வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கிய விழா 2.11.2014ல் மலேசியா தலைநகர் கோலாலும்பூரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை அரங்கத்தினருக்குப் புரிய வைத்தது. அடுத்ததாக ‘வல்லினம் விருது’ பெறப்போகும் எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் வாழ்வைச் சொல்லும் படக்காட்சியும் திரையில் ஒளிபரப்பானது. இவ்விரு படத்தொகுப்பையும் எழுத்தாளர் நவீன் செல்வங்கலை அவர்கள் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 – 2014: வல்லினம் நிகழ்வுகள் ஒரு பார்வை
அ. ரெங்கசாமி காணொளி
நிகழ்வை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் வல்லினம் மற்றும் பறை இதழ் ஆசிரியர் ம. நவீன் உரையாற்றினார். வல்லினம் குறித்த முன்முடிவுகளை அவர் தனது உரையில் முற்றாக மறுத்தார். வல்லினம் மொழியைக் காப்பதற்காகவோ, பெரியாரியத்தை வளர்ப்பதற்காகவோ, மார்க்ஸியத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமல்ல எனக்கூறிய அவர் சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கவே வல்லினம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். சிந்திப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது எனவும், அதை எவ்வாறு கடந்து செல்வது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
ம. நவீன் உரை
அ. ரெங்கசாமியின் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ நூலை மா. சண்முகசிவா வெளியீடு செய்தார். இயக்குனர் லீனா மணிமேகலை முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீடு
தனது உரையில் ரெங்கசாமியின் அந்நூல் குறித்து சண்முகசிவா விரிவாகப் பேசினார். ஒரு சுயவரலாறு நூல் எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் உரை இருந்தது. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் மா. சண்முகசிவா அ. ரெங்கசாமியின் சுயவரலாறு நூல் குறித்து பேசினார்.
மா. சண்முகசிவா உரை
அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து பேச கெடாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அ. ரெங்கசாமிக்கு தமது தியான மன்றம் மூலம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ எனும் விருது கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் அவரது இதர நூல்களை வாசித்தவர் என்ற முறையிலும் அ. ரெங்கசாமியின் ஆளுமை குறித்து விளக்கினார். இதற்கு முந்தைய மூத்த தலைமுறையின் தியாகத்தில் இருந்தே இன்றைய தலைமுறை மேலோங்கி செல்கிறது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.
சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி உரை
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அ. ரெங்கசாமிக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வழக்கறிஞர் சி. பசுபதி அவர்கள் அ. ரெங்கசாமிக்கு விருது கோப்பை, விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காலோசை, வெளியிடப்பட்ட நூலுக்கான ராயல்டி தொகை இரண்டாயிரம் என வழங்கி சிறப்பு செய்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் சி.பசுபதி, மாற்று சிந்தனைகள் சமூகத்துக்கு உயரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என கூறினார். அதோடு, வல்லினம் ஓர் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக மாறுவதன் வழி நாடு முழுக்கவும் அதன் தீவிரமான மாற்று சிந்தனை பரவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வழக்கறிஞர் சி. பசுபதி உரை
முதல் அங்கத்தின் நிறைவாக, விருதைப் பெற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமி பேசினார். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வல்லினம் தன்னை அடையாளம் கண்டு விருது கொடுத்ததை மகிழ்ச்சியான தருணமாகப் பகிர்ந்துகொண்டார். தமிழர் எனும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அ. ரெங்கசாமி உரை
முதல் அங்கம் ஏறக்குறைய நிறைவு பெற இரண்டாம் அங்கம் தொடங்கியது.
எழுத்தாளர் கே.பாலமுருகன் கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் கவிதை, திரைப்படம் என விரிவாக தனது ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்தார்.
கே. பாலமுருகன் உரை
அதன் பின்னர் இரண்டாவது அங்கத்தை கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை வழி நடத்தினார். முதலில் அவரது ஆவணப்படங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. தனது திரைப்பட முயற்சி குறித்து சுருக்கமாகப் பேசியவர், அவையினரிடமிருந்து வந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார். திரைப்படம், சமூகம், அரசியல், ஈழம் என அவர் பதில்கள் விரிவாகவும் ஆழமாகவும் இருந்தன.
லீனா மணிமேகலை உரை & கலந்துரையாடல்
மாலை 5.30க்கு அளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
வல்லினம் கலை, இலக்கிய விழா 6 புகைப்பட தொகுப்பு
- முக்கிய பிரமுகர்கள்
- வல்லினம் விருது
- ம. நவீன்
- சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி
- சி பசுபதி
- அ ரெங்கசாமி
- அ ரெங்கசாமிக்கு வல்லினம் விருது
- அ ரெங்கசாமிக்கு வல்லினம் விருது
- டாக்டர் மா சண்முகசிவா & லீனா மணிமேகலை
- கே பாலமுருகன்
- லீனா மணிமேகலை
- வல்லினம் குழுவினர்
- அ ரெங்கசாமி & வல்லினம் குழுவினர்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- வருகையாளர்கள்
- யோகி
- சல்மா தினேஸ்வரி





























