இலங்கை பயணம்; நண்பர்கள்; இலக்கியம்.

இலங்கைக்குச் செல்வதென முடிவானப்பின் சட்டென ஒரு நண்பர்கள் பட்டியல் மனதில் ஓடியது.

முதலில் தகவலைச் சொன்னது எம்.ஏ.நுஃமான் அவர்களிடம்தான். என் தந்தை போன்றவர். அவர் மலேசியாவில் இருந்த ஒருவருடத்தில் அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளேன். அதிகமான ஞாயிற்றுக்கிழமைகள் அவர் வீட்டில்தான். சதா சிந்திக்கத்தூண்டும் கேள்விகள் அவரிடமிருந்து  வந்துகொண்டே இருக்கும். ஒருவருடத்திற்குப் பின் அவர் இலங்கை திரும்புவது உறுதியானப்பின் அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஒரு இறுக்கம் பரவியிருந்தது.

அவ்வாறு ஒருசமயம் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது கடுமையான பசி. அவர் துணைவியாரின் சமையல் சுவை அற்புதமானது என்பதால் பசி கூடியிருந்தது. நான் பசி என்றதும் நுஃமான் சாப்பிட அழைத்தார். இருவரும் சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் அன்றுதான் இலங்கையிலிருந்து மலேசியா வந்திருந்த அவர் மகன் குளியலறையிலிருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அப்போதுதான் அவர் மகனின், நெடுநாட்களுக்குப் பின் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் தெரிந்தது. “சொல்லியிருக்கலாமே சார்…” என்றேன். “அதனால் என்ன நீங்களும் மகன்தானே. நான் இந்த மகனுடன் சாப்பிடுகிறேன். மனைவி அந்த மகனுடன் சாப்பிடுவார்” என்றார். நான் நெகிழ்ந்திருந்தேன். அந்த அன்பும் நெகிழ்வும் இன்றுவரை உயிர்ப்புடனே உள்ளது.

அடுத்து பிரகாஷ். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை நான் சந்தித்தது தற்செயலானது. ஜனசக்தி இதழ் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது பத்திரிகைக்கு டைப் செய்வதற்காக அவரை ஒரு இரவு நண்பர் ஒருவர் அழைத்து வந்தார். பதற்றத்துடன் இருந்தார் பிரகாஷ். போரின் அவலங்களால் அவர் மனம் சிதைவுண்டிருந்தது. மனநல மருத்துவரான சண்முகசிவாவிடம் அழைத்துச் சென்றேன். சண்முகசிவா அவர் மனம், போரின் கொடூரங்களால் பாதிக்கப்பட்டதை விளக்கினார். பிரகாஷிடம் தொடர்ந்து உரையாடுவதும் தனிமையைத் தவிர்ப்பதும்தான் ஒரே வழி என்று சில மூளை வேக கட்டுப்பாட்டு மருந்தையும் கொடுத்தார். சில காலத்திற்குப் பின் பிரகாஷுக்கு ஊர் திரும்ப எண்ணம் வரவே சண்முகசிவாவே  அவரை தம் செலவில் இலங்கை அனுப்பிவைத்தார். அன்று முதல் ஒவ்வொரு பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என பிரகாஷ் அழைத்து வாழ்த்து சொல்ல தவறியதில்லை. அதேபோல சண்முகசிவாவிடமும் அவர் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றார்.

புன்னியாமீன். மிக அண்மையில் மலேசியா வந்திருந்தார். நூலகவியலாளர் என்.செல்வராஜா மூலம் பழக்கமானவர். மலேசிய இலக்கியத்தை இலங்கையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகச் செயல்படுபவர். மிக அண்மையில் மலேசியா சென்று திரும்பிய பின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். நிச்சயம் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இவர்களைத் தவிர்த்து மாற்றுப்பிரதி வலைத்தளத்தில் நல்ல பல இலக்கியங்களைப் படைகும் றியாஸ் குரானாவிடம் (http://www.maatrupirathi.tk/) தொடர்ந்து இணையம் மூலமாக உரையாடியதுண்டு. மாற்று சிந்தனை கொண்ட  அவர் இலக்கியத்தில் புதிய சாத்தியங்களை  ஏற்படுத்த முனைபவர். றியாஸைச் சந்திப்பது இலக்கியத்தில் இன்னும் தீவிரத்துடன்  இயங்க முனைப்பு கொடுக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் என் பயணத்தில் கிழக்குப் பகுதி மட்டும் விடுபட்டுள்ளதால் சந்திக்கும் வாய்ப்பு அமையுமா என்ற  சந்தேகமும் கவலையும் எதிர்க்கொண்டபடியே உள்ளது. தமிழகத்திலும் இப்படிதான். விமானம் ஏறியது முதல் ஆதவன் தீட்சண்யாவை பார்ப்பது என்றுதான் உறுதியோடு இருந்தேன். கடைசியில் அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரையும் பார்த்தேன்.

பொதுவாகவே நான் என் வாழ்நாளில் நண்பர்களோடுதான் அதிக காலம் இருந்துள்ளேன். எனது 15 வயது வரை நெருக்கமான நண்பர்கள் என்று யாரும் இல்லை. அதன் பின் சரவணனின் நட்பு மிக நெருக்கமானது. நட்பின் மகத்துவத்தைக் கற்பித்தவன் சரவணன்.

அதன்பின்னர் நிறைய நண்பர்கள் வாழ்வில் வந்து வந்து போயிருக்கிறார்கள். பெரும்பாலும் இலக்கிய – அரசியல் சார்ந்த விமர்சனங்களில் ஏற்பட்ட பிரிவுகள். அதுகுறித்து நான் வருந்துவதில்லை. எதற்காகவும் என் கொள்கைகளை, அரசியலை விட்டுத்தரவும் தயார் இல்லை. விவாதங்களுக்குப் பின்  அவரவர் ஏற்படுத்திக்கொள்ளும் தனிமையிலும் அவரவர் புலம்பல்களில் நான் உள்நுழைவதும் இல்லை.  பலவீனமானவர்கள், அறிவுதளத்தில் விவாதத்தை தொடர முடியாதவர்கள், தங்கள் அத்தனை நாள் போலியான பேச்சால் எழுப்பிய பிம்பம் விவாதத்தில் உடையும் என பயப்படுபவர்கள் மௌனத்தையும் பிரிவையும் அணுகிச்செல்கின்றனர் என்பது இதுவரை நான் கண்ட உண்மை. அது அவரவர் விருப்பம். எனக்கு இலக்கியத்தில் தனிப்பட்ட விரோதங்கள் இல்லை.

இந்தப் பயணத்தின் போதும் நண்பர்களுடன் செல்லவே திட்டமிட்டேன். நெருக்கமான நண்பர்களைப் பயணத்தில் இணையச் சொன்னேன். அது குதூகலமானது. அனைவருக்கும் அலுவல். வேறு சில பிரச்சனைகள். ஒரு வழியாக மணிமொழி உடன் வருகிறார். அவர் அனைத்தையும் கவனித்துக் கொள்வார். எந்த நேரமும் ‘அடுத்து என்ன’ என்ற மனத்தொல்லை தீர்ந்தது.  இலங்கையில் இலக்கிய நண்பர்களைச் சந்திப்பது குறித்துதான் என் கவனமெல்லாம்.

இளம் எழுத்தாளர்கள் சிலரையாவது சந்தித்து உரையாடினால் இப்பயணம் முழுமை அடையும் என நினைக்கிறேன். அது இலங்கையில் வெவ்வேறு முகங்களை அறிமுகம் செய்யலாம். தொடர்ந்த கருத்து பரிமாற்றத்துக்கு வழிவகை செய்யலாம். அவர்கள் இலக்கியத்தைப் பார்க்கும் பார்வையை உள்வாங்கிக்கொள்ளவும் முடியும். பொதுவாகவே மலேசிய எழுத்தாளர்களுக்கு தமிழக எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகம் அறிமுகமுள்ளதே தவிர ஈழ இலக்கியத்தின்பால் கவனங்கள் குறைவு. நூல்களும் அதிகம் கிடைக்கப்பெருவதில்லை. இந்தப் பயணத்தின் மூலம் அங்கு தீவிரமாக இயங்கும் சிலராவது வல்லினத்தில் எழுத தொடங்கும் பட்சத்தில் இடைவெளிகளைக் குறைக்க முடியும் என நம்புகிறேன்.

என் பயணவிபரங்கள் பின்வருமாறு :

30.8.2011 – KUALA LUMPUR – COLOMBO – ANURADHAPURA (overnight atay at Miridiya Hotel)
31.8.2011 – ANURADHAPURA – JAFFNA (STAY AT GREEN GRASS HOTEL)
1.9.2011 – JAFFNA (STAY AT GREEN GRASS HOTEL & PILLAYAR INN)
2.9.2011 – JAFFNA – KANDY (QUIEENS OR SIMILER)
3.9.2011 – KANDY –  NUWARA ELIYA
4.9.2001 – NUWARA ELIYA – ELLA – KATARAGAMAM (STAY AT TISSA OR KATARGAMAM)
5.9.2011 – KATARAGAMAM – RATNAPURA – COLOMBO (STAY AT PENGASUS REEF HOTEL- COLOMBU)
6.9.2011 – BACK

இலங்கை வந்தவுடன் அவ்வூர் தொலைபேசி இணைப்பை பெற திட்டம். றியாஸிடம் எண்களைக் கொடுத்து பிற நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடியும் . தொடர்ந்து பயணத்தில் இருப்பதால் நண்பர்களை தங்கும் விடுதியில்தான் சந்திக்க முடியும் என நினைக்கிறேன். முதல் பயணம் என்பதால் எவ்வகையான சித்திரமும் இல்லை. எதையும் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் காணும் கேட்கும் அனைத்தும் புதிதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

(Visited 77 times, 1 visits today)

One thought on “இலங்கை பயணம்; நண்பர்கள்; இலக்கியம்.

 1. இலக்கிய பயண வழி இலங்கைக்கு ஒரு உறவு பாலம்….
  சிங்கள தீவிநிட்க்கு பாலம் அமைப்போம்,பாரதி கேட்கட்டும்!
  கன்னி தமிழ் கதைக்கும் யாழ்ப்பாண நகரில் வீதி எங்கும் தமிழ் எழுத்துக்கள் ..
  தமிழ் வளர்த்த ஊரல்லவா!

  கோட்டையில் புகைஊர்தி நிலையம் நம் வரலாறுக்கு ஒரு சான்று
  கொழும்பு,மறைந்த தமிழ் மேதை சின்னதம்பியை நினைவு கூறும்
  அனுராதபுரம் ஆராதனை கீதங்கள் முழங்க செய்ய கேட்பீர்கள்
  மலாயா பல்கலைகழகம் தமிழ் போதிக்க வழி செய்த தனிநாயகம் அடிகள் ஊர் அல்லவோ

  எனது மிக சமீபித்திய பயண அனுபவங்கள் அது,மலேசியா இளம் கவிஞ்சர் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, இந்த பயணம்
  உங்களுக்கு பெரிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.வெற்றியோடு சென்று வாருங்கள் !

  ராஜ் சத்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *