இறந்த நண்பனின் வீட்டிலிருந்து
அவன் இறுதியாய் படித்த
கவிதை நூலொன்றை எடுத்துவந்தேன்
கவிதை நூலின் இறுதிப்பக்கம்
33 என நண்பன் எழுதியிருந்தான்
நான் 33 என்ற எண்ணுடனான
நண்பனின் தொடர்பை ஆராயத்தொடங்கினேன்
திகதிகள் முப்பத்தொன்றுடன் முடிவதால்
அது எந்த விசேட தினங்களையும் குறிக்க வாய்ப்பில்லை
அது எந்த விசேட தினங்களையும் குறிக்க வாய்ப்பில்லை
மூன்று மாதங்கள் நோய்மையில் இருந்தவனுக்கு
33 நாட்களுக்கு முன் மரண பயம் உதித்திருக்காது
காதலிகள் இல்லாத அவன்
பிரிவின் முத்தத்தைக் கணக்கெடுத்திருக்க வாய்ப்பில்லை
கொடிய நோயின் செலவுக்கு
33 ரிங்கிட் மட்டுமே தேவைப்பட்டிருக்காது
33 அழுகைகளை கணக்கெடுக்க
மரணத்தின் அந்தரம் வாய்ப்பளித்திருக்காது
இறந்தவன் எழுதி வைத்த கடைசி குறிப்பு
கவிதை நூலின் சொற்களைவிட
எண்ணற்ற அர்த்தங்களை உருவாக்கும் அபாயம் கொண்டிருக்கிறதென
தூக்கியெறிந்தேன்
கவிதை நூல் பக்கவாட்டில் விழுந்து
33 இப்போது இரு ஜோடிப்பறைவைகளாகி
மெல்லிய காற்றைப் படர விட்டு
பறந்தன.
(Visited 43 times, 1 visits today)