸ்டர் சட்டாம்பிள்ளை நவீன் அறிந்துகொள்ள வேண்டியது
கோ.முனியாண்டி I am not so cheap
I am a chief
( பின் குறிப்பு: இக்கடிதத்தையும் சட்டாம்பிள்ளை(நவீன்) எடிட் செய்தால் , வேறு பத்திரிகையில் முழுமையாக வெளிவரும் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்)