திரு நவீன் அவர்களுக்கு,
நான் ராமனின் நிறங்கள் தொடர்பான விவாதங்களை தொடர்ந்து படித்து கொண்டு வருகின்றேன், அது தற்பொழுது வாக்கு வாதத்தில் வந்து முடிந்து இருக்கின்றது, நமது தொடர்புகள் மிக நீளம் என்றாலும் எனக்குள் நாம் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும், அந்த உணர்வில்தான் இப்பொழுது இதை எழுதுகிறேன், எனக்கு தெரிந்த வரை நமது தமிழர் வரலாற்றில் தமிழ் புலவர்கள் எத்தனையோ பேர் நமது வாழ்கை முறைமைகளையும் நமது மரபுகளையும்,பண்பாடுகள் பழக்க வழக்கங்கள்,மருத்துவ முறைகள்,இல்லற நெறிகள்,நமக்கு சொல்லி விட்டு தமிழுக்காக வாழ்ந்து மறைந்தார்கள், அந்த காலத்தில் ஒவொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது மன ஓட்டத்தை அவர்களது தமிழ் புலமையில் படைத்தார்கள், அவர்கள் பயணிக்கும் இடம் வேறாக இருந்தாலும் முடியும் இடம் ஒன்றாகத்தான் இருந்துள்ளது, தமிழுக்காக ஒரு நல்ல பணியை செய்கின்றோம் என்பதுவே அது. தற்காலதில் தமிழ் பற்றாளர்கள் என்று உங்களை போன்றவர்களை நினைத்து பெருமை படும் இந்த நேரத்தில் இது போல போன்று வாக்கு வாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்றே தோன்றுகின்றது.சம்பந்தமே இல்லாமல் இதில் எங்கு வந்தது இந்த கருப்பு பிரச்சினை, நான் உங்கள் எதிமரையாலரை பார்த்தது இல்லை, அனால் அவரும் கருப்பு கலந்த நிறமாகத்தான் இருப்பார் என்பது எனது கற்பனை,அவர் உருவாக்கிய மண் பொம்மை நன்றாக உள்ளது என்று அவருக்கு தோன்றும் ஆனால் அதை வாங்கி உபயோகபடுத்த நினைபவனுக்கு அதன் உண்மையான தன்மை இந்த பொம்மையில் கை கொஞ்சம் நீளமாக உள்ளது வடிவம் சரி இல்லை, இதை பார்க்கும்பொழுது எனக்கு பொம்மையாகவே தெரியவில்லை என்பது புரியும் என்று அவருக்கு புரியவில்லை. நீங்கள் இந்த விவாதத்தை இனியும் தொடராமல் நமக்கே உரிய பெருந்தன்மையுடன் இதை இத்துடன் நிறுத்தி விட்டு வேறு எதாவது ஆரோக்கியமான் தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்று வேண்டுகின்றேன்.
டேவிட்
அன்புமிக்க நண்பர் அவர்களுக்கு, தங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி. இந்த விவாதத்தை தொடக்கத்திலிருந்து வாசித்தவர் என்ற நிலையில் அது தொடங்கப்பட்ட விதம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இன்று கோ.முனியாண்டியால் அது மீண்டும் கீழ் நோக்கி திரும்பும் நிலையையும் அறிந்திருப்பீர்கள். நிச்சயமாக எனது நோக்கம் ஒரு நாவலை பரிகசித்து அதன் விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஒருவேளை இந்த விவாதம் கூட வாசகர்களை வாசிக்கத்தூண்டலாம். ஆனால் மலேசிய சூழலில் புத்தக வெளியீடு என்பதின் அபாயத்தையும் அரசியலையும் புரிந்து வைத்திருக்கும் நிலையில் அதுகுறித்து பேச வேண்டியுள்ளது.
முதலாவது: பல ஆண்டுகாலமாக எழுதாமலும் ஆழ்ந்த வாசிப்பும் இல்லாத ஒருவர் , இயக்கம் சார்ந்து இயங்குவதாலேயே ஒரு எழுத்தாளாருக்கான தகுதி பெற்றுவிடுகிறார். அவர் எழுதும் ஒன்று பேரிலக்கியமாக வாசகர் மத்தியில் கொண்டுசெல்லப்படுகிறது. அத்தனை கால தங்களின் இயக்கச் செயல்பாட்டின் ஆளுமையை இலக்கியத்தில் புகுத்துகின்றனர்.
இரண்டாவது : இலக்கியத்தில் பல ஆண்டுகளாக இயங்கும் ஒருவரின் புனைவு நிச்சயமாகத் தரமானதுதான் என்று நம்பவைக்க முயற்சிக்கப்படுகிறது. இதற்கு அந்த எழுத்தாளர்களும் தங்களுக்கு இருக்கும் அரசியல் சக்திகளையும் ஊடக பலத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேடையில் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அவர்களை குஷிப்படுத்தி தங்களுக்கான விளம்பரச்சொற்களைப் பெருகின்றனர். எவ்வித இலக்கிய பரிட்சயமும் இல்லாதவர்கள் சொல்லும் கருத்துகளைத் தங்கள் நூலுக்கான மதிப்புரையாக போற்றுகின்றனர். எவ்விதத்திலும் இவர்கள் தங்கள் நூலை ஓர் எழுத்தாளன் விமர்சிப்பதையும் உண்மையான கருத்து வெளிப்படுவதையும் அவர்கள் விரும்புவதில்லை.
மலேசிய இலக்கியம் வளர்ச்சி அடையாமல் இருக்க இதுபோன்ற செயல்பாடுகள்தான் மிக முக்கியக் காரணம். ஒரு நல்ல படைப்பு வரும்போது எப்படி அதுகுறித்த பரந்த விவாதம் வெளிப்படாதது இலக்கிய சூழலை மழுங்கடிக்கிறதோ அதைவிட மோசமாக இலக்கியம் அல்லாத ஒன்று முன்னெடுக்கப்படும்போதும் நிகழ்கிறது. இதற்கு முன் மலேசிய இலக்கியத்தில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழ்ந்திருந்தாலும் கோ.முனியாண்டியின் ‘இராமனின் நிறங்கள்’ முழுமுற்றாய் இலக்கிய ஓட்டத்திலிருந்து தவிர்க்க வேண்டியது. இதை சொல்ல பெரிய இலக்கியமெல்லாம் படித்திருக்க அவசியமே இல்லை. தமிழ் வாசிக்கத் தெரிந்த எளிய வாசகர் யாரும் உண்மையாக ஒருதரம் முழுமையாக வாசித்தால் இதையே சொல்வர்.
மிக அடிப்படையான தவறுகள் அந்நாவலில் நிகழ்ந்துள்ளன. மிக முக்கியமாக இரண்டை சொல்லலாம். ஒன்றாவது, வாக்கியங்கள் யாரோ பேசுவதாகத் தொடங்கி யாரோ பேசுவதாக முடியும். இரண்டாவது, தேவையில்லாத இடத்தில் குறிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது நாவல் முழுதும் நிகழ்கிறது. அடுத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக போனால், ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிடும் போது ஒவ்வொரு முறையும் அவர் புகழ்மாலையைச் சொல்லிவிட்டே தொடங்குவார். அதாவது ஒரு தோட்டத்தின் முதலாளி என்றால் ஒவ்வொரு முறை அவர் பெயரைச் சொல்லும் போதும் அந்தத் தோட்டத்தின் பெயரை முழுதுமாகச் சொல்லி, அதில் அவர் புரிந்த சாதனைகளைச் சொல்லியே குறிப்பிடுவார். இப்படியே அந்நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இந்த புராணப்பாடல் நிகழும். அடுத்து வர்ணனை. அதுகுறித்து தனித்த கட்டுரையே எழுத வேண்டும். இவ்வாறு அந்நாவலை எடிட் செய்து எடுத்தால் 400 பக்கங்களில் 100 மட்டுமே மிஞ்சும்.
ஆனால் நிலை என்ன? கோ.முனியாண்டி 50 ஆண்டுகாலமாக இயக்கம், இலக்கியம் சார்ந்து இயங்குவாதாலேயே அவர் எழுதியது முதலில் ‘நாவல்’ என்ற அங்கீகாரத்தில் சேர்ந்து விடுகிறது. பின்னர் அதற்கு ஒரு விருதும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களிடம் கொடுத்து இதுதான் எங்கள் நாவல் என்று பீற்றிக்கொள்ளப்படும். அவர்கள் மலேசிய இலக்கியம் வளரவில்லை என்று சொல்லிவிட்டுப் போவார்கள். இது தொடரதான் வேண்டுமா?
தோழர், உங்கள் கருத்து புரிகிறது. நிச்சயம் முனியாண்டியின் புலம்பல்கள் இனி இடம்பெறாது. ஆரோக்கியமான விவாதங்கள் இருப்பின் அதை பிரசுரித்து முன்னெடுக்கலாம். ஆனால் நிச்சயமாக ‘ராமனி நிறங்களில்’ உள்ள அடிப்படை பிழைகள் ‘பறை’ இணைய இதழில் மிக விரைவில் பிரசுரம் காணும்.
ம.நவீன்
The 15th issue of Mounam (tharkaala kavithai sitrithal) has published an article by Munaivar Mullai Ramaiah. The article, somehow, has not been published in full. Comments on some poems have been left out. It could have been an oversight of the editor. Subscribers of the magazine will receive the full version soon.